Thursday, June 18, 2015

பிரம்மபுரீஸ்வரர் கோவில் - பக்தர்களின் தலையெழுத்தை பிரம்மன் மாற்றி அவர்களது ஆயுளை அதிகரிக்க செய்து அருள் புரிந்து வருகிறார்

தமிழ்நாட்டில் எத்தனையோ நூறு சிவாலயங்கள் உள்ளன. இவற்றில் சில தலங்களுக்கு மட்டுமே அற்புதங்களை நம் கண் எதிரில் நடத்தி காட்டும் ஆற்றல் உண்டு. அந்த ஆற்றல் நிரம்பிய தலமாக திருப்பட்டூர் தலம் திகழ்கிறது. நமது தலைவிதியை மாற்றும் சக்தி இத்தலத்துக்கு உள்ளது.
நினைத்தவுடன் எல்லாராலும் இத்தலத்துக்கு சென்று வந்துவிட முடியாது. ஈசனும், பிரம்மனும் மனம் வைத்தால் தான் நாம் இத்தலத்துக்குள் காலடி எடுத்து வைக்க முடியும். இத்தலத்தின் வரலாறும் அதைத்தான் பிரதிபலிக்கிறது. அற்புதங்கள் நிறைந்த திருப்பட்டூர் தலம் தோன்ற காரணமான வரலாறு வருமாறு:- சிவனிடமிருந்து இந்த உலகை படைக்கும் ஆற்றலை பிரம்மா பெற்றார்.
இதனால் பிரம்மனுக்கு கர்வம் ஏற்பட்டது. சிவனைப் போலவே தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். பிரம்மாவிற்குப் பாடம் புகட்ட விரும்பிய சிவன், பிரம்மாவின் 5 தலைகளில் ஒன்றைக் கிள்ளி துண்டித்து கொய்து விட்டார். பிரம்மாவின் படைப்புத்தொழிலையும் சிவன் பறித்து விட்டார்.
அதன் பிறகே பிரம்மாவுக்கு தான் செய்ததுதவறு என்று புரிந்தது. அவர் இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார். பூலோகத்தில் ஆங்கங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து தன்னை வழிபடுமாறும், தகுந்த நேரமும், இடமும் வரும் போது சாப விமோசனம் தருவதாகவும் சிவபெருமான் பிரம்மாவிற்கு கூறினார்.
இந்த நிலையில் திருப்பட்டூர் தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத் தொழிலை அருள்வதாக கூறினார். பிரம்மனும் நாடெங்கிலும் சுற்றித் திரிந்து அங்கங்கே சிவலிங்கப்பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
பின்பு பிடவூராகிய இத்தலம் வந்து 12 லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிரம்மனின் வழிபாட்டில் சிவபெருமான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இத்தலத்தில் சாப விமோசனம் அளித்து மீண்டும் பிரம்மாவிற்கு படைப்புத் தொழில் செய்யும் ஆற்றலையும் வழங்கினார். பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பரம்பொருளான ஈசனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது.
அப்போது முதல் என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலை யெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக என வரமும் கொடுத்தார். அன்று முதல் பிரம்மா தன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் நல்ல செயலைத் தொடங்கினார். எனவே இத்தலத்துக்கு வந்து பிரம்மனை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை பிரம்மன் மாற்றி அவர்களது ஆயுளை அதிகரிக்க செய்து அருள் புரிந்து வருகிறார்.
ஜென்ம நட்சத்திர நாளில் தரிசிப்பது விசேஷம்!
மாதந்தோறும் வருகிற... உங்களின் ஜென்ம நட்சத்திர நாளில், திருப்பட்டூர் தல பிரம்மாவை தரிசித்தால், செல்வம் பெருகும்; ஐஸ்வரியம் கொழிக்கும்; இழந்ததைப் பெறுவீர்கள்!
பிரம்மனுக்கென்று தனி கோவில்கள் உள்ள கண்டியூர், கும்பகோணம், திருப்பாண்டிகொடுமுடி, திருக்கரம்பனூர், புஸ்கர் (ராஜஸ்தான் மாநிலம்) வரிசையில் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் முதல் பிரகாரத்தில் நாவில் சரஸ்வதி நற்றுணையாக வீற்றிருக்கும் பிரம்மாவின் பெருவடிவம் உள்ளது பெருமைக்குரியது.
எல்லா சிவ ஆலயத்திலும் ஈசனின் இடப்புறத்தில் அபிஷேக தீர்த்தம் வரும் வழியில் கோஷ்ட மூர்த்தியாக இருந்து வருகிறார். ஆனால் இந்த கோவிலில் மட்டுமே பிரம்மா மிக பிரமாண்டமாக அதுவும் மிக சிறப்பாக தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தி படைத்தவராக தனி சன்னதியில் விமானத்துடன் காட்சி அளிக்கிறார்.
பிரம்மாவின் நான்கு முகங்கள் கிரீடம் அணிந்து நாற்புறமும் பார்த்தபடி இருக்கும். நான்கு கரங்களில் இரண்டு கரங்களை மடிமீது வைத்தும், மற்ற கரங்களில் முறையே வலக்கரத்தில் ஜெபமாலை, இடக்கரத்தில் கமண்டலமும் உள்ளவாறு தாமரை மலர் மீது தவக்கோலத்தில் அமர்ந்துள்ளார். இவருக்கு சந்தனக்காப்பு அல்லது மஞ்சள் காப்பு அபிஷேகம் செய்து நல்ல பலனை பெறலாம்.
வியாழன், ஞாயிறு, திங்கட்கிழமைகள் வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாகும். மேலும் திருவாதிரை, புணர்பூசம், சதயம் மற்றும் அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்று வழிபாடு செய்தல் சிறப்பு என உணரப்படுகிறது.
2.சூரிய பூஜை :
ஆண்டுதோறும் பங்குனி மாதம் 15, 16, 17 ஆகிய தினங்களில் நடைபெறும் இந்த சூரிய பூஜை நிகழ்ச்சி ஓர் அரிய நிகழ்வாகும். சூரிய பூஜை ஆண்டுதோறும் பங்குனி 15, 16, 17 காலை 6.14 மணிக்கு தொடங்கி 6.45 மணிக்கு ஈசனாகிய ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரை சூரிய பகவான் நேரடியாக வழிபடும் காட்சியானது கடல் நீரில் மங்களகரமான ஓர் சிவலிங்கம் தோன்றி மறைவது போன்ற அற்புத காட்சியை காண்பது மிகச்சிறப்பு.
3.பதஞ்சலி முனிவர் :
இவர் நித்திய கைங்கர்யாள் என்று அழைக்கப்படுவர். இவர் இத்தலத்து ஈசனை தினந்தோறும் வணங்கி இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு யோகமாகிய ஞானத்தை வழங்கி மன நிம்மதி அளித்து அருள்புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
4.கைலாச நாதர் :
இக்கோவிலின் நந்தவனத்து உட்புறத்தே தனிப்பெரும் கோவிலாக கைலாச நாதர் ஆலயம் உள்ளது. இக்கோவில் முற்கால பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. அதாவது 7, 8-ம் நூற்றாண்டுகளை சேர்ந்தது. இத்திருக்கோவில் தேர் வடிவில் பல்லவர் கலை முறையில் அமைந்த கோவிலாகும். கருவறையில் ஆவுடையார் இல்லாத தாராலிங்கம் உள்ளது.
இது 16 பட்டைகளை கொண்டது. இது சந்திரகலாலிங்கம் என்று அழைக்கப்படும். சிதம்பரம் நவலிங்கம் சன்னதியில் உள்ள லிங்கம், காஞ்சி கைலாச நாதர் ஆலயத்தில் உள்ள லிங்கம் ஆகியவை இந்த வகையானதே ஆகும். மேலே விதானம் கொண்ட கங்கைகொண்ட சோழபுரம் போல உள்ளீடு இல்லாது உச்சிவரை செல்கிறது.
இறைவன் தனியே ரிஷபாருடனாக இருக்கும் காட்சி முதல் திருக்கோவிலை சுற்றியுள்ள நடனத்தோற்றங்கள் வரை அனைத்து மனதை கொள்ளை கொள்கிறது. இத்திருக்கோவிலை பார்த்தே ராஜராஜசோழன் தஞ்சை பெரியகோவிலை அமைத்திருக்க வேண்டும். 16 பட்டை லிங்கத்தை சுற்றிவரும் திருச்சுற்று சாந்தாரா அமைப்பை சேர்ந்தது.
இதே போலத்தான் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் லிங்கத்தை சுற்றி வர இடம் அமைத்து உள்ளீடற்ற கோபுரத்தையும் நிறுவி இருக்கிறார்கள். இக்கோவிலே ஆதி கோவிலாக அமைந்திருக்கவேண்டும். இதன் பின்னரே 14-ம் நூற்றாண்டில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
5.பிரம்ம தீர்த்த குளம் :
நான்கு புறமும் படித்துறைகளை கொண்ட அற்புத தீர்த்த குளம். இந்த தீர்த்தத்தால் பிரம்மன் 12 (துவாதச) சிவலிங்கங்களை அபிஷேகித்து வழிபாடு செய்ததால் இத்தீர்த்த குளம் பிரம்ம தீர்த்த குளம் என்று அழைக்கப்படுகிறது. மழை நீர் பிரகாரத்தின் மேல்தளங்களில் விழுந்து யார் காலிலும் படாமல் வழிந்து திருக்கோவில் அடித்தளத்தின் வழியே திருக்குளத்தில் விழும்படியாக தொழில்நுட்ப அறிவுடன் அமைக்கப்பட்டுள்ளது.
எப்படி செல்வது?
திருச்சி மாவட்டம் மண் ணச்சநல்லூர் தாலுகா திருப் பட்டூரில் அமைந்துள்ளது அருள்மிகு பிரம்ம சம்பத் கவுரி உடனாய பிரம்மபுரீஸ்வரர் கோவில். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும், பெரம்பலூரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், சிறுகனூருக்கு வடமேற்கில் 4 கி.மீ. தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment