Tuesday, October 7, 2014

நிறுவனத்தில் நிலைத்திருக்க...அறிவுத்திறனை மேம்படுத்துங்கள்!

நிறுவனத்தில் நிலைத்திருக்க...அறிவுத்திறனை மேம்படுத்துங்கள்!

‘‘ஐ.டி துறையில் வேலை பார்த்து வருகிறார் சபரி. அந்த நிறுவனம், நன்கு வேலை செய்பவர்களை முதல் பக்கெட் பிரிவிலும், சுமாராக வேலை செய்பவர்களை இரண்டாவது பக்கெட் பிரிவிலும், மிகச் சுமாராக வேலை செய்பவர்களை மூன்றாவது பக்கெட் பிரிவிலும், மோசமாக வேலை செய்பவர்களை நான்காவது பக்கெட் பிரிவிலும் வைத்திருக்கும்.
நான்காம் பக்கெட் பிரிவில் இருப்பவர்களின் வேலை செய்யும் திறனானது மேலும் குறைந்தால், நிறுவனத்தைவிட்டே அந்தப் பணியாளரை வெளியேற்றிவிடுவார்கள். சபரி தற்போது நான்காவது பக்கெட் பிரிவில் இருக்கிறார். இனியாவது  அவர் சுதாரித்துக்கொண்டு தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை எனில், வேலையை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.
   
சபரியின் இந்த இக்கட்டான சூழ்நிலை நமக்கும் உருவாகாமல் இருக்கவும், பக்கெட் ஒன்றிலேயே தொடர்ந்து நாம் இருக்கவும் என்ன செய்ய வேண்டும்? அப்படி இருந்தால், நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்கிற கேள்வியுடன் எம்சிஸ் டெக் இந்தியா நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவின் மேலாளர் ந.பத்மலட்சுமியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
அறிவைப் பட்டைதீட்டுங்கள்!
“பல்வேறு போராட்டத்துக்குப்  பிறகு வேலையில் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தனது அறிவை பட்டைத்தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்குப்பின் வேலைக்குச் சேர்ந்தவர்கள்கூட அவர்களது அறிவால் சிறப்பாக செயல்பட்டு, உயர்பதவிக்கு தேர்வாகிவிடுவார்கள்.
அனைத்து விஷயங்களிலும் அப்டேட்டாக செயல்படுகிறவர் தங்களின் வேலையைப் பிழையின்றி விரைவாக செய்துமுடிப்பார்கள். எல்லா விஷயங்களும் அவர்களுக்குத் தெரியும் என்பதால், நிறுவனத்தில் அவர்களுக்குப் புகழும் பெருமையும் கிடைக்கும். சக பணியாளர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் உருவாகும்.  அவர்களிடம் மனஅழுத்தமானது அறவே இருக்காது. அவர்கள் செய்யும் வேலையை மகிழ்ச்சியுடன் செய்வார்கள். இதனாலேயே பிரச்னைகள் வராமல் தடுக்கப்படும்.
அப்டேட் அவசியம்!
அறிவுத் திறனை  எப்படி வளர்த்துக்கொள்வது? எந்தத் துறை சார்ந்து வேலை செய்கிறோமோ, அந்தத் துறையில் உள்ளே நுழையும் புதிது புதிதான விஷயங்களை உடனுக்குடன் தெரிந்துவைத்துக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். உதாரணத்துக்கு, தகவல் தொழில்நுட்பத் துறை எனில், அவ்வப்போது வெளியாகும் புரோகிராம் மொழிகளை (சி ஷார்ப், ஜாவா, டாட்நெட் போன்றவை) நிச்சயம் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இல்லையெனில், அது தெரிந்து வைத்திருப்பவர்களுக்கே நிறுவனமானது முக்கியத்துவம் கொடுத்து முன்னேற வைக்கும்.
நிறுவனத்தைப் பொறுத்தவரை, பணியாளர் களின் அறிவுத்திறன் மிகவும் முக்கியம். ஏனெனில் ஒரு நிறுவனத்தின் தரம் என்பது அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் அறிவுத்திறனைக் கொண்டே அறியப்படும்” என்றவர், ஒரு பணியாளர் முதல் பக்கெட்டில் தொடர்ந்து இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை விளக்கினார்.
பக்கெட் ஒன்றில் நிலைத்திருக்க..!
தான் உண்டு தன் வேலை உண்டு என்றில்லாமல், அலுவலகத்தில் சில எக்ஸ்ட்ரா வேலைகளைக் கற்று வைத்திருப்பது அவசியம். நேர்மையான அணுகுமுறையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
மதிப்புக்கூட்டுகிற மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
செயல்திறன் வேகமாகவும் அதே சமயத்தில் ஸ்மார்ட்டாகவும் இருக்க வேண்டும்.
தான் செய்யும் வேலை தவிர்த்து எக்ஸ்ட்ரா பொறுப்புகளையும் எடுத்துச் செய்ய வேண்டும்.
 முதல் முக்கியத்துவத்தை தான் செய்யும் வேலைக்கும், அதற்கடுத்த முக்கியத்துவத்தை குடும்ப விஷயங் களுக்கும் கொடுக்க வேண்டும்.

அலுவலகச் சூழல் மனஅழுத்தத்தை உண்டாக்கும்போதும், செய்யும் வேலை யில் கவனச்சிதறல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பணியிடத்தில் குழுவாக இணைந்து செயல்படும் சூழ்நிலை உண்டானால் அனைவரிடத்திலும் இணைந்து பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.

திட்டமிடலில் புத்திக்கூர்மையுடன் செயல்படுபவராக இருக்க வேண்டும்.
அடிக்கடி விடுப்பு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 சாதாரண வேலைகள் மட்டுமின்றி,  தன் துறை சார்ந்த சட்டரீதியான விஷயங்களையும் தெரிந்துவைத்துக் கொண்டால் நிறுவனம் நம் மீது வைத்திருக்கும் மதிப்பு உயரும்.
அறிவுத்திறனை மேம்படுத்த...
முதலில், தனக்குத்தானே சுய செயல்திறன் பரிசோதனையை (Performance Self Test) மேற்கொள்வது அவசியம்.
பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு ‘Cross Functional Training’-ஐ அவ்வப்போது நடத்துவார்கள். இதில் பங்கேற்று தனது திறனை மேம்படுத்திக் கொள்பவர்களை ஒருபோதும் நிறுவனம் இழக்காது. அவர்களுக்குச் சம்பளத்தை அதிகப் படுத்தி இறுதிவரை அதே நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
பணியாளர்கள் தங்களின் துறை சார்ந்த விஷயங்களை அடிக்கடி அப்டேட் செய்துகொள்ள வெளி இடங்களில் நடக்கும் வொர்க்‌ஷாப், பயிற்சி முகாம்களின் கலந்துகொள்வது அவசியம்.
தங்களின் வேலையை எளிமையாக்கி கொள்ளத் தேவைப்படும் பயிற்சிக்கான வாய்ப்புகளை நிறுவனத்திடன் சொல்லி ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இன்றைய இணையதள உலகில் அனைத்துத் துறை சார்ந்த விஷயங்களும் குவிந்து கிடக்கின்றன. அதைப் பயன் படுத்தியும் அவரவர்களின் அறிவுத் திறனை பட்டைத் தீட்டிக் கொள்ளலாம்” என்றார் தெளிவாக.
உங்கள் வேலையை இன்னும்  நன்றாக, புத்திசாலித்தனமாக, பிழை யின்றி செய்தால், முதல் பக்கெட்டில் என்றென்றும் நிலைத்து நிற்கலாம்!

urs - www.v4all.org

No comments:

Post a Comment