Friday, September 11, 2015

மார்க்கெட்டிங் ரகசியம் - மார்க்கெட்டிங் செய்வது எப்படி

மார்க்கெட்டிங் செய்வது எப்படி - Marketing Seivathu Eppadi In Tamil 



மார்க்கெட்டிங் ரகசியம்!
ஒ ரு நகர வீதியில் இருபக்கமும் மளிகைக் கடைகள் நிறைந்திருக்கின்றன. ஒரு கடையில் எப்போது பார்த்தாலும் கூட்டம்... சதா தள்ளு முள்ளு! அடுத்த கடையிலோ, காற்றாடும். இருவருமே மளிகை வியாபாரத்தில் இருந்தாலும் ஏனிந்த வித்தியாசம்? கூட்டம் கூடும் கடைக்காரர் மார்க்கெட்டிங் வித்தை அறிந்தவர். ஆளில்லாத கடைக்காரருக்கு அந்த வித்தை தெரியவில்லை. இதுதான் வித்தியாசம்!
கோடி கோடியாகப் பணம் போட்டுப் பொருளைத் தயாரித்தாலும், அது விற்பனை ஆனால்தானே மதிப்பு? அதேபோல தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் தயாரிக்கப்பட்டாலும் பொருட்களை எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கவேண்டுமே... அப்போதுதானே வியாபாரம் பெருகும். இதுபோன்ற விஷயங்களுக்கு அடிப்படையாக இருப்பது மார்க்கெட்டிங்!
தற்போது உள்ள சூழ்நிலையில் என்னென்ன வழிகளைக் கடைப்பிடித்து வாடிக்கையாளர்களைக் கவரலாம்? பல முன்னணி நிறுவனங்களுக்கு விற்பனை ஆலோசகராக இருக்கும் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, ‘‘ஒரு பொருளை தயாரித்த பின் அதற்கு நல்ல பெயராகத் தேர்ந்தெடுப்பது அவசியம். பெயர் எளிதாக மக்கள் மனதில் பதிந்துவிட்டாலே போதும். பெயரில் இருக்கும் ஈர்ப்பினாலேயே மக்கள் அந்தப் பொருளைக் கேட்டு வாங்க ஆரம்பிப்பார்கள்.
அதேபோல, பொருளை மக்களுக்குக் கொடுத்து அவர்களின் கருத்தைக் கேட்கவேண்டும். ‘நன்றாக இருக்கிறது’ என்று கருத்து சொல்பவர்கள், தொடர்ந்து வாங்க ஆரம்பிப்பார்கள். அதுமட்டும் இல்லை. தாங்கள் பயன்படுத்திய பொருளைப் பற்றி நாலுபேருக்கு எடுத்துச் சொல்லவும் செய்வார்கள். இது இலவச பப்ளிசிட்டி!
‘மேகி’ நூடுல்ஸை இப்படித்தான், ஆரம்பத்தில் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுத்தார்கள். அது, இப்போது குழந்தைகளின் விருப்பமான உணவு’’ என்றார்.
சென்னையில் உள்ள என்.ஜி.ஓ-க்களின் விற்பனை ஆலோசகர் முத்து கிருஷ்ணன், ‘‘பொருளைத் தயாரிக்கும் பகுதியிலேயே விற்பனையைத் தொடங்கவேண்டும். அப்படி முன்னோட் டம் பார்க்கும்போது அந்தப் பொருளில் உள்ள நிறைகுறைகள் தெரியும்.
சுய உதவி குழுவில் பொருட்களைத் தயாரிப்பவர்கள் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள அரசு விற்பனை அங்காடிகளுக்குச் சென்று விற்பனை செய்ய லாம். அரசு அலுவலகங்களிலும் குறிப்பிட்ட நேரங்களில் விற்கலாம்’’ என்று அனுபவ அடிப்படையில் கருத்து சொன்னார்.
பொருளைத் தரமானதாகத் தயாரித்துவிட்டு பேக்கிங்கைச் சரியாகச் செய்யாவிட்டாலும் விற்பனையில் தேக்கம் இருக்கும். அதனால், பொருளைத் தயாரிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் அதே அளவு அக்கறையை பேக்கிங்கிலும் காட்டவேண்டும்.


No comments:

Post a Comment