மகான் செய்த அற்புதம் - www.v4all.org
மகான்களாலும் சிததர்களாலும் சிறப்பு பெற்ற பூமி பாரத பூமி. தான், தனது என்ற நினைவொழித்து வாழ்ந்தவர்கள் அப்புனிதர்கள். அவர்களில் யோகிகள், சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள், அவதூதர்கள் என்று பல பிரிவினர் உண்டு.
அது பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம். ஒரு ஆங்கிலேய அதிகாரி தனது குதிரையில் காட்டு வழியில் சென்று கொண்டிருந்தார். அது மனித நடமாட்டம் இல்லாத காடு. வழியில் ஒரு பாறை மீது மனிதர் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார் அவர். அந்த மனிதர் நிர்வாணியாக அமர்ந்திருந்து எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். குதிரை செல்வதையோ, அதன் மீது வேகமாக ஒரு மனிதன் செல்வதையோ அவர் கவனிக்கவில்லை. அதைக் கண்ட அந்த அதிகாரி ’யாரோ பாவம் மன நோயாளி போலிருக்கிறது. இந்தியாவில் இது போன்று நிறைய பேர் இருக்கிறார்கள்’ என்று நினைத்து, வேகமாக குதிரையைச் செலுத்தினார்.
சில மைல் தூரம் போயிருப்பார். அதே மனிதர் எதிர்ப்புறம் ஒரு பாறை மீது அமர்ந்து கொண்டிருப்பதைக் கண்டார். அதிகாரிக்கு ஒரே அதிர்ச்சி. ஆச்சரியம். ’எப்படி இந்த மனிதர் தனக்கு முன்னால் இங்கே வந்தார்’ என்று. ஒரு வேளை இந்த மனிதன் அந்த மனிதரின் சகோதரராக இருக்கலாம் அல்லது பித்தர்கள் என்பதால் ஒரே தோற்றம் கொண்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
சில மணி நேரம் சென்றது. அந்த அதிகாரிக்குத் திடீரென தண்ணீர் தாகம் எடுத்தது. அருகில் எங்காவது குடிநீர் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தார். ஒரே செடியும், கொடியும், மரமுமாக இருந்ததே அன்றி கிணறோ, குளமோ, ஆறோ எதுவும் தட்டுப்படவில்லை. தாகத்துடனே பயணம் செய்தவர், சற்றுத் தொலைவில் ஒரு மனிதன் நடந்து சென்று கொண்டிருந்ததைப் பார்த்தார். அருகில் எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று அந்த மனிதனிடம் கேட்கலாம் என நினைத்து வேகமாக குதிரையைச் செலுத்தினார். அந்த மனிதர் அருகே சென்று குதிரையை நிறுத்தி விட்டு, நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தவர் அதிர்ந்து போனார். காரணம், வழியில் அவர் இரண்டு முறை சந்தித்த அதே மனிதர் தான் இவர்.
தான் இவ்வளவு விரைவாக குதிரையில் வந்து கொண்டிக்கும் போது, தன்னைக் கடந்து செல்லாமல் எப்படி அந்த மனிதர் தனக்கு முன்னால் செல்ல முடிந்தது என்று யோசித்தார். இவர் ஒரு மிகப் பெரிய மகான். அவர்களால் தான் இவையெல்லாம் சாத்தியம் என நினைத்தவர், அந்த மனிதர் முன் போய் நின்று தங்கள் வழக்கப்படி ஒரு ’சல்யூட்’ வைத்தார்.
அதுவரை பிரம்மத்தில் லயித்திருந்த அந்த மனிதர் அக உணர்வு பெற்றார். ஆங்கிலேயரை கருணையுடன் நோக்கினார். அந்த விழியின் தீக்ஷண்யத்தில் அந்த ஆங்கிலேய அதிகாரி திளைத்து மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே, அந்த மனிதர் மெல்ல நடந்து முன்னே சென்று திடீரென காணாமல் போனார்.
அதிகாரி திகைத்தார். அங்கும் இங்கும் ஓடினார். தேடினார். கத்தி, கூப்பிட்டுப் பார்த்தார். அந்த மனிதர் கண்ணில் படவே இல்லை. அது மட்டுமில்லை`. அவருக்கு இருந்த தாகமும் தீர்ந்ததுடன், உடல் களைப்பும் நீங்கி முழுமையான புத்துணர்ச்சியோடு இருந்தது.
தலைமையகத்துக்குச் சென்று இந்த விஷயங்களை சக ஆங்கிலேய நண்பர்களிடம் தெரிவித்தவர், தனது நாட்குறிப்பிலும் இதைப் பதிவு செய்தார். அது பின்னர் அரசாங்க கெஜட்டிலும் அக்காலத்தில் வெளியிடப் பட்டது.
அந்த மகான் வேறு யாருமல்ல… மௌன குருவாய், அவதூதராய் விளங்கி, இருநூறாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து பலரது வாழ்க்கைச் சிறக்கக் காரணமான ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் தான்.
No comments:
Post a Comment