ஐம்புலன்களைக் கவர்ந்தால் வெற்றி!
அஞ்சும் அடக்குஅடக் கென்பர் அறிவிலார்,
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே
(திருமந்திரம் – 2033)
ஐம்புலன்களை அடக்க நினைப்பவர்களை திருமூலர் இப்படி விமர்சிக்கிறார். தன்னுடைய தமிழில் அவர் கூறியதை நம்முடைய தமிழில் பார்ப்போம்.
ஐம்புலன்களை அடக்கு என்பவர்கள் அறிவில்லாதவர்கள்.
ஐம்புலன்களை அடக்கியவர்கள் தேவலோகத்தில் கூட இல்லை.
ஐம்புலன்களை அடக்கினால் மதிகெட்டு போகும்.
அவற்றை அடக்காது நெறிப்படுத்தும் அறிவை அறிந்தேன்.
மார்க்கெட்டிங் பக்கத்தில் மந்திரமா என்று மலைக்கவேண்டாம். தொழில் பகுதியில் தத்துவமா என்று தவிக்கவேண்டாம். ஐம்புலன்கள் பற்றிய ஐட்டமா என்ற ஐயம் வேண்டாம். திருமூலரா என்று திருதிருவென்று முழிக்கவும் வேண்டாம். மக்களின் ஐம்புலன்களை பிராண்டால் மயக்கும் வித்தையை விவரிக்கவே இந்தக் கட்டுரை. பிராண்டிங்கின் புதிய பரிமாணத்தை புரிந்துகொள்வதே இந்த வார சப்ஜெக்ட்.
போட்டியாளர்கள் மத்தியில் பிராண்டை தனித்துவமாக தெரிய வைக்க தகிடுதத்தம் போடவேண்டியிருக்கிறது. என்னதான் தரமாக தயாரித்தாலும், பர்ஃபெக்ட்டாக பேக்கிங் செய்தாலும் பத்தமாட்டேன் என்கிறது. குலதெய்வத்துக்கு கிடா வெட்டி பொங்கல் படைக்கிறேன் என்று வேண்டினாலும் போதமாட்டேன் என்கிறது. சரி, வேறு வழி உண்டா விற்பனையை பொங்க வைக்க? மக்களை நம்மிடமே தங்க வைக்க?
ஐம்புலன்களை மயக்குங்கள்
கூட்ட நெரிசலில் முந்தி முன்னேற வழி இருக்கிறது. வாடிக்கையாளருக்கு முழு சென்சரி, இமோஷனல் அனுபவத்தைக் கொடுப்பதே அது என்கிறார் ‘மார்டின் லிண்ட்ஸ்ட்ராம்’. அதற்கு வாடிக்கையாளரின் ஐம்புலன்களையும் மயக்குங்கள் என்கிறார் ‘பிராண்ட் சென்ஸ்’ என்ற தன் புத்தகத்தில்.
பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல் என்று ஐம்புலன்களைக் கொண்டு உலகை உணர்கிறோம். ஒன்றும் வேண்டாம். சாதாரண டிகிரி காபி. இதற்கு அடிமையாய் கிடக்கிறோம், அது நம் ஐம்புலன்களையும் அரவணைப்பதாலேயே.
யோசித்துப் பாருங்கள். நம்மை அடையும் முன்பே காபியின் கமகம வாசனை நம் நாசிகளை நடனமாடச் செய்கிறது. டவராவின் சூடு கையில் பதமாய் இதமளிக்கிறது. காபியின் பிரத்யேக கலரோடு வெள்ளை நுரை கண்களுக்கு குதூகலமூட்டுகிறது. காபியை ஆற்றும் சத்தம் இளையராஜாவின் மெலடியாய் காதுகளில் ரீங்கரிக்கிறது. இத்தனையும் செய்து முத்தாய்பாய் டிகிரி காபி நாக்கை நனைத்து நாபிக் கமலம் வழியே மடை திறந்த காவேரியாய் இறங்கும் போதுதான் நமக்கு பொழுது விடிகிறது, தூக்கம் கலைகிறது, ஜென்மமே சாபல்யம் அடைகிறது!
சாதாரண காபி நம் ஐம்புலன்களை அரவணைத்து ஆராதிக்கும்போது பல கோடிகள் புழங்கும் பிராண்டுகள் மக்களின் ஐம்புலன்களை அவாய்ட் செய்து ஒன்றிரண்டு புலன்களை மட்டுமே குறி வைப்பது குறைதானே!
பிராண்ட்டுகளின் ஈர்ப்பு
பிராண்டை வாங்கும்போதும் நம்மை அறியாமல் ஐம்புலன்களை உபயோகிக்கிறோம். புத்தகம் அறிவுக்கென்றாலும் அதன் பக்கங்களை முகரும் போதுதான் புதியது என்றே படுகிறது. செவிக்கும், கண்ணுக்கும் விருந்தளிக்க தியேட்டர் என்றாலும் பாப்கார்ன் வாசனையை நுகரும் போதுதான் தியேட்டர் எஃப்பெக்ட் கிடைக்கிறது. கலர் பார்த்து சட்டையை தேர்ந்தெடுத்தாலும் அதன் சுகமான ஸ்பரிசம் உடம்பில் படும் போதுதான் புது சட்டை போட்ட திருப்தி ஏற்படுகிறது.
ஆனாலும் பல பிராண்டுகள் ஐம்புலன்களில் ஓரிரண்டை மட்டுமே மயக்குகின்றன. ஐம்புலன்களையும் திருப்தி செய்யும் வகையில் பிராண்டுகளை வடிவமைத்தால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்கிறார் லிண்ட்ஸ்ட்ராம்.
வசீகரிக்கும் ஆப்பிள்
‘பழமுதிர்சோலை’ கடை வாசலில் நிற்கிறீர்கள். காலைப் பனித்துளி நனைத்த அழகான ஆப்பிள் படம் கண்ணில் படுகிறது. அது உங்களை உன்னிப்பாய் பார்க்க வைக்கிறது. அதன் ஃப்ரெஷ் வாசனை நாசிகளை வசீகரிக்கிறது. ஆப்பிள் நறுக்கப்படும் சத்தம் ஆப்பிளின் ஃப்ரெஷ்னெஸ்ஸை தெளிவுபடுத்துகிறது.
அதை கையில் எடுக்கும்போது அதன் இழை நயம் சப்பு கொட்ட வைக்கிறது. நறுக்கியதை சுவைக்கும் போது ஐந்தாவது புலனும் ‘மயங்கி’ ‘ஒரு டஜன் கொடுப்பா’ என்று வாங்க வைக்கிறது. ஐம்புலன்களை மயக்கி விற்கும் இந்த கலவைக்கு ‘சென்சரி பிராண்டிங்’ என்று பெயர்.
இதை சில பிராண்டுகள்தான் சிறப்பாக செய்கின்றன. ‘ஹோண்டா’ காரின் கதவை மூடும் சத்தம் அதன் சிறந்த கட்டுமானத்தைக் காட்டுவதாக படுகிறது. அந்த குறிப்பிட்ட சத்தம் கிடைக்க ஒரு மாதம் உழைத்ததாம் ஹோண்டாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு.
டாய்லெட் சுத்தமாக இருக்கிறது என்பதைப் பார்த்து தெரிவதை விட நுகர்ந்து தெரிந்து கொள்ளத்தான் ‘டெட்டால்’ விசேஷ வாசனை கொண்டு தயாரிக்கப்படுகிறது. சுவைக்க உணவு என்றாலும் ஸ்டார் ஹோட்டல்கள் சமைத்த உணவை கண்களுக்கு அழகாக தெரியும் வகையில் டிரெஸ்ஸிங் செய்தால்தான் சாப்பிடுபவர்களுக்கு பிடிக்கிறது.
எல்லா பிராண்டுகளையும் ஐம்புலன்களை கவரும்படி வடிவமைக்க முடியாது தான். ஆனால் எத்தனை புலன்களை அடைய முடியும் என்று ‘புலன் விசாரணை’ செய்யும் போலீஸ்காரராய் ஆராய்ந்து அதன்படி பிராண்டை வடிவமைத்தால் மக்களை மயக்கி நம் பிராண்டை வாங்கவைப்பது எளிதாகும்.
வெற்றியின் ரகசியம்
இதை பிராக்டிகலாக பண்ண முடியுமா, பயன்படுமா என்று பயப்படுபவரா நீங்கள். ஏறுங்கள் ‘சிங்கப்பூர் ஏல்லைன்ஸ்’ விமானத்தில். பல ஏர்லைன்ஸ் குறைந்த விலை, சொகுசு சீட், சுவையான உணவு தந்தால் போதும், பயணிகள் க்யூ கட்டுவார்கள் என்று நினைக்கின்றனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மட்டும் பயணிகளுக்கு முழு சென்சரி அனுபவத்தை அளிக்கவேண்டும் என்று முடிவு செய்தது.
பிளேன்களின் இண்டீரியர் டிசைனுக்கேற்ப உயர்தர பட்டில் பணிப்பெண்களுக்கு யூனிஃபார்ம் தரப்படுகிறது. யூனிஃபார்ம் ஒரே சைஸ் தான். அதற்குள் ஃபிட் ஆகும் பெண்கள் மட்டுமே செலக்ட் செய்யப்படுகிறார்கள். விமான கலர்களுக்கேற்ப பணிப் பெண்களுக்கு இரண்டு வித முகச்சாயக் கலர்கள் மட்டுமே தரப்படுகிறது. தங்கள் விளம்பரங்களில் காட்டப்படும் அழகான பெண்களுக்கு ஈடாக மட்டுமே பணிப்பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். விமான பயணத்தின்போது காப்டனும் பணிப் பெண்களும் எப்படி பேச வேண்டும், என்ன பேசவேண்டும் என்பது விளம்பர நிபுணர்கள் மூலம் எழுதியே தரப்படுகிறது.
’ஸ்டெஃபான் ஃப்லோரிடியன் வாட்டர்ஸ்’. ஏதோ அசிங்கமாக திட்டுவது போலிருக்கும் இது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் வாசனையின் பெயர். பணிப்பெண்கள் பெர்ஃப்யூம் முதல் தரப்படும் துண்டு வரை இந்த வாசனையால் நனைக்கிறார்கள். விமானம் முழுவதும் இந்த வாசனை தான்.
ஐம்புலன்களும் மயக்கப்படுவதால் தான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணிப்பவர்களுக்கு அந்த அனுபவம் பிரத்யேகமாகப் படுகிறது.
மற்ற விமானங்களில் இந்த அனுபவம் இல்லாதது குறையாய் தெரிந்து ‘நமக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்தான் சரிப்படும்’ என்று அதற்குத் தாவி விடுகிறார்கள். ஐம்புலன்களையும் வசீகரிப்பதால்தான் உலகின் தலைசிறந்த ஏர்லைன்ஸ் என்று ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ போற்றப்படுகிறது. பிளேனை விட கம்பெனியின் வருவாயும் லாபமும் அதற்கு மேல் பறக்கிறது!
புது கணக்கு
1+1=2 என்பது பழைய கணக்கு. பிராண்டால் ஐம்புலன்களையும் கவர்ந்தால் 1+1+1+1+1= 100! இதுவே மார்க்கெட்டிங்கின் புதிய பரிமாணம். பிராண்டிங்கின் புதிய பரிணாமம்.
அந்த திருமூலர் மந்திரம் வாழ்க்கைக்கு. இந்த பிராண்ட் மந்திரம் பிசினஸுக்கு.
அஞ்சும் அடக்குஅடக் கென்பர் அறிவிலார்,
அஞ்சும் அட்ஜஸ்ட்செய்தால் பிராண்டிற்கு பயனுண்டு
அஞ்சும் கொஞ்சினால் வாடிக்கையாளர் மயங்கிடுவர்
அஞ்சும் அடக்கா அறிவறிந் தவனே மார்க்கெட்டர்.
Urs Happily
www.v4all.org
Urs Happily
www.v4all.org
No comments:
Post a Comment