Showing posts with label coimbatore coddsia stall design. Show all posts
Showing posts with label coimbatore coddsia stall design. Show all posts

Saturday, June 18, 2016

வேதம் என்றால் என்ன?

வேதம் என்றால் என்ன?



எதற்கு?


இந்தியப் பண்பாட்டுக்குப் பழமையான ஆதாரமான முதல்நூல் வேதம்.

உலகிலேயே மிகவும் பழமையான நூல் வேதம் என்பதைச் சரித்திர வல்லுனர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

வேதம் என்றால் ஞானம். பரம்ப்ருளை அறிவிக்கும் வழி, பேரறிவைப் பார்த்தல் என்ற பல பொருள்கள் உண்டு.

இவ்வுலக நன்னெறியையும் தெய்வீக நெறியையும் அறிவிக்கும் நூல் வேதம்.

அந்த அந்த ஸ்வரங்களைத் தவறாமல் உச்சரித்தால் பயன் தரக்கூடிய வல்லமை பெற்ற மந்திரங்களைக் கொண்ட பழநூலே வேதமாகும்.

மாந்தர் நல்வழியில் வாழ்ந்து விரும்பியவற்றை பெறவும் தீமைகளை விலக்கவும் தெய்விகமான உபாயங்களை அறிவிக்கும் கிரந்தமே வேதம்.

இஷ்டப்ராப்தி – அநிஷ்டபரிஹாரயோ:, அலௌகிகம் உபாயம் யோ க்ரந்தோ வேதயதி ஸ வேத: என்று வேத பாஷ்யகாரரான ஸாயணர் என்ற மஹரிஷி வேத்த்துக்கு லக்ஷணம் கூறியிருக்கிறார்.

மாந்தரைத் தெய்வீக நெறியில் வாழ வழி கூறுவது வேதம். இன்னும் வைணவர்கள் ஒருவரை ஒருவர் “ தேவரீர் “ என்று சொல்லி வழங்குவதைப் பார்க்கிறோம். மாந்தரை மனிதராக வாழ வழி காட்டுபவை. வேத ரிஷிகள் அல்லாத பிறர் இயற்றிய நூலகள் மாந்தரை விலங்கு வழியில் செலுத்தும் நூல்களையும் இன்று சிலர் எழுதுவதைக் காண்கிறோம்.

“ பகவத் ஸங்கல்பம் – இறைவனது திருவுள்ளம் என்பதை மையமாகப் பற்றிக் கொண்டு நன்னெறியில் வாழ்ந்துள்ள பலரை நாம் நேரில் கண்டிருக்கிறோம். நல்ல வாழ்வுக்கு வழி காட்டும் வேதத்தையே அவர்கள் ந்டைமுறையில் கடைப்பிடித்திருந்தார்கள்.

யுகம் யுகமாக என்றும் நிலைத்துள்ள வேத மந்திரங்களை ரிஷிகள் நெடும் தவத்தினாலும் மன ஆற்றலினாலும் கண்டார்கள்.

மிகவும் நுட்பமான அறிவு வடிவில் இருக்கும் வாக்கே “பரா” என்பது: இதுதான் வேதம், ரிஷிகள் இதைக் கண்டதும் இந்த வாக்கு “பஸ்யந்தி” என்ற பெயர் பெற்றது. சொல் வடிவாகத் தோன்றும் வேதம் இது. இதற்கு இடம் நாபி {தொப்புல்} இது ஸ்தூல வடிவம் கொள்ளும் போது “ மத்யமா வாக்கு “ ஆகிறது.

இதற்கு இடம் இருதயம். இதுவே நெஞ்சு வழியாக வெளிவரும்போது ஒலி வடிவம் பெற்று “ வைகரீ வாக்கு “ ஆகிறது.

வேதம் அநாதி, என்றும் உள்ளது; இறைவனின் மூச்சுக் காற்று இது. வானத்தில் எப்போதும் ஒலிவடிவமாக இது மறைந்துள்ளது.

“மலைக் குகைகளிலும், ஆறுகள் சங்கமிக்கும் இடங்களிலும் பேரறிவு வாய்ந்த ரிஷிகள், வேத மந்திரங்களை வெளியிடப் பிறந்தார்கள்.” – உபஹ்வரே கிரீணாம், ஸங்கதே ச நதீநாம், தியாவிப்ரோ அஜாயத – என்று ரிக்வேதம் கூறுகிறது. நம் சமயப் பெரியோர்கள் யாவரும் இத்தகைய புனித இடங்களிலேயே அவதாரம் செய்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.

“ வேதம் முழுவதுமே மாந்தரின் நற்கடமையைப் போதிக்கிறது “ என்பது ஜைமினியின் கொள்கை. {மீமாம்ஸா ஸூத்ரம், 1-2-1}

“ ரிஷிகள் வேத மந்திரங்களைக் கண்டவர்கள். இயற்றியவர்களல்லர் “ என்று நிருத்தம் கூறுகிறது. அந்த அந்தக் காலத்தில் முன்பு இருந்தபடியே வேத மந்திரங்கள் முனிவர் வாயிலாக வெளி வருகின்றன.

அளவற்று ஒன்றாக இருந்த வேதத்தை வியாச மஹரிஷி உலக நன்மைக்காக மந்திரங்களைத் தொகுத்து நால்வகையாக வகுத்தார்.

“ ரிக், யஜுர், சாம, அதர்வண “ என்று வேதம் நான்காக வகுக்கப் பெற்றதைப் புருஷ ஸூக்தம் தெரிவிக்கிறது.

இந்த நான்கு வேதங்களும் ஒன்றுடன் மற்றொன்று தொடர்பு கொண்டவை.

ரிக் வேதம் தேவர்களைப் பற்றிய துதிகளின் தொகுப்பு;

யஜுர் வேதம் வேள்வி முறைகளை வர்ணித்து உரைப்பது;

ஸாம வேதம் வேத மந்திரங்களை இசைத்துப் பாடுவது;

அதர்வண வேதம் மாந்தர் இந்த உலகில் நோயின்றி நீண்ட வாழ்வு வாழ உதவும் மூலிகைகளைப் பற்றியும், மருத்துவம் பற்றியும், ஆயுளை நீட்க்கும் மந்திரங்கள் பற்றியும் விரிவாக கூறுவது. ஜோதிடம், மாந்திரீகம், தாந்திரீகம் எல்லாம் இதில் அடக்கம்.

இந்த வேதங்களுக்கும் அவற்றின் அங்கங்களுக்கும் உரை இயற்றிய வேத பாஷ்யகாரர்கள் எழுபது பேர் விளங்குகிறார்கள்.

வேதப் பகுதிகளில் ஐயத்துக்கு இடமான பொருள்களை நன்கு விளக்குவது – பிராம்மணம் என்ற நூல்.

மூல நூலான ஒவ்வொரு வேத சமிதைக்கும் அதைச் சார்ந்த பிராம்மணம் உண்டு.

வேதவ்யாக்யா நரூபத்வாத் ப்ராஹ்மணஸ்ய – வேதத்துக்கு உரையாக விங்குவது ப்ராஹ்மணம் என்று ஸாயனர் கூருகிறார்.

 பிராம்மணத்துடன் இணைந்தது ஆரண்யகம் என்ற பகுதி.

ஆற்றங்கரையில் தவ வனங்களில் ரிஷிகள் ஆராய்ந்து மிக்க அமைதியுடன் கண்ட உண்மைகளை ஆரண்யகம் அறிவிக்கிறது.

ஆரண்யகத்தின் கடைசியில் வருவது உபநிஷத் – முடிந்த முடிவான ஆராய்ச்சி உண்மைகளைக் கூறுவது இதனால்தான் உபநிஷத்துக்கு “ வேதாந்தம் “ என்று பெயர். இந்த விதிக்கு விலக்காக, சுக்ல யஜுர் வேதத்து வாஜஸ்னேய ஸமிதையின் விளங்குவது – ஈசாவாஸ்ய உபநிஷதம்.

சதபதப் பிராம்மணத்தின் கடைசியில் ஆரண்யகமும் உபநிஷதமுமாக விளங்குவது பிருகதாரண்யகோபநிஷத்.

வேத மந்திரங்களுக்குப் பொருள் விளங்கவில்லை என்றால் அது மந்திரங்களின் குற்றமல்ல. குருடனுக்கு எதிரே இருக்கும் கம்பம் தெரியா விட்டால் அது கம்பத்தின் குற்றமல்ல குருடன் இயற்றிய குற்றமாகும். என்று யாஸ்கர் உரைக்கிறார்.

வேத மந்திரங்களுக்கு முதன் முதலாக உரை வகுத்தவர் யாஸ்கர்; அவர் பழமையான ஸம்ஸ்கிருத மொழி இலக்கணத்தில் மிகவும் வல்லவர்.

ரிக் வேத ஸூக்தங்கள் ஒரே பரம்பொருள் தெய்வீக நெறியில் கடமைகளை ஆற்றுவதற்காக அக்கினி, இந்திரன், சோமன், வருணன், விஷ்ணு முதலிய பல வடிவங்களில் தோன்றுவதை வர்ணிக்கின்றன.

அக்கினி வானத்தில் சூரியனாகவும், இடைவெளியில் வாயுவாகவும் பூவுலகில் நெருப்பாகவும் விளங்குகிறான். அவனே வீட்டைக் காக்கும் தெய்வம்.

வருணன் கடல்வாழ் தெய்வம்; மாந்தரின் பாவ புண்ணியங்களை அவன் காண்கிறான்; வருணபாசம் பாவிகளைக் கட்டுப்படுத்துகிறது.

மூவடியினால் மூவுலகங்களிலும் வியாபித்த விஷ்ணு கடுமையான இடங்களிலும் மலைக் குகைகளிலும் திரிகிறான்; இவனுடைய ஈரடிகளை மாந்தர் இவ்வுலகில் காண இயலும்; மூன்றாவது திருவடி, மிகவும் உயர்ந்த விண்ணுலகில் விளங்குகிறது; வெள்ளத்தைப் பருகிப் பேரானந்தம் எய்துகின்றனர்.

வாயுதேவன் காதைச் செவிபடுத்தும் இடியோசையை உண்டாக்கி மின்னலுடன் மழையைப் பொழியத் தூண்டுகிறான். புயற்காற்றினால் பெரிய பெரிய மரங்கள் ஆடி வேரற்று விழும் போது இவனுடைய கடும் வடிவத்தை நாம் காண்கிறோம்.

இந்திரன் தெய்வ உலகுக்கு அரசனாக விளங்கி மாந்தரின் நலனுக்காக மழையைப் பொழிகிறான். தனக்கு இடையூறு இழைக்கும் பாவ வடிவினனான விருத்திரனை அழித்து அவன் வெற்றிவாகை சூடுகிறான்.

நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு மருத்துவமும் ஆயுதச் சிகிச்சையும் செய்து உதவுகிற தெய்வீக மருத்துவ இரட்டையர் – அஸ்வினி தேவர் ஆவர்.

இவ்வாறு தேவர்கள் பல வடிவங்களில் உலகுக்குக் காப்பாக இருந்து துணைபுரிகின்றனர்.

கிடைக்கும் பொருளைக் கொண்டு போதுமென்று மனதுடன் அமைதியாக வாழ்வாயாக – வித்தே ரமஸ்வ பஹுமந்யமாந: என்று வேதம் கூறுகிறது.

சூதாட்டம் வேண்டாம்; வேளான்மை செய்து தொழில் செய்து பிழைப்பாயாக – அக்ஷைர் பா திவ்ய:, க்ருஷிமித் க்ருஷஸ்வ என்கிறது வேதம்.

“ தன்னிடம் மிகுதியாக உள்ளதை மாந்தர் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். பட்டினி இருந்து சாவதற்காகத் தேவர்கள் பசியை படைக்கவில்லை. ஈயாப் பித்தனும் ஒரு நாள் இறந்தே போவான். பிறருக்குக் கொடுப்பவனது செல்வம் என்றும் குறைவதில்லை. பிறருக்குச் சோறு இடாதவனுக்கு ஆபத்தில் உதவ ஈ காக்கையும் வராது எனவே கொடை என்பது சிறந்த பண்பு; அனைவருக்கும் இந்த பண்பு இராது. இரண்டு கைகள் ஒரே ஆற்றலுடன் வேலை செய்வதில்லை; இரட்டையராக இருப்பினும் ஒருவருக்கு உள்ள ஆற்றல் மற்றொருவருக்கு இருப்பது இல்லை; அண்ணன் தம்பியராயினும் ஒருவரைப் போல் மற்றவர் கொடுப்பதில்லை” என்று ரிக் வேதம் { 10-1-17} கூறுகிறது.


வேதம் நமது என்றும் அழியாத பெருஞ்செல்வம். அதைக் காத்துப் போற்றி மகிழ்வது நமது இன்றிமையாத கடமை; பேரின்பம் நல்கும் கடமையும் கூட.

Friday, June 17, 2016

பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு

பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு
நம் நோய்களை எதிர்க்கும் சக்தியைப் பெறுவது போலவே மற்றவர் நோய்களையும் ஆழ்மன சக்தியால் குறைக்கவோ, அகற்றவோ முடியும். நம்மிடம் ஆரம்பித்து நம் விஷயத்தில் வெற்றி கொண்ட பின்னர் தாராளமாக அடுத்தவர்களுக்காகவும் முயற்சிக்கலாம். அதற்கு நாம் மேலும் கூடுதலாகப் பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும். குறிப்பாக visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளைத் தெளிவாக உருவகப்படுத்திப் பார்க்கும் திறனையும், சக்தி வாய்ந்த ஆழ்மனத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் ஆகாய ஆவணங்களில் (Akashic Records) பதிவாகி இருக்கும் என்றும், பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் ஒருவன் அறிய முடியாதது இல்லை என்றும் எட்கார் கேஸ் சொல்கிறார். கடந்த காலம், நிகழ் காலம் பதிவாகி இருப்பது கூடப் பரவாயில்லை, எதிர்காலம் எப்படி பதிவாகி இருக்கும் என்ற கேள்வி பகுத்தறிவுள்ளவர்கள் மனதில் எழுவது இயற்கையே. ஆனால் ”அறிவியலில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை” என்பதை ஐன்ஸ்டீனே ஒத்துக் கொண்டதைப் போல இதற்கும் நம்மிடம் பதில் இல்லை. ஆனால் எதிர்காலத்தை அறிய முடிந்தவர்கள், நடப்பதை முன் கூட்டியே சொல்ல முடிந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது முன் கூட்டியே எங்கோ பதிவாகி இருக்க வேண்டும் என்ற அனுமானத்திற்கே நாம் வர வேண்டி இருக்கிறது.
சென்ற நூற்றாண்டில் சில விபத்துகள் நடப்பதற்கு முன்பே அவற்றைப் பற்றி பொதுவாக இல்லாமல் துல்லியமாகவே சொன்ன ஜோசப் டிலூயிஸ் பற்றி இத்தொடரின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தோம். இன்னொரு சுவாரசியமான உதாரணத்தையும் சொல்லலாம்.
1898 ஆம் ஆண்டு மோர்கன் ராபர்ட்சன் (Morgan Robertson) என்ற எழுத்தாளர் Futility என்ற பிரபல நாவலை எழுதினார். அந்தக் கதை Titan என்ற ஒரு ராட்சஸக் கப்பல் பற்றியும், அது கடலில் மூழ்கியதைப் பற்றியும் சுற்றி பின்னபட்டது. அந்தக் கதை எழுதி சுமார் 14 ஆண்டுகள் கழித்து 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நிஜமாகவே Titanic என்ற ராட்சஸக் கப்பல் கடலில் மூழ்கியது. ஏதோ பெயர் மட்டுமே தான் கதைக்கும், நிஜ சம்பவத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்று நினைத்து விடாதீர்கள். கதையிலும் நிஜத்திலும் 3000 பயணிகள் இருந்தனர். கதையிலும் நிஜத்திலும் கப்பல் பனிப்பாறையில் மோதியே மூழ்கியது. அது போல கதையிலும் நிஜத்திலும் கப்பல் சென்ற வேகம் ஒன்றாகவே இருந்தது. மற்ற திகைப்பூட்டும் (ஏறத்தாழ இருக்கும்) ஒற்றுமைகளையும் பார்க்கலாம்.
கதைப்படி கப்பலின் எடை 70000 டன்கள், நிஜ டைட்டானிக் கப்பலின் எடை 66000 டன்கள். கதைப்படி கப்பலின் எடை 800 அடி. நிஜ டைட்டானிக் கப்பல் எடை 828 அடி. கதையில் அந்தக் கப்பலில் பயணிகளைக் காப்பாற்ற காப்புப் படகுகள் 24 இருந்தன. நிஜ டைட்டானிக்கில் 20 காப்புப் படகுகள் இருந்தன.
ஒரு நிஜ சம்பவம் அது நிகழ்வதற்கு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட அதே போல ஒரு எழுத்தாளரின் கற்பனையை எட்டியது எப்படி?
இராமாயணத்திலேயே புஷ்பக விமானத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றி விவரித்திருக்கும் எத்தனையோ விஷயங்கள் இன்றைய விமானத்தின் தோற்றம், செயல்பாட்டுடன் ஒத்துப் போகின்றது என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கவியின் கற்பனைக்கு இன்றைய நிஜ விமானம் எட்டியது எப்படி?
அவர்கள் அறியாமலேயே அவர்களுடைய கற்பனைகள் பிரபஞ்ச சக்தியை, பிரபஞ்ச அறிவைத் தொட்டறிந்த சமாச்சாரங்கள் என்று கூட அவற்றை எடுத்துக் கொள்ளலாமல்லவா?
எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ, எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முறையாக இயங்குகிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை.
பிரபஞ்ச சக்தியின் ஒரு நுண்ணிய அங்கமே ஒருவரது ஆழ்மன சக்தி. ஒரு மனிதன் மேல் மன அலைக்கழித்தலால் விடுபட்டு அமைதி அடைந்து தியானம் போன்ற பயிற்சிகளால் ஆழ்மன உலகிற்குப் பயணிக்கும் போது எதையும் தெளிவாகக் காண்கிறான். உயர் உணர்வு நிலைக்குச் செல்லும் போதோ பிரபஞ்ச சக்தியின் அங்கமே தான் என்றும் உணர்கிறான்.
