கழுத்துக்குக் கீழே செயலற்றுப் போனார் என்னாலேயே முடியும் என்கிறபோது மற்ற பெண்களால் ஏன் முடியாது என்று யோசித்தேன். முயற்சியில் இறங்கி இருக்கிறார் பிரீத்தி. - www.v4all.org
’’இரண்டு முறை மூச்சு நின்று போன என்னை கடவுள் மீண்டும் பிழைக்க வைத்திருக்கிறார் என்றால் என்னை கருவியாக வைத்து அவர் ஏதோ ஒரு நல்ல காரியத்தைச் செய்ய நினைக்கிறார். அது சீக்கிரமே நடக்கும் என நான் நம்புகிறேன்’’ என்கிறார் பிரீத்தி சீனிவாசன்.
சென்னையைச் சேர்ந்த பிரீத்தி சீனிவாசன், அமெரிக்காவில் பள்ளிப் படிப்பு முடித்தவர். சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் தேசிய நீச்சல் சாம்பியனாகவும் இருந்தவர். கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த அவரது எண்ணத்தை சுக்கு நூறாக்கிப் போட்டது அந்த விபத்து. கல்விச் சுற்றுலா போயிருந்த நேரத்தில் விபத்தில் முதுகுத் தண்டு வடத்தில் பாதிப்பு ஏற்பட்டு கழுத்துக்குக் கீழே செயலற்றுப் போனார் பிரீத்தி.
இந்தச் சம்பவம் நடந்து 16 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், தன்னைப்போல் முடங்கிப்போன ஜீவன்களை அரவணைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் பிரீத்தி. அதுகுறித்து நம்மிடம் பேசினார்.
’’என்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் நீண்ட நாட்கள் உயிருடன் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவர்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து மெதுமெதுவாக சாகடித்துவிடுவார்கள். எனக்குத் தெரிந்து, 19 வயது பெண் ஒருத்தியை சோறு, தண்ணி கொடுக்காமல் டி.வி-க்கு எதிரே கிடத்திவிட்டு அப்பாவும் அம்மாவும் வேலைக்குப் போனதைப் பார்த்திருக்கிறேன். இன்னும் சில குடும்பங்களில், ‘உன்னால அண்ணனுக்குக் கல்யாணம் ஆக மாட்டேங்கிறது’ என்றெல்லாம் செயலற்ற பெண் பிள்ளைகளை பேசுகிறார்கள். சில வீடுகளில் விஷத்தை அவர்கள் கண்ணில் படும்படி வைக்கிறார்கள்.
படிப்பறிவும் இல்லாத, போதிய பாதுகாப்பும் இல்லாத மாற்றுத் திறனாளிப் பெண்கள் வீதிக்கு வந்துவிட வேண்டும் அல்லது செத்துப் போய்விட வேண்டும் இதைத்தான் இந்த சமுதாயம் விரும்புகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அப்படித்தான் 3 பெண்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். எனது பெற்றோருக்கு நான் ஒரே ஒரு குழந்தை. எனக்கு அவர்கள்தான் தெய்வம். இப்படி முடங்கிப் போய் நமக்குச் சுமையாகிவிட்டாளே என்று அவர்கள் ஒருபோதும் என்னை நினைத்ததில்லை.
’உன்னைப் பார்க்க நாங்கள் இருக்கிறோம். ஆனால், யாருமே இல்லாத உன்னைப் போல் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ன செய்வார்கள்? எங்களைப் போல பரிவுகாட்டும் ஒரு சில பெற்றோர்கள், தங்களுக்குப் பிறகு தங்கள் பிள்ளையை யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற தவிப்பில் இருப்பார்களே.. அவர்கள் இளைப்பாற நீ ஒரு நிழலை உருவாக்க வேண்டும்’ என்று என்னுடைய அம்மா சொன்னார்கள்.
அது நியாயமாகப்பட்டது. கழுத்துக்குக் கீழே செயல்பாடு இல்லை என்றாலும் நான் சொல்வதை செயல் வடிவம் ஆக்குமளவுக்கு கணினியில் சாஃப்ட்வேர் போட்டு வைத்திருக்கிறேன். அதன் மூலம் இன்டெர்நெட் வழியாக நான் சம்பாதிக்கிறேன். என்னாலேயே முடியும் என்கிறபோது மற்ற பெண்களால் ஏன் முடியாது என்று யோசித்தேன். அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக ‘ஆத்ம விடுதலை (Soul Free)’ என்ற அமைப்பைத் தொடங்கினேன். உடலால் செயல்பாடற்றவர்களுக்கு அந்த உடலே சிறைச்சாலை ஆகிவிடுகிறது. அதைவிட்டு வெளியில் கொண்டு வந்தால் அவர்களும் நல்ல வாழ்க்கை வாழலாம்.
முதலில் அவர்களுக்கு தன்னம்பிக்கையை உண்டாக்குவதற்காக, வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாத பல மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளை கான்ஃப்ரன்ஸ் கால் மூலம் வாரம் ஒருமுறை செல்போனில் பேசவைத்து அவர்களுக்குள் உள்ள சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ள வைக்கிறோம். சில பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையையும் கொடுக்கிறோம்.
இதெல்லாம் எங்களாலான சின்னச் சின்ன உதவிகள். விரைவில் மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து விதங்களிலும் மறுவாழ்வு அளிக்க இந்திய அளவில் ஒரு சிறந்த மையத்தை திருவண்ணாமலையில் நிறுவப் போகிறோம். கடவுளின் ஆசி இருப்பதால் சீக்கிரமே அது நடக்கும்.
மனிதனுக்கு அன்பு, பாசம், நிம்மதி இதெல்லாம் வேணும். ஆனால், இவற்றைப் பெற பணம் தேவையில்லை. ஆனாலும், மனிதன் பணம்.. பணம்.. என்று ஓடியே நிகழ்காலத்து நிம்மதியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறான். நான் இந்த நிமிடத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பதால் சக்கர நாற்காலியில் நகர்ந்தாலும் நிம்மதியாக இருக்கிறேன்’’ சிரித்தபடியே விடை கொடுத்தார் பிரீத்தி சீனிவாசன்.
No comments:
Post a Comment