Thursday, July 17, 2014

குட் டச்... பேட் டச்...தொடுதல் கற்போம்... கற்பிப்போம்!

கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே
பூத்த புதுமலரே பொக்கிஷமே கண்மணியே
யார் அடித்து நீ அழுதாய் அழுத கண்ணில் நீர் ததும்ப
பேர் உரைத்தால் நான் பெருவிலங்கு பூட்டிடுவேன்
அத்தை அடித்தாளோ அரளிப்பூ செண்டாலே
மாமன் அடித்தானோ மல்லிக்கைப்பூ பந்தாலே...


குழந்தைகளின் ஒரு சொட்டு கண்ணீருக்கு தாய் இத்தனை விளக்கம் கேட்கிறாள். நாம் நம் குழந்தைகளுக்காக காது கொடுக்கிறோமா? இத்தனை நாள்  இல்லாவிட்டால் போகட்டும்... இனியாவது அவர்களுக்காக நேரம் ஒதுக்கி கேட்க வேண்டியது நம் கடமை. பள்ளி, ட்யூஷன், கோச்சிங் கிளாஸ், வார  இறுதி வகுப்புகள், மற்ற பள்ளிகளுக்கு சென்று பங்கேற்கும் போட்டிகள், ட்ரெயினிங் சென்டர், இன்னும் என்னென்ன இடங்களுக்கு யாருடன் சென்று  வந்தாலும், விசாரணை போல இல்லாமல் தோழமையுடன் நடந்ததை கேட்டறிய வேண்டும். 

எப்போதுமே குழந்தைகளுக்கு வீட்டுக்கு வந்ததும் யாரிடமேனும் பகிர வேண்டும் என்ற ஆவல் இருக்கும். நாமோ வேலைச்சுமையில்  நிராகரித்திருப்போம்... அதை மனதில் கொண்டே அவர்களும் தவிர்க்கின்றனர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.முடிந்த வரை குழந்தைகளின்  நண்பர்கள், அவர்களின் பெற்றோரிடம் அறிமுகம் இருப்பது நன்று. ட்யூஷன் போன்ற மற்ற வகுப்புகளுக்கும் ஒரு முறையேனும் பெற்றோர் இருவரும்  சென்று அறிமுகம் தருவதும் அவசியம். 

எந்த வயதிலிருந்து ‘குட் டச்... பேட் டச்...’ சொல்லித் தரலாம்? எப்படிச் சொல்லித் தருவது? 
இதெல்லாம் நமக்கு நம் பெற்றோர் சொல்லித் தரவில்லையே? நாமெல்லாம் வளரவில்லையா? இதுபோன்ற கேள்விகள் எழுவது வழக்கம்தான். சில  ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் தென்கோடி நகரில் பள்ளி மாணவர்களுக்கு இதை அறிமுகப்படுத்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  நிகழ்ச்சி தொடங்கும் முன், அந்த மாணவர்களை அழைத்து வந்திருந்த ஆசிரியர்களிடம், ‘குட் டச்... பேட் டச்... என்றால் என்ன’ என்று கேட்ட போது,  அவர்களுக்கு அது பற்றி எந்த அறிமுகமும் இல்லை என்பது தெரிய வந்தது. எங்கள் உரையை அவர்களிடமிருந்தே தொடங்க வேண்டியதாயிற்று.  பெற்றோரைத் தாண்டி ஒரு குழந்தை சட்டென ஒரு விஷயத்தை புரிந்துகொள்வது ஆசிரியர்களிடமிருந்துதான். சரி... இப்போது நீங்கள்  சொல்லுங்களேன்... உங்கள் குழந்தைகளுக்கு  குட் டச்... பேட் டச்... என்றால் என்னவென்று எப்படி சொல்வீர்கள்?

குட் டச்...

இந்த விஷயத்தை டெக்னிகலாக கூறி குழந்தைகளை குழப்ப வேண்டாம்... மிக மிக எளிதாக, அவர்கள் வழியிலேயே சொல்லி புரியவைப்பதுதான்  நல்லது. எந்த ஒரு டச் அவர்களை ‘ரொம்பவே கம்ஃபர்டபிளாக’ உணர செய் கிறதோ அது குட் டச். உதாரணமாக... அம்மாவோ அப்பாவோ  ‘குட்மார்னிங்’ சொல்லி அணைப்பது, ஆசிரியர்கள் பிள்ளைகளின் முதுகில் தட்டிக் கொடுப்பது, நண்பர்களுடன் செய்யும் ஹை ஃபைவ், ஷேக்  ஹேண்ட்ஸ், செல்லமாக மாமாவோ, சித்தப்பாவோ, அக்காவோ தலையில் கொட்டுவது, தடவுவது என்று எந்த ஒரு தொடுதல் அவர்களை அன்பாகவும்  பாதுகாப்பாகவும் உணரச் செய்கிறதோ, அது குட் டச்... ‘அவர்கள் சம்திங் ஸ்பெஷல்’ எனத் தொடுதலில் உணர்தலும் குட் டச்... தொடுதல்,  முத்தமிடுதல் கூட சில நேரம் பாதுகாப்பாக உணரச் செய்யும். 

பேட் டச்...

அறிமுகமானவர்களோ, அறிமுகமற்றவர்களோ தேவையற்ற வேளையில் தேவையற்ற உடல் பகுதிகளில் தொடுவதும், அத்தொடுதலை மனதும்  உடலும் விரும்பாததுமே பேட் டச். அப்படித் தொடுபவர் களை பார்த்தாலே குழந்தைகள் பதற்றம் அடைவார்கள், அவர்களிடமிருந்து மறைமுகமாக  விலகி இருக்க விரும்புவார்கள். அது அவர் களையும் அறியாமல் வெளிப்படும். இதை அவர்கள் சில நேரம் சொல்லி யும்  உணர்த்துவார்கள். அந்தத்  தொடுதல் அவர்களுக்கு ஒரு பயத்தை உருவாக்கும்...  மூட் அவுட் செய்யும்... கவனமின்மையை உண்டாக்கும்.  குழந்தைகளுக்கு சொல்லித்தர  வேண்டியவற்றில்  முக்கியமானது எப்படி ‘நோ’ சொல்லுவது என்பதே. அவர்களின் உடல் குறித்த தெளிவான அறிமுகம், செல்ஃப் சேஃப்டி, சேஃப் பாடி  ரூல், ரகசியம் என்றால் என்ன? வெளியிடங்களில் பாதுகாப்பு, இன்டர்நெட் பாதுகாப்பு, அறிமுகமற்றவர்களிடம் எப்படிப் பழகுவது, பணிபுரியும்  பெற்றோர் எனில் வீட்டில் தனிமையில் இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு இவை அனைத்தையும் இங்கு விவாதிக்கலாம். முதலில் குழந்தைகளின்  உடலமைப்பு பற்றிய அறிமுகம். ஏற்கனவே கூறியதுபோல, இக்கால குழந்தைகள் மிக புத்திசாலிகள்... நீங்கள் அவர்கள் பேசத் தொடங்கும்  காலகட்டத்திலிருந்தே இந்த அறிமுகத்தை ஆரம்பிக்கலாம். 

No comments:

Post a Comment