வெற்றிபெற(ச்) செய்யாதே!
வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? வெற்றி பெற்றவர்கள் என்ன செய்கின்றார்கள்? என்றெல்லாம் புத்தகங்கள் விற்கப்பட்டுவரும் காலத்தில் வெற்றி பெற என்னவெல்லாம் செய்யக்கூடாது? வெற்றி பெற்றவர்கள் எதையெல்லாம் செய்வதில்லை என்பதை பற்றி ஒரு மாற்றுக்கருத்தை சொல்லும் புத்தகம் இது. இதன் மூலம் தேவையான விஷயங்களைச் செய்வதற்கான நேரம் அதிகமாக கிடைக்கும்.
முயற்சி செய்து தோல்வியடைந்த ஒரு விஷயத்தின் பின்னாடி திரும்பத்திரும்ப செல்லக்கூடாது. தோல்வியடைந்த விஷயத்தின் பின்னாடி நீங்கள் போனால், எப்படி வாழ்க்கையில் முன்னாடி போவீர்கள் என்று ரைமிங்குடன் ஆரம்பிக்கின்றது இந்தப் புத்தகம். மீண்டும் மீண்டும் முயன்றால் வெற்றி கிடைச்சுடும் என்ற நம்பிக்கையில் பழைய தோல்வியுற்ற விஷயத்தின் பின்னாடி போகின்றேன் என்று சொல்லி மழுப்பாதீர்கள்.
பழைய விஷயம் ஒன்றில் பின்னோக்கிச் சென்றால் அது உங்களை முன்னோக்கி எடுத்துச்செல்லும் என்ற உறுதியில்லாவிட்டால் போகவே போகாதீர்கள் என்கின்றார்.
அதே போல் உங்களுடைய ஒரிஜினாலிட்டியை (பெர்சனாலிட்டி/மனம்) மாற்றினால் மட்டுமே செய்ய முடியும் என்ற காரியத்தை செய்ய முயலாதீர்கள். அது சரிவராது. நானும் எவ்வளவு நாளுக்குத்தான் நல்லவனாவே நடிக்கிறதுன்னு உங்களுடைய ஒரிஜினல் வெளியே வந்து காரியத்தை கெடுத்துவிடும். அவ்வளவுதான் என்கின்றார் கிளவுட்.
வெற்றிபெரும் மனிதராக மாற மற்றவர்களை மாற்றும் முயற்சியில் திரும்பத்திரும்ப ஈடுபடக்கூடாது என்று சொல்லும் கிளவுட், ஒருத்தரை மாற்றும் விஷயத்தில் ஒரு தடவை முயற்சி பண்ணி தோத்துட்டேன்னா அதுக்கப்புறம் அதில் என் பேச்சை நானே கேட்கமாட்டேன் என்ற சட்டத்தை வகுக்கச் சொல்கின்றார். எப்பவுமே அடம்பிடிக்கும் கவர்மென்ட் ஆபீசர், காலை பத்துமணிக்கே பாருக்கு போகும் நண்பர், செய்யவேண்டியதை எப்போதுமே செய்யாத பொறுப்பில்லாத நபர், வேலையே பார்க்காத தொழிலாளி, உங்கள் திறமைக்கு இணையாகாத கூட்டாளி என யாரையுமே மாற்ற ஒரு தடவைக்கு மேல் முயற்சி செய்யாதீர்கள் என்கின்றார். இதுபோன்ற மனிதர்களை மாற்றும் விஷயத்தில் மறுபடி மறுபடி எடுக்கப்படும் முயற்சிகள் எல்லாமே தோல்வியில் மட்டுமே முடியும் என்கின்றார்.
முன்னேற வேண்டுமென்றால் கொஞ்சம் பேரை பகைத்துக்கொண்டேயாக வேண்டியிருக்கும் என்று சொல்லும் ஆசிரியர். எல்லாரையும் கூலாக வைத்துக் கொண்டிருக்கவேண்டும் என்று நினைத்தால் ஒரு குண்டூசியைக் கூட நகர்த்த முடியாது என்கின்றார். எல்லா வெற்றி பெற்றவர்களையும் எல்லோருக்கும் பிடிப்பதில்லையே! அப்புறமென்ன எல்லோரையும் சந்தோஷப்படுத்த முயல்வது என்று கலாய்க்கிறார் கிளவுட்.
ஹோட்டல் ஒன்றை நடத்திவருபவர் அதனை மேலும் விரிவுபடுத்த எண்ணி இடம் மாற்ற நினைக்கின்றார். ஹோட்டலுக்கு இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கின்றது. புது இடத்தில் ஹோட்டல் நடத்த லைசென்ஸ் வாங்க நாய்படாத பாடு படவேண்டியுள்ளது. கிச்சன் புகை போக்கியை நிறுவினால் கடைக்குப் பின்னால் குடியிருப்பவர்கள் சண்டைக்கு வருகின்றார்கள். இதுபோன்ற இடர்பாடுகளை அசராமல் எதிர்கொண்டு புதிய இடத்தில் ஹோட்டலைத் திறக்கிறார். அங்கே வியாபாரம் மூன்று மடங்கு அதிகரிக்கின்றது. “சோதனை என்பது வலி அல்ல, அது வெற்றிக்கான வழி” என்று சொல்லும் ஆசிரியர் இன்றைக்கு வலியை நிராகரிப்பவர்களை வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் நிராகரித்துவிடுகின்றது. அதனால் எதிர்காலத்தில் அதிகமான வலியும் காத்திருக்கின்றது என்கின்றார்.
உலகத்தில் எதையுமே அப்பழுக்கற்றது என கண்மூடித்தனமாக நம்பாதீர்கள் என்று சொல்லும் ஆசிரியர், நல்லவர்களை கண்டுபிடிக்க முயலுங்கள். அது முடியவில்லையா. அட்லீஸ்ட் என் கேரெக்டர் இதுதானப்பா. கொஞ்சம் அப்படி இப்படி இருப்பது தப்புதான் என்று ஒப்புக்கொள்ளும் தன்மை உடையவரையாவது சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறார் கிளவுட்.
நாம் எங்கே போகவேண்டும் என்பதில் எப்போதும் கவனமாய் இருங்கள். இடையில் வரும் பிரச்சினைகளை போடா ஆண்டவனே நம்ம பக்கம்தான் என்று சொல்லி துரத்தி அடியுங்கள். அதை விட்டுவிட்டு சின்னப் பிரச்சினைகளில் மண்டையை உடைத்துக்கொள்ளாதீர்கள்.
அடுத்தவரை காப்பி அடிக்காதீர்கள் என்று நெத்தியடியாகச் சொல்லும் ஆசிரியர் பொதுவாக நாம் அவரைப் போல்/ இவரைப் போல் ஆக வேண்டும் என்று நினைப்பது முற்றிலும் தவறு என்கிறார். இதில் நமது எனர்ஜியை செலவிட்டால் முன்னேற்றம் என்பது டவுட்டுதான் என்கின்றார். உதாரணத்துக்கு, ஒரு கழுதை பாட்டு கற்றுக்கொள்ள ஒரு போதும் முயற்சிக்கக்கூடாது. கழுதைக்கு பாட்டு என்பது தேவையற்றது. பாட்டுவாத்தியாரை பார்த்த மாத்திரத்தில் கழுதை கடுப்பாகக்கூட வாய்ப்புள்ளது. கடவுள் கழுதையை பாடுவதற்காக படைக்கவில்லை. இல்லையா? அதே போல்தான். நாம் நாமாக மட்டுமே இருக்க வேண்டும். இதுவே நமது வாழ்க்கைக்கும் பொருந்தும் என்கின்றார்.
நம்முடைய எண்ணங்களும் செயல்பாடுகளும் குறுகியநோக்கத்துடன் ஒருபோதும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்கிறார். கடவுளால் படைக்கப்பட்ட நமது அறிவானது தொலைநோக்குடன் செயல்படுவதற்கான முழுத் திறனையும் கொண்டுள்ளது. அவசர அவசரமாய் ஒரு செயலை தற்காலிக கண்ணோட்டத்தோடு அணுகி தோல்வி அடைவதைவிட, நிதானமாக தொலைநோக்குடன் அதை செயல்படுத்தும்போது வெற்றி நமக்கு சுலபத்தில் கிடைக்கும் என்கின்றார் கிளவுட்.
“நான் எங்கே இருக்கிறேன்?” என்ற கேள்வியை நாம் அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் “இந்த சூழ்நிலையில் என்னுடைய பங்கு என்ன?” என்ற கேள்வியேயாகும். சூழ்நிலையை அறிந்துகொள்ளாமல் நம்மால் எந்தவொரு செயலையும் திறம்பட செய்துவிட முடியாது. சூழ்நிலைகளை கூர்ந்து கவனித்து நமது செயல்முறைகளை அதற்கேற்ப அமைத்துக்கொண்டால் மட்டுமே நம்மால் வெற்றியடைய முடியும்.
கண்ணுக்கு தெரியாத நம்முடைய உள்வாழ்க்கையே கண்ணுக்கு தெரியும் வெளியுலக வாழ்க்கையை உருவாக்குகிறது. மனது உவந்து வாழும் நமது உள்ளார்ந்த(ஆழ்மனம்) வாழ்க்கையே நமது வெளிப்புற வெற்றியை தீர்மானிக்கிறது. ஆழ்மன செயல்பாட்டினை எந்த அளவுக்கு செம்மைப்படுத்துகிறோமோ அந்த அளவிலேயே நமது வாழ்க்கையின் வெற்றி அமைகின்றது. நமக்குள்ளே இருக்கும் நாம் யார் என்ற அடையாளத்தை எந்தவொரு வெளிப்புற காரணிகளாலும் மாற்ற முடியாது. சிம்பிளாய் சொன்னால் ஒருவன் மனதின் உள்ளே பவர்ஸ்டாராயும் வெளியே சூப்பர் ஸ்டாராயும் வாழவே முடியாது. ஒரு செயலை நாம் எப்படி எந்த முறையில் அணுகுகிறோம் என்பதை பொருத்தே நாம் எதை பெறப்போகிறோம் என்பது அமையும். நமது மகிழ்ச்சி, சந்தோஷம் போன்றவையும் முழுக்க முழுக்க மனதினுள் நாம் யார் என்பதை பொருத்தே அமைகிறதே தவிர வெளிப்புற சூழ்நிலைகளால் அல்ல.
நாம் நமது இலக்குகளையும் அதை சென்றடைவதற்கான வழிமுறைகளையும் சுலபத்தில் தேர்ந்தெடுத்துவிடுகிறோம், ஆனால், இலக்குகளை அடைவதில் வெற்றியா தோல்வியா என்ற முடிவுதனை நம்மால் தேர்ந்தெடுக்க ஒருபோதும் முடிவதில்லை. ஹென்றி கிளவுட் புத்தகத்தில் தெரிவித்துள்ள இந்த கோட்பாடுகளை புரிந்துகொண்டு பின்பற்றினால் சுலபமாய் நாம் விரும்பும் வெற்றிக்கனியை நம்மால் எட்டிப் பறிக்க முடியும் என்று உறுதியாய் சொல்லலாம்.
nanri - the hindu
urs - www.v4all.org
nanri - the hindu
urs - www.v4all.org
No comments:
Post a Comment