சிவபெருமான்மீது அளவற்ற பக்திகொண்ட அறுபத்துமூன்று நாயன்மார்களின் பெருமைகளையும், அவர்களின் எல்லையில்லா பக்தியின் சிறப்பைப் பற்றியும் சேக்கிழார் "திருத்தொண்டர் புராணம்' என்கிற பெரிய புராணத்தை இயற்றினார். இப்புராணத்தில், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என வள்ளுவர் கூறியதுபோன்று இனம், மொழி போன்ற பேதங்களைக் கடந்து, தூய பக்தியுடன் இறைவனை வழிபட்டு பிறவாப் பயனைப் பெறமுடியும் என்பதை உணர்த்தியவர் திருநாளைப் போவார் நாயனார் என்கிற நந்தனார் ஆவார். இடையறாத தூய பக்தியின் விளைவால் இறைவனுடன் இரண்டறக் கலந்தவர்.
சோழ வளநாட்டில், கொள்ளிடம் நதிக்கரைக்கு அருகே அமைந்த ஆதனூர் என்கிற கிராமத்தில், புலையர் குலத்தில் பிறந்தவர் நந்தனார்.
சிறு வயதுமுதல் சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டவராகத் திகழ்ந்தார். எப்பொழுதும் சிவபெருமானையே சிந்தித்துக்கொண்டிருந்தார். மேலும் சிவநாமத்தையே உச்சரித்துக்கொண்டு, ஏதாவது சிவனைப் பற்றிய பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பார்.
அந்த ஊரிலிருந்த ஒரு மிராசுதாரரிடம் விவசாயக் கூலி வேலையை செய்து கொண்டு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிவபெரு மானுக்கு புறத்தொண்டை செய்து வந்தார். அதாவது, விலங்கினங்களின் தோலைக் கொண்டு, ஆலயங்களில் வழிபாட்டின்போது இசைக் கப்படும் வாத்தியக் கருவிகளை (முரசு, பேரிகை, மிருதங்கம்) செய்யும் குலத்தொழிலைச் செய்துவந்தார். இப்படியாக வாத்தியக் கருவிகளைச் செய்து ஊர் ஊராகச் சென்று எங்கெல்லாம் சிவாலயங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் கொடுத்து தம்மால் இயன்ற சிவத்தொண்டை செய்துவந்தார். ஆனால் அவரால் ஆலயத்தின் உள்ளே சென்று இறைவனை வழிபட மட்டும் முடியவில்லை. காரணம் அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயத்தினுள்ளே சென்று வழிபட உரிமை இல்லாமல் இருந்தது. இதனால் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்கிற வகையில், ஆலயத்தின் வாயிலிலிருந்தே இறைவனைத் தொழுது அவன் புகழைப் பாடிக்கொண்டிருந்தார்.
சீர்காழிக்கு அருகே இருக்கும் வைத்தீஸ்வரன் கோவில் தலத்திற்கு மிக அருகில் (சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம்) திருப்புன்கூர் எனும் ஊர் உள்ளது. அங்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்கிற மூன்று சிறப்பும்கொண்ட சௌந்திரநாயகி உடனுறை சிவலோகநாதர் உறையும் பழமைவாய்ந்த ஆலயம் உள்ளது.
மழையில்லாமல் எல்லா உயிரினங்களும் வருந்திய காலத்தில் மழையை வரவழைத்து உய்வித்தும், பெருமழையால் வெள்ளப்பெருக்கு எடுத்தபோது அதிலிருந்து உயிரினங்களைக் காத்தும் வந்த திருப்புன்கூர் சிவலோகநாதரின் பெருமையை சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தில் கீழுள்ளவாறு பாடியுள்ளார்.
வயலில் நீரிலை மாநிலம் தருதோம்
உய்யக்கொள்கமற் றெங்களை என்ன ஒளிகொள்
வெண்முகிலாய்ப் பரந் தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்தல் பெயர்த்தும்
பன்னிரு வேலி கொண்டருளும்
செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன்
செழும் பொழில் திருப்புள்கூருளானே.'
இந்த ஆலயம் சுந்தரமூர்த்தி நாயனார்,
அவரது தோழரான ஏயர்கோன் கலிக்காம நாயனார் இருவரும் வந்து வழிபட்ட இடமாகும். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல்பெற்ற தலமாகும். சுயம்புவாகக்காட்சிதரும் இந்த இறைவனை வழிபட்டு பிரம்மா, இந்திரன் ஆகியோர் தங்களின் சாபத்தை நிவர்த்தி செய்துகொண்டனர்.
சோழ மன்னர்கள் காலத்தில் இந்த ஆலயத்திற்காக 24 வேலி நிலம் மானியமாக வழங்கப்பட்டது. இதை நம்பியாண்டார் நம்பி என்கிற புலவரின் விருத்தப் பாடல்முலம் அறியலாம். இந்த ஆலயத்தின் தல விருட்சமரம் புங்க மரமாகும்.
இப்படி பல சிறப்பு பெற்ற இந்த ஆலயத்தின் பெருமைகளை அறிந்த சிவ பக்தனான நந்தனார் இறைவனை வழிபட திருப்புன்கூருக்கு வந்தார். எப்பொழுதும்போல வெளியே இருந்து இறைவனை வழிபட முயன்றபோது, மூலவரான சிவலிங்கத்திற்கு எதிரே இருக்கும் நந்தி சிலையானது
சற்று பெரியதாக இருந்த காரணத்தால், மூலவரை நேரடியாக வெளிவாயிலிலிருந்து தரிசனம் செய்யமுடியவில்லை. மிக ஆசையாக வந்த நந்தனார் இறைவனின் தரிசனம் கிட்டவில்லையே என்று மனவேதனையில் மூழ்கினார்.
"சிவபெருமானே! உன்னைக் காணவந்த எனக்கு இந்த மாடு (நந்திதேவர்) குறுக்கே நிற்கிறது. அதை சற்று விலகச் சொல்வீர்களாக' என மனமுருகி வேண்டினார். தனது பரம பக்தனின் தூய அன்பையும், பக்தியையும் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் நந்தியை சற்று விலகுமாறு பணித்தார். அதன்படி நந்தி விலகியதால் நந்தனாருக்கு நேருக்கு நேர் இறைவனின் தரிசனம் கிட்டியது. அந்த மகிழ்ச்சியில் நந்தனார் ஆனந்தக் கூத்தாடினார். இறைவனைப் பலவாறாகப் போற்றிப் பாடினார். இந்த அதிசயக்காட்சியைக் கண்டு கூடியிருந்தவர்கள் பக்திப் பரவசத்துடன் நந்தனாரை வணங்கினர். இதுவரை தாழ்த்தப்பட்டவர் எனக்கூறி ஒதுக்கியவர்களெல்லாம் அவரை வணங்க முற்பட்டனர்.
இன்றும் இவ்வாலயத்தின் நந்திதேவரின் சிலை சிவபெருமானுக்கு நேராக இல்லாமல் சற்று விலகியே இருக்கும்.
ஒவ்வொரு சிவாலயத்திற்கும் சென்று இறைப்பணி செய்வது, இசைபாடுவது போன்ற திருத்தொண்டைச் செய்த நந்தனாருக்கு, பஞ்சபூத தலங்களில் ஒன்றான சிறப்புப் பெற்ற தில்லை நடராஜரை வணங்க வேண்டும் என்கிற ஆவலும் அதிகளவு இருந்தது. காரணம், தில்லை நடராஜரைப் பற்றிப் பல பாடல்களை நந்தனார் சிறிய வயதிலேயே படித்து இருந்தார். தேவாரப் பாடல் ஒன்று,
"அல்லல் என்செய்யும் அருவினை என்செய்யும்
தொல்லை வல்வினைத் தொந்தம்தான் என் செய்யும்
தில்லை மாநகரச் சிற்றம்பல வாணர்க்கு
எல்லை யில்லதோர் அடிமை பூண்டேனுக்கே'
என, தில்லை அம்பலவனை வணங்கினால் எந்த துயரமும் நமக்கு வராது என்பதைத் தெரிவிக்கிறது. இப்படி சிறப்புவாய்ந்த தில்லை அம்பலவனை தரிசனம் செய்ய தமது குலம் ஒரு தடைக்கல்லாக இருப்பதை எண்ணி ஆதங்க மிகுதியால் மிகவும் வருந்தினார்.
தினமும் சிதம்பரம் செல்லவேண்டுமென்கிற ஆசையில் இன்று இல்லாவிடில் "நாளை போவோம்' என நினைத்துக்கொண்டு தனக்குத்தானே சமாதானமாவார். இப்படி தினமும் சிதம்பரத்திற்கு நாளைப் போவோம், நாளைப் போவோம் என எல்லாரிடமும் கூறி வந்தார். இவருக்கு "திருநாளைப் போவார் நாயனார்' என்கிற பெயரும் வந்தது.
ஒருநாள் ஆதனூரிலிருந்து சிதம்பரம் வந்து வானுயர்ந்த கோபுரங்களை மட்டும் தரிசனம்செய்துகொண்டு, மாடவீதி வழியாக வலம் வந்துகொண்டு இருந்தார். இப்படியாக தினமும் செய்துவந்தவருக்கு உள்ளே சென்று நடராஜரை தரிசிக்க ஆசை. ஆனால் செயல்படுத்த முடியாமல் தடுமாறினார்.
நந்தனாரின் துயரத்தைப் போக்க இறைவனான தில்லை நடராஜர் கனவில் தோன்றி, ""நீ எண்ணியவாறு இப்பிறவி நீங்க, வேள்வித் தீயில் மூழ்கி தில்லை வாழந்தணர்களுடன் என்னை அடைவாயாக'' என அருளினார்.
இதை பெரியபுராணத்தில்,
"இப்பிறவி போய்நீங்க எரியினிடை நீமுழ்கி
முப்புரிநூல் மார்பவருடன் முன்னணைவாய் என்ன மொழிந்து
அப்பரிசே தில்லைவாழ்
அந்தணர்க்கும் எரிஅமைக்க
மெய்ப்பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார்'
என்று விவரிக்கிறார் சேக்கிழார்.
அதேபோன்று தில்லைவாழ் அந்தணர்களின் கனவில் தோன்றி, நந்தனாருக்காக வேள்வித்தீயை உண்டாக்கி அவரை புனிதப்படுத்தி ஆலயத் திற்கு அழைத்து வருமாறு பணித்தார்.
இறைவனின் திருவுளப்படி, சிதம்பரம் தெற்கு வாசல் அருகே பெரிய பள்ளம் தோண்டி, அதில் வேத மந்திரங்கள் முழங்க வேள்வித்தீயை ஏற்படுத்தினார்கள். ("ஓமக்குளம்' எனும் பெயரில் இன்றும் அவ்விடத்தை தில்லை மக்கள் அழைக்கிறார்கள்.)தில்லைவாழ் அந்தணர்கள் பலர்கூடி, ஆலயத்திற்கு வெளியே இருந்த நந்தனாரை சகலமரியாதைகளுடன் வேள்வித்தீயில் இறங்க அழைத்து வந்தனர். கொழுந்துவிட்டெரியும் வேள்வித் தீயில், சிவபெருமானைத் துதித்துக்கொண்டே குதித்தார். என்ன ஆச்சரியம்! தீ அவரை ஒன்றும் செய்வில்லை! புலையராக தீயில் குதித்தவர் சடைமுடியுடன் கூடிய முனிவர் தோற்றத் தில் தீயிலிருந்து வெளியே வந்தார். இந்தக் காட்சியைக் கண்டவர்கள் மெய்சிலிர்த்தனர். தில்லைவாழ் அந்த ணர்கள் முனிவர் நந்தனாரை வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளங்கள் முழங்க, மிகுந்த மரியாதையுடன் தில்லை நடராஜர் சந்நிதிக்கு அழைத்துச்சென்றனர்.
நடராஜரை கண்குளிரக் கண்ட நந்தனார், பின்னர் சந்நிதிக்குள்ளே ஐக்கியமாகிவிட்டார். தங்களுடன் வந்த நந்தனாரைக் காணாது அனைவரும் திகைத்தனர்.
19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கோபாலகிருஷ்ண பாரதி என்கிற பிரபல தமிழ்ப்புலவர் நந்தனாரின்
வாழ்க்கையை "நந்தனார் சரிதம்' என்கிற பெயரில் கதாகாலட்சேபம் செய்யும்வண்ணம் பாடல்களாக இயற்றினார். பக்த நந்தனாரின் வரலாற்றின்மூலம் அறியப்படும் செய்தி என்னவென்றால், வேத மந்திரங்களை ஜெபிப்பதாலோ, புண்ணிய திருத்தலங்களுக்குச் சென்று வருவதாலோ, புண்ணிய நதிகளில் நீராடுவதாலோ, தவம், விரதம் போன்றவற்றைக் கடைப்பிடிப்பதாலோ, அன்றி குலம், கோத்திரம் எனச்சொல்லிக்கொள்வதாலோ இறைவனை நாம் அடைய முடியாது. மாறாக தூய பக்தியுடன் இறைவனை மானசீகமாக வழிபட்டாலே போதும் என்கிற அற்புத மார்க்கத்தை மக்களுக்கு தெளிவுபடுத்திய செய்தியை உணரலாம்.
No comments:
Post a Comment