எத்தனை முறை பார்தாலும், அனுபவித்தாலும் சலிக்காமல், உடலையும், மனதையும் பலவீனப்படுத்தாதவிஷயங்கள் உலகில் நிறைய உண்டு. மலர்கள், குழந்தைகள், கடற்கரை, சோலைகள், வனங்கள், அருவிகள், வானம் போன்ற பல விஷயங்கள் நம் மனத்தை ஆனந்தத்தால் நிரப்பி, எப்போதும் சலிப்பே ஏற்படாமல் செய்யக் கூடியவை. அந்த வகையில் தியானமும் அப்படிப்பட்டதுதான். ஆனால், நம் முன்னோர்கள் வகுத்த அதற்கான வழிமுறைகளை சரிவர பின்பற்றி தியானம் செயது வருபவர்களுக்கே அந்நிலை பொருந்தும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் கொஞ்ச நாட்களில் தியானம் வெறுத்துப் போகும். மனம் உணர்வுகளின் உச்சத்தில் குவிந்து உன்னதத்தை ருஷிக்காததே அதற்குக் காரணம். தியானத்தில் ஈடுபட்டு மனதைப் பக்குவப்படுத்துவதற்கும், மனம் பக்குவமடைந்த பிறகு தியானத்தில் ஈடுபடுவதற்க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அவர்களுக்குள் ஏற்படும் அனுபவங்கள் மாறுபடும்.மேலும், சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர் சந்து, பொந்துகளில் எல்லாம் தயக்கமில்லாமல் ஓட்டி விடுவார். ஆனால், சைக்கிள் ஓட்டப் பழகுபவரோ அப்படிப்பட்ட இடங்களைத் தவிர்த்து திறந்த, பரந்த வெளியில்தான் பழக வேண்டும். அதுதான் பழகுபவர்க்கும்,மற்றவர்களுக்கும் நல்லது. அது போல தவ நிலையில் சமநிலை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் சில விதிகளைக் கடைபிடிப்பது அவசியம். எத்தனை முறைகளில் தியானம் செய்தாலும் அது மூன்று வழிகளுக்குள் வந்து விடும். அது நம் குணங்களோடு சம்மந்தமுடைய சாத்வீக, ராஜஸ, தாமஸ மார்க்கங்களாகும். சாத்வீக வழியில் தவ வாழ்வை மேற்கொள்பவர்கள்தியானத்தை தன் கடைமையாகக் கருதுவர். இடையே ஏற்படும் தடைகளையும், இடையூறுகளையும் வெறும்மாயை என்று எண்ணி தம் தவ நிலையில் உறுதியாக நிற்பர். எப்போதும் நன்னெறியைக் கடைபிடிப்பர். சுயநலமின்றி பிறர் நன்மையைக் கருத்தில் கொண்டு செயல்படுவர். எல்லோரையும் கடவுளின் ரூபமாகக் கருதி அன்பு செலுத்துவர்.பரநாட்டம் அவர்கள் சிந்தையை விட்டு விலகுவதேயில்லை.குறிப்பாக தியான்தின் பலனைக் குறித்து கவலை கொள்ளவே மாட்டார்கள். எல்லாம் தெய்வ செயல் என்று கருமமே கண்ணாகி செயல்படுவர்.ராஜஸிக மார்க்கத்தில் செயல்படும் சாதகர் எப்போதும் வெற்றியைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பார்.காலதாமதம் ஏற்படும் போது தளர்ச்சியடைவார். இதனால் மேலும் காலதாமதம் ஏற்படும் என்பதை உணரமாட்டார். காமிய தவம் மேற்கொள்பவர்களும் இராஜஸிக மார்கத்தை கடைபிடிப்பவர்களே. தாமஸிக மார்க்கம் என்பது நாம் பரவலாகக் காண்பதே. இவர்கள் தியானம் செய்தாலும் விரைவாக பலனை அடைய வேண்டும் என்று வித விதமான பூஜைகள் செய்வது, ஹோமங்கள் செய்வது, உணவளிப்பது, கோவில் கட்டுவது போன்ற காரியங்களைச் செய்வர். கடவுளிடம் பேரம் பேசுவார்கள். உணவு தானம் செய்த கணக்கு, தியானம் செய்யும் நேரத்தின் கணக்கு, கோவிலைச் சுற்றுவதில் கணக்கு, காணிக்கை செலுத்தும் கணக்கு என்று ஒவ்வொன்றிலும் கணக்கு வைத்துக் கொண்டு அதற்குத் தக்கவாறான பலனை கடவுள் செய்வார் என்று எண்ணுவர். நினைத்த காரியம் நடக்கா விட்டால் கடவுளை நிந்திப்பர். தியானத்தைக் கைவிடுவர். பிறகு துன்பம் வரும் போது மீண்டும் கடவுளிடம் போய்ப் புலம்புவர். இத்தகையவர்களின்மனமும், புத்தியும் ஒரு நிலையில் இராது. எனவே இவர்களுக்கு தியானம் சித்திக்காது.மனதையும், புத்தியையும் தூய்மைப்படுத்திபரிசுத்தம் ஆக்குவதே தியானத்தின் குறிக்கோள். சாத்வீக வழியில் தியானிப்பவர்களுக்கே அது கைகூடும். அப்படித் தூய்மையடைந்த அவர்கள் அறிவானது பிரகாசிக்கும். ''ப்ரஹ்ம வித் ப்ரஹ்மைவ பவதி'' ஆத்மாவை உணர்ந்தவன் ஆத்மாவாகவே ஆகி விடுவான் என்பது வேத வாக்கு. எனவே ஆத்மாவை உணர்ந்தவனே ஆண்டவனை உணர்ந்தவனாவான்.அருள் பெருஞ் ஜோதியை உணர்ந்தவன் பிரகாசமுள்ளவனாகஆகி விடுவான். அவன் அறிவு மட்டுமல்ல, உடலும், கண்களும் எல்லாம் பிரகாசமாகத் திகழும். நான் சொல்வது ஒன்றும் கடினமல்ல. சொல்லிக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் செயல்படுத்துவதேமேன்மை. செயலுக்குவரும் போதுதான் நமக்குள் நாம் ஆன்மாவை தரிசிக்க முடியும். அதற்கு தியானம் சிறந்த வழியாக இருக்கிறது. தியானத்தின் மூலமாக நம் அறியாமை இருள் விலகி விடுகிறது. புலனுணர்வுகள் கட்டுக்குள் வருகின்றன. அத்தகைய தியானத்தை அடைய நல்ல பழக்கங்களும், ஒழுக்கம், கட்டுப்பாடு, உயர்ந்த இலட்சியம், உன்னதத்தின் மீது தீராத காதல் போன்ற அனைத்தும் அவசியமாகும். இவற்றைக் கடைபிடிப்பவர்களுக்கே தியானமே நீடித்து தவமாக மாறும். புறவுலக விஷயங்களை முற்றிலுமாகத் துறந்தாலன்றி ஆன்மிக மேம்பாடு அடைவது என்பது பகல் கனவே.மிக உன்னதமான நிலையை அடைவதற்கு இடைவிடாமல் பின்பற்றுகின்ற பயிற்சிகளையே சாதனைகள் என்கிறோம். எனவே புனிதமான செயல்கள் புரிந்தால்தான் புனிதமான நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும். நமது நேற்றைய செயல்கள்தான் இன்றைய தலையெழுத்து, இன்றைய செயல்களின் விளைவுதான் நாளைய நிலையைத் தீர்மானிக்கிறதுஎன்பதை உணர்ந்து தெய்வீக எண்ணங்களாலும், தன்னலமற்ற செயல்களாலும், ஆசைகளைக் களைந்த மனத்தினாலும் நம் வாழ்வை நிரப்ப வேண்டும். இதுவே தெய்வீக வாழ்க்கை, தெய்வத்தை அடையப் போகிறவர்கள் வாழ்க்கை.
"மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்: கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும்; தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும்; பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம்!"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment