ஆனந்தி எப்பப்பார்த்தாலும் கையில் ரூபிக் கியூபைச் சுழற்றி சுழற்றி விளையாடிக்கொண்டே இருப்பாள். பல வண்ணங்களில் இருக்கும் அந்தக் கியூபை ஆறு புறங்களிலும் சுழற்றி, எப்படிக் கலைத்துப்போட்டாலும், சில நிமிடங்களில் ஒரு பக்கம் முழுவதும் ஒரு வண்ணம் வரும்படி எல்லாக் கோணங்களிலும் அடுக்கிவிடுவாள். நான் பல முறை முயன்றும் என்னால் அந்தக் கியூபை அடுக்க முடியவில்லை. அதே போல அவள் செஸ் விளையாட்டை அபாரமாக விளையாடுவாள். மிகவும் நிதானமாக யோசித்த பின்பே காயின்களை நகர்த்துவாள். ஆனால் பத்து நகர்விலேயே ‘செக் அண்ட் மேட்’ செய்து ஆட்டத்தை வென்றுவிடுவாள்.
பள்ளியைப் பொருத்தவரை ஆனந்தி சராசரியான மதிப்பெண்கள் பெறும் மாணவிதான். செஸ், ரூபிக் கியூப் போன்ற வித்தியாசமான விளையாட்டுகளை மிகவும் சாமர்த்தியமாக விளையாடி வெல்கிறாள்.ஆனால் ஏன் படிப்பில் முதல் மாணவியாக வரமுடியவில்லை என்று எனக்குத் தோன்றும்.
அப்படியல்ல இப்படி!
ஆனால் அந்தக் கேள்வியே தவறு என்பது சமீபத்தில் புரிந்தது. செஸ்ஸில் வெல்லும் ஆனந்தி ஏன் படிப்பில் தோற்கிறாள் என்ற கேள்வி படிப்பை மையமாக வைத்து இருக்கிறது. எப்படியாவது அந்தக் குழந்தை படித்துவிட வேண்டுமே என்னும் ஆதங்கம்தான் அதில் வெளிப்படுகிறது. ஆனால் அந்தக் கேள்வியைப் புரட்டிப் பார்ப்போம். ‘படிப்பில் சராசரியாக விளங்கும் ஆனந்தியை செஸ், ரூபிக் கியூப் விளையாட்டுகளில் வெற்றி பெற வைப்பது எது?’ இப்படிச் சிந்திக்கத் துவங்கினால் ஆனந்தியின் பலத்தை, தனித்துவத்தைப் புரிந்துகொண்டு அவளது ஆற்றலை வளர்த்தெடுக்க முடியும் இல்லையா!
மனதில் காட்சியாக…
உலகை முப்பரிமாணங்களில் காட்சிப்படுத்திப் பார்க்கும் திறன் சிலரிடம் இருக்கும். இவர்கள் வெறுமனே பார்ப்பதோடு நின்றுவிடாமல் மனக்கண்ணில் காட்சி ரீதியாக முன்னோக்கி சிந்தித்துச் செயல்படுவார்கள். ஒரு பொருள் மற்றொரு பொருளோடு இணைந்தால் அதன் வடிவம் எப்படி மாறும் என்பதை நுணுக்கமாகவும் நுட்பமாகவும் மனதில் படமாகக் கணிப்பார்கள். ஏதோ புலன்களுக்குப் புலப்படாத அமானுஷ்யமான சக்தியைப் பற்றிப் பேசுவது போலத் தோன்றலாம். ஆனால் இது அறிவுபூர்வமானது, அறிவியல் அடிப்படையிலானது. இதுதான் காட்சி ரீதியான அறிவுத்திறன் என்கிறார் உளவியல் நிபுணர் கார்டனர். இப்படிப்பட்ட அறிவுத் திறன் கொண்டவர்களால் புதிய உலகை படைக்க முடியும்.
காட்சி ரீதியாகப் படைப்பது என்றால், ஓவியம் தீட்டுவது, புகைப்படம் எடுப்பது, திரைப்படம் உருவாக்குவது என்பவை மட்டுமல்ல. காட்சி ரீதியான அறிவுத் திறனில் மிளிர்பவர்கள் நம்மால் யூகிக்க முடியாதத் துறைகளைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
உலகின் தலை சிறந்த இயற்பியலாளர்களில் ஒருவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபில் டவரின் வடிவத்தை முதலில் வரைந்த கட்டிடக்கலை நிபுணர் மாரிஸ் கோச்லின்.இத்தகையோரிடம் காணப்பட்ட அறிவுத்திறன்களில் மேலோங்கி இருந்தது காட்சி ரீதியான அறிவுத்திறன்தான்.
அது எப்படி விஞ்ஞானிக்கும், கட்டிடக்கலை நிபுணருக்கும், விளையாட்டு வீரருக்கும், புகைப்படக் கலைஞருக்கும், ஓவியருக்கும் ஒரே விதமான அறிவுத் திறன் இருக்க முடியும் என்கிறீர்களா? அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களே அதற்கு பதில்.
ஒளி பாயுதே
E = MC2 என்ற கூற்று 1905-ல் இயற்பியல் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தியது. அந்த கூற்றின் அடிப்படையான சிறப்புச் சார்புக் கோட்பாட்டைக் கண்டறிந்தபோது ஐன்ஸ்டீனுக்கு 26 வயது. மூன்று வயதுவரை ஐன்ஸ்டீன் பேச்சாற்றல் இல்லாத குழந்தையாக இருந்தார். அவர் பள்ளியில் எடுத்த அதிகப்படியான மதிப்பெண் நூற்றுக்கு ஐம்பதுதான். சிறு வயது முதல் இசை கேட்டு ரசிப்பதும் வயலின் இசைப்பதும் ஐன்ஸ்டீனுக்கு பிடித்தமான விஷயங்கள்.
ஐன்ஸ்டீனின் வீட்டுக்கு வந்து டியூஷன் மாஸ்டர் கணிதம் மற்றும் தத்துவத்தைக் கற்பித்தார். அவர் ஒரு நாள் ஐன்ஸ்டீனிடம் குழந்தைகளுக்கான அறிவியல் புத்தகம் ஒன்றைத் தந்தார். அதில் “மின்சாரக் கம்பத்துக்குள் மின்சாரம் பாயும் வழி எங்கும் நாமும் ஓடினால் எப்படி இருக்கும்?” என எழுதியிருந்தது. அதைப் படித்தவுடன் ஐன்ஸ்டீனின் அறிவியல் கற்பனைகள் விரியத் தொடங்கின.
“ஒளி என்பது அலையாக இருந்தால் அது உறைந்த நிலையில்தான் காட்சி அளிக்கும். ஆனால் ஒளி பாய்கிறதே. இது அணு பற்றிய கருத்தியலுக்குப் புறம்பானதே” என மனதில் சினிமாவாக ஒளியின் ஓட்டத்தைக் காணத் தொடங்கினார். அன்று தோன்றியக் காட்சியை 10 வருடங்களாக அசைபோட்டதன் விளைவே சிறப்புச் சார்புக் கோட்பாடு.
வான் உயர!
காஸ்டேவ் ஈஃபில் எனும் பொறியாளர்தான் ஈஃபில் டவரைக் கட்டியவர். அவர் பெயர்தான் ஈஃபில் டவருக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு அவரைப் பற்றிப் பேசாமல் ஏன் அதன் கட்டிடக்கலை நிபுணரை பற்றி பேசுகிறோம்? அதற்குக் காரணம், 1063 அடி உயரத்தில் பாரீஸ் நகரின் மிக உயரமானக் கட்டிடமாக விளங்கும் ஈஃபில் டவரைத் தன் மனக்கண்ணில் முதன்முதலில் கற்பனை செய்துப் பார்த்தவர் அதன் கட்டிடக்கலை நிபுணர்களில் ஒருவரான மாரிஸ் கோச்லின்.
பாரீஸ் நகரின் மையத்தில் அனைவரையும் வரவேற்கும் விதமாக ஒரு பிரம்மாண்டமானக் கட்டிடத்தை எழுப்பினால் எப்படி இருக்கும் என முதன் முதலில் கற்பனை செய்துப் பார்த்தவர் அவர் தான். அப்படியொரு பிரம்மாண்டமானக் கட்டுமானத்தை மனிதர்களால் உருவாக்க முடியும் என அன்று வரை யாரும் கற்பனை செய்துப் பார்க்கவில்லை. வெற்றிடத்தில் வானுயர கட்டுமானத்தை ஒருவரால் மனக்கண்ணில் காட்சிப்படுத்திப் பார்க்க முடியுமென்றால் காட்சி ரீதியான அறிவுத் திறனுக்கு அதைவிடவும் சிறந்த உதாரணம் வேண்டுமா என்ன?
விஞ்ஞானிக்கும், கட்டிடக்கலை நிபுணருக்கும் இருப்பது கணிதத் திறன் என்பது பொதுவான நம்பிக்கை. நம் கல்வித் திட்டமும் அந்த அடிப்படையில்தான் செயல்பட்டுவருகிறது. ஆனால் உளவியல் வரலாறு வேறுவிதமான உண்மைகளைத் தன்னுள் வைத்திருக் கிறது. அதைப் புரிந்துகொள்ளத் துவங்கினால் தனி மனிதரையும், ஒட்டுமொத்த உலகையும் புதிதாகப் பார்க்கத் தொடங்குவோம் அல்லவா!