Sunday, March 29, 2015


சுப்ரம்மணியம்

சு+பிரம்ம+நியம் என்பதே 'சுப்ரம்மணியம்'

சு என்றால் உயர்வான அல்லது மேலான என்று பொருள்.
ப்ரம்மம் என்பது பரமாத்மா அதாவது சதாசிவத்தைக் குறிப்பது.
நியம் என்றால் தோன்றிப் பிரகாசிப்பது அல்லது ஒளிர்வது.
அதாவது சதாசிவத்தின் ஞானத்திலிருந்து (நெற்றிக்கண்) உதித்து ஞானமே வடிவாகப் பிரகாசிப்பவன் என்பது பொருள். எனவேதான் ஞான சூரியன் என்றும். சேந்தன் என்றும் கூறுவார்கள்.

தமிழர்களுக்கே சொந்தமான முருகன் வேறு தமிழ் வேறு அல்ல என்பது தமிழ் அறிஞர்கள் கருத்து. 12 தோள்களையும் 12 உயிரெழுத்தாகவும், 18 கண்களை 18 மெய்யெழுத்தாகவும், 6 இன எழுத்துக்களை ஆறு முகங்களாகவும், ஃ என்ற ஆயுத எழுத்து வேலாகவும் குறிப்பிடுவார்கள்.
உலகில் தோன்றிய சித்தர்களுக்கெல்லாம் தலைவன் முருகனே. எனவேதான் சித்தநாதன் என்பார்கள். அதனால்தான் போகர் பழனியில் தங்கள் குலகுருவான சுப்ரமண்ய சித்தருக்கு நவபாசான சிலையைச் செய்து பிரதிஷ்டை செய்தார். அகத்தியர், அருணகிரி போன்றவர்களுக்கும் அவ்வளவு ஏன், சிவனுக்கும் கூட குருவாக முருகன் குருபரன் என்று சொல்லப்படுவதன் காரணம் அவர் பகுத்தறிவின் அடையாளமாக, மனிதனின் வடிவமாகவேத் திகழ்வதுதான். அவர் மூலமாகவே தமிழ் பூமிக்கு வந்தது என்பது ஆன்றோர் வாக்கு.

காந்தத் தத்துவத்தை அடிப்படையாக வைத்தே ஸ்கந்தன் என்ற பெயர் வழங்கப்பட்டது.

சிவபெருமான் கொண்டுள்ள ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்களோடு அதோமுகமும் சேர்த்தே முருகனுக்கு ஆறுமுகம் என்று சொல்லப்படுகிறது. அதாவது கீழ் நோக்கிய முகம் என்பது பொருள். சிவபெருமானின் உலகத்தை நோக்கிய முகமாகிய ஞானக் கண்ணாகிய நெற்றிக்கண்ணை தனது ஆறாவது முகமாகக் கொண்டவன் முருகன். எனவே முருகனின் தத்துவத்தை முழுவதும் உணர்ந்தவன் ஞானத்தை உணர்ந்தவனாவான்.

வேல் என்பது அறிவின் நிலையைக் குறிப்பது. கூர்மையாக, அகலமாக, ஆழமாக சிந்திப்பவன் உலகையே வெல்லலாம் என்பது நுட்பம்.

மனிதனின் ஆறு ஆதாரங்களும் ஆறு படைவீடுகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆணவம், கன்மம், மாயை இந்த மூன்றையும் அடக்குபவன் ஞானத்தை அடையலாம் என்பதைக் குறிக்கும் விதமாகவே மயில், யானை, ஆடு இந்த மூன்றையும் அடக்கி வாகனமாக வைத்திருப்பதாகக் காட்டப்படுகிறது.

யோகத்தில் திளைத்து ஞானத்தை உணர்ந்தவனுக்கு முதுமை என்பதே கிடையாது என்பதை உணர்த்தவே குமரன் என்பார்கள்.

முருகு என்றால் அழகு என்பது பொருள். தமிழ் அறிஞர்கள் மு என்றால் மெல்லினமென்றும், ரு என்றால் இடையினம் என்றும், கு என்றால் வல்லினம் என்று அழகு தமிழில் குறிப்பிடுவார்கள். இவை சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று மண்டலங்களைக் குறிப்பதாகவும் சொல்வதுண்டு.

சரவணபவ என்றால் நாணல் காட்டில் பிறந்தவன் என்று வடமொழிக்காரர்கள் கதை கட்டுவார்கள். ஆனால் தமிழ் மொழியைப் பொருத்தவரை சரம் என்றால் மூச்சு அவணன் என்றால் திண்ணிய அல்லது பூரணமான, செல்வாக்கு உடைய என்று பொருள். அதாவது உயிர்களுக்கு மூச்சாக விளங்குபவன் என்றும், மூச்சை கவனித்து முறையாக சுவாசிப்பவர்களுக்குள் ஞானமே வடிவாகத் தோன்றுபவன் என்று பொருள்.

சதாசிவத்தில் சக்தி ஒடுங்கி நிற்கிறது. பிரபஞ்சத்தில் சிவ சொரூபம், சக்தி சொரூபம் என்று இரண்டு நிலைகளில் விளங்குகிறது. நாம் பெற்றுள்ள உடல் சக்தியின் சொரூபமாகும். அதற்குள் உயிராக விளங்கும் அறிவுப் பொருள் சிவ சொரூபமாகும். இந்த இரண்டையும் இணைத்து அதன் பயனால் மேன்மையடைவதையே திருக்கல்யாணம் என்று சொல்கிறார்கள். அவ்வேளையில் வடகோடு தாழ்ந்து தெற்கு உயர்வது என்று சொல்வது எதற்காகவென்றால், வடக்கு என்பது நம் தலைப்பகுதியைக் குறிப்பது, அதாவது பரமாத்வை அடைவதற்கான அனைத்து விஷயங்களும் அடங்கிய பகுதி. ஞான வாசலே அங்குதான் உள்ளது. தெற்கு என்பது மனிதனை கீழ் நோக்கி அழுத்தி இந்திரிய சுகங்களில் அழுத்தி வைக்கும் உடல் பகுதியைக் குறிப்பது. திருமணம் ஆனவர்கள் மனம் முழுவதும் இந்திரிய சுகத்தில் திளைத்து அதிலேயே உழன்று கொண்டிருப்பதால் அவர்கள் ஞானத்தை அடைய முடியாமல் போகிறது. இதையே வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்தது என்றார்கள். அதற்காகவே அகத்தீயான ஞானத்தை அனுப்பி அதை சமன் செய்ததாகச் சொல்வார்கள். அதாவது யோக நிலையில் உண்மையை உணர்ந்து அளவும் நெறி முறையும் கடைபிடித்தால் இரண்டு பகுதியும் சமநிலையில் திகழும்.
 இதையே முருகனும் உணர்த்துகிறார். அவருக்கு இரண்டு சக்திகள். ஒன்று தெய்வயானை கிரியா சக்தி, இரண்டு வள்ளி இச்சா சக்தி. தெய்வயானை தேவர்கள் நிலையைக் குறிக்கும் கிரியா சக்தி. எனவேதான் அவளை தேவர்களின் அரசனின் மகளாகச் சொன்னார்கள். அதாவது மனிதர்களும் தேவர்களுக்கு நிகராக கிரியையாகிய மேலான செயல்களின் மூலம் தெய்வத்தை மணந்திடலாம் அதாவது இணைந்திடலாம் என்பதைக் குறிப்பவள் தெய்வயானை. வள்ளியைப் பொருத்தவரை இச்சை அதாவது கடவுள் மேல் உண்மையான பற்று அல்லது அன்பு கொண்டு கடவளை மணந்திடலாம் அதாவது இணைந்திடலாம் என்பதை உணர்த்துகிறாள். இதில் மற்றொரு சூக்குமமான கருத்தும் உண்டு. குலத்தில் மேலானவர், கீழானவர் என்பதெல்லாம் கடவுளுக்கு முன் கிடையாது. தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்களும் உண்மையான பக்தியின் மூலம் இறைவனை அடையலாம். அதாவது யோகத்தின் மூலம் ஞானமே வடிவான இறைவனை அடைவதைக் குறிப்பவள் தெய்வயானை. பக்தியின் மூலம் இறைவனை அடைவதைக் குறிப்பவள் வள்ளி. எனவே குலத்தில் தாழ்ந்தவர்கள் என்று சொல்லி பிற மனிதர்களை தன்னிடத்தில் வர அனுமதிகாதவர்களை இறைவன் தன்னிடத்தில் வர அனுமதிக்கமாட்டான். 

No comments:

Post a Comment