Saturday, June 20, 2015

கலிலியோ

பெரும்பாலான மனிதர்கள் காலத்தோடு ஒத்துப் போகிறார்கள். எல்லோரையும் போல சிந்திப்பது, செயல்படுவது, எல்லோரும் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வாழ்வது என்று இருந்து விடுகிறார்கள். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, செயல்பட்டு, வாழ்ந்து சமூகத்தை பயமுறுத்துவதில்லை. சமூகத்தை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதில்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை. சிலர் விதிவிலக்குகளாக இருந்து தனிக்குரல் எழுப்புகிறார்கள். அந்தத் தனிக்குரல் சமூகத்தின் காதுகளில் நாராசமாக ஒலிக்கிறது. அந்தத் தனிக்குரலை ஒடுக்க சமூகம் பாடுபட ஆரம்பித்து, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்று விடுகிறது. ஆனாலும் அந்த தனிக்குரல் பல நூற்றாண்டுகள் கழித்தும் ஒலிப்பதுண்டு. அந்தக் குரலுக்கு பிற்கால சமூகம் செவி சாய்ப்பதுண்டு. அப்போது அந்தத் தனிக்குரல் சரித்திரம் படைக்கிறது. மனித குலத்தின் மகத்தான அத்தனை முன்னேற்றங்களுக்கும் இது போன்ற தனிக்குரல்களே மூல காரணமாக இருந்திருக்கின்றன.
பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலியில் ஒலித்த அப்படிப்பட்ட ஒரு தனிக்குரல் கலிலியோ கலிலி(Galileo Galilei) என்ற அறிஞருடையது. கி.பி 1564 ஆம் ஆண்டு பிறந்த கலிலியோ எதையும் மிக நுணுக்கமாக கவனிப்பவராக விளங்கினார். கிறித்துவக் கோயிலுக்கு அவர் சென்றிருந்த ஒரு சமயத்தில் தொங்கு விளக்கு ஒன்று காற்றால் ஆடிக் கொண்டு இருந்தது. காற்று வேகமாக வீசுகையில் விளக்கு வேகமாகவும், வேகம் குறைவாக வீசும் போது விளக்கு குறைவான வேகத்துடனும் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே இருந்த கலிலியோவுக்கு அதில் மாறாத ஒரு விஷயம் இருப்பது கவனத்தைக் கவர்ந்தது.
தன் நாடியைப் பிடித்து அந்த விளக்கின் அசைவுகளை கலிலியோ ஆராய்ந்தார். வேகமாக அசையும் போதும் சரி, நிதானமாக அசையும் போதும் சரி அந்த விளக்கு ஒவ்வொரு முறையும் போய் திரும்பி வர ஒரே கால அவகாசத்தை எடுத்துக் கொண்டது அவருக்கு வியப்பை அளித்தது. அந்தக் கண்டுபிடிப்பு ஊசல் விதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு பிற்காலத்தில் கடிகாரங்களை உருவாக்க உதவியது. அவர் அந்த ஊசல் விதி கண்டு பிடித்த போது அவருக்கு வயது இருபது.
அரிஸ்டாட்டில் சொன்ன விதி ஒன்று யாராலும் கலிலியோவின் காலம் வரை சரியா என்று ஆராயப்படாமலேயே இருந்தது. அது ‘எடை கூடிய பொருள்கள் எடை குறைந்த பொருள்களை விட வேகமாய் கீழே விழக் கூடியவை’ என்பது தான். கலிலியோவிற்கு அது சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. எனவே அவர் பல வித எடைகளில் இரும்புக் குண்டுகளை எடுத்துக் கொண்டு பைசா கோபுரத்தின் மேலே சென்று ஒவ்வொன்றையும் கீழே போட்டுப் பார்த்தார். எல்லாம் கீழே விழ ஒரே நேரத்தை எடுத்துக் கொண்டன. இதன் மூலம் அது வரை நம்பப்பட்டு வந்த அரிஸ்டாட்டிலின் அந்த குறிப்பிட்ட விதி தவறென்று கலிலியோ நிரூபித்துக் காட்டினார்.
கலிலியோ பல்கலைக் கழகப் படிப்பை நிறைவு செய்யவில்லை. காரணம் அவருக்கு கல்வியில் கணிதம் தவிர வேறெந்த துறையிலும் ஈடுபாடு இருக்கவில்லை. அவருடைய காலத்தில் ஒற்றர் கண்ணாடி (spy glass) என்றழைக்கப்பட்ட ஒரு விதக் கண்ணாடி வெகு தொலைவில் இருப்பதையும் அருகில் இருப்பதாகக் காட்ட வல்லது என்றும் அதை ஒரு டச்சு கண்ணாடித் தயாரிப்பாளர் செய்திருக்கிறார் என்றும் கலிலியோ கேள்விப்பட்டார். அதுவரை அந்தக் கண்ணாடியைக் கண்டிராத அவர் அந்த சாத்தியக் கூறால் கவரப்பட்டு கேள்விப்பட்ட சில விஷயங்களையும் தன் உள்ளுணர்வுகளையும் வைத்து அது போன்ற ஒரு கண்ணாடியை உருவாக்கினார். அதன் சக்தியை அதிகரித்துக் கொண்டே போய் மிக சக்தி வாய்ந்த கண்ணாடியை உருவாக்கினார். அது தான் பிற்காலத்தில் டெலஸ்கோப் என்று அழைக்கப்பட்டது.
அதை வெனிஸ் நகர செனெட்டில் கொண்டு போய் கலிலியோ காட்டினார். அது செனெட்டின் பேராதரவைப் பெற்றது. அவருடைய புகழ் நாடெங்கும் பரவியது. அதோடு அவர் நிறுத்தியிருந்தால் அவர் புகழோடும், செல்வத்தோடும் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் பெயர் சரித்திரத்தில் சிறிதாகத் தான் எழுதப்பட்டிருக்கும். அவர் தன் அறிவியல் ஆராய்ச்சியின் அடுத்த கட்டங்களுக்குச் சென்றார். அது அவருடைய பிரச்னைகளுக்கு அஸ்திவாரம் போட்டது.
அந்த டெலஸ்கோப்பால் சந்திரனைப் பார்த்தார். சந்திரன் மிக அழகாக சமதளமாக இருக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு அதில் பாறைகளும், மலைகளும், மேடு பள்ளங்களும் இருப்பது வியப்பாய் இருந்தது. தன் டெலெஸ்கோப்பின் சக்தியை மேலும் பன்மடங்கு கூட்டி ஜனவரி 7, 1610 அன்று அந்த டெலஸ்கோப்பை ஜூபிடர் கிரகம் பக்கம் திருப்பினார். ஜூபிடர் கிரகம் அருகில் மூன்று நட்சத்திரங்கள் நேர்கோட்டில் இருப்பதைக் கண்டார். சிறிது நேரம் கழித்துப் பார்க்கையில் அந்த நட்சத்திரங்கள் இடம் மாறி அதே போல் நேர்கோட்டில் இருப்பதைக் கண்டார். அப்போது தான் அவை ஜூபிடரின் உபகிரகங்கள் என்றும் அவை ஜூபிடரைச் சுற்றி சுழன்று கொண்டு இருக்கின்றன என்றும் அவர் முடிவுக்கு வந்தார். அந்த சித்தாந்தத்தை மேலும் சிந்தித்துப் பார்த்த போது கோபர்நிகஸ் பூமியைப் பற்றி சொன்னது உண்மை என்ற முடிவுக்கு வந்தார். கோபர்நிகஸ் பூமியைச் சுற்றி சூரியன் சுழல்வதில்லை., சூரியனைச் சுற்றியே பூமி சுழல்கிறது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருந்தார்.
