எல்லோரும் வாழ்க்கையில் வெற்றி பெறவே விரும்புகிறோம். அதற்காகவே போராடுகிறோம். ஒவ்வொருவருக்கும் சில கனவுகள், குறிக்கோள்கள் இருக்கும். அவை நிறைவேறும்போது வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகக் கொள்ளலாம்.
உங்கள் குறிக்கோள்கள் மற்றும் கனவுகள் எதுவாக இருந்தாலும் அவைகளை அடைய நீங்கள் போராட வேண்டியிருக்கும். நோகாமல் நோன்பு கும்பிடுவது என்பது இதில் நடவாத காரியம். நீங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைய, அல்லது நீங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டுமானால் இரண்டு அடிப்படையான விஷயங்கள் உங்களுக்குத் தேவை.
1. நல்ல உடல் ஆரோக்கியம்: சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது என்பர். அது போல் தான் நல்ல உடல் ஆரோக்கியம் இல்லாமல் நீங்கள் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது.
நல்ல உடல் ஆரோக்கியம் பெறுவது எப்படி? சிறந்த வாழ்க்கை முறைகளைக் கடைப் பிடித்து வாழ்ந்தால் ஆரோக்கியமாக வாழலாம். சரியான உணவுப் பழக்கங்கள், உடல் பயிற்சி, யோகா மற்றும் தியானம் மூலம் மேன்மையான ஆரோக்கியத்தைப் பெறலாம்.
2. நல்ல மன ஆரோக்கியம்: நீங்கள் எதை வெற்றிகரமாக செய்ய விரும்பினாலும் உங்கள் மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மனோ பலம் சிறப்பாக இருந்தால் தான் எடுத்த காரியத்தை முடிக்க முடியும். அதற்கு வலிமையான, ஆரோக்கியமான மனம் வேண்டும்.
நல்ல ஆரோக்கியமான மனதைப் பெறுவது எப்படி? சிலர் பிறப்பிலேயே மன வலிமைப் பெற்று இருப்பார்கள். அவர்கள் பாக்கியசாலிகள் என்றே சொல்ல வேண்டும். பெற்றோர்கள் வளர்க்கும் முறையிலும் மன வலிமை பெறவோ அல்லது இழக்கவோ முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக யோகா மற்றும் தியானம் தொடர்ந்து செய்தால் நிச்சயம் மன வலிமை பெற முடியும்.
யோகப் பயிற்சிகளையும், தியானத்தையும் தொடர்ந்து செய்தால் உடலும் மனமும் வலிமை அடையும்.
ஆக வாழ்க்கையில் வெற்றி பெற யோகா செய்தால் போதும் என்று சொல்லி முடிக்கிறேன். வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment