நவீன உலகில் வேகம் ,விவேகம் - www.v4all.org
இன்று நாம் அவசரமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கும் அவசரம். எதிலும் அவசரம். உலகம் பணத்தை சுற்றி சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. எதிலும் போட்டி அதிகரித்து விட்டது. அதனால் எங்கும் அவசரம், எதிலும் அவசரம் என்று ஆகி போனது உலகம். நவீன உலகில் வேகம் தேவை தான், அவசரம் அல்ல.
இன்று நாம் தேவைக்கு அதிகமாக பரபரப்பாகவும் அவசரமாகவும் இயங்கி கொண்டிருப்பதாகவேத் தோன்றுகிறது. முடிவுகளும் வேகமாக எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் இன்று உருவாகி வருகிறது என்றால் அது மிகையாகாது. வேகம் இன்றைய அவசரமான உலகில் தேவை தான். ஆனால் அதுவே அவசரமாக ஆகி விடக் கூடாது. அவசரத்தில் எடுக்கும் முடிவுகளும், செய்யும் வேலைகளும் பெரும்பாலும் சொதப்பி விடுகின்றன என்பதே நிஜம்.
அவசரமாக காதலிக்கின்றனர் இளைஞர்கள். அவசரமாக கல்யாணமும் செய்து கொள்ளுகின்றனர். ஆனால் அவசரமாக விவாகரத்து கோரும் போது வாழ்க்கை சிக்கலாகிப் போகிறது. தொட்டதெற்கெல்லாம் விவாகரத்து கோருவது மேற்கத்திய மரபு. நாம் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல் மேற்கத்திய கலாச்சாரத்தை பாதி கடைப் பிடித்து பாதி தயங்கி நிற்கிறோம். அதனால் தான் இங்கு விவாகரத்து அதிகமாக நம் வாழ்வை பாதிக்கிறது என்று சொல்லலாம்.
வேகம் என்பது வேறு. அவசரம் என்பது வேறு. வேகம் என்பது விவேகத்துடன் கூடியது. அவசரம் என்பது விவேகம் இல்லாதது எனலாம். விவேகத்துடன் கூடிய வேகம் பெரும்பாலும் நல்ல பலன்களையே தரும். அவசரம் பெரும்பாலும் கெடுதலான பலன்களையே தரும். இன்று நாம் அதிக வேலைப் பளுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடுமையான போட்டி எல்லாத் துறைகளிலும் இருக்கின்றதைப் பார்க்கின்றோம். நாம் நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அயராது பாடுபடுகிறோம் என்பதும் உண்மை தான். அதனால் இன்று நாம் நம் வாழ்க்கையில் வேகத்தைக் கடை பிடிப்பது அத்தியாவசியமாகிறது.
ஆக, வேகம் மற்றும் சுறுசுறுப்பு இன்றைக்கு அவசியம் தான். ஆனால் அது விவேகத்துடன் கூடியதாக இருக்கட்டும். அவசரம் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment