Tuesday, March 3, 2015

நீங்கள் நீங்களாகவே இருங்கள்

என்னுடைய தோழி ஒருத்தி இப்போ மிகப் பெரிய ஒரு பதவியில், எழுத்து துறையில், சமூக சேவையில், குடும்பத்தில் என, எப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப்பாக இருப்பதை பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருக்கும். 
'எப்படி இவளால் எந்த வேலையும் வேண்டாம் என ஒதுக்கித் தள்ளாமல், இப்படி புத்துணர்ச்சியுடன் செய்ய முடிகிறது?' என, எங்கள் நட்பு வட்டாரத்தில் ஒரு சந்தேகம் உண்டு. ஓய்வு எடுக்கக் கூட நேரமில்லாமல், இப்படி ஓடி ஓடி வேலை செய்து கொண்டே இருந்தால், உடல் ஆரோக்கியம் என்னவாகும் என்ற கவலையும் எங்களுக்கு உண்டு. 
மற்றொரு தோழி உண்டு. அவளுக்கு, வேலைக்கு போய் விட்டு வந்து ஓய்வு எடுப்பது மட்டும் தான் வேலை. ஆனால், அந்த முதல் தோழிக்கு இணையாக உற்சாகமோ, பல பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் ஆர்வமோ, இவளிடம் இல்லாததும் எங்களுக்கு புலப்பட்டது.

ஆலமரத்து பஞ்சாயத்து: இது என்ன மந்திரம், ரகசியம் என, தெரிந்து கொள்ள கூட்டினோம், ஆலமரத்து பஞ்சாயத்தை!
'ஓய்வு என்பது நாம் எப்போதும் செய்கிற வழக்கமான வேலைகளிலிருந்து, சற்று மாற்றி வேறு வேலைகளை செய்வது!'
தினமும், ஒரே மாதிரியான வேலைகளையே செய்யும் போது, நம் திறனில் ஒரு குறைபாடும், அலுப்பும், ஆயாசமும் வந்து விடுகிறது. அதே வேலையை கொஞ்சம் மாற்றிச் செய்ய முற்பட்டால், ஒரு உற்சாகம் வந்து ஒட்டிக் கொள்ளும்.
ஓய்வெடுக்கிறேன் பேர்வழி என்று சும்மா படுத்து, 'டிவி' பார்ப்பது, நீண்ட நேரம் தூங்கிக் கொண்டு இருப்பதல்ல ஓய்வென்பது.
அனுதினமும் புதிய புதிய நிகழ்வுகளால், மனம் ஓய்வின்றி செயல்படுகிறது. மனதிற்கான ஓய்வு வெளிப்படையாக தெரிவதில்லை. மன ஓய்வுத் தேவையை சரியாக நெறிபடுத்துவதும் இல்லை. இசை, தியானம், பிடித்ததை செய்வது, இதமான சூழலில் இருப்பது ஆகியவை, மனதை ஓய்வெடுக்க வைக்கும்.
உடல் ஓய்வென்பது, செயலற்று இருப்பது, மிதமான உடற்பயிற்சி, குளியல் போடுவது ஆகியவை. மனம், உடல் இரண்டும் ஓய்வெடுக்க ஒரே வழி, தூக்கம். இவையெல்லாம், இதுவரை சொல்லப்பட்டு வந்த மன, உடல் ஓய்வு சம்பந்தப்பட்ட செய்திகள். ஆனால், கொஞ்சம் 
மாற்றி யோசித்தாள் எங்கள் தோழி.

