Saturday, October 18, 2014

தீபாவளிப் பண்டிகை

வாமனபுராணம், விஷ்ணு புராணம், பத்மபுராணம், சிவபுராணம், துலா மகாத்மியம் ஆகியன தீபாவளியை வெகுவாகப் போற்றுகின்றன.

ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச தேய்பிறை திரயோதசி முதல் வளர்பிறை பிரதமை வரையிலான நாட்கள் தீபாவளியுடன் நெருங்கிய தொடர்புள்ளதைத் தெரிவிக்கின்றன புராணங்கள்.

புராணக் கூற்றின்படி தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது முதலில் ஆலகால விஷம் தோன்றியது. அந்த நாள் திரயோதசி. மறுநாளான  சதுர்த்தசியன்று மகாலட்சுமி வெளிப்பட்டாள். அதற்குப்பின் அமிர்தம் கிட்டியது.

பகவான் கிருஷ்ணரின் திருவிளையாடலால் சத்தியபாமாவால் நரகாசுரன் வதைக்கப்பட்டதும்; திரிவிக்ரமரால் மகாபலி பாதாளத்திற்கு அழுத்தப்பட்டதும் இதே தினத்தில்தான் என்று புராணங்கள் கூறுகின்றன.

பவிஷ்யோத்ரபுராணம் "தீபாளிகா' என்றும், காலவிவேகம் மற்றும் ராஜமார்த்தாண்டம் ஆகிய நூல்கள் "சுகராத்திரி' என்றும், நீலமேகப்புராணம் "தீபோற்சவம்' என்றும் தீபாவளியைக் குறிப்பிடுகின்றன.

தமிழகத்தில் ஒருநாள் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை, மற்ற மாநிலங்களில் இரண்டிலிருந்து ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

ஆந்திராவில் நரக சதுர்த்தி, தீபாவளி என இரண்டு நாட்கள் கொண்டாடுகிறார்கள். நரக சதுர்த்தியன்று காலை எண்ணெய் தேய்த்து நீராடி, இல்லத்தில் இறைவழிபாடு முடிந்ததும் புத்தாடை அணிவார்கள். அன்று மாலை வீடுமுழுவதும் தீபங்களேற்றி அலங்காரம் செய்வர். ஆமணக்குச் செடியின் கிளைகளைக் கொண்டுவந்து, அதன்மீது எண்ணெயில் தோய்த்த திரியை வைத்து தீபமேற்றுவர். இனிப்பு மற்றும் இதர பலகாரங்கள், பழங்கள் வைத்து அவரவர் குலவழக்கப்படி பூஜை செய்வர்.

கர்நாடகாவில் மூன்று நாட்கள் கொண்டாடுவர். முதல் நாள் நரக சதுர்த்தியன்று காலை எண்ணெய்க்குளியல் செய்தபின், புத்தாடையணிந்து இறைவழிபாடு செய்வர். பிறகு விருந்துண்டு மகிழ்வர். மறுநாள் அமாவாசை நாளை ஓய்வு நாளாகக் கருதுவர். மூன்றாம் நாள் பலிபிரதமை. இது மிகவும் முக்கியமான நாள். வாமன அவதாரத்தின்போது திரிவிக்கிரமனான மகாவிஷ்ணுவால் பாதாளத்தில் அமிழ்த்தப்பட்ட மகாபலி சக்கரவர்த்தி, தான் பெற்ற வரத்தின்படி மக்களைக் காண பூலோகத்திற்கு வரும் நாளாக இதைக் கொண்டாடுவர். (கேரளாவில் ஆவணி திருவோணத்தில் கொண்டாடப்படும்.) வடமாநிலங்களில் இவ்விழா வேறுவிதமாகக் கொண்டாடப்படுகிறது.


வங்காளத்தில் சும்பன், நிசும்பன் ஆகியோரை சம்ஹாரம் செய்த மகாகாளியின் உக்கிரத்தை சிவபெருமான் அடக்கிய நாளே தீபாவளி என்று கொண்டாடுவர். பொதுவாக காளி கறுமை நிறத்துடன் காட்சிதருவாள். ஆனால், அன்று மட்டும் நீலநிறத்தில் காட்சிதருவது வழக்கம். இதை சியாமளா தேவி பூஜை என்பர். பூஜைகள் முடிந்ததும் அந்தக் காளி உருவத்தை நீர் நிலையில் கரைத்து விடுவார்கள். மேலும் ராமபிரான் இராவணனை வதம்செய்த நாளாகவும் கொண்டாடுகிறார்கள்.

