Tuesday, October 21, 2014

ஒரு காலத்தில் தமிழன் தைரியமாகத்தான் இருந்திருக்கிறான்... ஆண்டவனையே எதிர்த்து நின்று குரல் கொடுத்திருக்கிறான்...




“ ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் ..அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்..”..
சன் லைஃபில் எம்.ஜி.ஆர். சாட்டையைச் சுழற்றி பாடிக் கொண்டிருந்தார்...

நண்பர்களோடு அமர்ந்து , காட்சியையும் கருத்தையும் கவனித்துக் கொண்டிருந்தேன்..."நல்ல கருத்தல்லவா..?" என நான் சொன்னபோது ..உடன் இருந்த நண்பர் ஒருவர் ..நற்றமிழில் வல்லவர்....திடீர் என இப்படி முழங்கினார்...
“ நல்ல கருத்துதான்...ஆனால் , தவறு செய்தது ஆண்டவனாகவே இருந்தாலும் கூட , அதைத் தட்டிக் கேட்கும் தைரியம் ,தமிழனுக்கு மட்டும்தான் உண்டு..”

“எப்படி..?”என வினவினார் இன்னொரு நண்பர்....

“ஒளவையை எடுத்துக் கொள்ளுங்கள்..ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் பெற்றோரை விட்டு முருகன் பிரிந்து செல்ல..“சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என்று என் அறிவுக்கு எடுத்துக் காட்டிய தமிழ்க் கடவுளே, நீ தவறு செய்யலாமா? அம்மையப்பனிடம் கோபப்படலாமா? வேண்டாமையா, வேண்டாம். நீ திரும்பிச் செல்" என்று கடவுளையே கண்டித்த ஔவை ...தமிழனின் தைரியத்துக்கு ஒரு தன்னிகரற்ற உதாரணம் அல்லவா..?”என்றார் தமிழ் புலவ நண்பர்...

சற்று சிந்தித்து “சரி " என ஒத்துக் கொண்டோம்...

நண்பர் விடவில்லை.. “அப்புறம் நம்ம நக்கீரரை எடுத்துக் கொள்ளுங்கள்... பரமசிவன் பாடலில் தவறு செய்ய ..” நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று சிவனையே எதிர்த்து சீறிய நக்கீரன் .....இதை விட வேறு தமிழனின் வீரத்துக்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்..?”

மூச்சு விடாமல் நண்பர் முழங்க , முழு மனதுடன் ஒத்துக் கொண்டோம்..

ஆம்..ஒரு காலத்தில் தமிழன் தைரியமாகத்தான் இருந்திருக்கிறான்...
ஆண்டவனையே எதிர்த்து நின்று குரல் கொடுத்திருக்கிறான்...

ஆனால்..இன்றுதான் அண்டை மாநிலங்களிலும் , அயல் நாடுகளிலும் அடி வாங்கி கலங்கிக் கொண்டிருக்கிறான்...!!!

மீண்டும் எங்கள் கவனம் சன் லைஃபில் திரும்பியது...
புதிய பறவை சிவாஜி இப்போது பாடிக் கொண்டிருந்தார் ...

“எங்கே நிம்மதி எங்கே நிம்மதி...அங்கே எனக்கோர் இடம் வேண்டும்..”

nanri -
John Durai Asir Chelliah

your Happily
www.v4all.org 

No comments:

Post a Comment