Saturday, March 7, 2015

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - உடல் ( பசி ,தூக்கம், காமம் )

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - உடல் ( பசி ,தூக்கம், காமம் )


                      வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - பகுதி 1-உடல் 

உடல்,பிராணன்,மனம்,ஆன்மா,பொருளாதாரம் என்ற ஐந்து நிலைகளிலும் பலமாக இருக்க வேண்டும்.அப்பொழுது மட்டுமே அது ஒரு  முழுமையான வாழ்வாக இருக்கும்.எண்ணிய யாவினையும் அடைந்து அனுபவித்து உயர மேற்கண்ட ஐந்து நிலைகளிலும் சக்தி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்.

பசி,தூக்கம், காமம் இவை கடவுள் எல்லா உயிர்களுக்கும் இயற்கையாகவே கொடுத்தது.இவை யாவும் ஆசைகள் இல்லை தேவைகள்.இவற்றில் எதுவும் தவறு இல்லை.ஆனால் மிதமிஞ்சிய ,முறையற்ற செயல்பாடுகளே தவறு.இயற்கையை நன்கு உற்று நோக்கினால் செடி,மரம்,விலங்குகள் என யாவும் பிறக்கின்றன ,வாழ்கின்றன, சாப்பிடுகின்றன, இனத்தைப்  பெருக்குகின்றன.இயற்கையில் இதற்கு மேலான அர்த்தமோ ரகசியமோ இல்லை.ஏனென்றால் அவைகளெல்லாம் அளவான சுதந்திரத்தோடு படைக்கப்பட்டவை.மனிதன் மாத்திரமே எல்லைஅற்ற சுதந்திரத்தோடும் ,இறைவன் எனும் விதையை  தனக்குள் கொண்டும் படைக்கப்பட்டிருக்கின்றான்.அவ்வாறு இறைவனைப்போல் ஆன  அநேகம் மகான்களும் சித்தர்களும் உலகெங்கும் எல்லா காலங்களிலும் தோன்றியவாறே உள்ளனர்.என் சக மனிதனுக்கு சாத்தியமானது எனக்கும் சாத்தியமே என உணர்ந்து வாழ்வை சரியாகவும்,முழுமையாகவும் வாழ்ந்து ,சில அப்யாசங்களையும்  செய்து வர நமக்குள் உள்ள இறைவன்  எனும் விதை மரமாகி நமக்கும் உலகுக்கும் பயன்பட வாழலாம்.அதற்கு உடல்,பிராணன்,மனம்,ஆத்மா,பொருளாதாரம் என எல்லா அம்சங்களிலும் சிறந்து விளங்கவேண்டும்.

சித்தர்கள்,மகான்கள்,தெய்வங்கள் என்போர் தவம் புரிந்து சக்திகளை அடைந்து சக்தி மயமாக இருக்கின்றனர்.நாமும் உடல், பிராணன்,மனம், ஆன்மா, பொருளாதாரம் என்ற நான்கிலும் சக்தி உடையவர்களாக விளங்கினால் அடைய முடியாத விஷயம் எதுவுமில்லை.

அதற்கு என்ன செய்ய வேண்டும்.மனம்,ஆன்மா என்று எவ்வளவுதான் பேசினாலும்,படித்தாலும் அவற்றை குறித்த நேரடி அனுபவம் அனேகமாக நம்மில் பலருக்கு பூஜ்ஜியம் தான்.உதாரணமாக ஒரு வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்றால் முதலில் பிராதான வாயில் கதவைத் திறந்து (MAIN GATE) பின்னர்  வீட்டின் கதவைத் திறந்து உட்செல்வோம்.அது போலவே நமக்கு கண்ணுக்குத் தெரியும் உடலில் இருந்து பின் நுட்பமான விஷயங்களுக்குச்  செல்லலாம். உடல் அளவில் சக்தி பெற்று உடலைக்கடந்து ப்ராணனை, மனதை ,ஆன்மாவை புரிந்து கொள்ளலாம்.

உடலை திருப்திப்படுத்த நல்ல சாப்பாடு,நல்ல தூக்கம்,நிறைவான காமம் வேண்டும்.

மனதை திருப்திப்படுத்த நேசித்தல்,நேசிக்கப்படுதல்,புகழ் பட வாழ்தல் இவை வேண்டும்.

முதலில் உடலில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

உடல்  - பசி தூக்கம், காமம் :- 

பசி,தூக்கம்,காமம் மூன்றும் கடவுளின் சொந்த தயாரிப்புகள் அவைகளின் மூலமே அவைகளை அனுபவித்து கடந்து செல்ல முடியும்.

பசி:
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பினில் உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை நானிருந்து ஓம்புகின்றேனே -திருமூலர் திருமந்திரம்


                          உடலின் இயல்பே ஆரோக்கியம் தான் .வியாதி என்பது நம் உணவு,கர்மவினை,சூழல்,கவனக்குறைவு இவற்றின் காரணமாக வந்து போகும் ஒன்று.அருகில் உள்ள ஒரு இடத்திற்கு செல்ல நாம் நடந்தே கூட சென்று விடலாம்.ஆனால், தொலை தூரத்திற்கு செல்ல வேண்டும் அதுவும் விரைவாய் சென்று சேரவேண்டும் என்றால் விரைவாக செல்லக்கூடிய நல்ல நிலையில் உள்ள ஒரு  வாகனம்தேவை.அந்த வாகனமே நம் உடல்.அதை எப்படி சரியாக வைத்துக்கொள்ளலாம்.

ஸ்தூல உடல் ரிஷிகளால் அன்னமயகோசம் என்றழைக்கப்படுகிறது  அதாவது உணவால் ஆன அடுக்கு/தளம் என்று பொருள் .உண்ணும் உணவே நம் கண்ணுக்குத் தெரியாமல் மனமாக மாறுகிறது என வேதங்களும், உபநிடதங்களும் கூறுகின்றன.
தொல்காப்பியம்  கூட ''உணவெனப்படுவது நீரும் மண்ணும்'' என்கிறது.

உதாரணமாக:-
ஒரு மிளகாயை எடுத்துக்கொள்வோம்
அது ஒரு ஜடப்பொருள் - ஸ்தூலம்
அதை உண்டால்  சுவையான காரம்தெரியும் - அது சூட்சுமம்
மிளகாயை உடல் செரித்து தேவையானதை ஈர்த்துக் கொண்ட பின் எஞ்சியது கழிவாகவும்,மனதில் கோபம் என்ற அம்சமாகவும் மாறுகிறது.-அதிசூக்குமம்

உடல்,மனம்,ஆன்மா போல் எல்லாப்பொருளுக்கும்,உயிருக்கும்  மூன்று தன்மைகள் உண்டு.

உருளைக்கிழங்கில் வாயு எனப்படும் வாதத்தின் அம்சம் அதிகம் உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு உணவுப் பொருளிலும் வாதம், பித்தம், சிலேத்துமம் இவற்றில் ஏதேனும் ஒன்றின் அம்சம் தூக்கலாக இருக்கும்.இவற்றில் வாதம் காற்றின் அம்சம்,பித்தம் நெருப்பின் அம்சம்,சிலேத்துமம் நீரின் அம்சம்.இயல்பாகவே நம் உடல் என்ன அம்சமோ அதை அறிந்து அதற்கு ஒத்துக்கொள்ளும் உணவு வகைகளை உண்ணவேண்டும்.

ஆயுர்வேதம் கூறுகிறது :- நீங்கள் வசிக்கும் இடத்தில் வளரும் அல்லது உங்கள் வசிப்பிடத்தின் சூழலில் வளரும் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துகொண்டால் உணவுப்பொருட்களால் நோய் வராது. லங்கனம் பரம ஔஷதம்  அதாவது நன்கு பசி ஏற்பட்ட பின்னர் உணவு உண்ணுதல்,உடலை சதை அதிகமில்லாமல் ஸ்லிம்மாக வைத்துக்கொள்ளுவதன் மூலம் வியாதிகளைத் தவிர்க்கலாம். தேன்,பேரிச்சை,முந்திரிப்பழம் போன்ற எளிதில் கெட்டுப்போகாதவைகளை அதிகம் சேர்த்துக்கொண்டால் அது உடலை இளமையாக வைக்கும்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் -
முதலில் உண்ட உணவு நன்கு செரிமானமாகி நன்கு பசி ஏற்பட்ட பின் உணவு உண்டால் உடலில் நோயே வராது என வள்ளுவர் கூறுகிறார்.