பேப்பர் படியுங்கள்:
ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, கொஞ்சம் இடைவேளை விட்டு, வேறு மாதிரியான புதுப்புது வேலைகள் செய்யும்போது, நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வது போல் இருக்கும். ஒருநாள் ஓய்வு கிடைத்தது என்றால் கூட, தாமதமாக தூங்கி எழுந்து, இருப்பதை சாப்பிட்டு, 'டிவி'யே கதி என்றில்லாமல், என்றைக்கு வீட்டில் யாருமேயில்லாமல் ஒரு முழுநாள் ஓய்வு கிடைக்கிறதோ... உருவாக்கிக் கொள்ளலாம்; தவறில்லை... 
அன்று விடியற்காலையிலேயே எழுந்திருந்து, பிடித்தமான பாடலை ஓடவிட்டு, மிக மெதுவான, நிதானமாக, அந்நாளை துவக்குங்கள்.
நீண்ட நாள் ஆசைகளை அன்று நிறைவேற்றுங்கள். நிதானமாக பேப்பர் படிப்பது, செடிகளுக்கு தண்ணீர் விடுவது, கோலம் கொஞ்சம் பெரிதாக போடுவது, நிதானமாக குளித்து, பிடித்த மாதிரி உடையணிவது, வழக்கமான உணவு வகைகளிலிருந்து விலகி வேறு உணவு உண்பது என, மாற்றி யோசியுங்கள்.
அன்று, சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். முக்கியமாக, ரொம்ப நாளாக செய்ய நினைத்து செய்யாமல் விட்ட, சின்ன சின்ன வேலைகளை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்; கேலிக்குரியதாக தோன்றும். 

அன்புடன் பழகுங்கள்:
ஆனால், 'மாடியில் ஒரு கொடி அதிகமாக கட்டணும்; பழைய செருப்பு, ஷூக்கள் சுத்தம் செய்து வைக்கணும்; பழைய சேலைகளை யாருக்காவது கொடுக்க எடுத்து வைக்கணும்; கால்களை வெந்நீரில் ஊற வைத்து சுத்தம் செய்யணும்; ரொம்ப நாளாக பேசாத ஒரு உறவினரிடம் பேசணும்' என்று ஒரு பேப்பரில் எழுதிக் கொண்டே வரும் போதே, உற்சாகம் மனதில் வந்து ஒட்டிக் கொள்ளும்; இந்தப் பட்டியலில் பாதி வேலை முடிந்து விட்டது போல் ஒரு தெளிவு வரும்.
'நம்மைச் சுற்றி ஒரு குழப்பமும் இல்லை. நான் மிகச் சரியாக, தெளிவாகவே இருக்கிறேன். சின்ன சின்ன குறைகள் என்னிடம் உண்டு; அதையும் என்னால் சரி செய்து விட முடியும் என்ற தைரியமும் எனக்கு உண்டு' என்கிற மாதிரியான எண்ணங்கள் நம்மை உற்சாகப்படுத்தும். அடுத்து என்ன வேலை என்று மனம் துள்ளும். கண்டிப்பாக அசதியோ, அலுப்போ வரவே வராது.
'சோம்பலும், ஓய்வும் தற்கொலைக்கு சமம்' என்று சொல்லி இருக்கிறார் ஒரு பெரியவர்.

நீங்கள் நீங்களாகவே இருங்கள்:
ஓய்வை, சோம்பலோடு சம்பந்தப்படுத்தவே கூடாது. ஓய்வெடுப்பது சோம்பலை விரட்டி அடிக்கத்தான். ஒரு ஓய்விற்கு பின் மனமும், உடலும் உற்சாகமாய் இருக்கணும்; தூங்கி வழிந்தபடி இருக்கக் கூடாது. தினம் தினம் உற்சாகமாய், பிரகாசமாய் இருப்பது, நாயகியர் கையில் தான் உள்ளது. 
ஆயிரம் வேலைகள், கடமைகள் நம்மை சூழ்ந்து அழுத்தம் கொடுத்தாலும், எல்லாவற்றுக்கும், 'பிளீஸ் வெயிட்...' என்று ஒரே ஒரு நாள் அவகாசம் கேட்டு காத்திருக்க செய்து விட்டு, உங்களுக்கே உங்களுக்கு என்று, உங்கள் விருப்பப்படி, எவ்விதமான முகமூடியும் இல்லாமல், நீங்கள் நீங்களாக இருந்து பாருங்கள். அந்த ஒருநாள் மலர்ச்சி, உற்சாகம் நம்மை இன்னும் இன்னும் வேகமாக, திறமையாக செயல்பட வைக்கும்.
இவையெல்லாமே தன் அனுபவத்தின் மூலம் எங்கள் தோழி கூற, நாங்களும் இப்போது பின்பற்ற ஆரம்பித்து விட்டோம். நீங்கள்...?
www.v4all.org 

No comments:

Post a Comment