வாழ்க்கை உங்கள் வசப்படும்.- www.v4all.org
நம் எல்லோரிடமும் இந்த ஒப்பிட்டுப் பார்க்கும் கெட்ட பழக்கம் இருக்கிறது. சொந்தக் காரர் மகன் ஒரு பிரபலமான பள்ளியில் படித்தால் நீங்களும் உங்கள் மகனை அதே பிரபல பள்ளியில் சேர்க்கத் துடிப்பீர்கள். உங்கள் சக்திக்கு மீறிய செலவு என்றாலும் போட்டிக்காகச் செய்வீர்கள். பக்கத்து வீட்டு மாணவி பாட்டு கற்றுக் கொண்டால் போச்சு. உங்கள் பெண்ணுக்கும் பாட்டு சொல்லித்தர வேண்டும் என்று உங்கள் வீட்டு பெண்மணி ஆசைப் படுவார். உங்கள் பெண்ணுக்கு பாட்டு வருகிறதோ இல்லையோ, அவளை பாட்டு வகுப்பில் சேர்த்து விட்டு, அனுதினமும் பாட்டு ஆசிரியர் வீட்டில் கொண்டு விட்டு மீண்டும் கூப்பிட்டுக் கொண்டு வருவீர்கள்.
சொந்தக்காரர் மகன் பொறிவியல் படித்தால் உங்கள் மகனும் பொறிவியல் தான் படிக்க வேண்டுமா என்ன? அல்லது அவன் வெளி நாட்டிற்கு சென்று படித்தால் உங்கள் பையனும் வெளி நாடு செல்லத்தான் வேண்டுமா? அவர்கள் பையன் வெளி நாட்டில் வேலை செய்தால் நம் பையனும் வெளி நாட்டில் வேலை செய்தால் தான் நமக்கு கௌரவமா? சொந்தக்காரர் கார் வாங்கி விட்டால் நாமும் வாங்க வேண்டுமா? அவர் வீடு கட்டி விட்டால் நம் தூக்கம் போக வேண்டுமா?
ஏன் இந்த ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் நமக்கு? தேவையா? ஒப்பிட்டால் தானே நமக்கும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் வரும் என்று நீங்கள் கேட்கலாம். பின் எப்படி நாம் நம்மை உயர்த்திக் கொள்வது என்று நீங்கள் நினைக்கலாம்.
நீங்கள் ஒப்பிடலாம். போட்டியும் போடலாம். யாருடன் தெரியுமா?
நீங்கள் போட்டியிட வேண்டியது உங்களுடன் தான். உங்களுக்கப் பிடித்த படிப்பையும், தொழிலையும் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அதில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்தி உழைக்க வேண்டும். உங்களுக்கு இஷ்டமான வேலை என்பதால் அது உங்களுக்கு கஷ்டமாக இருக்காது. உங்கள் திறனை மேலும் மேலும் மேம்படுத்திக் கொண்டே செல்ல வேண்டும். போன வருடத்தை விட இந்த வருடம் உங்கள் திறன் உயர்ந்து இருக்க வேண்டும். ஆக போட்டி உங்களுக்குள் மட்டுமே தான். ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதும் உங்களின் முந்தைய செயல் திறன்களைத் தான்.
உங்களை மற்றவருடன் ஒப்பிடும் பழக்கத்தை தயவு செய்து விட்டு விடுங்கள். வாழ்க்கை உங்கள் வசப்படும். வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment