Sunday, June 14, 2015

அன்பைத்தான் இந்த உலகுக்கு சாப்ளின் தனது செய்தியாக விட்டுச்சென்றிருக்கிறார்.

ஆசை

அன்பைத்தான் இந்த உலகுக்கு சாப்ளின் தனது செய்தியாக விட்டுச்சென்றிருக்கிறார்.
சாப்ளின் திரைப்பட உலகத்துக்குள் நுழைந்து 100 ஆண்டுகள் முடிந்துவிட்டன. திரையுலகைப் பொறுத்தவரை சாப்ளின் அடியெடுத்து வைத்த காலம் ஒரு பொற்காலத்தின் தொடக்கமாக இருக்கலாம், நிஜ உலகில் அப்படியல்ல. ஆம். சாப்ளினின் வருகையும் முதல் உலகப் போரின் தொடக்கமும் ஒரே ஆண்டில்தான் (1914) என்பது விசித்திர முரணாகத்தான் தோன்றுகிறது.
புது அறிவியல், புது யுகம் ஆகிவற்றின் சாத்தியங்களை அந்த உலகப் போரில்தான் பரிசோதித்துப்பார்க்க ஆரம்பித்தார்கள். மனிதர்களை இணைப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், வானொலிகள் போன்றவையெல்லாம் நேர்மாறாக மனிதர்களை அழித்தொழிப்பதில் அந்தப் போரில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. சாப்ளின் இதையெல்லாம் கண்டு மனம் நொந்துபோயிருக்க வேண்டும். இதன் வெளிப்பாடுதான், இரண்டாம் உலகப் போரின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தில் இடம்பெறும் இந்த வசனம்:
“வாழ்க்கைப் பாதை என்பது சுதந்திரமானதாகவும் அழகானதாகவும் இருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை நாம் தொலைத்துவிட்டோம். மனிதர்களின் ஆன்மாக்களில் பேராசை விஷத்தைக் கலந்துவிட்டது. அந்தப் பேராசை, வெறுப்பால் இந்த உலகத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது, துன்பத்திலும் துயரத்திலும் நம்மைத் தள்ளிவிட்டது. வேகத்தை அதிகப் படுத்தியிருக்கிறோம். ஆனால், நாம் நமக்குள்ளே முடங்கிப்போயிருக்கிறோம். ஏராளமாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும் என்ன பயன், நாம் வறுமையில்தான் உழன்றுகொண்டிருக்கிறோம். நமது அறிவு யார் மீதும் நம்பிக்கையற்றவர்களாக நம்மை ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை ஆக்கிவிட்டது. மிதமிஞ்சி சிந்திக்கிறோம், மிகமிகக் குறைவாக அக்கறைகொள்கிறோம். இயந்திரங் களைவிட நமக்கு அதிகம் தேவை மனிதமே. புத்திசாலித் தனத்தைவிட நமக்கு அதிகம் தேவை இரக்கவுணர்வும் கண்ணியமுமே. இந்தப் பண்புகள் இல்லையென்றால், வாழ்க்கை கொடூரமானதாக ஆகிவிடும்.”
சாப்ளின் அறிவியலைக் குறைகூறவில்லை. அறிவியல் என்பது முதலாளித்துவத்தின் கருவியாக மாறிவிட்டதால்தான் எல்லாத் துயரங்களும் என்பது அவரது எண்ணம். கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன்பு முதலாளித்துவத்துக்கு எதிராகத் தனது திரைப் படங்களில் சாப்ளின் குரல் எழுப்பிக்கொண்டிருந்த காலகட்டம் என்பது தற்போதைய காலகட்டம் போன்று முதலாளித்துவம் பழுத்த காலகட்டம் அல்ல. முதலாளித்துவம் அப்போதுதான் குழந்தைப் பருவத்தில் இருந்தது. எனினும் சாப்ளின் தனது தீர்க்கதரிசனத்தால் அதன் அபாயங்களைக் கண்டுணர்ந்தார்.
சாப்ளின் என்றொரு தீர்க்கதரிசி
சாப்ளினின் ‘மாடர்ன் டைம்ஸ்’ திரைப்படத்தை முதலாளித்துவத்துக்கு எதிரான மாபெரும் போராட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியே தொழிற்சாலைக்குச் செல்லும் தொழிலாளர்களை ஆட்டு மந்தையைப் போல் காட்டுகிறது. ஆம், தனிநபர், மனிதத்தன்மை என்ற அடையாளங்களை அழிப்பதுதான் முதலாளித்துவத்தின் லட்சியம். இயந்திரமயமாதல், முதலாளித்துவம் ஆகிய வற்றின் கொடுமையை இதைவிட யாரால் அழகாகச் சொல்ல முடியும்.
அந்தத் திரைப்படத்தில், தொழிலாளி சாப்பாட்டுக்குப் போகும் நேரத்தையும் மிச்சப்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கலாம் என்ற நோக்கத்தில் உணவு ஊட்டும் இயந்திரம் ஒன்றை தொழிலாளி ஒருவரிடம் (சாப்ளின்) வெள்ளோட்டம் விடுகிறார் அவரது முதலாளி. அது சரிவர இயங்காமல்போய் சாப்ளினைத் துவம்சம் செய்துவிட, அவருக்கு மனநிலை பிறழ்ந்துவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், சிசிடிவி போன்ற கண்காணிப்பு அமைப்பின் மூலமாக எப்போதும் தொழிலாளிகளைக் கண்காணிக்கும் அந்த முதலாளி இன்றைய யுகத்தின் முன்னோடி. அதிலும் அந்த சிசிடிவி திரை மனிதக் கண்ணைப் போல சாப்ளினைப் பின்தொடர்வதும் சாப்ளினுக்கு ஆணையிடுவதும்தான் உச்சம். மேலும், வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் கன்வேயர் பெல்ட்டில் இயந்திர பாகங்களை வேகவேகமாகத் திருகித் திருகி, வேலை பார்க்காத நேரத்திலும் கைகள் அதே போல் இழுக்கும் நிலைக்கு ஆளாகும் தொழிலாளி, இன்றைய தொழிலாளிகளுக்கெல்லாம் ஒரு முன்னோடித் தொழிலாளி. முதலாளித்துவத்தில் ஊறிய அமெரிக்காவால் இந்தத் திரைப்படத்தை அன்று ஜீரணிக்க முடியவில்லை என்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால், இன்று பார்க்கும்போது இன்னும் அர்த்தம் பொருந்தியதாக இருக்கிறது இந்தப் படம்.
வேட்டையாடப்பட்ட கலைஞன்
இயந்திரங்களின் வருகை நிலப்பிரபுத்துவக் காலகட்டத்துக்கு முடிவுகட்டி, நவீன காலத்துக்கு உலகைக் கொண்டுசென்றது. அதுவரையிலான மதிப்பீடுகளையெல்லாம் நவீன யுகம் புரட்டிப் போட்டது. ஆனால், நவீன யுகம் தனக்கே உரிய புது நிலப்பிரபுத்துவத்தைக் கொண்டுவந்தது, அதுதான் முதலாளித்துவம். மனிதர்களின் வேலைப் பளுவைக் குறைக்கவும், பெருகிவரும் மக்கள்தொகையைச் சமாளிக்கவும் இயந்திரங்களைக் கொண்டு ‘பெரும் உற்பத்தி’ செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால், இந்த ‘பெரும் உற்பத்தி’யின் நன்மையெல்லாம் சமூகத்தின் ஆதிக்கத் தரப்பினரையும், தீங்குகள் அனைத்தும் ஏழைகளையும் சென்று சேர ஆரம்பித்தன. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் என்ன ஆகும் என்ற கடுமையான எச்சரிக்கைதான் ‘மாடர்ன் டைம்ஸ்’. ஆனால், அமெரிக்காவும் சரி, உலகமும் சரி, அதைப் பொருட்படுத்தவேயில்லை. படம் வெற்றி பெற்றாலும் அதன் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டன/ புறக்கணிக்கப் படுகின்றன.
மெக்கார்த்தி யுகத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வேட்டையாடப்பட்ட காலத்தில், உலகின் மகத்தான திரைக்கலைஞன் சாப்ளின் தன் சொந்த நாட்டினராலேயே துரத்தப்படுகிறான். அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா தனது கலாச்சார சொத்துகளின் பட்டியலில் தற்போது வைத்துப் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் அவரது திரைப்படங்கள், ‘கம்யூனிஸ வேட்டை’ காலங்களில் அந்தச் சமூகத்தாலேயே புறக்கணிக்கப்பட்டன. ஆனால், குழந்தைகளும், அன்பையே வாழ்வின் தத்துவமாகக் கொண்டவர்களும் சாப்ளினை என்றுமே புறக்கணிக்க வில்லை. “நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும், அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல. நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும் துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை” என்று சொன்னவரை எப்படிப் புறக்கணிக்க முடியும்?
அன்பென்ற பொதுவுடைமை
முதலாளித்துவத்துக்கு மாற்றாகவும் இன்றைய உலகின் பிரச்சினைகளுக்கு மருந்தாகவும் வேறெந்த சித்தாந்தத்தையும் அல்ல, அன்பைத்தான் சாப்ளின் முன்வைத்தார். சாப்ளினின் ‘தி கிட்’ திரைப்படத்தில் ஒரு கனவு வரும். (இந்தத் திரைப்படத்தின் நகல்தான் எம்ஜிஆரின் ‘பெற்றால்தான் பிள்ளையா?’). அந்தக் கனவில் எல்லோருமே தேவதைகளாக இருப்பார்கள். எல்லோருக்குமே இறக்கை முளைத்திருக்கும். எல்லோருமே பறந்துவருவார்கள். யதார்த்தத்தில் கடுமையாக இருக்கும் போலீஸ்காரர்கூட அந்தக் கனவில் கனிவானவராக வருவார். அவருக்கும் வெள்ளை இறக்கை இருக்கும். யதார்த்தத்தில் சாப்ளினுடன் சண்டையிடுபவருக்கும் அந்தக் கனவில் இடம் இருக்கும். அவரும் இறக்கையுடன் வருவார். அவருடைய காதலிக்கு சாப்ளின் முத்தம் கொடுப்பதைக்கூட அவர் உற்சாகத்துடன் அனுமதிப்பார். அன்பின் உலகத்தில் பொறாமையோ, தன் உடைமை என்ற உணர்வோ இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் அழகிய கனவு அது. அந்த உலகத்தில் தீமை நுழையும் போதுதான் எல்லாம் தலைகீழாகிவிடுகிறது.
‘சிட்டி லைட்ஸ்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. பெரும் பணக்காரர் ஒருவர், வாழ்க்கையில் துயரம் ஏற்பட்ட நிலையில் தற்கொலை செய்துகொள்ள வருவார். அவரது தற்கொலையைத் தடுக்க முயற்சிக்கும் சாப்ளின், வாழ வேண்டும் என்பதற்கான காரணமாக என்ன சொல்வார் தெரியுமா? “நாளைக்கும் பறவைகள் பாடும்.” உலகின் ஒட்டுமொத்த தற்கொலைகளையும் தடுக்கும் வாசகமல்லவா இது. இதைத்தான், இந்த நம்பிக்கையைத்தான், இந்த அன்பைத்தான் இந்த உலகுக்கு சாப்ளின் தனது செய்தியாக விட்டுச் சென்றிருக்கிறார்.
‘காலம் எனக்குப் பெரிய எதிரி' என்றார் சாப்ளின். ஆனால், கடந்த நூறு ஆண்டுகளாகப் புதுமை குறை யாமல் பல தலைமுறைகளை உற்சாகப்படுத்திய பின்னும், புதிதாக வரும் தலைமுறைகளையும் மயக்கிக் கொண்டுதான் இருக்கிறார் சாப்ளின். உண்மையில், ‘சாப்ளின்தான் காலத்துக்கு மிகப் பெரிய எதிரி’

No comments:

Post a Comment