ஆணின் கடமைகள், பெண்ணின் கடமைகள் - www.v4all.org
ஆணும் பெண்ணும் உடலால் வித்தியாசப்படுவது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர்களின் கடமைகளில் வித்தியாசம் வேண்டுமா என்ன? இது ஆணின் வேலை, இது பெண்ணின் வேலை என்று நம் சமுதாயம் ஒரு விதியை விதித்தது போல் தெரிகின்றது.
மனிதன் காட்டில் வசித்தபொழுது ஆண் வேட்டையாடி வருவான் உடலால் அவன் அதிக பலம் பெற்று இருந்ததால். பெண்ணின் வேலை சமைப்பது, குழந்தைகளைப் பராமரிப்பது என்று இருந்தது. ஆனால் இன்று மனித வாழ்க்கை முற்றிலும் மாறி விட்டது. உடல் பலத்துக்கு இன்று மரியாதை அதிகம் இல்லை. ஆணும், பெண்ணும் சமம் என்ற நிலை அதனால் வருவது சரியான நிலையே.
ஆனாலும் ஆண் செய்யும் எல்லா வேலைகளையும் பெண்ணால் செய்ய முடியாது. அதே போல் பெண் செய்யும் சில வேலைகளை ஆண் செய்வதும் சரியாக இருக்காது.
அதிகமாக உடல் சக்தியைப் பயன் படுத்தும் வேலைகள் பெண்ணுக்கு பொருந்தாது. அதே போல், செவிலியர் போன்ற வேலை பெண்களுக்கே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. குழந்தை பெறுவது என்பது பெண்களால் மட்டுமே பண்ணக் கூடிய விஷயமாக இருக்கிறது. சமைப்பது, மற்றும் குழந்தைகளை வளர்ப்பது ஆகியவை உலகெங்கிலும் பெண்கள் வேலைகளாகவே பார்க்கப்படுகின்றது.
. காலம் இப்பொழுது அதிகமாகவே மாறியிருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் பெண்கள் ஆண்களுக்கு சமமாகவே மதிக்கப்படுகின்றனர். அவர்கள் சம்பளமும் பெரும்பாலும் ஆண்களுக்கு நிகராகவே உள்ளது.
இது ஆண் வேலை, அது பெண் வேலை என்று பிரித்து பார்க்க வேண்டியதில்லை இன்று. ஆண்கள் சமைக்கவும் குழந்தைகளைப் பார்த்து கொள்ளவும் ஆரம்பித்து விட்டார்கள். இனி இருவரும் எல்லா விஷயங்களிலும் சமம் தான்.
இருப்பினும் கணக்குப் பார்க்காமல் சில ஆணின் வேலைகளை ஆண்களும், சில பெண் வேலைகளை பெண்களும் செய்தால் அது சிறப்பாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?
ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் உண்மையான அன்பு இருந்தால், அங்கே 'ஈகோ' என்னும் அகங்காரம் இருக்காது. அகங்காரம் இல்லையென்றால் இருவரும் கணக்குப் பார்க்க மாட்டார்கள். அப்பொழுது அந்தந்த வேலைகளை அந்தந்த வேளைகளில் தானாகவே இருவரும் முன் வந்து மனமுவந்து செய்வர். அவள் செய்யவில்லையே என்று அவனும், அவன் செய்யவில்லையே என்று அவளும் நினைக்கமாட்டர்கள்.
ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் உள்ள உறவு மிகவும் புனிதமானது. அதை ஆணாதிக்கமோ, பெண்ணுரிமையோ கெடுத்து விடக்கூடாது என்பதே சரியான புரிதலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
No comments:
Post a Comment