மும்பையில் தீபாவளியன்று விநாயகருக்கும், லட்சுமிதேவிக்கும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. அங்குள்ள மகாலட்சுமி கோவிலில் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். தீபாவளியன்று காலை ஒருவித நறுமண எண்ணெயைத் தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்தபின் இல்லத்தில் பூஜை செய்வர். அன்று அனைத்து வீட்டு வாசல்களிலும் நட்சத்திரம் போன்ற அட்டையில் செய்த விளக்கு ஒளிர்விடும். மேலும் குஜராத்தில் முதல் நாள் லட்சுமிகுபேர பூஜை, இரண்டாம் நாள் நோன்பு, மூன்றாம் நாள் தீபாவளி, நான்காம் நாள் வருடப்பிறப்பு, ஐந்தாம் நாள் சகோதர, சகோதரிகளின் பாசப்பரிமாற்றம், பரிசுப் பொருட்கள் அளித்தல், வாழ்த்து பெறுதல் என ஐந்து நாட்கள் கொண்டாடுவர். தீபாவளிக்கு ஏழாம் நாள் "சத்பூஜா' என்ற பெயரில் சூரிய பகவானை வழிபடுவர். இந்தப் பூஜை பெரும்பாலும் நதிக்கரைகளில் நடைபெறும். கரும்புகள் கொண்டு பந்தலிட்டு, புதிய முறத்தில் ஐந்து வகையான பழங்களை வைத்து சூரியனுக்குப் படைத்து வணங்குவார்கள்.

மகாராஷ்டிராவில் தீபாவளித் திருநாளை நான்கு நாட்கள் கொண்டாடுவார்கள். முதல் நாள் கங்கா ஸ்நானம், இரண்டாம் நாள் மகாலட்சுமி பூஜை, மூன்றாம் நாள் கௌரி நோன்பு, நான்காம் நாள் சகோதர- சகோதரிகளுக்கு அன்பளிப்பு வழங்குதல்.

ஒரிசாவில் தீபாவளியன்று மாலையில் ஸ்ரீலட்சுமி பூஜை செய்வர். வீடு முழுவதும் விளக்கேற்றி அலங்கரிப்பர். இனிப்புப் பண்டங்கள் தயாரித்து லட்சுமிதேவிக்கு நிவேதனம்செய்வர். தீபாவளிக்கு மறுநாள் எம தீபாவளி. தங்களது முன்னோர்களை நினைத்து, அவர்களது ஆத்மா சாந்தியடைவதற்கான வழிபாடுகள் செய்வர். இரவு, வீட்டின் உயரமான பகுதியில் எமதீபம் என்ற பெயரில் இரண்டு பெரிய அகல்விளக்குகளை ஏற்றிவைப்பார்கள். 

உத்திரப்பிரதேசம், காசிமாநகரில் தீபாவளியன்று கங்கை நதிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும், அங்குள்ள அன்னபூரணி கோவிலில் "அன்னகூட்' என்ற வைபவம் நடைபெறும். பலவிதமான இனிப்புப் பொருட்கள், பழங்கள் ஆகியவை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். மாலை லட்டுகளால் அலங்கரிக்கப் பட்ட தேரில் அன்னபூரணியின் தங்கத்திருமேனியை தரிசிக்கலாம். தங்கத்தாலான அன்னபூரணியை மூன்று நாட்கள் வரை கோவிலில் காணலாம். அதற்குப்பின் இந்த விக்ரகம் அரசாங்க கருவூலத்தில் பாதுகாக்கப்படும். லட்டு தேரில் பவனி வரும் அன்னபூரணியை தரிசித்தால் வாழ்நாளில் பசித்த வேளையில் உணவு நம்மைத் தேடிவரும் என்பதால், அன்று இத்தலம் விழாக்கோலம் காணும். அனைவருக்கும் அன்று லட்டு பிரசாதம் கிடைக்கும்.

