கடந்த வாரத்தில் “எதை வேண்டாம்னு நினைக்கிறோமோ அது அப்படியே நடக்கும்!” என்று நான் எழுதியது பல பெற்றோர்களைக் கலக்கத்தில் தள்ளியது தெரிகிறது. பொதுவாக, நாம் அனைவருமே நல்ல நோக்கத்தோடுதான் பேசுகிறோம். ஆனால், அச்சம் பல எதிர்மறை எண்ணங்களை வரவழைத்துவிடுகிறது. இது மனதின் இயல்பு. இதற்குக் குற்ற உணர்ச்சி கொள்ளத் தேவையில்லை.
நல்ல உள்நோக்கத்தை, நேர்மறை எண்ணங்களில், நல்ல சொற்களில் எப்படி தெரிவிப்பது என்பதுதான் சூட்சுமம். அதற்கு முன்பாக, நல்ல உள் நோக்கத்துடன் ‘எதை வேண்டும்’ என்று எண்ணுகிறோமோ, அது எப்படி நடக்கிறது என்பதை நம் மூளையின் செயல்பாட்டை வைத்துப் புரிந்து கொள்வோம்.
மூளையின் பயணம்
நாம் பேசும் மொழியைப் படங்களாய்த்தான் நம் மூளை உள்வாங்கிக்கொள்ளும். எழுத்து களாய் அல்ல.
“நான் சென்ற முறை சிக்கிம் போனபோது ஒரு சிலிர்ப்பான அனுபவம் நிகழ்ந்தது. குறுகிய சாலையில் எங்கள் வண்டி போகிறது. நானும் ஓட்டுநரும்தான். ஒரு புறம் திரும்பினால் பள்ளத்தாக்கு. இன்னொரு புறம் மலை மேடுகள். இடையில் ஆபத்தான முறையில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்.
இருட்டிக்கொண்டு மழை வேறு வரும் போலத் தெரிகிறது. ஆனால், வழியெங்கும் பல நிறங்கள் கலந்த மலர்க் கூட்டங்கள் மனதைக் கொள்ளை கொண்டன. இவற்றையெல்லாம் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்த போதே திடீரென எதிரில் ஒரு லாரி வேகமாக வந்தது...”
இப்போது உங்கள் மனத்தில் என்ன காட்சிகள் வந்தன? நான் சென்ற வண்டி எது? எந்த நிறத்தில் பூக்களைப் பார்த்தீர்கள்? எந்தப் பக்கம் பள்ளத்தாக்கு? எந்தப் பக்கம் மலைமேடு? எதிரில் வந்த லாரி எப்படி இருந்தது? என் ஓட்டுநர் பக்கத்தில் நான் அமர்ந்திருந்தேனா அல்லது பின் சீட்டில் இருந்தேனா? எதிரில் வந்த லாரி என்ன செய்திருக்கும்?
இவை அனைத்துக்கும் உங்கள் மூளை தானாக விடையைத் தேடி நிரப்பிக்கொள்ளும். நிஜத்தில் உங்கள் மூளை உங்களை சிக்கிம் பயணத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது. இந்த அச்சு வரிகள் நினைவில் இருக்காது. ஆனால் ஒரு மலைப் பிரதேசக் காட்சியை உங்கள் மூளை வடிவமைத்துக்கொள்ளும்.
நிஜத்தின் பாவனை
நிஜமாகவே நான் சிக்கிம் போனேனோ அல்லது கதை விடுகிறேனோ, எதுவாக இருந்தாலும் உங்கள் மூளை தரும் உங்கள் அனுபவம் நிஜம். அதை விபத்து என்றோ சாகஸம் என்றோ நீங்கள் கூடுதலாகக் கற்பனை செய்யும்போது உங்கள் உணர்வுநிலையும் அந்தக் காட்சியை மேன்மைப்படுத்தும்.
காணாததை இப்படிக் காட்சிப்படுத்தி, அதற்கு ஏற்ப எண்ணங்களையும் உணர்வுகளையும் உருவாக்கி, அதை நிஜம் போலப் பாவிப்பது நம் மன இயல்பு. அதனால்தான் இத்தனை கற்பனை சந்தோஷங்களும், கற்பனை பயங்களும்!
இதில் ஒன்று முக்கியமானது. நீங்கள் காட்சிப்படுத்துவது நிஜமா, பொய்யா, நேர்மறையா, எதிர்மறையா என்றெல்லாம் மூளை கவலைப்படாது. அது செய்ய வேண்டிய வேலையைச் செய்யும்.
கிறக்கத்தின் காரணம்
அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆரின் பின்னாலிருந்து நம்பியார் தாக்க வந்தால் பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு, “வாத்தியாரே..பின்னால பாரு!” என்று கத்துவது இதனால்தான். அதே போல மல்லிகா ஷெராவத்தைப் பார்த்துக் கிறங்குவதும் இதனால்தான். படத்திலிருப்பதையும் தாண்டி, உங்கள் கற்பனைகள் உங்களை உணர்ச்சிவசப்பட வைக்கும்.
உங்களுக்குப் பிடித்த கோதுமை அல்வாவை அவசர அவசரமாய் விழுங்குகையில் ஒருவர் ஓடி வந்து, “ சர்க்கரைப் பாகில் ஒரு பல்லி விழுந்துடுச்சாம். சமையல்காரர் சொல்லிட்டிருந்ததை இப்பத்தான் கேட்டேன்!” என்கிறார்.
இப்போது உங்களால் தொடர்ந்து அல்வாவை ரசிக்க முடியுமா? பல்லி விழுந்த காட்சி மனதில் வரும். அதன் விஷம் உங்களைத் தாக்கி நீங்கள் வாந்தி எடுப்பதாகக் காட்சி வரும். பிறகு நிஜத்தில் வாந்தி வரும் உணர்வு வரும்.
கற்பனையின் கத்தல்
பொய்யா, நிஜமா என்று மூளை கேள்வி கேட்காது. கொடுத்த காட்சிக்கு ஏற்ற உணர்வுகளையும் உடல் நிலை மாற்றங்களையும் உடனே கொண்டு வரும்.
இதேபோலத்தான் கண்ணாடி டம்ளரைக் குழந்தை எடுத்துப் போகும்போது, அது கீழே போடுவதை மனம் கற்பனை செய்யும். உடைந்து கையில் குத்துவதைக் கற்பனை செய்யும். உங்கள் கத்தலில் பதற்றப்பட்டு குழந்தை டம்ளரைக் கீழே போடும்.
இதேபோலத்தான் எல்லா உறவுகளிலும். “அவன் அப்படி இருக்கக் கூடாது” என்று எண்ணுகையில் அவனை நம் எண்ணத்துக்கு ஏற்ப மாற்ற ஆரம்பித்துவிடுகிறோம்.
வன்முறையின் ஆதாரமே இதுதான். “அவன் நம்மைத் தாக்கக் கூடாது!” என்ற எண்ணம்தான் நம்மைத் தற்காப்புத் தாக்குதலுக்குத் தயார் செய்கிறது. அதன் முனைப்பை எதிராளி உணர்ந்ததும் அவனும் தற்காப்புக்குத் தயாராக, அதை ஆரம்பமாக நினைத்துக் கொண்டு, “பயந்த மாதிரியே நடக்குது” என்று முதல் அடியை (தற்காப்பாக நினைத்து) கொடுக்க...பின் யுத்த மயம் தான். இருவரும் எதிராளி தான் யுத்தம் துவங்கியதாக நினைத்துக் கொள்வார்கள்.
நேர்மறையின் சப்ளை
சரி, டம்ளரைக் கீழே போடாமல் குழந்தை போவதற்கு எப்படிச் சொல்லலாம்?
“ பாப்பா.. ஒரு கையைக் கீழே கொடுத்து டம்ளரைப் பத்திரமா எடுத்திட்டுப் போ! ஆ...அப்படித்தான் சபாஷ்!” என்றால் அதைக் குழந்தை நன்றாகக் கற்கும்.
ஆனால், இதைச் சொல்லத் தெளிவான மனமும், நேர்மறையான கற்பனை வளமும், உற்சாகமும், நம்பிக்கையும் அதிக அளவில் தொடர்ந்து மனதுக்குத் தேவைப் படுகிறது.
தினசரி அவ்வளவு எண்ணங்களை நாம் சப்ளை செய்கிறோமா? அத்தகைய அளவில், நேர்மறை எண்ணங்கள் தொடர்ந்து வர என்ன செய்யலாம்?