ஃபீனிக்ஸ் பெண் டானா!
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து, தன் முகமூடியைக் கழட்டி, உலகுக்கு தன் முகத்தைக் காட்டியிருக்கிறார் டானா உலின். ஆம், அழகுப் பதுமையாய் வலம் வந்தவரை படுக்கையில் கிடத்தி, தன் முகத்தை தன்னாலேயே பார்க்க முடியாத கோரத்துக்கு மாற்றியது... நட்பு!
ஆஸ்திரேலியாவை சேர்ந்த டானா, பிப்ரவரி 16, 2012 அன்று தன் தோழி நடாலி டிம்ட்ரோவொஸ்காவுடன் பார்ட்டிக்குச் சென்றிருக்கிறார். அங்கே தன் கணவர் எடின் ஹான்டாநோவிக்வுடன் டானா பேசுவதைப் பொறுக்காத நடாலி, டானாவின் முகத்தில் ஆல்கஹாலை (மிதிலேட்டட் ஸ்பிரிட்) ஊற்றி தீ வைத்து விட்டார்.
இதையடுத்து, தலை முதல் பாதம் வரை கிட்டத்தட்ட 64 சதவிகித தீக்காயங்களுடன் கடந்த இரண்டு வருடங்களாக 30க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார் டானா. முகமூடிக்குள் தன் முகத்தை ஒளித்துக்கொண்டார். டானாவின் வாழ்க்கையில் இன்னொரு பேரிடியாக, அவருக்கு கர்ப்பபை வாய் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான சிகிச்சைகளையும் எதிர்கொண்டார்.
இரண்டரை வருடங்கள் கழித்து சமீபத்தில் தனியார் தொலைகாட்சி ஒன்றில் தன் முகமூடியைக் கழற்றி பேட்டி கொடுத்திருக்கிறார் டானா. ‘‘என் நிலைமையை விவரிக்கும் உடல்நிலை கூட அப்போது எனக்கில்லை. இப்போது நான் அனுபவித்த வேதனைகளை எல்லாம் வெளியில் கொட்டவே வந்திருக்கிறேன். மரணம் என்பது மிக எளியது. ஆனால், நான் அந்த வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை. கடினமான பாதையைத் தேர்வு செய்தேன். ஒரு பெண்ணால் இந்தளவு துன்பத்தை எதிர்கொண்டு மீண்டு வர முடியுமா என்று அனைவரும் அதிசயிக்கும் அளவுக்கு, வலிகளின் மீது ஏறி வந்துள்ளேன்.
என் முகத்திலிருந்து இந்த தீக்காயங்களை, வடுக்களை எல்லாம் எட்டி உதைக்க மருத்துவத்தில் நம்பிக்கை வைத்துப் போராடினேன். இதோ... இன்று உலகின் முன் என் முகமூடியைக் கழற்றி எறிகிறேன். என் போராட்ட வாழ்க்கை மற்றவர்களை ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன்!’’ என்று முகமூடியைக் கழற்றி எறிந்துவிட்டார் டானா.
அவர் முகத்தை விடவும் அழகாக்கியிருக்கிறது, அவரின் தன்னம்பிக்கை!nanri - vikatan yours - www.v4all.org |
No comments:
Post a Comment