பீகார் மாநிலத்தில் ஒரு வழக்கமுண்டு. தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதற்கு முன்னதாக, ஒரு மரக்கொம்பில் துணி சுற்றி தீப்பந்தம் செய்து, அதில் நெருப்பு வைத்து வீட்டுக்கு வெளியே எறிவார்கள். இதனால் வீட்டிலிருக்கும் மூத்தாளான மூதேவி வெளியேறிவிடுவாளென்பது நம்பிக்கை. அதன்பின்னர் தங்கையான ஸ்ரீதேவியை வரவேற்கும் பொருட்டு வீடு முழுவதும் விளக்குகளேற்றி, அலங்கரித்து தீபாவளி கொண்டாடுவர்.

பஞ்சாபில் சீக்கியர்களுக்கு தீபாவளி மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பந்த் சோர் திவன்- அதாவது "சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தினம்' என்று அழைக்கப்படுகிறது. சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த்ஜி தன்னுடனிருந்த 52 பேர்களையும் சிறையிலிருந்து விடுதலைபெற வழிவகுத்தார். இந்த நிகழ்வு நடந்தது ஒரு தீபாவளித் திருநாளில்தான். அதனால் அன்றைய தினம் அமிர்தசரஸ் பொற்கோவில் தீபாலங் காரத்தில் காட்சிதரும்.

மத்தியப் பிரதேசத்தில் தீபாவளியன்று கோபூஜை சிறப்பிக்கப்படுகிறது. அன்றைய தினம் மாடுகளுக்கு நீராட்டி அலங்காரம் செய்து கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி வழிபடுவர். மேலும் மதுராவிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் கோவர்த்தனகிரிக்குப் பூஜைகள் நடைபெறும். அப்போது  "அன்னக்குவியல்' என்ற பெயரில் 56 வகை உணவுப்பொருட்களைப் படைப்பார்கள். இந்திரன், அங்கு வசித்த கோபர்கள்மீது கோபம்கொண்டு பெருமழை பொழிவித்தபோது, பகவான் கிருஷ்ணன் கோவர்த் தனகிரியைத் தூக்கி அதன்கீழ் மக்களையும் பசுக்களையும் காப்பாற்றினார். அந்த நாள் ஒரு தீபாவாளித் திருநாளென்பதால், கோவர்த்தனகிரிக்கும் பகவான் கிருஷ்ணருக்கும் தீபாவளியன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

குலு பள்ளத்தாக்கில் தீபாவளி தினத்தன்று இராவணனின் உருவத்தை பெரிய அளவில் செய்து, அதன்மீது வண்ணம் பூசி ஊர்வலமாக எடுத்துச்சென்று எரிப்பது வழக்கம். அன்றுராமாயண சம்பவங்களை நாடகமாக நடித்துக்காட்டுவார்கள்.

அயோத்தியில் தீபாவளியன்று அனைத்து வீடுகளும் ஜகஜ்ஜோதியாக ஒளிர்விடும். ஸ்ரீராமபிரான் இராவணனை வதம்செய்து சீதாபிராட்டியுடன் நாடுதிரும்பிய நாளாகக் கொண்டாடுகிறார்கள். மேலும், தங்கள் வீட்டுக்கு  மகாலட்சுமி வருவதாகவும் நம்பிக்கை.

அலகாபாத், கோரக்பூர் ஆகிய பகுதிகளில் தீபாவளித் திருநாளைத் தொடர்ந்து கணபதி, லட்சுமி, எமதர்மராஜன் ஆகியோரின் மண்பொம்மைகள் விற்கப்படுகின்றன. இந்த பொம்மைகளை மூன்று நாட்கள் இல்லத்தில் வைத்து வழிபட்டபின் மூன்றாம் நாள் மாலை, நீர்நிலையில் கரைத்துவிடுவார்கள்.

நேபாளத்தில் "தீஹார்' என்ற பெயரில் ஐந்து நாட்கள் தீபாவளி கொண்டாடுவர். முதல் நாள் காகங்களுக்கு தயிர்சாதம் வைத்து, காகங்கள் மீது மலர்களைத் தூவி கைகூப்பி வழிபடுவர். இது முன்னோர்களுக்கான பூஜை. 

இரண்டாம் நாள் பைரவரின் வடிவமாகக் கருதப்படும் நாய்களுக்கு பூஜை செய்து விருந்தளிப்பர். மூன்றாம் நாள் பசுக்களை லட்சுமிதேவியாக பாவித்து பூஜிப்பர். நான்காம் நாள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு விசேஷ உணவளித்து, நெற்றியில் திலகமிட்டு வழிபடுவர். ஐந்தாம் நாள் சகோதர- சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துவர்; வாழ்த்து பெறுவர். காஷ்மீர், இமாசலப் பிரதேசத்தில் தீபாவளியன்று "கோ பூஜை' செய்வார்கள்.

சாவித்திரி எமனோடு வாதிட்டு சத்திய வானை மீட்ட நாள் தீபாவளி.  நசிகேசன், எமலோகம் சென்று வரம்பெற்ற நாளும் தீபாவளியென்று புராணம் கூறுகிறது. ஆதிசங்கரர் ஞானபீடம்  நிறுவிய நாளும் இதுவே. 

ஜைனர்களின் புனித நூலான ஹரிவம்ச நூலில் "கயா' என்ற பண்டிகையாக தீபாவளி கூறப்பட்டுள்ளது. அன்று ஜைனர்கள் தங்கள் வீடுகளை தீபங்களால் அலங்கரிப்பர்.

மாமன்னர் அசோகன் அவர் காலத்தில் புத்த சமயத்தைத் தழுவியது தீபாவளி நன்னாளில்என்று சொல்லப்படுகிறது. அவரது காலம் கி.மு. 274 என்று வரலாற்றாசிரியர்கள் கூறுவர்.

இந்தியாவில் மட்டுமல்ல; வெளிநாடுகளிலும் தீபாவளிப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

ஜப்பான் நாட்டில் தீபாவளியை லாந்தர் விளக்குத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். அன்று முன்னோர்களுக்கான வழிபாடுகள் நடைபெறும். தென்னாப்பிரிக்காவில் வெடிகள்வெடிக்கத் தடையுள்ளதால் மத்தாப்பூ மட்டும் கொளுத்துவர். பிரான்ஸில் பிரெஞ்சுப்புரட்சியின் ஒளித்திருநாளாக தீபாவளி அனுசரிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் "கார்டுபாக்ஸ் டே' என்ற பெயரில் வாணவேடிக்கையுடன் கொண்டாடுவர். கயானாவில் பலவண்ண பலூன்கள் விண்ணில் பறக்கவிடப்படுகின்றன. மேலும் உலக அமைதிவேண்டி "வெண்புறாக்களை'யும் பறக்கவிடுவர்.

பிஜி நாட்டில் தீபாவளியையொட்டி தீவட்டிகளை ஏந்தியவாறு ஊர்வலம்  வருவர். இந்தோனேஷியாவில் தீபாவளியன்று "விரயூ அன்னை' பூஜிக்கப்படுவதால், புத்தாடை அணிந்து ரோஜாமலர்களை அன்னைக்கு சமர்ப்பிப்பார்கள். சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு தபால் உறை வெளியிடப்படுகிறது. சீனா வில் தீபங்களேற்றி, புதுக்கணக்குகள் எழுதி வெடி வெடிப்பர். தாய்லாந்தில் காலை இறைவழிபாடு முடிந்ததும் மாலையில் நீர்நிலையில் தீபங்களை மிதக்கவிட்டு நதிக்குப் பூஜை செய்வர். மேலும், ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், மலேசியா, இத்தாலி, பெல்ஜியம், அமெரிக்கா, நியூசிலாந்து, கனடா, இங்கிலாந்து, திபெத், சயாம் ஆகிய நாடுகளிலும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நமது நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கொண்டாடப்படும் தீபாவளித்திருநாள் ஏழை- பணக்காரர் என்ற வேறுபாடில்லாமல் எல்லாராலும் கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் மட்டுமின்றி இந்திய நாட்டில் வாழ்பவர்களும் (மற்ற மதத்தினர்) இந்நாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.

தெய்வத்திருநாளான தீபாவளித் திருநாள் ஏறக்குறைய ஒன்பதாயிரம் வருடங்கள் பாரம்பரியம் கொண்டதென்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். பாரம்பரியம்மிக்க இவ் விழாவை மகிழ்வுடன் கொண்டாடுவோம். சமுதாய ஒற்றுமை வளர்ப்போம்

No comments:

Post a Comment