Tuesday, October 21, 2014

பட்டாச சுட்டு சுட்டுப் போடட்டுமா? தற்செயலான பட்டாசு கண்டுபிடிப்பு

பட்டாச சுட்டு சுட்டுப் போடட்டுமா?   

தற்செயலான பட்டாசு கண்டுபிடிப்பு

எரியும் அடுப்பில் உப்பைப் போட்டிருக்கிறீர்களா? படபடவெனச் சத்தத்துடன் பொரியும் அது. பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். சீனாவில் சமையலின்போது பயன்பட்ட உப்பு (பொட்டாசியம் நைட்ரேட் சேர்மம்) நெருப்பில் தவறிவிழுந்துள்ளது. அப்போது ஏற்பட்ட திடீர் ஜுவாலைதான் பட்டாசுக்குத் தேவையான கரித்தூளைக் கண்டறிய உதவியுள்ளது. தொடக்கத்தில் ஜுவாலையை உருவாக்கக் கரியும் கந்தகமும் பயன்பட்டுள்ளன. இந்தக் கலவையை மூங்கில் குழாயில் அடைத்து வைத்துப் பட்டாசாகப் பயன்படுத்தியுள்ளனர். இந்தத் தற்செயலான கண்டுபிடிப்பு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளது.
நன்கு வெடிக்கும் தன்மை கொண்ட பட்டாசுகள் சாங் பேரரசர் காலத்தில் (960-1279) லி டியான் என்னும் துறவியால் உருவாக்கப்பட்டன. இவர் லியு யாங் நகரின் அருகில் வசித்துவந்தார். புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது மூங்கிலில் கரித்தூள் அடைத்த இந்தப் பட்டாசுகள் தீய சக்திகளை அப்புறப்படுத்த வெடிக்கப்பட்டன. இந்தப் பழங்கால பட்டாசில் சத்தம் மட்டுமே வந்தது.
சீனாவில் பட்டாசு குறித்த ஆவணம் 7-ம் நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. பட்டாசு என்பதைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான ஃபயர் ஒர்க் என்பதன் மூலம் ஜப்பானியச் சொல்லான ஹனாபி என்பது. இதற்கு நெருப்பு மலர் என்பது பொருள்.
உலகத்திலேயே அதிகமாகப் பட்டாசுகளை உற்பத்தி செய்யும் நாடு சீனா. உலகப் பட்டாசுகளில் 90 சதவிகிதம் சீனாவில்தான் உற்பத்தி செய்யபடுகிறது. சீனாவில் 90 சதவிகிதப் பட்டாசுகள் உற்பத்தியான போதிலும் ஸ்பெயினில் பெரும்பாலானோர் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுவரு கின்றனர். இந்தியாவில் 90 சதவிகிதப் பட்டாசு உற்பத்தி சிவகாசியில் மேற்கொள்ளப் படுகிறது.
பட்டாசுகளின் வளர்ச்சி
சீனர்கள் மூங்கில்களையும் மரத்துண்டுகளையும் வெடி மருந்தையும் கொண்டு வானில் சீறிப் பாய்ந்து சென்று வெடித்து வண்ணமயமான ஒளியைப் பரப்பும் ராக்கெட்டுகளை உருவாக்கினர். 1279-ல் சீனாவில் ஊடுருவிய மங்கோலியர்கள் இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டனர். சீனாவுக்கு வந்து சென்ற ஆராய்ச்சியாளர்கள் இதை அறிந்துகொண்டு தங்கள் நாடுகளில் பரப்பினர். 7-ம் நூற்றாண்டில் அரேபியர்கள் ராக்கெட்டுகளைச் சீன அம்புகள் என்றே குறிப்பிட்டுள்ளனர். 1240-ம் ஆண்டில் அரேபியர்கள் வெடி மருந்துகள் குறித்து அறிய முயன்றுள்ளனர். ஹாசன் அல் ரம்மா என்பவர் சீனர்களிடமிருந்து வெடி மருந்துகள் பற்றிய தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டு பட்டாசுகள் குறித்து எழுதியுள்ளார்.
இத்தாலிய யாத்திரிகர் மார்க்கோ போலோ இந்தத் தொழில்நுட்பத்தை ஐரோப்பாவுக்குக் கொண்டுவந்துள்ளார் என்றும் சிலுவைப்போர்களைத் தொடர்ந்து 1300களில் ஐரோப்பாவில் பட்டாசுகள் அறிமுகமாயின என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1400-களில் இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது.
பிரெஞ்சுப் பொறியாளரான அமேதி பிரென்சுவா ஃப்ரெசியர் எழுதிய டிரீட்டிஸ் ஆன் ஃபயர் ஒர்க்ஸ் என்னும் புத்தகம் 1706-ல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் பட்டாசு உற்பத்தி செய்பவர்கள் இந்தப் புத்தகத்தைப் பின்பற்றியே பட்டாசுகளை உற்பத்தி செய்தனர்.
பட்டாசு கண்டுபிடிப்பில் சீனக் கதைதான் பிரசித்தம். ஆனால் இந்தியாவிலும் அரேபியாவிலும் பட்டாசு கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான சாத்தியங்களும் உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிதான் பட்டாசுகளில் வெற்றிகரமான சோதனை மேற்கொண்டு நிபுணத்துவம் பெற்றது. இந்நாடுதான் பட்டாசுகள் உருவாக்கத்தில் எறிகுண்டுகளைப் பயன்படுத்தியது.
தற்போது நாம் உபயோகிக்கும் வண்ணமயமான பட்டாசுகளின் உற்பத்தி 1830-ல் தொடங்கப்பட்டது. பல வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி இத்தாலியர்கள் வண்ணமயமான பட்டாசுகளை உற்பத்திசெய்தனர். கால்சியம் வண்ணத்தைச் செறிவாக்கியது, டைட்டேனியம் ஒளிச்சிதறல்களை உருவாக்கியது, துத்தநாகம் மேகம் போன்ற புகையை உருவாக்கியது.
ஏப்ரல் 18 பட்டாசு கண்டுபிடிக்கப்பட்ட நாளாகச் சீனாவில் கொண்டாடப்படுகிறது. சீனர்கள் முதலில் எதிரிகளைப் பயமுறுத்தவே பட்டாசுகளைப் பயன்படுத்தினர். வெடிகளின் சத்தத்தால் தீய சக்திகள் விலகும் என்ற நம்பிக்கையில் சீனர்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது மூங்கிலில் வெடிமருந்து அடைக்கப்பட்ட பட்டாசுகளைப் பயன்படுத்தினர். தொடக்க காலப் பட்டாசுகளில் ஆரஞ்சு, வெள்ளை வண்ணங்கள் மட்டுமே வெளிப்பட்டன. மத்தியகாலத்தில் பிற வண்ணங்கள் இடம்பெற்றன. நீல வண்ணத்தை உருவாக்குவதே மிகக் கடினம். நவீனப் பட்டாசுகளில் ஒளி, வண்ணம், அதிக சத்தம் ஆகியவை முக்கியமான அம்சங்களாகியுள்ளன.
சிவகாசி பட்டாசு
1922-ல் கல்கத்தாவில் ஜப்பானைச் சேர்ந்த சிலர் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டுவந்தனர். இந்தியாவிலேயே கல்கத்தாவில் மட்டும்தான் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்பட்டது. அப்போது சிவகாசியிலிருந்து பி. அய்யன், ஏ. சண்முகம் ஆகியோர் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலைக் கற்றுக்கொள்ள கல்கத்தாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பின்னர் இவர்கள் சிவகாசி திரும்பி 1923-ல் தீப்பெட்டி தொழிற்சாலையை உருவாக்கினர். அதன் பின்னரே சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. nanri - the hindu

yours Happily
Dr.Star Anand ram
www.v4ll.org

No comments:

Post a Comment