Tuesday, July 21, 2015

மந்திர தியானம் செய்யும் முறை

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலுக்கோ, பூஜையறைக்கோ சென்று தங்கள் இஷ்ட தெய்வத்திடம் இருந்து அந்த மந்திரச் சொல்லைப் பெறுவதாக கண்களை மூடிக்கொண்டு மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். 

இல்லாவிட்டால் நீங்கள் தொழும் மகானிடமிருந்து அதைப் பெறுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். மந்திர தியானம் செய்யும் முறையைப் பார்க்கலாம். சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பே கடிகாரத்தில் அலாரம் செட் செய்து விட்டு தியானத்தை ஆரம்பித்தால் அடிக்கடி கடிகாரத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. 

அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். கண்களை மூடிக்கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும். மூச்சு சீராகவும், ஆழமாகவும் தானாக மாறும் வரை உங்கள் கவனம் அதன் மீது இருக்கட்டும். மூச்சு சீரான பிறகு அந்த மந்திரத்தை மௌனமாக மனதிற்குள் சொல்ல ஆரம்பியுங்கள்.

ஆரம்பத்தில் அது சிரமமாகத் தோன்றுபவர்கள் சில நாட்களுக்கு மட்டும் வாய் விட்டே மெல்ல சொல்லலாம். ஆனால் சில நாட்கள் கழிந்த பின் மனதிற்குள் மௌனமாக உச்சரிக்க ஆரம்பித்து விட வேண்டும். அந்த மந்திரத்தை நிறுத்தி நிதானமாக உச்சரியுங்கள். 

உச்சரிக்கும் விதம் மிக வேகமாகவோ, மிக நிதானமாகவோ இல்லாமல் சாதாரண நிதானத்துடன் இருக்கட்டும். உங்கள் முழு கவனமும் நீங்கள் மனதில் உச்சரிக்கும் அந்த மந்திரத்தின் மீதே இருக்கட்டும். சில முறைக்குப் பின் மனம் கண்டிப்பாக அலைய ஆரம்பிக்கும். 

எத்தனை முறை அலைந்தாலும் பொறுமையாக அந்த அதை திரும்ப மந்திரத்திற்கே கொண்டு வாருங்கள். உட்காரும் நிலை சில உணர்வுகளை உடலில் ஏற்படுத்தக் கூடும். அதில் கவனம் செல்லும் போதும் மீண்டும் மனதை மந்திரத்திற்கே கொண்டு வாருங்கள். தியானத்தின் போது மந்திரம் உச்சரிப்பது நின்று போகலாம். 

நீங்கள் மந்திரத்தை உச்சரிக்கும் வேகம் அதிகரிக்கவோ, குறையவோ செய்யலாம். அப்போதெல்லாம். மனதில் மந்திரம் அல்லாமல் வேறெதோ எண்ணம் நுழைந்து விட்டது என்று பொருள். அப்படி எல்லாம் ஆகும் போது சலிப்படையக் கூடாது. இந்தக் கட்டத்தை எல்லாம் தாண்டாமல் யாரும் தியானங்களில் உயர்நிலைகள் அடைய முடிந்ததில்லை. 

திரும்பத் திரும்ப ஆரம்பித்த அதே ஆர்வத்துடன் அதே நிதானமான முறையில் மந்திரத்தை மீண்டும் உச்சரிக்க ஆரம்பியுங்கள். ஒரு சில நாட்களில் அந்த மந்திரம் உங்களுக்குள் பெரும் மாற்றங்கள் கொண்டு வரும். அப்போதும் கூட அந்த மாற்றங்களைப் பற்றி அந்த தியான நேரத்தில் சிந்திக்க ஆரம்பித்து விடாதீர்கள். 

அந்த மந்திரச் சொல்லில் மீண்டும் மீண்டும் லயிக்க விடுங்கள். தியானம் நல்ல முறையில் கைகூடிய பின் ஒரு நாளில் ஒரு கட்டத்தில் நீங்கள் மந்திரத்தை மட்டுமே உணர்ந்தவராய் இருப்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே அந்த மந்திரத்தை உச்சரிப்பது போல உணர்வீர்கள். 

அந்த மந்திரமே உங்கள் பிரபஞ்சமாகி விடும். ஒரு பேரமைதியினை நீங்கள் ஆழமாக உணர்வீர்கள். காலம் அந்த சமயத்தில் ஸ்தம்பித்துப் போவதாய் உணர்வீர்கள். மனம் அலைகின்ற நேரத்தில் அதைப் பொருட்படுத்தாமல் எப்படி அதை மீண்டும் மந்திரத்திற்குக் கொண்டு வருவீர்களோ அப்படியே இந்த எதிர்பார்ப்புகள் வரும் போதும் அதை ஒரு விலகலாக எண்ணி மீண்டும் மனதை மந்திரத்திற்குக் கொண்டு வாருங்க்ள். 

தியானத்தை முடித்த பின்னர் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் எழுங்கள்.

No comments:

Post a Comment