Thursday, July 17, 2014

தொடுதல் கற்போம்... கற்பிப்போம்!

பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு...
கட்டிப் பசும் பொன்னே - கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு - கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே..


எந்தச் சூழலில் வளரும் குழந்தையையும் பெற்றோர் இப்படித்தானே ஆசையாகக் கொஞ்சுவார்கள்? கண்ணுக்குள் வைத்துக் காக்க நினைக்கும் குழந்தை  கண்ணை கசக்கி வரும் வரை காத்திருப்பானேன்? குழந்தைகளின் சேஃப் ரூல், பாடி ரூல் ஆகியவற்றோடு இன்னும் சில அடிப்படை விஷயங்களையும்  விவாதிக்கலாம். குழந்தைகளுக்கும் ரகசியம், தனிமை, முடிவுகள், தீர்மானங்கள், விருப்பு வெறுப்புகள் எல்லாம் உண்டு. அது பற்றி...

பச்சைக் குழந்தைக்கும் பள்ளி செல்லும் குழந்தைக்கும் என்ன ப்ரைவசி என்கிறீர்களா? தனிமை அல்லது ப்ரைவசி என்பது அனைவருக்கும் அவசியம்.  குழந்தையை பாயிலோ தொட்டிலிலோ விட்டு, அவர்கள் தூங்காத நேரம் கவனியுங்கள். தனக்குத் தானே பேசிக்கொண்டு ஆனந்தமாக மறுத்தும்  சிரித்தும் அழுதும் கோபித்தும் சமாளிக்கும். பார்க்கும்போதே அழகு அள்ளும். அதுபோலவே பள்ளி செல்லும் உங்கள் குழந்தை தனக்குத் தானே  பேசிக்கொள்வதை கவனியுங்கள். அதெல்லாம் அவர்களின் ப்ரைவேட் டைம். இந்தத் தனிமையும் சில நேரம் இனிமையாக இருக்கும். உங்கள்  குழந்தைகளுக்கும் அவர்களின் தனிப்பட்ட நேரங்களை அனுமதியுங்கள். அதை அவர்கள் ரசிக்கும்போதே அவர்களுடைய இன்பமும் துன்பமும்  வெளிவரும்.

தனிமை அவசியம் என்றாலும், எவ்வளவு என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு எல்லாம்  புரிந்துவிடும். அதுவரை உங்கள் கவனிப்பு  மிகவும் அவசியம். டி.வி. பார்க்கிறார்கள்... கம்ப்யூட்டரில் விளையாடுகிறார்கள்... இன்டர்நெட் பார்க்கிறார்கள்  என்றால் சிறிது நேரம் அவர்கள் விருப்பத்துக்கு விடுங்கள். ‘அதிக நேர தனிமை தேவையில்லை... டி.வி., கம்ப்யூட்டரில் அவர்கள் செலவிடும் நேரம்  முடிந்தது’ என்று நீங்கள் நினைக்கும்போது, அதிலிருந்து வெளியில் வர அவர்களை வற்புறுத்தாமல், அவர்களிடம் பேச்சு கொடுங்கள். ‘டி.வி.யில் என்ன  புரோக்ராம்?’, ‘கம்ப்யூட்டரில் அது என்ன டெக்னாலஜி’ போன்ற கேள்விகளைக் கேட்டு மெதுவாக வெளியேற்றி விடுங்கள். ஒன்றை அதிகமாக   தடுக்கும்போது அதை நோக்கி மனம் செல்வது இயற்கையே. ‘டி.வி. பார்க்கலாம்...

உனக்கு விருப்பமான நிகழ்ச்சியை இத்தனை மணி நேரம் பார்த்துவிட்டு அடுத்த வேலைக்கு போய்விட வேண்டும்’ என்று சிறிது அழுத்தமாகச் சொல்லி  புரிய வைத்தல் அவசியம். பெற்றோரின் பிம்பம் அல்லது பிரதிபலிப்புதானே குழந்தைகள்? அவர்களை டி.வி. பார்க்க வேண்டாம் என்று தடுத்துவிட்டு,  நீங்கள் நாள் முழுதும் டி.வி.யில் மூழ்குவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
ரகசியம்...

இது மிக முக்கியமானது. குழந்தைகள் உங்களிடம் ரகசியம் காக்க தேவையில்லை. குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துபவர்கள், ‘யாருகிட்டயும்  சொல்லக் கூடாது... சொன்னா அடிவிழும்’ என்றோ, வேறுவிதமாகவோ பயமுறுத்தி வைத்திருப்பார்கள். ‘அந்த ரகசியம் தேவையற்றது... அம்மாவிடம்  அல்லது அப்பாவிடம் எது வேண்டுமானாலும் சொல்லலாம்’ என்ற நம்பிக்கையை விதைப்பது நம் கடமை. குழந்தைகள் எங்கு சென்று வந்தாலும்  விசாரியுங்கள். விசாரணை என்பது கடினமாக இல்லாமல் மிக இயல்பாக இருத்தல் அவசியம். இல்லாவிடில், ‘போனதும் விசாரிப்பாங்க’ என எரிச்சல்  அடைந்து உங்களிடம் கண்டிப்பாக மறைப்பார்கள். உதாரணமாக... குழந்தைகள் சண்டையிட்டு லேசாக அடிபட்டிருப்பார்கள்...

அதை நீங்கள் விசாரித்துக் கோபமடைந்து, அடுத்த நாள் பள்ளியில் புகார் வரை சென்றால் அது அந்தக் குழந்தைகளின் மனநலனை பாதிக்கும். இன்று  சண்டையிடுபவர்கள் நாளை சேர்ந்துவிடுவார்கள். தேவையற்ற பதற்ற விசாரணை ஒரு நல்ல மனநிலையை சிதைக்கக் காரணமாகும். அதற்குப் பதில்,  தினப்படி இதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டால் அவர்களே உங்களிடம் சொல்வார்கள். இது போன்ற நேரங்களில், ‘சரிடா கண்ணு... நாளைக்கு  சரியாயிடும்... அவனும் குழந்தைதானே? நீயே மிஸ்கிட்ட சொல்லு...’ என்று ஆறுதலளிப்பதே போதும். அவர்களுக்கு உங்களிடம் என்ன  வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நம்பிக்கை வர வேண்டும். அது மட்டுமே முக்கியம்!

முடிவுகள் அல்லது தீர்மானங்கள் பிறந்த குழந்தைக்கு கூட முடிவுகளும் தீர்மானங்களும் இருக்கும். சின்னக் குழந்தைக்கு விருப்பமில்லாததை  ஊட்டினால் கூட, நம் மீதே துப்புவதும், இஷ்டமில்லாதவர்கள் தூக்கினால் கை காலை உதறி அழுது எதிர்ப்பை தெரிவிப்பதும் அதனுடைய முடிவும்  தீர்மானமும்தான். சிறுவயதில் இப்படி விளையாட்டாக முடிவெடுக்கவும் தீர்மானிக்கவும் பழகுவது பிற்காலத்தில் அவர்களின் வாழ்க்கைக்கே உதவும். 

‘பள்ளியில் ஒரு விழா...

அதில் கலந்து கொள்ளவேண்டும்’ என்று அடம்பிடிக்கும் குழந்தை எனில், அதிலுள்ள விஷயங்களைத் தெரிந்துகொண்டு, உங்கள் கருத்தையும் சொல்லி,  முடிவை அவர்களையே எடுக்கச் சொல்லலாம். ஏதாவது ஒரு பொருள் தேவைப்படும்போது, அதனுடைய அவசியத் தேவைகளை விவாதித்து புரிய  வைக்கலாம். ஒரு வேளை இது பணம் சம்பந்தப்பட்ட விஷயம் எனில், இன்னும் கொஞ்சம் விரிவாகவே விவாதித்து சொல்லித் தரலாம். எதுவுமே  ஆரம்பிக்கும்போது மட்டுமே கடினம்... பழகிவிட்டால் தானாகவே அவசியத்தையும் காரண காரியங்களையும் யோசிப்பார்கள். கொஞ்சம் பணம்  கொடுத்து அவர்களையே கடைக்குச் சென்று பழக்கலாம். ‘தேவை - தேவையில்லை’யை தானாகவே புரிய வைப்பது எளிது, சொல்லி புரியவைப்பதை  காட்டிலும்! 

விருப்பு வெறுப்புகள்...

பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் சிறிய பிரச்சனை முதல் பெரிய விவாதம் வரை நிகழக் காரணம் இந்த விருப்பு வெறுப்புகளே. நமக்குப் பிடித்தது  குழந்தைகளுக்கும் பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பினால்தான் பிரச்னையே ஆரம்பிக்கும். நம் குழந்தைகள் நம்முடையவை அல்ல... கலீல் ஜிப்ரான்  கருத்துப்படி, ‘அவர்கள் நம் மூலம் இந்த உலகத்துக்கு வந்தவர்கள்’... தனிமனித உரிமைகளை அவர்கள் இந்த பூமியை தொட்ட நொடியில்  பெறுகிறார்கள்.

ஆகவே, அவர்களுடைய விருப்பு வெறுப்புகளை மதிக்க வேண்டும், குறைந்தபட்சம் காதுகொடுத்தேனும் கேட்கலாம். நம்மால் முடியக்கூடிய விஷயம்  எனில் சந்தோஷமாக அனுமதிக்கலாம். இல்லையெனில், ஏன் முடியாது என்று அவர்களிடம் தெளிவுபடுத்துவதும் நம் கடமைதான். மிகச் சிறிய  வயதிலிருந்தே இப்படி பழக்கினால் பிற்காலத்தில் பெரும் விவாதம் வருவதை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment