உங்கள் வாழ்வில் அடைய முடியாத ஆசைகளை உங்கள் குழந்தைகள் மூலம் அடைய நினைக்கிறீர்களா? உங்கள் காலத்தின் சிறந்த படிப்பு அல்லது தொழில் என்ற உங்கள் அறிவின்படி குழந்தைகள் இதைத்தான் படிப்பது நல்லது, இந்த வேலை செய்வது தான் நல்லது என்று வற்புறுத்துகிறீர்களா?
உங்களுக்காகக் கலீல் ஜிப்ரானின் கவிதை இதோ :
‘உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல
அவர்கள் வாழ்க்கை தமக்கென்று வேண்டிய குழந்தைகள்
அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள்: உங்களிடமிருந்தல்ல
அவர்கள் உங்களுடன் இருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல
உங்கள் அன்பை நீங்கள் அவர்களுக்குத் தரலாம்
உங்கள் எண்ணங்களை அல்ல
அவர்களுக்கென்று தனிச் சிந்தனைகள் உண்டு
அவர்களின் உடல்களுத்தான் நீங்கள் பாதுகாப்பு தரமுடியும்
அவர்களின் ஆன்மாக்கள் நாளைய வீட்டில் வாழ்பவை
அங்கே நீங்கள் செல்ல முடியாது
உங்கள் கனவுகளிலும் கூட
அவர்களைப் போலிருக்க நீங்கள் முயலலாம் ஆனால்
அவர்களை உங்களைப் போல ஆக்கிவிடாதீர்கள்.
வாழ்க்கை பின் திரும்பிச் செல்லாது: நேற்றுடன் ஒத்துப் போகாது
நீங்கள் வில்கள் உங்களிடமிருந்து எய்யப்படும் உயிருள்ள அம்புகளே
குழந்தைகள்”
இயல்பான மனநிலை கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மனதில் காயங்களை ஏற்படுத்தும் விதமாகத் திணித்தல், அடித்தல், உதைத்தல், அவமானப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
மனப்புண்கள்
ஆரம்பத்தில் தங்கள் பெற்றோரின் திணிப்பிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடும் குழந்தைகளில் பலரும் சரணடைந்து விடுகின்றனர்.
இவ்வாறு பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக வாழத் தொடங்கும் குழந்தைகள் முதலில் கோபத்தைக் காட்டினாலும் மெதுவாகத் தங்கள் வெளிப்படையான எதிர்ப்பைக் கைவிட்டது போன்று தோன்றும். ஆனால் அத்தகைய திணிப்புகள் அவர்களுக்குள் மிகப்பெரிய ஆறாத மனப்புண்களை ஏற்படுத்திவிடுகின்றன.
இந்த மனப்புண்கள் குழந்தைகளின் நிம்மதி ஒழுக்கம், உடல் மன நலங்கள், சந்தோஷம், குடும்ப அமைதி, பொருளாதாரப் பலம் என ஒவ்வொன்றையும் சீர்குலைத்துவிடுகின்றன.
இத்தகைய குழந்தைகளின் மனப்புண்களே எதிர்காலத்தில் அவர்களை அவர்கள் பெற்றோரைப் பராமரிக்கும், அன்பு செலுத்தும் பொறுப்புகளிலிருந்து விலகச்செய்வதாகவும் பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
டாக்டரா மேலாண்மையா?
ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்குத் துணைத்தலைவராக ஆக இருந்த ஒருவர். இன்றைய தன் பணி சார்ந்த வெற்றிகள், குடும்ப வாழ்வு சார்ந்த நன்மைகள், உடல், மன நலம் மற்றும் சமூகம் சார்ந்த அனைத்து வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணம் தன் அப்பாவின் சொல்லைக் கேட்க மறுத்ததுதான் என்று என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
அவருடைய அப்பா எப்படியாவது அவரை டாக்டர் படிப்புக்குப் படிக்க வைக்க வேண்டும்” என்று உறுதியான முடிவில் இருந்துள்ளார்.
+2 க்குப் பின் வணிகவியல் பட்டம் ஏசிஎஸ் படிப்பு இரண்டையும் படிக்க வேண்டும். அதன் பின் ஐ ஐ எம் அகமதாபாத்தில் மேலாண்மை முதுகலை படிப்பைப் படிப்பது என்று இவர் தன் முடிவில் மிகவும் உறுதியாக இருந்துள்ளார்.
அந்த முடிவு வாழ்வில் பல்வேறு சவால்களை ஏற்படுத்திவிட்டது. அவருடைய அப்பாவுக்கும் அவருக்கும் இருந்த நல்லுறவை வெகுவாகப் பாதித்துவிட்டது. அவர் எப்போதும் மற்றவர்களோடு ஒப்பிட்டு மகனை அவமானப்படுத்தி வந்தார்.
வெற்றி
ஆனால் தன் தொழில் வாழ்வு சார்ந்த கனவு திட்டத்தினை நிறைவேற்றுவதில் முழுக் கவனத்தைச் செலுத்தியுள்ளார். வணிகவியல் பட்டம், முதுகலை மேலாண்மைப் படிப்பு என முதல் மாணவனாக வந்து இன்று வாழ்வில் வெற்றி பெற்றுவிட்டார்.
இது அவரது ஆளுமையில் உதித்த அணையா ஆசை . இன்று அவர் மகிழ்ச்சியாகக் காணப்படுவது மட்டுமல்ல அவர் தந்தை எல்லோரிடமும் அவரைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசும் சூழல் வந்துவிட்டது.
பெற்றோர் நலம்
என்னுடைய இயல்பின் அடிப்படையிலான உள்ளத்தின் அவாவை உறுதியுடன் நிறைவேற்றியதனால் இன்று நான் மன, உடல்,சமூக மற்றும் பொருளாதாரரீதியில் பலமாக வாழ்கிறேன்.
அந்தப் பலம் இன்று எனக்கு, என் வயதான பெற்றோரை அவர்களுக்குத் தேவையான பாசத்தையும் வழங்கத் தேவையான மனோதிடத்தை வழங்கியுள்ளது என்கிறார் அவர்.
தடுங்கள்
பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் என யார் உங்கள் வாழ்க்கையின் முடிவுகளில் தலையிட முயன்றாலும் உங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தித் தடுத்து நிறுத்துங்கள்.
ஏனென்றால் நம் ஆளுமையின் இயல்புக்கு ஒவ்வாத முடிவுகளை நம் பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் விதமாகவோ அல்லது நம் நண்பர்களின் கருத்துகளின் அடிப்படையிலோ எடுப்போமானால் உளவியல் ரீதியில் உங்களுக்கு உங்கள் மீதும் மற்றவர்கள் மீதும் வெறுப்பு பழிவாங்கும் உணர்வு மற்றும் கோபம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அந்தக் கோபம் நீங்கள் பொருளாதார,தொழில் மற்றும் சமூக ரீதியில் வெற்றியடைந்திருந்தாலும் உங்களை ஆன்ம அளவில் மற்றும் ஆளுமை ரீதியில் படுதோல்வியடையச் செய்துவிடும். அது உங்கள் நிம்மதியை, உங்கள் பெற்றோர், மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிவோர் ஆகியோரது நிம்மதியையும் சின்னாபின்னமாக்கிவிடும்.
சொந்த முடிவு
பெற்றோருக்காகவும் மற்றோருக்காகவும் வாழ்பவர்கள், வெளி உலகுக்கு வெற்றிபெற்றவர் போன்று தெரிந்தாலும் மது,போதை, புகை, கட்டுப்பாடற்ற உணவுப்பழக்கம் என்பது போன்ற பல்வேறுவகையில் தங்களைத் தாங்களே சீரழித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆகவே உங்கள் வாழ்வின் கல்வி, வேலை, திருமணம்,வியாபாரம் போன்ற எத்தகைய முடிவுகள் எடுக்கும் போதும் பெற்றோர், ஆசிரியர்கள், ஆலோசகர்கள் உட்படப் பலரோடும் ஆலோசியுங்கள். ஆனால் முடிவுகள் உங்களின் சொந்த முடிவாக இருக்கட்டும்.nanri -இரா. மோகன் குமார்
yours Happily
www.v4all.org
No comments:
Post a Comment