.
'பில்’ என்று அழைக்கப்பட்ட அவன், ஒரு வழக்குரைஞரின் மகன். அம்மா, பள்ளி ஆசிரியை. எப்போதும் தொணதொண என்று பேசுவதனால், பில்லும் வக்கீல் ஆகிவிடுவான் என்றே நினைத்தார்கள். ஆனால், பில் தனது ஐந்தாவது வயதில் வீட்டில் உள்ள வானொலி, எதிர் வீட்டு சோஃபா, பக்கத்து வீட்டு சைக்கிள் என எல்லாவற்றையும் கழற்றிப்போட்டு, பழைய நிலைக்குச் சேர்க்க ஆரம்பித்தான்.
பாடங்களைச் சற்று நேரத்துக்கு மேல் கவனிக்க, படிக்க முடியாதவனாக பில் இருக்கிறான் என்று பள்ளி ஆசிரியர்கள் புகார் செய்தார்கள். கணிதம் என்றாலே, அவனுக்குக் கசந்தது. அந்தப் பாட வேளையில் அவன், நூலகத்தில்தான் இருப்பான். அங்கேயும் புத்தகங்களைப் படிப்பது இல்லை. அவற்றைக் கலைத்துப் போட்டு, வேறுவேறு முறைகளில் அடுக்குவான். ஆறு வயதுச் சிறுவன், ஆயிரக்கணக்கான புத்தகங்களை விதவிதமான முறையில் நேர்த்தியாக அடுக்குவதைக் காணவே, ஒரு கூட்டம் இருந்தது. அட்டவணை முறையில் புத்தகங்கள் எந்த அடுக்கில் உள்ளது என்று சொல்லும் நவீன முறையும் பில்லுக்கு அத்துபடி.
சிறுவன் பில்லுக்கு 13 வயது ஆனபோது, அவனது பள்ளித் தாய்மார்கள் குழு, கம்ப்யூட்டர்களை பள்ளிக்கு வரவழைக்கப் பொருளுதவி செய்தது. அப்போது ஓர் அறையையே அடைத்துக்கொள்ளும் பெரிய வால்வுகள் பொருத்திய, 'டெலிமாடல் 33’ என்கிற ஏஎஸ்ஆர் மின் கணினிதான் பயன்பாட்டில் இருந்தது. அங்கே சென்று, பேஸிக் (Basic) எனும் முறையை முழுமையாகக் கணினி மொழியாக்கும் வேலையில் பில் உதவினான்.
நூலகத்தில் அவன் கற்ற கேட்டலாகிங் முறை ஒரு வகையில் கைகொடுத்தது. அந்த வேலையில் அமர்த்தப்பட்டவர்கள் ஆறு நாட்களில் செய்யும் ஒரு வேலையை, அவன் நான்கு மணி நேரத்தில் முடித்தான்.
பில், தனது கணக்குப் பாட வேளையில் கணிதத்துக்குப் பதில், கணினிப் பாடம் கற்கலாம் என்று பள்ளி நிர்வாகம் அனுமதித்தது.
பில்லும் அவனது நண்பர்களுமாகச் சேர்ந்து, உலகில் முதன்முறையாக டிக்-டேக்-டோ எனும் புதிய வகை புரோகிராமை ஏற்படுத்தினார்கள். அந்த ஆய்வகத்தில் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும். பள்ளியின் தலைமை ஆசிரியை, சந்தேகத்தோடு திடீர் சோதனை மேற்கொள்வார். அங்கே, ஊரின் சிறார்களும் சில பெரியவர்களும் கணினியோடு சீட்டாட்டம், செஸ் என்று விளையாடிக் கொண்டிருப்பார்கள். இந்தக் கணினி விளையாட்டு புரோகிராமை பில் கண்டுபிடித்து அறிமுகம் செய்தபோது, அவன் வயது 13.
மிகுந்த போக்குவரத்து நெரிசல்கொண்ட பகுதியில் இருந்த அவர்களது வீட்டின் அருகே இருந்த சிக்னலில், பில்லும் அவனது தந்தையும் காரில் செல்லும்போது அடிக்கடி சிக்கினார்கள். ஒருநாள், ''அந்த சிக்னல் இயங்கும் விதம் பற்றி அறிந்துவருகிறேன்'' என்று சென்றான். இரண்டு நாட்கள் கழித்து அவன் வந்தான். அவனது 14 வயதில் கணினிமயமான முதல் போக்குவரத்து சிக்னல் உருவானது. காவல் அதிகாரிகள் அவனை வீடு தேடிவந்து பாராட்டியபோது அப்பா அசந்துபோனார்.
ஒருநாள் கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷன், அதன் நிர்வாகிகளைப் பள்ளிக்கு அனுப்பியது. பள்ளியில் அவர்கள் சப்ளை செய்திருந்த கணினியில், வித்தியாசமான வைரஸ் தாக்கி இருந்தது. பல மணி நேரம் போராடியும் முடியவில்லை. மதர் போர்டு (பிரதான மின் அமைப்பு) டெக்ஸ் மாற்ற வேண்டும் என 16 வயது பில் பேசுவதை அவர்கள் அதிர்ச்சியோடு பார்த்தார்கள். 'இனி, பில் பள்ளியில் கணினி பயன்படுத்தக் கூடாது. ஆனால், நேரம் கிடைக்கும்போது அவர்களது தொழிற்சாலைக்கே வரலாம்’ என்று புதிய உலகை அவனுக்குத் திறந்துவிட்டார்கள்.
பின்னாட்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை உருவாக்கி, தனது 'விண்டோஸ்’ மூலம் உலகையே கணினிமயமாக்கிய பில்கேட்ஸாக உருவெடுத்த பில், ஒரு சுட்டி நாயகனாக மிளிர்ந்தான்.
-ஆயிஷா நடராசன்,
ஓவியம்: பாரதிராஜா
ஓவியம்: பாரதிராஜா
No comments:
Post a Comment