கலிலியோ கோபர்நிகஸ் சொன்னது சரியே, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று கூறியதுடன் அந்த கண்டுபிடிப்புகளை ஒரு புத்தகமாக கிபி 1610ல் வெளியிட்டது அவருக்கு வினையாயிற்று. கி.பி.1600ல் கியார்டானோ ப்ரூனோ (Giordano Bruno)என்ற நபர் இதை நம்பியதற்கும், பூமியைப் போல் பல்லாயிரக் கணக்கான கோள்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்று சொன்னதற்கும் உயிரோடு எரிக்கப்பட்டிருந்தார். பைபிளில் சொல்லி இருப்பதற்கு எதிர்மாறாக அவன் சொல்வதாகக் காரணம் சொல்லி அவனை எரித்தவர்கள் கலிலியோவையும் விடவில்லை. அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இனி கோபர்நிகஸ் சொன்னதை பிரபலப்படுத்தக் கூடாது என்று சொல்லி அவரை விடுதலை செய்தார்கள்.
கலிலியோ தன் ஆய்வுகளைத் தொடர்ந்தார். அவர் மேலும் கண்ட உண்மைகள் அவரை சும்மா இருக்க விடவில்லை. தன் ஆய்வுகளை “Dialogue” புத்தகத்தில் மூன்று கற்பனைக் கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது போல எழுதினார். ஒரு கதாபாத்திரம் இவரது கருத்துகளை அறிவுபூர்வமாகப் பேசுவது போலவும், ஒரு கதாபாத்திரம் முட்டாள்தனமாக எதிர்ப்பது போலவும், இன்னொரு கதாபாத்திரம் திறந்த மனதுடன் அவற்றை பரிசீலிப்பது போலவும் எழுதினார். உடனடியாக அந்த நூலைத் தடை செய்து, அவரைக் கைது செய்து அவரை விசாரணைக்கு உட்படுத்தினர்.
தனியே ஒரு குரல்!!!
68 வயதாகி இருந்த கலிலியோவிற்கு கண்பார்வையும் மங்க ஆரம்பித்திருந்தது. அவர் நோய்வாய்ப்பட்டும் இருந்தார். இந்த நிலையில் அவரை சித்திரவதைப் படுத்துவோம் என்று அதிகாரவர்க்கம் அச்சுறுத்தவே தான் சொன்னது எல்லாம் தவறென்று கலிலியோ பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். பூமி அசையாமல் இருந்த இடத்தில் இருக்க சூரியனே அதைச் சுற்றி வருகிறது என்று பூமியைப் பற்றிச் சத்தமாகச் சொன்ன அந்த நேரத்தில், கடைசியில் “ஆனாலும் அது நகர்கிறது” என்று முணுமுணுத்ததாக சிலர் சொல்வதுண்டு. வீட்டு சிறையிலேயே தன் மீதமுள்ள வாழ்நாளைக் கழிக்க வேண்டி வந்த கலிலியோ இந்த வானவியல் ஆராய்ச்சிகளை விட்டு மற்ற விஞ்ஞான ஆராய்ச்சிகளில் தன்னை மரணம் வரை ஈடுபடுத்திக் கொண்டார்.
கோபர்நிகஸின் கண்டுபிடிப்பு சரியே என்பது பிற்காலத்தில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டதால் 1822 ஆம் ஆண்டு அவருடைய “Dialogue” நூலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. பின்னர் சில நூற்றாணடுகள் கழித்து வாடிகன் 1992 ஆம் ஆண்டு பகிரங்கமாக கலிலியோ குற்றமற்றவர் என்றும், அவரை விசாரித்து சிறைப்படுத்தியது தவறு என்றும் ஒத்துக் கொண்டது.
சில நேரங்களில் உண்மை என்று உணர்வதை வெளியே சொல்லும் போது அது அக்கால கட்டத்தில் இருப்போரின் அந்த சூழ்நிலைக்கு ஏற்க முடியாததாக இருக்கலாம். ஆனாலும் உண்மை அப்படி தனியாகவே ஒரு குரலில் ஒலித்தாலும், பிற்காலத்தில் அந்த தனிக்குரல் உண்மையென்று அனைவரும் உணரும் நிலை வருவது நிச்சயம்.
எனவே சில நேரங்களில் தனிக்குரலாக உங்கள் கருத்து ஒலிப்பதில் வெட்கம் கொள்ளாதீர்கள். அக்குரல் உங்களை வரலாற்றுப் பக்கங்களில் பதிய வைக்கும் குரலாகக் கூட இருக்கலாம்.
urs
www.v4all.org

No comments:

Post a Comment