நான்கு வகை மின்னலைகளில் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலைகளில் நாம் இருக்கையில் பல அதீத சக்திகள் நமக்கு சாத்தியமாகின்றன என்று சொல்லி இருந்தோம். காரணம் அந்த அலைவரிசைகளில் நாம் பிரபஞ்ச சக்தியுடன் நம் ஆழ்மனம் அந்த தொடர்பு கொள்ள முடிவது தான். மனிதன் டெல்டா அலைகளில் இருக்கையில் கிட்டத்தட்ட எண்ணங்களே அற்ற நிலையை அடைந்து விடுகிறான். (யோகாவில் அதை நிர்விகல்ப சமாதி என்கிறார்கள்). அப்போது ஆழ்மன சக்திகள் அடையும் எண்ணங்கள் உட்பட எல்லா எண்ணங்களும் அற்றுப் போன நிலைக்குப் போய் விடுகிறான். எனவே பொதுவாக ஆல்ஃபா அலைகள், மற்றும் தீட்டா அலைகளில் இருக்கும் போது தான் மனிதன் ஆழ்மன சக்திகளைப் பயன்படுத்தும் நோக்கம் வெற்றி பெறுகிறது என்று கூட சொல்லலாம்.
நாம் இந்த மின்னலைகளின் பெயர்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து எந்த மின்னலைகளில் இருக்கிறோம் என்று அறிய சிரமம் மேற்கொள்ள வேண்டியதில்லை. பொது அறிவுக்காக விளக்கி இருக்கிறோமே தவிர அந்தப் பெயர்களை அறிந்திருத்தல் அவசியமில்லை. மேல் மன எண்ணங்கள், கவலைகள், பயங்கள், பரபரப்புகள், படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக, அதே நேரம் தூங்கியும் விடாமல், கால ஒட்டத்தை மறந்து இருக்கிற போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் ‘ட்யூன்’ ஆகும் பக்குவத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதுமானது.
அப்படி இருக்கிற கால அளவு அதிகமாக அதிகமாக நாம் பெறுகின்ற பயன்கள் அதிகமாகின்றன. நமக்கு அறிய வேண்டியவை அனைத்தையும் நாம் அந்த நேரத்தில் அறிய முடியும். நாம் விரும்பியதை அடையத் தேவையான சூழ்நிலைகளையும், அதற்கு உதவக் கூடிய மனிதர்களையும் நாம் நம் வாழ்வில் வரவழைத்துக் கொள்ள முடியும். அந்தக் கால அளவு ஒரு கண நேரமே ஆனாலும் அதன் பயன் அளவில்லாதது. அந்த அனுபவம் ஒரு சுகானுபவமே. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வடிக்க எத்தனை தான் முயற்சித்தாலும் பரிபூரணமாய் அதைப் புரிய வைத்தல் எப்படிப்பட்டவருக்கும் சாத்தியமில்லை.
தற்போதைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் இது போன்ற பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இயலாத காரியம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பிரபஞ்ச சக்தியுடன் ஒருசில நிமிடங்கள் தொடர்பு கொள்ள முடிந்தால் கூட அது எத்தனையோ மணி நேரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும் என்பது அனுபவ உண்மை.
பரபரப்பாகவும், அவசரமாகவும் மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை, பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்மனம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்த நபர் அப்படிப் பெறும் ஞானத்தின் காரணமாக நிமிடக்கணக்கில் கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்து காட்ட முடியும். காரணம் தேவையில்லாமல் அலைக்கழியாமல், கவனத்தை பல தேவையில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல், அந்த வேலையை கச்சிதமாகச் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நேர்த்தியாகச் செய்ய முடிகிறது என்பது தான்.
ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் நாள் கணக்கில் யோசித்து, பல பேரைக் கலந்தாலோசித்து, குழம்பி, கடைசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் பிரபஞ்ச அறிவின் தொடர்பு கொண்டவன் மிகச் சிறந்த முடிவைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் அம்பு இலக்கை அடைவதைப் போல நேராக, வேகமாக அடைய முடியும். ஊர் சுற்றி, உலகமெல்லாம் சுற்றி, வழி மாறி ஒருவன் தொலைந்து போக வேண்டியதில்லை.
சில கலைஞர்கள் தங்கள் கலையின் மீது உள்ள எல்லை இல்லாத ஆர்வத்தால் அதில் ஈடுபடும் போது கூட தங்களை மறந்து அதில் ஆழ்ந்து விடுவதுண்டு. தங்களைச் சுற்றி உள்ள உலகை மறந்து விடுவதுண்டு. அதுவும் கிட்டத்தட்ட தியானம் போலவே தான். ஆல்ஃபா தீட்டா அலைகளில் சஞ்சரிப்பது தான். ஆழ்மனம் மூலமாக பிரபஞ்ச அறிவைத் தொடுவது தான். அந்த நிலையில் அவர்கள் உருவாக்கும் கலை-எழுத்தாகட்டும், ஓவியமாகட்டும், இசை ஆகட்டும்-எதுவானாலும் அது காலம் கடந்து நின்று ஜொலிக்கும் என்பது உறுதி. பல்லாண்டுகள் கழித்து இன்றும் நிலைத்து நின்று வியக்க வைக்கும் கலைப் பொக்கிஷங்கள் கூட கண்டிப்பாக இது போல் உருவாக்கப்பட்டவையாகவே இருக்கும்

Sunday, August 2, 2015

தாய் தமிழ் நாட்டின் சிறப்பான பெருநாள் ஆடி 18.

தாய் தமிழ் நாட்டின் சிறப்பான பெருநாள் ஆடி 18. அனைவர்க்கும் ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துக்கள் .

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று ‘ சங்கடஹர சதுர்த்தி விரதமும் ‘ ஆடிப் பதினெட்டும் சேர்ந்து வருகின்றது .. தங்கள் அனைவரது சங்கடங்கள் யாவும் பனிப்போல் நீங்கி .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றிபெற விக்னவிநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! வக்ரதுண்டாய தீமஹி ! தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! ஆடிமாதம் 18ம் திகதியாகிய இன்று ஆடிப்பெருக்கு பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது .. நீர்நிலைகள் வற்றாமல் இருக்க வருணபகவானையும் .. தேவதைகளையும் வணங்கும் நாள் இது .. கிராமப்புறங்களில் வகைவகையான சாதங்கள் தயார் செய்துகொண்டு நீர்நிலைகளுக்குச் சென்று அதன் கரையில் பூஜைகள் செய்து சொந்தபந்தங்களுடன் உண்பது வழக்கம் .. நகர்புறங்களில் உள்ளவர்கள் கடற்கரைகளுக்குச் சென்று விருந்து உண்டு மகிழ்வர் .. காவேரிக்கரை ஓரங்களில் ஆடிப்பெருக்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது .. காவேரிநதியின் இருகரைகளிலும் பதினெட்டு முக்கியமான இடங்கள் உண்டென்றும் .. அங்கே பதினெட்டு யோகிகயர்களும் ..மகரிஷிகளும் .. சித்தபுருஷர்களும் பூமியினடியில் பிருத்வியோகம் பூண்டு தவம் செய்கிறார்கள் என்றும் கூறுவர் .. அவர்கள் ஆடிப்பதினெட்டு அன்று யோகத்திலிருந்து மீண்டு காவேரிநதியில் நீராடி தங்கள் தவப்பயனை காவேரியில் கலக்கும்படிச் செய்கிறார்களாம் .. அதனால் காவேரியானவள் அதிகசக்தியையும் .. புனிதத்தையும் பெறுகிறாள் .. ஆகவே இந்நாளில் காவேரியில் நீராடி வழிபட்டால் புனிதம் பெறுவதுடன் .. நாம் செய்த பாவங்களும் நீங்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன .. இராமப்பிரானும் ஆடிப்பதினெட்டில் காவேரியில் நீராடி புனிதம் பெற்றார் .. இன்று காவேரிக் கரைக்கோ அல்லது தங்கள் ஆற்றங்கரைக்கோ சென்று காதோலை கருகமணி .. மலர் .. மஞ்சள் .. பழங்கள் .. வெல்லம் கலந்த அரிசிப்புட்டு படைத்து வழிபாட்டில் மாங்கல்ய சரடையோ அல்லது மஞ்சள் தடவிய சரட்டினையோ வைத்து பூஜித்து தங்கள் கழுத்தில் பெண்கள் அணிந்துகொள்வர் .. வாழ்வில் என்றும் வசந்தம் வீச அம்மன் அருள் அனைவருக்கும் கிட்டுவதாக . வாழ்க வளமுடனும் .. நலமுடனும