Monday, June 1, 2015

ஸ்டெம் செல் அதிசயம்: “தோல்” போயி “ரத்தம்” வந்தது டும் டும் டும்!!!

ஸ்டெம் செல் அதிசயம்: “தோல்” போயி “ரத்தம்” வந்தது டும் டும் டும்!!!

இப்பெல்லாம் யாராவது ஸ்டெம் செல்லுன்னு சொன்னாலே, சினிமா படத்துல வர்ற வில்லனை மக்கள் பார்க்குற மாதிரிதான் பார்க்குறாங்க அரசியல்வாதிகளும், பொதுமக்களும்! நம்ம ஊரு நெலவரம் எப்படியோ தெரியல, அமெரிக்காவுல அப்படித்தான் நடக்குது! அதனால, ஸ்டெம் செல் தொடர்பான ஆய்வுன்னாலே ஆயிரத்தெட்டு எதிர்பலைகள் கிளம்பி, தூரத்துல தெரியுற ஒளிமயமான (மருத்துவ) எதிர்காலத்தைக்கூட கானல் நீராக்கிடுது! ஆமா, இதுக்கு என்ன காரணம்? இந்தப் பதிவை படிக்கிறதுக்கு முன்னாடி, “ஸ்டெம் செல்கள் (குறுத்தனுக்கள்) தொடர்-பாகம் 1″ அப்படீங்கிற பதிவைக் கொஞ்சம் படிச்சிடுங்க….!
சிசு ஸ்டெம் செல்லும் சில சர்ச்சைகளும்!

சிசு ஸ்டெம் செல் படம்: விக்கிப்பீடியா)
பொதுவா ஸ்டெம் செல்லுன்னு சொன்னா, அது எம்பிரியானிக் ஸ்டெம் செல் எனும் “சிசு ஸ்டெம் செல்”லத்தான குறிக்கும். இதுதான் ஸ்டெம் செல்களின் ராஜா. ஏன்னா, இந்த ஸ்டெம் செல்லிலிருந்து உடலின் எந்த பாகத்தையும் உருவாக்க முடியும். அதாவது, உடலின் சுமார் 200-க்கும் மேற்பட்ட எல்லா வகையான செல்களாகவும் மாறக்கூடிய திறன் பெற்ற ஒரு இயற்கையான ஸ்டெம் செல்தான் இந்த சிசு ஸ்டெம் செல்! இந்த சிசு ஸ்டெம் செல்கள், 4-5 நாட்கள் வயதுடைய, தாயின் வயிற்றிலுள்ள மனித சிசுக்களின் (எம்பிரியோ) உடலில் இருப்பவை.
இது தவிர ஃபீடல் ஸ்டெம் செல், அடல்டு ஸ்டெம் செல், ஆம்னியாட்டில் ஸ்டெம் செல், இன்டியூஸ்டு ப்ளூரிபொடென்ட் ஸ்டெம் செல் என பல்வேறு வகையாந ஸ்டெம் செல்கள் நம் உடலில் உண்டு. ஆனால், இந்த ஸ்டெம் செல்களுக்கெல்லாம் இல்லாத ஒரு தனிச்சிறப்பு சிசு ஸ்டெம் செல்களுக்கு மட்டுமே உண்டு! அதுதான் சரியான வளர்ச்சி சூழலில் உடலின் சுமார் 200-க்கும் மேற்பட்ட எல்லா வகையான செல்களாகவும் மாறக்கூடிய திறன்! அதனாலேயே இவை ஸ்டெம் செல்களின் ராஜா! ஆனா, துரதிஷ்டவசமா அதுதான் இப்போ பிரச்சினையும்கூட……
அதாவது, சிசுக்களின் உடலில் மட்டுமே இருக்கக்கூடிய இந்த ஸ்டெம் செல்களை ஆய்வுக்கோ அல்லது மருத்துவத்துக்கோ பயன்படுத்த வேண்டுமாயின், சிசுக்களிலிருந்தே இந்த ஸ்டெம் செல்களை சேகரிக்க வேண்டும். உயிரோடு இருக்கும் சிசுக்களிலிருந்து இதை சேகரிப்பதென்பது முடியாத அல்லது செய்யக்கூடாத காரியம். ஆனா, கருக்கலைப்புக்குள்ளான சிசுக்களிலிருந்து சேகரிக்க முடியும். அப்படிச் சேகரிப்பது இயற்கைக்கு எதிரானது, அதன்மீதான ஆய்வும் இயற்கைக்கு எதிரானது அப்படீன்னு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டு இருக்குறதுனாலேயே, ஸ்டெம் செல் ஆய்வு தடைபட்டும், அரசாங்கம் ஸ்டெம் செல் ஆய்வுக்கு தடை மற்றும் நிதியுதவி செய்ய மறுத்துவிடுகிறது!
தூண்டப்பட்ட ஸ்டெம் செல்/இன்டியூஸ்டு ப்ளூரிபொடென்ட் ஸ்டெம் செல்-லும் மருத்துவ எதிர்காலமும்……
இந்தப் பிரச்சினையினால ஸ்டெம் செல் ஆய்விலிருந்து மனித குலத்துக்கு மருத்துவ ரீதியாக கிடைக்க வேண்டிய பல நன்மைகள் எதுவுமே கிடைக்கறமாதிரி தெரியல. இப்படியே போனா, ஒன்னும் வேலைக்காகாதுன்னு, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மேற்கொள்ளப்பட்ட ஸ்டெம் செல் ஆய்வுகளின் பரிசுதான் இன்டியூஸ்டு ப்ளூரிபொடென்ட் ஸ்டெம் செல் என்றழைக்கப்படும் “தூண்டப்பட்ட ஸ்டெம் செல்”.
அதாவது, உடலின் எந்த ஒரு செல்லையும், இயற்கையான சிசு ஸ்டெம் செல் போலவே செயல்படக்கூடிய ஸ்டெம் செல்லாக உருமாற்றக் கூடிய ஒரு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் ஸ்டெம் செல்களே “தூண்டப்பட்ட” ஸ்டெம் செல்கள். இவற்றை உருவாக்க சிசுக்கள் தேவையில்லை. உடலின் எந்த ஒரு பாகத்திலிருக்கும் ஒரே ஒரு செல் மட்டும் போதும். உதாரணமாக, நம் உடல் தோலிலிருக்கும் ஒரே ஒரு சாதாரண செல் மட்டுமே போதும்! அப்படீன்னா ஸ்டெம் செல் ஆய்வுக்கும், மனித குலத்துக்கும் இது ஒரு வரப்பிரசாதம்னு சொல்லுங்க அப்படீன்றீங்களா?
“வரப்பிரசாதம்தான்…….ஆனா, வரப்பிரசாதம் இல்ல!” இப்படித்தான் பதில் சொல்லனும் உங்க கேள்விக்கு?! ஏன்னா, தூண்டப்பட்ட ஸ்டெம் செல்லை உருவாக்க, வைரஸ் உதவியுடன் கூடிய ஒரு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அந்த வைரஸை பொதுவாக செயலிழக்கச் செய்துதான் பயன்படுத்துறாங்க. இருந்தாலும், ஒரு ஸ்டெம் செல் சார்ந்த சிகிச்சைகாக உடலினுள் செலுத்தப்படும் இந்த வைரஸுடன் கூடிய ஸ்டெம் செல், மனித உடலில் பின்னாளில் எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாத காரணத்தினால், கொஞ்சம் ஆபத்து/சந்தேகத்துக்குறியதுதான் இந்த வகையான ஸ்டெம் செல்கள் என்பதே நிதர்சனம்!
இருந்தாலும், வைரஸ் பயன்படுத்தாமல் உடலின் சாதாரண செல்களிலிருந்து, ஸ்டெம் செல்களை சோதனைக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கும் தொழில்நுட்பம் ஆய்வாளர்களுக்கு சமீபத்தில் கைவந்திருப்பது மனிதகுலத்துக்கு ஒரு நற்செய்தியே! அதனால, இதுவரைக்கும் பல பிரச்சினைகளுக்கு மத்தியில, சர்ச்சைக்குறிய சிசு ஸ்டெம் செல்களை, ஒரு குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைக்காக,  உடலின் மற்றொரு செல்லாக மாற்றி பயன்படுத்தி வந்தார்கள். உதாரணமாக, சிசு ஸ்டெம் செல்கள ரத்த அனுக்களாக மாற்றி, அனீமியா, லியூக்கீமியா போன்ற நோய்களைக் குணப்படுத்த முயற்சி செய்துவந்தார்கள். அம்முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்தன!
அந்த தோல்விகளுக்கெல்லாம் ஒரு பெரிய (?) முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஸ்டெம் செல் மற்றும் புற்றுநோய் ஆய்வுமையத்தின் இயக்குனரும், ஆய்வாளருமான மிக் பாட்டியாவு, அவரது ஆய்வு மாணவர்களும்!
அப்படியா, பரவாயில்லையே! ஆமா, அதெப்படி இது சாத்தியமாச்சு? இந்த ஆய்வுலமட்டும் அப்படியென்ன விசேஷம்? இப்படி நெறைய கேள்வி எழுகிறது உங்களுக்கு இல்லீங்களா? எனக்கும்தான்! சரி வாங்க, இந்த ஸ்டெம் செல் ஆய்வு பத்தி இன்னும் விரிவா தெரிஞ்சுக்குவோம்……
‘தோல்’ போயி ‘ரத்தம்’ வந்தது டும் டும் டும்!

தோல் செல் (இடது), ரத்த அனு (வலது) (படம்: singularity hub)
ரத்த சம்பந்தப்பட்ட பல்வேறு வகையான நோய்கள், விபத்துகள், அறுவைச் சிகிச்சைகள், புற்றுநோயாளிகள்  இப்படி பலருக்கும், மருத்துவமனைகள்ல அவசரமாக ரத்தம் தேவைப்படும். அப்படி ரத்தத்தின் தேவையுள்ள எல்லோருமே இனி அவங்களோட “தோல் பகுதியை” கொஞ்சம் ஆய்வாளர்கள்கிட்ட கொடுத்தா, தூண்டப்பட்ட ஸ்டெம் செல் உருவாக்கும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்த தோலிலிருக்கும் செல்களைப் பயன்படுத்தி அதிலிருந்து ரத்தத்தை/ரத்த அனுக்களை உருவாக்க முடியும் என்று நிரூபித்துள்ளார் கனடா நாட்டு ஸ்டெம் செல் ஆய்வாளரான மிக் பாட்டியா!
இதுவரைக்கும், சிசு ஸ்டெம் செல்லிருந்துதான் இப்படி ரத்த அனுக்களை உருவாக்க முயற்ச்சி செஞ்சுருக்காங்க. ஆனா, அந்த முயற்சி, நோயாளியின் உடலில் செலுத்தப்படமுடியாத, டெரட்டோமா என்னும் ஒருவகையான புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ஸ்டெம் செல்களையே உருவாக்கியது என்பதால், அவ்வகையான முயற்சிகள் தோல்வியையே சந்தித்துவந்தன! அத்தகைய தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, தோல் செல்லிருந்து பாதுகாப்பான ரத்த அனுக்களை உருவாக்கி வெற்றி கண்டிருக்கிருக்கிறார் மிக் பாட்டியா! அவருக்கு ஒரு சபாஷ்…..
இது எப்படி சாத்தியப்பட்டது?

சக ஆய்வாளருடன் "மிக் பாட்டியா"
அது சரி, இதுவரைக்கும் முடியாத ஒன்னு இப்போ மட்டும் எப்படி சாத்தியமாச்சு? இதுவரையில் பயன்படுத்தப்பட்டுவந்த தூண்டப்பட்ட ஸ்டெம் செல் தொழில்நுட்பத்தில் சில புதுமைகளைப் புகுத்தியதால் இது சாத்தியப்பட்டது என்கிறார் பாட்டியா!  அதாவது, முன்பிருந்த ஆய்வு/தொழில்நுட்பச் சிக்கல்களை தவிர்க்க, தோல் செல்களை ரத்த அனுக்களாக மாற்றக்கூடிய திறனுள்ள செல் வளர்ச்சி ஊக்கிகளான “க்ரோத் ஃபேக்டர்ஸ்”களைக் கண்டறிந்து, தோல் செல்லிருந்து ஸ்டெம் செல், பின்பு ஸ்டெம் செல்லிருந்து ரத்த அனுக்கள் உருவாகாமல் தடுத்து, தோல் செல்களிலிருந்து நேரடியாகவே ரத்த அனுக்கள் உருவாகும்படி புதிய முயற்சியைக் கையாண்டு இந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார்கள் மிக் தலைமையிலான ஆய்வாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

No comments:

Post a Comment