திருமுருக கிருபானந்தவாரியார் ஒரு முறை சொன்னது:- ''பசி வந்த பின் வாயில் உணவை வைத்து பசி நிற்கும் முன்னமே கையை எடுத்து விடு உனக்கு வியாதி இல்லை ''.

தூக்கம் :-

எப்படி உணவு உடலுக்குச் சக்தியளிக்கிறதோ அது போலவே தூக்கமும் சக்தியளிக்கிறது.தூக்கமும் ஒரு வகை சாப்பாடு தான்.இரவில் போதுமான அளவு  தூங்கவில்லை என்றால் பகலில் சுறுசுறுப்புடன் வேலை செய்ய முடியாது.சக்தியைத்தரும் தூக்கத்தை முறையாகச் செய்யவேண்டும்.

சரியாகத் தூங்கும் முறை:-

எப்படி ஒரு டூவீலரை  நிறுத்தி வைக்கும் போது அந்த வண்டி கியரில் இருந்தால் ஒவ்வொரு கியராக குறைத்து  நியூட்ரளுக்கு கொண்டு வந்து நிறுத்துவோமோ அதைப் போல் பகல் முழுதும் ,இரவு தூங்கும் வரை உடலும் ,மனமும் செயல் பட்டுக்கொண்டே இருக்கிறது  அதைப் படுத்தவுடன் உணர்வுடன் உடல் உறுப்புகளைக் கவனமாகத்  தளர்த்தி நாம் படுத்திருக்கும் நிலையை உணர்ந்தவாறு தூங்கவேண்டும்.அப்படித் தூங்கினால் குறைந்த நேரம் தூங்கினாலும் அதிக சக்தி கிடைக்கும்.கனவுகள் குறைந்த ஆழ்ந்த நல்லுறக்கம் வாய்க்கும்.சரியாகத்தூங்காவிட்டால் உடல் சூடு அதிகமாவதுடன் காமம் மிகும்,செயல் வேகம் குறையும்,சோம்பல் உண்டாகும்.எப்படி உறங்கும் போது முறையாக உறங்கினோமோ அது போல் எழும் போதும் பதறி எழாமல் மெல்ல கை,கால்களை அசைத்து உடலைக்  கவனித்தவாறே எழ வேண்டும்.

காமம்:-

எவ்வளவோ ஒழுக்கவிதிகளை நம் முன்னோர்கள்,உலக மகான்கள் சொல்லியிருந்தாலும் பொய் சொல்லாதே,யாரையும் துன்புறுத்தாதே,திருடாதே,முறையற்ற காமம் தவறு என பல ஒழுக்க விதிகள் இருந்தாலும் காமம் என்ற விஷயத்தில் பலர் ஒருவரை மிஞ்சி இன்னொருவர் சிறப்பாக நடிப்பவராக,காண்பித்துக்கொள்கிறார்களே அன்றி காமத்தில் தெளிவாக இருக்க முடியவில்லை.அது ஏன் என்று பார்க்கலாம்.
திருடாதே என்றால் நம் பொருளை ஒருவர் திருடினால் நமக்கும் இப்படித்தானே  வருத்தம் உண்டாகும் என்று யோசித்தே உணரலாம். ஒருவரை அடித்தால் அவருக்கு வலிக்கும் நமக்கும் இப்படித்தானே  வருத்தம் உண்டாகும் என்று யோசித்தே உணரலாம்.
ஆனால் இவற்றில் சரியாக இருக்கமுடிந்தாலும் காமத்தில் மட்டும் ஏன் முடியவில்லை.
இரண்டு பேர் காமம் கொண்டால் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி தானே ஓழிய வருத்தம் இல்லை .
ஒரு உதாரண சூழல் :- இரண்டு பேர் காமம் கொள்கின்றனர் .நல்லவன்,கேட்டவன்,யோகி,சிறுவர்கள் என யார் அதை கண்டாலும் வேதனைப்படுவதோ,குற்றமாக உணர்வதோ இல்லை.எந்த புனிதமான கோயிலுக்கும் ,இமாலயத்திற்கும் சென்று காமத்தில் எது,என்ன தவறு உள்ளது என கேள்வி கேட்டாலோ,தியானம் செய்தாலோ அதற்கு பதில் கிடைக்காது.இதனால் தான் எத்தனை புத்தகம் படித்தாலும் ,கேட்டாலும் காமம் குறித்த தெளிவு உண்டாவதில்லை ஏனென்றால் மனம் எப்பொழுதும் நிரூபணம் கேட்கும்.தத்துவம் கேட்காது.எனவே காமத்தை உணர ,கடந்து வர வேறு மாற்று வழிகள் இல்லை.பிறவி சித்தர்கள் விதிவிலக்கு.அவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு மிகச் சிலரே தோன்றுகிறார்கள் அவர்கள் தங்கள் முற்பிறவிகளில் அவற்றை அனுபவித்து கடந்திருப்பார்கள்.

எனவே காமத்தைச் சரியாக அனுபவிக்காமல் ஆன்மீகத்தில் உயர முடியாது.ஜான் ஏறினால் முழம் சறுக்கும்.

                            இந்து தர்மம் ஒரு சம்பூர்ண மார்க்கம் ,ஏனென்றால் கடவுள் முதல் வைத்தியம்,காமம் என எல்லாத் தேவைகளைப் பற்றியும் நிறைவான விளக்கங்களும்,கிரந்தங்களும் ஞானப்பெருமக்கள் இயற்றி  இருக்கின்றனர்.சிறுவயதில் தோன்றிய காமத்தை 25 வயதிற்கு மேல் திருமணமான பிறகே அனுபவிக்கிறோம்.அத்தனை வருடம் அடக்கி வைத்திருந்த காமத்தை திருமணமான பிறகும் சரியாக அனுபவித்து அந்த அதீத ஆசையை நிதானத்திற்குக் கொண்டுவர வேண்டாமா?.
அதற்கு என்ன செய்யலாம்? மனைவியோடு காமம் கொள்ளும் போது உச்சகட்டம் அடைந்ததும் அந்த சுகானுபவம் எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்று அந்த நேரத்திலேயே கவனமாக உணரவேண்டும்.ஆரம்பத்தில் அடிக்கடி மறந்து விடுவோம் ஆனால் தொடர்ந்து முயற்சித்து எல்லா நேரமும் அந்த சுகானுபவத்தை கவனிக்க கவனிக்க காமம் திகட்டி விடும்.உதாரணமாக ,ஒரு ஸ்வீட் கடையில் வேலைசெய்யும் ஒருவர் அடிக்கடி ஏதேனும் ஸ்வீட் எடுத்து சாப்பிட்டபடியே  இருப்பார்.மேலும் ஆரம்ப நாட்களில் வீட்டிற்கும் அதிகம் எடுத்து வருவார்.காலப்போக்கில் தொடர்ந்து சாப்பிட்டதின் விளைவாக அவருக்கு அது திகட்டிப்போய்  அருகிலேயே ஸ்வீட் இருந்தாலும் மனம் அதை சாப்பிடு,சாப்பிடு  என்று அரிப்பதில்லை.அரிதாக விரும்பினால் உண்பார்.ஆனால் நாமோ சாகும் வரை ஸ்வீட்டின் மேல் அதீத பிரியம் உள்ளவர்களாக இருப்பதோடு ,இறந்தபின்னும் நமக்கு படைக்கிறார்கள்.

முதல் மனிதனைக் கடவுள் படைத்தார்,பின்னர்    தோன்றிய எந்த விலங்கும் ,மனிதனும் அவரவர் மூலமாகவே படைக்கிறார்.எனவே இது தவறு இல்லை.இது குறித்த குற்ற உணர்ச்சி தேவை இல்லை.

                       திருமணத்தின் போது பார்க்கப்படும் ஜாதகப்  பொருத்தங்களில் யோனி பொருத்தம் என்பதும் ஒன்று.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த  நட்சத்திரத்தில் பிறந்தவர்களோடு  காமத்தில் நிறைவான அனுபவம் கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  குறிப்பிட்ட திசைகளில் தலை வைத்து உறவு கொள்ள திருப்தியான, மனம் மகிழும் வண்ணம் காமம் அமையும்.இதைப்பற்றி இதற்கு மேல் வெளிப்படையாக சொல்வது சரியாக இருக்காது.ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் ஜாதகம் அல்லது பிறந்தநாள்,பிறந்தநேரம்,பிறந்த ஊர்  இவற்றுடன் எனது இணைய முகவரிக்கு (ms.spiritual1@gmail.com) மெயில் அனுப்புங்கள்.

அடுத்த பதிவில்  பார்க்கலாம்.- www.v4all.org



வாழ்க வையகம் | வாழ்க வளமுடன் ||

No comments:

Post a Comment