வௌவால் எப்படி இரவில் பறக்கிறது?
டொனால்டு ஆர்.கிரிப்பின், ராபர்ட் கேலம்போஸ் என்ற இரு விலங்கியல் ஆய்வாளர்களுக்கு நீண்ட நாட்களாய் ஒரு சந்தேகம் இருந்து வந்தது. “கும்மிருட்டில் கூட எப்படி வௌவால்கள் எதிலும் மோதிக்கொள்ளாமல் பறக்கின்றன?” என்பதுதான் அவர்களின் சந்தேகம்.
இதனை எப்படி அறிந்து கொள்வதென்று பல்வேறு யோசனைகள் செய்து இறுதியாய் ஒரு குறிப்பிட்ட முறையில் ஆய்வை செய்து பார்ப்பதென முடிவு செய்தனர். ஓர் இருட்டறையில் குறுக்கும் நெடுக்குமாக மிகவும் மெல்லிய கம்பிகளைக் கட்டிவிட்டனர். பிறகு சில வௌவால்களை பிடித்து அந்த அறையிலே பறக்க விட்டனர். அவை கம்பிகளின் மேல் மோதாமல் பறந்தன.
ஆச்சரியமடைந்த விஞ்ஞானிகள் வௌவால்கள் எப்படி கம்பிகளின் மேல் மோதாமல் பறக்கின்றன என்று குழம்பிப் போயினர். பின்னர் அந்த வௌவால்களை பிடித்து அவற்றின் கண்களை மூடிவைத்து பறக்கவிட்டனர். இப்போதும் அவை கம்பிகளின் மேல் மோதாமல் பறந்தன.
வியப்பின் எல்லைக்கே போன அந்த ஆராய்ச்சியாளர்கள், வௌவால்கள் கண்களின் உதவியால் பறக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டனர். அதன்பின்னர் வௌவால்களின் வாய்களைக் கட்டிப் பறக்கவிட்டனர். அப்போது அவை கம்பிகளின் மேல் மோதிக் கொண்டன.
அடுத்ததாய் அவற்றின் செவிகளை அடைத்து பறக்க விட்டபோதும் அவை கம்பிகளில் மோதிக் கொண்டன. அப்போதுதான் வௌவால்கள் தாம் வெளியிடும் ஒலியின் எதிரொலியைக் கேட்டவாறே அதற்கேற்றாற்போல் பறக்கின்றன என்பதைக் கண்டுபிடித்தனர்.
No comments:
Post a Comment