Monday, September 21, 2015

எப்படி ஒரு மந்திரத்தை ஜபிப்பது?

நாம் வாழ்ந்து வரும் மனித உலகத்திற்கும்,நம்மைச் சுற்றிலும் இருக்கும் சில சூட்சும உலகங்கள் மற்றும் நமது பூமிக்கு மேலே இருக்கும் ஏழு தெய்வீக உலகங்கள்,கீழே இயங்கும் ஏழு கர்ம உலகங்களுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்த உதவுபவையே மந்திரங்கள்!

சித்தர்களும்,தெய்வீக புருஷர்களும் பல ஆயிரம் ஆண்டுகளாக தவம் இருந்து இறைசக்தியிடம் இருந்து வரங்களாகப் பெற்றவையே இந்த மந்திரங்கள் ஆகும்;பூமியில் மனிதர்கள் மத்தியில் 7,00,00,000 கோடி மந்திரங்கள் புழக்கத்தில் இருக்கின்றன;

இவைகளில் எச்சில் படாத மந்திரங்கள்,காயத்ரி மந்திரங்கள்,பீஜாட்சர மந்திரங்கள்,அஷ்டகர்ம மந்திரங்கள்,வழிபாட்டு மந்திரங்கள் என்று பலவகைகள் உள்ளன;
தவிர தரையில் ஜபிக்கக் கூடியவை;கடலில் ஜபிக்கக் கூடியவை;காட்டுக்குள் ஜபிக்கக் கூடியவை;குகைக்குள் ஜபிக்கக் கூடியவை;பூமிக்கு அடியில் ஜபிக்கக் கூடியவை;விண்ணில் பறந்துகொண்டே ஜபிக்கக் கூடியவை;என்று பலவிதங்களும் உண்டு;

மேலும் ஆண் மட்டுமே ஜபிக்கக் கூடியவை;பெண் மட்டுமே ஜபிக்கத் தக்கவை;அலி மட்டும் ஜபிக்க வேண்டியவை;துறவி மட்டும் ஜபிக்கக் கூடியவை;இல்லறத்தார் ஜபிக்கக் கூடியவை என்றும் வகைப்படுத்தப்படுள்ளன;

மனதைத் திடப்படுத்துபவை அனைத்துமே மந்திரங்கள் எனப்படும்;
வித்மஹே என்ற வார்த்தையில் முதல் வரியும்,தீமஹி என்ற வார்த்தையில் இரண்டாவது வரியும்,ப்ரசோதயாத் என்ற வார்த்தையில் மூன்றாவது வரியும் நிறைவடைந்தால் அது காயத்ரி மந்திரம் எனப்படும்;ஒவ்வொரு இறைசக்திக்கும் காயத்ரி மந்திரம் உண்டு;தகுந்த ஆன்மீகத் தகுதி வராமல் இவைகளை ஜபித்தால் உடல் நலம்,மன நலம் பாதிக்கக் கூடும்;

ஒரே ஒரு எழுத்து மட்டுமே மந்திரமாக இருக்குமானால் அது பீஜாட்சர மந்திரம் எனப்படும்;இவைகள் உரிய தெய்வீக சக்தியின் ஆத்மாவுக்குச் சமமானவை;

அஷ்ட கர்ம மந்திரங்கள் என்றும் இருக்கின்றன;இவையே மாந்திரீகத்திற்கு அடிப்படை ஆகும்;இதில் எட்டு விதமான செயல்களைச் செய்யலாம்;அல்லது எட்டுவிதமான செயல்களை தடுத்து நிறுத்தலாம்;ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்யும் புண்ணியத்திற்கு ஏற்ப இந்த அஷ்ட கர்ம மந்திரங்களை ஜபிக்கும் முறை நம்மை வந்து சேரும்;இவைகளைக் கொண்டு தனிமனித நலனுக்கு செய்வதால் சாபமும் கிடைக்கும்;மனிதர்களின் செயல்களை எட்டுவிதமான வகைகளுக்குள் அடக்கிவிடலாம்;அந்த எட்டுவிதமான மந்திரங்களைக் கொண்டே பூமியில் மாந்திரீகம் ஒரு தொழிலாகவே பரவியிருக்கிறது;மாந்திரீகத்தை ஒரு தொழிலாகவே செய்வது தமிழ்நாடு,கேரளாவில் மட்டுமல்ல;பாரதத்தின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறது;இதில் முழுமையாக அறிந்தவர் என்று எவரும் இல்லை;

இல்லறவாசிகள் தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108 முறை ஜபிப்பதை வழக்கமாக வைத்திருப்பது அவசியம்;அதுவும் ஏதாவது ஒரு இறைவனது பெயரை ஜபித்து வந்தாலே போதும்;தமிழ்நாடு முழுவதும் தினமும் 108 முறை அல்லது 1008 முறை ராமஜெயம் எழுதுபவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்;ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராம என தினமும் 108 முறை ஜபிப்பவர்களும் இருக்கிறார்கள்;அதேபோல,தினமும் 108 முறை ஒம் நமச்சிவாய நமஹ என்று ஜபிப்பவர்களும் இருக்கிறார்கள்;சிலர் சிவாய நமஹ என்றும்,சில நமச்சிவாய என்றும்,சிலர் சிவாய சிவ என்றும்,சிலர் சிவசிவ என்றும்,சிலர் ஒம்சிவசிவஒம் என்றும் ஜபிப்பவர்களும் இருக்கிறார்கள்;

எப்படி ஒரு மந்திரத்தை ஜபிப்பது?

ஒரு மஞ்சள் துண்டு வாங்கிக் கொள்ள வேண்டும்;அதிகாலையில்(4.30 முதல் 6 க்குள்)காலைக் கடமைகளை நிறைவு செய்துவிட்டு உங்களுக்கு விருப்பமான மந்திரத்தை இந்த மஞ்சள் துண்டு மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து பத்மாசனத்தில் தயாராக வேண்டும்;

அப்படி அமரும்முன்பு, வாசமான பத்தியை பொருத்தி வைக்க வேண்டும்;ஒரு நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;(இதில் ஏதாவது ஒன்று செய்தாலும் போதுமானது)


பிறகு ஒம் கணபதி நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்;பிறகு ஒம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒரு முறை ஜபிக்க வேண்டும்;(குல தெய்வம் தெரியாதவர்கள் அவரவர் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்ளலாம்) பிறகு உங்களது விருப்பமான சிவ மந்திரம் அல்லது விஷ்ணு மந்திரத்தை 108 முறை உதடு அசையாமல் மனதுக்குள் ஜபிக்கலாம்;
இப்படி ஒரு ஆண்டுக்குக் குறையாமல் ஜபித்து வந்தால்,அந்த மந்திரத்திற்கு உயிர் வரும்;அப்படி உயிர் வந்தப் பின்னர் அந்த மந்திரம் உங்களை பாதுகாக்கும்;வழிநடத்தும்;

நீண்டகாலமாக பிரச்சினைகளுடன் இருப்பவர்கள் மந்திர ஜபத்தின் மூலமாகவே அவைகளைத் தீர்க்கமுடியும்;கடந்த காலங்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் மந்திர ஜபத்தின் மூலமாகவே தங்களது பிரச்சினைகள் தீர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்;

எப்படி இந்த மந்திர ஜபம் நம் சிக்கல்களைத் தீர்க்கும்?

ஒரு நாளுக்கு 108 முறை வீதம் குறைந்தது ஒராண்டு வரை மந்திர ஜபம் செய்து வருவதால்,உங்களது மந்திர ஜபம் நெய்தீபத்தின் சுடர் மூலமாக ஆவியாகவோ அல்லது பத்திப் புகை மூலமாகவே விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்தைச் சென்றடைகிறது;விண்வெளியில் நமது விதி ஒரு ஏடாகவே இருக்கிறது;அந்த ஏட்டை நமது மந்திர ஜபம் சென்றடைகிறது;பிறகு,அந்த ஏட்டிற்கும் மேலே குறிப்பிட்ட உயரத்தில் ஆகாய ஏடு என்ற ஒன்று இருக்கிறது;அந்த ஆகாய ஏட்டைச் சென்றடைகிறது உங்களின் மந்திர ஜபம்;அங்கே சென்றடைந்ததும் உங்களின் கர்மவினையை உங்களது மந்திரஜபமானது அழித்துவிடுகிறது;அப்படி அழிப்பதற்கு உங்கள் ஜனன ஜாதகத்தில் பூர்வபுண்ணியமும் துணைபுரிகிறது;கடந்த சில ஆண்டுகளாக ஈசனின் அருளால் கண்டறிந்த தெய்வீக உண்மை இது;

ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள் உங்களின் கர்மவினைகள் கரையவும் ஒரு சுலபமான மந்திரஜபம் இருக்கிறது;

அமாவாசையன்று மேலே கூறியவிதத்தில் மந்திர ஜபத்தை ஆரம்பிக்க வேண்டும்;ஒரு மாதம் வரை;அதாவது இரண்டாவது அமாவாசை வரை 10 நிமிடம் வரை மட்டுமே மந்திர ஜபம் செய்ய வேண்டும்;இரண்டாவது அமாவாசை முதல் அந்த மந்திர ஜபத்தை 20 நிமிடமாக அதிகரித்து மூன்றாவது அமாவாசை வரை தினமும் 20 நிமிடம் ஜபிக்க வேண்டும்;மூன்றாவது அமாவாசை முதல் தினமும் 40 நிமிடம் மந்திரத்தை ஜபித்து வரை வேண்டும்;நான்காவது அமாவாசை வரை இப்படிச் செய்ய வேண்டும்;நான்காவது அமாவாசை முதல் உங்கள் சிக்கல்கள் தீரும் வரை தினமும் 80 நிமிடம் மந்திரம் ஜபிக்கக் கூடாது;60 நிமிடம் வரை தினமும் மந்திரம் ஜபித்தால் போதுமானது;
ஏனெனில்,நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் ஒரு மனிதனது ஒரு நாள் மந்திர ஜபமானது 60 நிமிடம் வரை ஜபித்தாலே போதும்;அதற்கு மேல் ஜபித்தால் அந்த மந்திரஜப ஆற்றலைத் தாங்க முடியாது;தலைவலியோ அல்லது வேறு ஏதாவது உடல் நலக் குறைவோ உருவாகலாம்;

சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்வியல் சிக்கல்கள் இருக்கும்;அதற்கும் ஒரே ஒரு மந்திரத்தை ஜபித்தாலே போதுமானது;


மந்திரம் ஜபிக்க ஆரம்பிப்பவர்கள் கண்டிப்பாக 18 வயதைக் கடந்தவர்களாக இருக்க வேண்டும்;கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக(உங்கள் பிரச்சினைகள்/வாழ்வியல் சிக்கல்கள் தீரும் வரை) நிறுத்தியிருக்க வேண்டும்;இப்படி இதற்காக மந்திரம் ஜபிக்கிறேன் என்று எவரிடம் தெரிவிக்கக்கூடாது;புரோட்டா,முட்டை இரண்டுமே அசைவம் தான்;ஒரு போதும் சைவம் அல்ல;சைவப் புரோட்டாவும் அசைவமே! மது அருந்துவதையும்,போதைப் பொருட்களையும் தவிர்த்தால் மட்டுமே மந்திரஜபம் கைகூடும்;


மந்திர ஜபம் செய்து வரும் நாட்களில் துக்கத்தில் கலந்து கொண்டால் ஒரு மாதம் வரை ஜபிக்கக் கூடாது;

ருதுவான வீடுகளுக்குச் சென்று ருது விஷேசத்தில் கலந்து கொண்டாலும் ஒரு மாதம் வரை ஜபிக்கக் கூடாது;

குழந்தை பிறப்பை போய் பார்த்தாலும் ஒரு மாதம் வரை ஜபிக்கக் கூடாது;

உக்கிரமான தெய்வ மந்திரங்களை ஜபிக்காமல் இருப்பது இல்லறவாசிகளுக்கு நல்லது;உதாரணமாக காளி,ஆஞ்சநேயர் மந்திரங்களையும்,நரசிம்மர்,லட்சுமி நரசிம்மர் மந்திரங்களை ஜபிக்காமல் இருப்பது மிகவும் நன்று;மிகவும் கடினமான கட்டுப்பாடுகள் இந்த கடவுள்களின் மந்திர ஜபத்தை ஜபிப்பவர்கள் பின்பற்ற வேண்டியிருக்கிறது;அது நடைமுறையில் சிறிதும் சாத்தியமில்லை;

ஏழரைச்சனி(துலாம்,விருச்சிகம்,தனுசு),அஷ்டமச்சனி(மேஷம்),
கண்டச்சனி(ரிஷபம்);அர்த்தாஷ்டமச்சனி(சிம்மம்) இருப்பவர்கள் (அசைவத்தைத் தவிர்த்துவிட்டு)ஒம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்;
மற்றவர்கள் சிவ மந்திரத்தை ஜபிக்கலாம்;

இந்த பதிவு ஆன்மீகத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே! தமிழ்நாடு சித்தர் பூமி! பல புண்ணிய ஆத்மாக்கள் முற்பிறப்புகளில் செய்த புண்ணியச் செயல்களால் தமிழர்களாகப் பிறந்துள்ளனர்;அப்படிப் பிறந்துள்ளவர்களுக்கு மிகச் சுலபமாக சித்தர் தரிசனமும்,மிகவும் சக்தி வாய்ந்த மந்திர உபதேசமும் கிடைத்து வருகிறது;அப்படி கிடைத்தவர்கள்,கிடைக்க இருப்பவர்களில் பலர் வலைப்பூ/முகனூல் பக்கம் வழியாக ஆன்மீகத்தைப் பரப்புகிறார்கள்;அவர்களுக்கு இந்த பதிவு கத்துக்குட்டியாகவே தோன்றும்;

இந்த மந்திர ஜபமானது பக்தி மார்க்கமே! தைரியமாக 18 வயது நிரம்பிய எவரும் இந்த பதிவில் கூறப்பட்டிருப்பதை பின்பற்றலாம்;
-www.v4all.org

No comments:

Post a Comment