Friday, July 11, 2014

வாங்க சார்... நாமளும் இலக்கு வைச்சு ஜெயிச்சு காட்டலாம்..! - எழுமின், விழுமின் - குறி சாரும் வரை நில்லாது செல்மின்

வாங்க சார்... நாமளும் இலக்கு வைச்சு ஜெயிச்சு காட்டலாம்..!


 எழுமின், விழுமின் - குறி சாரும் வரை நில்லாது செல்மின் , என்று வீர முழக்கமிட்ட விவேகானந்தர் பிறந்த மண்ணில் தான் நாமும் பிறந்து இருக்கிறோம். ஆனால், நமக்கும் தான் எத்தனை குளறுபடி, குழப்பங்கள்...


 அர்ஜுனன் அம்பு எய்யும்போது , தூரத்தில் இருந்த மரத்திலே உட்கார்ந்து இருந்த கிளியோட கண்ணுதான் தெரிஞ்சதாம். அது , உண்மையோ , பொய்யோ தெரியலை.. ஆனா, சொல்லி குறி வைச்சு அடிக்கிற , ஜெயிக்கிற ஆளுங்க இன்னும் நம்ம கூட இருக்கிறாங்க தானே... 


நமக்கு ஏன் அது புரியவே , இல்லை கைவசப்படவே மாட்டேங்குது.. கீழே கொடுக்கப்பட்டுள கட்டுரையை படிச்சுப் பாருங்க.. பல உண்மைகளை உங்களுக்கு அது புலப்படுத்தலாம்...    
====================================================
ஒரு கால் டாக்சியில் ஏறுகிறீர்கள். டிரைவர் "எங்கே போக வேண்டும்?" என்று கேட்கிறார். நூறு மைல் தூரத்தில் உள்ள ஒரு இடத்தைச் சொல்கிறீர்கள். அது தான் நீங்கள் போக வேண்டிய முக்கியமான இடம். அதற்கு இப்போதுள்ள தெருவிலேயே நேராகப் போக வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.

கார் மூன்று மைல் போனதும் உங்களுக்கு வலதுபக்கத் தெருவில் உள்ள வேறொரு இடத்திற்குப் போனால் என்ன என்று தோன்ற டிரைவரிடம் வலதுபக்கம் காரைத் திருப்பச் சொல்கிறீர்கள். அவரும் திருப்புகிறார். அந்தத் தெருவில் அந்த இடத்திற்குப் போக இன்னும் 20 மைல் பயணம் செய்ய வேண்டும். ஐந்து மைல் போனவுடன் ஒரு திருப்பத்தில் நீங்கள் பல காலமாக போக நினைத்திருந்த ஒரு கோயில் 12 மைல் தான் என்று எழுதி இருப்பதைப் பார்க்கிறீர்கள். இத்தனை தூரம் வந்த பின் அந்தக் கோயிலிற்குப் போனால் என்ன என்று உங்களுக்குத் தோன்றுகிறது. டிரைவரை அந்தத் தெருவில் திருப்பச் சொல்கிறீர்கள். டிரைவர் அந்தத் தெருவில் காரைத் திருப்புகிறார்.

கார் ஏழு மைல் போனவுடன் தெருவில் பழுது பார்க்கும் பணி நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள். மாற்றுப் பாதையில் போகும்படி ஒரு பலகையில் எழுதியிருக்கிறது. அப்படிப் போனால் நீங்கள் போக நினைத்த கோயிலுக்கு 25 மைல் பயணம் செய்ய வேண்டி இருக்கும் என்று அறிந்த போது கோயிலுக்குப் போகும் எண்ணத்தைக் கை விடுகிறீர்கள். வண்டியைத் திருப்பச் சொல்கிறீர்கள். கார் வந்த வழியே திரும்புகிறது. வழியில் டீ சாப்பிட காரை நிறுத்தச் சொல்கிறீர்கள். டீக்கடையில் ஒருவர் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் ஏழு மைல் தூரத்தில் இருப்பதாகச் சொல்கிறார். இவ்வளவு தூரம் வந்து விட்டு அங்கு போகாமல் இருப்பதா என்று தோன்ற காரை அவர் சொன்ன பாதையில் விடச் சொல்கிறீர்கள்..........

இப்படி நாள் முழுவதும் பல முறை தங்கள் பயணத்தை திசை திருப்பிக் கொண்டே இருந்தால் நாள் முழுவதும் பயணம் செய்து கொண்டு இருந்தாலும் நீங்கள் போக நினைத்திருந்த அந்த முக்கியமான இடத்திற்கு நீங்கள் போய்ச் சேர முடியுமா? எத்தனையோ முக்கியமில்லாத இடங்களுக்கு நீங்கள் போய்ப் பார்க்க முடிந்தாலும் நீங்கள் எங்கு போகக் கிளம்பினீர்களோ அந்த இடத்திற்கு தூரத்திலேயே அல்லவா
நீங்கள் இருந்து கொண்டிருக்கிறீர்கள்.

போக வேண்டிய முக்கியமான இடத்தை விட்டு பல வழிகளில் சுற்றி மற்ற இடங்களுக்குப் போவது முட்டாள் தனம் என்று சாதாரண அறிவு படைத்தவராலும் சொல்ல முடியும். ஆனால் இந்த முட்டாள்தனத்தை நம்மில் எத்தனை பேர் நம் வாழ்க்கைப் பயணத்தில் செய்து கொண்டிருக்கிறோம்.

உண்மையில் நம் வாழ்க்கைப் பயணமும் இந்த கார் பயணம் போலத்தான். ஒரு முக்கிய காரணத்திற்காக நாம் பிறந்திருக்கிறோம். அது தான் நாம் போய்ச் சேர வேண்டிய அந்த முக்கிய இடம். பிரபஞ்சமே அந்த கார் டிரைவர். நாம் எங்கு போக வேண்டும் என்று எப்படி டிரைவர் தீர்மானிக்க மாட்டாரோ பிரபஞ்சமும் நம் இலக்குகளைத் தீர்மானிப்பதில்லை. ஆனால் நம் விருப்பப்படி நம்மை அது கொண்டு செல்லக் காத்திருக்கிறது. 
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSLfK5wg-wPdqHajebtPrfZZP4MeLyVJbKXOfdhcpy4Us56DAJR
நம் விருப்பம் தெளிவாகவும் நமக்கு உண்மையிலேயே முக்கியமாகவும் இருக்கிற வரையில் நம் நடவடிக்கைகள் அதற்கு எதிர்மாறாக இருப்பதில்லை. எண்ணத்திலும், செயலிலும் தெளிவிருக்கிற போது நமது குறிக்கோளை எட்டுவது நமக்கு எளிதாகிறது. ஆனால் நம் விருப்பங்கள் அடிக்கடி மாறிக் கொண்டு இருந்தால், ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தால் வாழ்க்கையில் குழப்பமே அல்லவா மிஞ்சும்.

கார் பயணத்தில் மேலே குறிப்பிட்ட குழப்பங்கள் இருந்தால் பணமும் காலமும் மட்டுமே அந்த ஒரு நாள் விரயமாகும். ஆனால் அதுவே வாழ்க்கைப் பயணத்தில் குழப்பம் இருக்குமானால் வாழ்க்கையே விரயமாகிறது. இன்னொரு வாழ்க்கையும் சந்தர்ப்பமும் கிடைக்குமா என்பது சந்தேகமே.

எனவே நாம் ஒவ்வொருவரும் இது வரை பிரபஞ்சம் என்ற கார் டிரைவருக்கு எப்படியெல்லாம் போகக் கட்டளையிட்டு இருக்கிறோம் என்று எண்ணிப் பார்ப்பது நல்லது. நமக்கு உண்மையில் என்ன வேண்டும், எது முக்கியம் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறோமா? இல்லை முரண்பாடுகளால் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறோமா?

எனக்கு உடல் டிரிம் ஆக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நான் உடற்பயிற்சி செய்வதில் சோம்பலும், உடலுக்கு ஆகாத உணவுப் பதார்த்தங்கள் சாப்பிட ஆவலும் காட்டினால் அது மேலே குறிப்பிட்ட கார் பயணம் மாதிரி தான். முக்கியம் என்று நான் நினைப்பதாக நினைக்கும் ஒரு குறிக்கோளுக்கு எதிர்மாறாக நடவடிக்கைகள் செய்து என் குறிக்கோளுக்கு தொலைவிலேயே நான் நிற்கிறேன் என்று பொருள்.

கிரிக்கெட் சீசனில் பெரிய கிரிக்கெட் வீரராக ஆசை, சில நாட்கள் கழித்து பிரபல பாட்டுப் போட்டி ஒன்றைக் கண்டு சிறந்த பாடகனாக ஆசை, அடுத்த மாதம் இன்னொரு ஆசை என்று வேறு வேறு ஆசைகள் நம்மை ஆட்கொள்ள ஒவ்வொன்றிலும் சில காலம் பெரிய ஈடுப்பாட்டுடன் இருந்து இன்னொன்றிற்குத் தாவிக் கொண்டே இருந்தால் நாம் இதில் எதுவும் ஆகப்போவதில்லை என்பதே யதார்த்த உண்மை. ஏனென்றால் பிரபஞ்சத்திற்கு மாற்றி மாற்றி கட்டளை கொடுத்தபடி இருக்கிறோம்.

அதே போல ஒரு குறிக்கோள் மனதில் இருந்தாலும் அதற்காக எதுவும் செய்ய நாம் தயாராக இல்லாத போதும் எண்ணம் மூலமாக ஒரு கட்டளையும், செயல் மூலமாக நேர் எதிரான கட்டளையும் பிரபஞ்சத்திற்கு தந்து கொண்டு இருக்கிறோம் என்பது பொருள்.

நம்மில் எத்தனை பேர் எங்கு போக வேண்டும், என்ன ஆக வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்?
பலரும் தெளிவாக இருப்பதாக சொல்லக்கூடும். ஆனால் தெளிவு என்பது எண்ணத்தோடு ஒருங்கிணைந்த செயல். அது நம்மிடம் உள்ளதா?

மனித வாழ்க்கை ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை நழுவ விட்டால் இன்னொரு சந்தர்ப்பம் நிச்சயமில்லை. நமக்குள்ளே தெளிவான லட்சியம் இருந்தால், அதை அடைய மன உறுதியும் இருந்து நம் செயல்களும் லட்சியத்தை நோக்கியே இருக்குமானால் விளைவைப் பற்றி நாம் கவலையே பட வேண்டாம். பிரபஞ்சம் நம்மை அதை நிச்சயமாக அடையச் செய்யும்.

பிரபஞ்சம் எல்லை இல்லாத சாத்தியக் கூறுகளோடு நமக்கு உதவக் காத்திருக்கிறது. நாம் தெளிவாக அதனிடம் கட்டளையிடத் தயாரா?


பிரச்சினையே நாம் நம் 'காரை' மற்ற 'காரோடு' ஒப்பிட்டுப் பார்ப்பதே. அந்த கார் அப்படி போகிறதே, நாமும் போவோம். அந்த வழி நமக்கேற்ற வழியா என்று பார்க்காமல் செய்வது தவறு. 


Read more:www.v4all.org 

No comments:

Post a Comment