Monday, July 27, 2015

ஏழை அப்பா… பணக்கார அப்பா!


ஏழை அப்பா… பணக்கார அப்பா! - 

WWW.HAPPY4ALL.ORG

‘‘பணக்காரர்கள் மட்டுமே பணக்காரர்களாகிறார்கள். ஏழைகளும், மிடில் கிளாஸ் மக்களும் தொடர்ந்து அப்படியேதான் இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா?’ என்று ராபர்ட் சொல்ல ஆரம்பித்தார்…
‘‘பணத்தை எப்படிக் கையாள்வது… அதை எப்படிப் பெருக்குவது? என்றெல்லாம் எந்தப் பள்ளிக்கூடத்திலுமே சொல்லிக் கொடுப்பதில்லை. இதையெல்லாம் பிள்ளைகள், தங்களின் பெற்றோரைப் பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள். அதனால்தான் பணக்காரர்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் படிக்கிறார்களோ இல்லையோ… மீன் குஞ்சுக்குத் தானாகவே நீச்சல் வருவது மாதிரி அவர்களுக்குச் செல்வத்தைப் பெருக்கும் கலை தானாகவே வந்துவிடுகிறது. ஆனால் மிடில் கிளாஸ் வீட்டுப் பிள்ளைகள், என்னதான் நன்றாகப் படித்தாலும் அவர்களால் பணக்காரர்களாக முடிவதில்லை!’’ என்றார் ராபர்ட்.
‘‘பள்ளிக்கூடம் போகப் போவதில்லை. பணக்காரனாகப் போகிறேன் என்று சொன்ன உனது மகன் மாதிரிதான் சிறுவனாக இருந்தபோது நானும் என் அப்பாவிடம் சொன்னேன். அது இருக்கட்டும்… உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? எனக்கு இரண்டு அப்பாக்கள். ஒரு அப்பா ஏழை! இன்னொரு அப்பா பணக்காரர்!’’ என்று எடுத்த எடுப்பிலேயே புதிர் போட்டார் ராபர்ட்.
அவரே அதை அவிழ்க்க ஆரம்பித்தார்… ‘‘பேப்பர் படித்துக் கொண்டிருந்த என் ஏழை அப்பாவிடம், ‘பணக்காரனாக வேண்டும். அதற்கு என்ன வழி?’ என்று ஒருநாள் கேட்டேன். ‘ஏன் இப்படிக் கேட்கிறாய்?’ என்று என்னிடம் கேட்டார் அப்பா. ‘இன்று என் நண்பன் ஒரு பார்ட்டிக்காக வகுப்பில் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்தான். ஆனால், என்னையும் என் இன்னொரு நண்பனான மைக்கையும் மட்டும் அவன் அழைக்கவில்லை’ என்றேன்.
‘ஏன் அழைக்கவில்லை?’ என்று கேட்டார் அப்பா. ‘காரணம், நாங்கள் இருவரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இல்லை. அதனால்தான் கேட்கிறேன்… நான் பணக்காரனாக என்ன வழி?’
இந்தக் கேள்விக்கு என் அப்பா பதிலேதும் சொல்லவில்லை. அப்போது எனக்கு வயது ஒன்பது. அடுத்த நாள் என்னைப் போலவே பார்ட்டிக்கு அழைப்பு கிடைக்காத என் நண்பன் மைக்கைச் சந்தித்தேன்.
‘பணக்காரன் ஆவது எப்படி?’ என்ற கேள்வி என்னைப் போலவே மைக்கின் மனதிலும் ஒரு உறுத்தலாக உட்கார்ந்து இருந்தது. அப்போது மைக்கின் அப்பாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என் அப்பா மாதிரி அதிகம் படித்தவர் இல்லை. ஆனால், என் அப்பாவைவிட அதிகமாகச் சம்பாதிப்பவர். பெரிய பணக்காரர் இல்லை. ஆனால், பணக்காராக ஆகிக் கொண்டிருப்பவர். கட்டட காண்ட்ராக்டராக இருக்கிறார். ஒரு மளிகைக் கடையும் நடத்துகிறார். அடுத்த ஊரில் புதிதாக ஒரு ஓட்டல்கூட ஆரம்பித்திருப்பதாக மைக் சொன்னான். என் அப்பாவிடம் கேட்ட அதே கேள்வியை மைக்கின் அப்பாவிடமும் கேட்டேன். ‘உன் கேள்வி எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், பணக்காரனாவது எப்படி என்பதை, நான் வகுப்பறையில் உட்காரவைத்து உனக்குப் பாடம் எடுப்பது மாதிரி சொல்லிக்கொடுக்க மாட்டேன். விடுமுறை நாட்களில் எனது மளிகைக் கடைக்கு வா. இருவரும் வந்து வேலை பழகுங்கள். அப்படி வந்தால், பணக்காரனாவது எப்படி என்று நான் கற்றுத்தருகிறேன்’ என்றார்.
ஒரு மாதத்துக்குப் பிறகு அவர் கற்றுக்கொடுத்த பாடம்தான் அவரை நான் ‘என் பணக்கார அப்பா’ என்று இப்போதும் பெருமையோடு சொல்லிக்கொள்ளக் காரணம்’’ என்றார் ராபர்ட்

No comments:

Post a Comment