ஜனாதிபதிய எப்படி தேர்ந்தெடுக்கிறாங்க தெரியுமா? -www.v4all.org
‘இன்னப்பா அலர்ட் ஆறுமுகம், கொஞ்ச நாளா இந்த பக்கம் ஆளே காணோம்’- என்று கேட்டபடியே வந்தார் வக்கீல் வண்டு முருகன்.
‘அதிமுக ஆட்சி அமைச்சு ஒரு வருஷம் ஆச்சில்ல...ஆட்சியை பத்தி மக்கள் என்ன நினைக்குறாங்கனு தெரிஞ்சுக்க ஊர் ஊராக போயிருந்தேன். அதான்...
‘எனக்கு சில டவுட் இருக்கு, கிளியர் பண்ணுவியாப்பா? அலர்ட் ஆறுமுகத்தை பார்த்து கேட்டார் வக்கீல் வண்டு முருகன்.
‘வக்கீலுக்கெல்லாம் படிச்சிருக்க...அரசியல்ல வேறு நுழைஞ்சிருக்க...உனக்கே டவுட்டா, கேளு! தெரிஞ்சதை சொல்றேன்’- அலர்ட்டின் முகத்தில் பெருமை பொங்கியது.
*‘ஜனாதிபதி தேர்தலை பத்தி சொல்லேன்?’
இது நம் நாட்டோட 14வது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்குற தேர்தல். ஜூலை மாசம் நடக்குது.
இந்தியாவின் முதல் குடிமகன், முப்படைகளின் தளபதினு சொன்னாலும், இந்த பதவியில இருக்கிறங்க பொம்ம மாதிரிதான். 5 வருஷம் இவங்க பதவியில இருப்பாங்க.
* ஜனாதிபதிய எப்படி, யார் தேர்ந்தெடுப்பாங்க?
பிரதமர், மாநில முதல்வர்களை போல ஜனாதிபதிய மக்கள் நேரடியாக தேர்ந்தெடுங்க மாட்டாங்க. எம்.எல்.ஏ.,க்கள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் தான் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பாங்க.
நம் நாட்ல மொத்தம் 776 எம்.பி.,க்களும்(லோக்சபா 543 + ராஜ்யசபா 233) , 4,120 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர்.
28 மாநிலங்கள் மற்றும் டில்லி, புதுச்சேரி யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே இத்தேர்தல்ல கணக்குல எடுத்துக்கிறாங்க.
* இவங்க எல்லாம் எங்க ஓட்டுப் போடுவாங்க?
எம்பிக்கள் எல்லாம், டில்லியில் உள்ள பார்லிமென்ட் வளாகத்திலும், எல்எல்ஏக்கள் எல்லாம் அந்தந்த மாநில சட்டசபை வளாகத்துல இருக்கிற பூத்துல ஓட்டுப் போடுவாங்க.
* யார் வேணாலும் ஜனாதிபதி ஆயிடலாமா?
ஏன் நீ ஆவப் போறீயா? ஆசையப் பாரு!
இந்தியக் குடிமகனாக இருக்கனும், 35 வயது முடிஞ்சிருக்கனும். சம்பளம் வாங்கும் அரசு ஊழியரா இருக்க கூடாது. லோக் சபா எம்பி ஆவதற்கான தகுதி இருக்கனும்.
துணை ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் இந்த தேர்தல்ல போட்டியிடலாம். அவங்க ஜனாதிபதியா தேர்ந்தெடுக்கப்பட்டா, முந்தைய பதவியை ராஜினாமா செதிடனும்.
* ஜனாதிபதிக்கு ரொம்ப அதிகாரமோ?
இவர் எந்த முடிவையும் சுயமா செய்ய முடியாது.
எலக்ஷன்ல பெரும்பான்மை பெற்ற கட்சிய, ஆட்சியமைக்க (பிரதமராக பதவியேற்க) கூப்பிடுறது, பிரதமரின் ஆலோசனைப்படி மத்திய அமைச்சர்களை நியமிப்பது, பார்லிமென்ட் கூட்டத் தொடரைக் கூட்டுவது, அதில் பேசுவது போன்றவை தான் இவரது வேலை.
இதத்தவிர, பார்லிமென்ட்டில் ஓ.கே. ஆகும் எல்லா மசோதாக்களும், ஜனாதிபதி ஓ.கே. சொன்னாத்தான் சட்டமாகும்.
பிரதமரின் அறிவுரைப்படி(?!) மாநில கவர்னர்கள், சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் தலைமை நீதிபதிகள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், தலைமைத் தேர்தல் ஆணையர், வெளிநாட்டு தூதர்கள் போன்றவர்களை நியமிப்பார்.
அரசியல் சட்டப் பிரிவு 352ன் படி நெருக்கடி நிலை பிரகடனம் செய , லோக்சபாவை கலைக்க, பிரிவு 356ன் படி மாநில அரசைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கு.
சுப்ரீம் கோர்ட்டில் விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தை குறைக்கவும், தூக்கு தண்டனை விதிச்சவங்களுக்கு மன்னிப்பு வழங்கவும் இவருக்கு அதிகாரம் இருக்கு. ஆனா, இதுக்கெல்லாம் காலக்கெடு எதுவுமில்லை.
‘அம்மாடியோவ்! ஜனாதிபதி தேர்தல் இவ்வளவு விஷயம் இருக்கா!. சரி ஆறுமுகம்’....‘வண்டு முருகனின் பேச்சை இடையில் வெட்டிய ஆறுமுகம், ‘ஹலோ வண்டு, வெறும் ஆறுமுகம் இல்ல...அலர்ட் ஆறுமுகம்....இந்த ஆறுமுகம் அடை தின்னாம இருந்தாலும் இருப்பான். ஆனா, அடைமொழி இல்லாம இருக்கமாட்டான்’ கோபத்தில் அலர்ட் ஆறுமுகத்தின் முகம் சிவந்தது.
‘கோவிச்சுக்காத அலர்ட் ஆறுமுகம், லாஸ்ட்டா ஒரு கேள்வி, ஜனாதிபதியா வர யாருக்கு வாய்ப்பிருக்கு?’
‘என்ன இவ்வளவு சாதாரணமா கேட்கிற. ஒட்டு மொத்த இந்திய அரசியல்வாதிகளே இந்த கேள்விக்கான விடையைத்தான் தேடிக்கிட்டு இருக்காங்க. மீட்டிங், ரகசிய சந்திப்பு, வேண்டுகோள்னு ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய தூள் கிளப்பிட்டு இருக்காங்க..
இப்ப இருக்கிற துணை ஜனாதிபதி அன்சாரி, நிதி அமைச்சர் பிரணாப், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இவங்க பேரெல்லாம் அடிபடுது.
பிரதமர் மன்மோகனை கூட கேட்டாங்க. அவரு ‘ஆளை விடுங்கப்பா, நான் ரெஸ்ட் எடுக்கனும்’னு சொல்லிட்டாரு.
கொஞ்சம் பொறு. அடுத்த முறை நாம சந்திக்கிற போது யாரு வேட்பாளரு, யாருக்கு வெற்றி வாய்ப்பிருக்குனு சொல்லிடறேன்’.
அலர்ட் ஆறுமுகம் சொல்லி முடிக்கவும், ‘ஸ்நேக்’ பாபு உள்ளே நுழையவும் சரியா இருந்தது.
கொஞ்ச நேரம் அவரு கூட பேசிட்கிட்டு இருந்துட்ட கிளம்பிட்டாங்க அலர்ட் ஆறுமுகமும், வண்டு முருகனும்.
பாக்ஸ் மேட்டர்
வண்டு முருகன்: எப்படி எம்எல்ஏ, எம்பிக்களின் ஓட்டுகளை கணக்கிடறாங்க?
அலர்ட் ஆறுமுகம்: தமிழகத்தையே உதாரணமா வைச்சு சொல்றேன். அப்பத்தான் ஈஸியா புரியும்.
தமிழகத்தில ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு 176 ஓட்டு. இந்த 176 ஐ எப்படி கணக்கிடறாங்கனு சொல்றேன்.
தமிழகத்துல இருக்கிற மொத்த எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை 234. இத ஆயிரத்தால பெருக்கனும். அப்ப விடை 2,34,000. இத நம்ப மாநிலத்தில இருக்கிற மொத்த மக்கள் தொகையால வகுக்கணும்.
(‘1971 சென்செஸ்’ மக்கள்தொகை தான், ஜனாதிபதி தேர்தலில் கணக்கில் கொள்ளப்படுகிறது. தமிழகத்தின் மக்கள் தொகை 4,11,99,168 பேர்).
அதாவது,
மாநிலத்தின் மக்கள்தொகை(4,11,99,168)
= - =176
எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை(234) * 1000
ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு 176 ஓட்டு.
அப்ப, தமிழக எம்.எல்.ஏ.,க்களின் மொத்த ஓட்டு மதிப்பு 234 * 176= 41,184.
இந்த கணக்குபடி, எல்லா மாநிலங்களையும் சேர்த்து எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு 5,49,474.
வண்டு : அப்ப எம்பிக்களின் ஓட்டுகளை எப்படி கணக்கிடறாங்க?
எல்லா மாநிலத்துல இருக்கிற எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பை மொத்த எம்பிக்களின் எண்ணிக்கையோடு வகுக்கனும்.
அதாவது,
அனைத்து மாநில எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு (5,49,474)
---------------------------------------------------------------------------------------------- = 708
அனைத்து மாநில மொத்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை(776)
இதன் மூலம் ஒரு எம்.பி.,யின் ஓட்டு மதிப்பு 708. நம்ம நாட்டின் ஒட்டுமொத்த எம்.பி.,க்களின் ஓட்டுமதிப்பு (776*708) =5,49, 408
வண்டு: மொத்த ஓட்டு எவ்வளவு:
ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த ஓட்டு மதிப்ப எப்படி கணக்கிடறாங்கன்னா,
மொத்த எம்எல்ஏக்களின் ஓட்டுகளையும், எம்பிக்களின் ஓட்டுகளையும் கூட்டி, இதில் யாருக்கு மெஜாரட்டியோ அவங்கதான் ஜனாதிபதி.
அதாவது, எம்.எல்.ஏ.,க்கள்(5,49,474 ) + எம்.பி.,க்களின் ஓட்டு(5,49,408) = 10,98,882.
இந்த மொத்த ஓட்டுல யார் அதிக ஓட்டு வாங்குறாங்களோ அவங்கதான் ஜனாதிபதி. ஓ.கே.வா.
No comments:
Post a Comment