வேதம் என்றால் என்ன?
எதற்கு?
இந்தியப் பண்பாட்டுக்குப் பழமையான ஆதாரமான முதல்நூல் வேதம்.
உலகிலேயே மிகவும் பழமையான நூல் வேதம் என்பதைச் சரித்திர வல்லுனர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
வேதம் என்றால் ஞானம். பரம்ப்ருளை அறிவிக்கும் வழி, பேரறிவைப் பார்த்தல் என்ற பல பொருள்கள் உண்டு.
இவ்வுலக நன்னெறியையும் தெய்வீக நெறியையும் அறிவிக்கும் நூல் வேதம்.
அந்த அந்த ஸ்வரங்களைத் தவறாமல் உச்சரித்தால் பயன் தரக்கூடிய வல்லமை பெற்ற மந்திரங்களைக் கொண்ட பழநூலே வேதமாகும்.
மாந்தர் நல்வழியில் வாழ்ந்து விரும்பியவற்றை பெறவும் தீமைகளை விலக்கவும் தெய்விகமான உபாயங்களை அறிவிக்கும் கிரந்தமே வேதம்.
இஷ்டப்ராப்தி – அநிஷ்டபரிஹாரயோ:, அலௌகிகம் உபாயம் யோ க்ரந்தோ வேதயதி ஸ வேத: என்று வேத பாஷ்யகாரரான ஸாயணர் என்ற மஹரிஷி வேத்த்துக்கு லக்ஷணம் கூறியிருக்கிறார்.
மாந்தரைத் தெய்வீக நெறியில் வாழ வழி கூறுவது வேதம். இன்னும் வைணவர்கள் ஒருவரை ஒருவர் “ தேவரீர் “ என்று சொல்லி வழங்குவதைப் பார்க்கிறோம். மாந்தரை மனிதராக வாழ வழி காட்டுபவை. வேத ரிஷிகள் அல்லாத பிறர் இயற்றிய நூலகள் மாந்தரை விலங்கு வழியில் செலுத்தும் நூல்களையும் இன்று சிலர் எழுதுவதைக் காண்கிறோம்.
“ பகவத் ஸங்கல்பம் – இறைவனது திருவுள்ளம் என்பதை மையமாகப் பற்றிக் கொண்டு நன்னெறியில் வாழ்ந்துள்ள பலரை நாம் நேரில் கண்டிருக்கிறோம். நல்ல வாழ்வுக்கு வழி காட்டும் வேதத்தையே அவர்கள் ந்டைமுறையில் கடைப்பிடித்திருந்தார்கள்.
யுகம் யுகமாக என்றும் நிலைத்துள்ள வேத மந்திரங்களை ரிஷிகள் நெடும் தவத்தினாலும் மன ஆற்றலினாலும் கண்டார்கள்.
மிகவும் நுட்பமான அறிவு வடிவில் இருக்கும் வாக்கே “பரா” என்பது: இதுதான் வேதம், ரிஷிகள் இதைக் கண்டதும் இந்த வாக்கு “பஸ்யந்தி” என்ற பெயர் பெற்றது. சொல் வடிவாகத் தோன்றும் வேதம் இது. இதற்கு இடம் நாபி {தொப்புல்} இது ஸ்தூல வடிவம் கொள்ளும் போது “ மத்யமா வாக்கு “ ஆகிறது.
இதற்கு இடம் இருதயம். இதுவே நெஞ்சு வழியாக வெளிவரும்போது ஒலி வடிவம் பெற்று “ வைகரீ வாக்கு “ ஆகிறது.
வேதம் அநாதி, என்றும் உள்ளது; இறைவனின் மூச்சுக் காற்று இது. வானத்தில் எப்போதும் ஒலிவடிவமாக இது மறைந்துள்ளது.
“மலைக் குகைகளிலும், ஆறுகள் சங்கமிக்கும் இடங்களிலும் பேரறிவு வாய்ந்த ரிஷிகள், வேத மந்திரங்களை வெளியிடப் பிறந்தார்கள்.” – உபஹ்வரே கிரீணாம், ஸங்கதே ச நதீநாம், தியாவிப்ரோ அஜாயத – என்று ரிக்வேதம் கூறுகிறது. நம் சமயப் பெரியோர்கள் யாவரும் இத்தகைய புனித இடங்களிலேயே அவதாரம் செய்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.
“ வேதம் முழுவதுமே மாந்தரின் நற்கடமையைப் போதிக்கிறது “ என்பது ஜைமினியின் கொள்கை. {மீமாம்ஸா ஸூத்ரம், 1-2-1}
“ ரிஷிகள் வேத மந்திரங்களைக் கண்டவர்கள். இயற்றியவர்களல்லர் “ என்று நிருத்தம் கூறுகிறது. அந்த அந்தக் காலத்தில் முன்பு இருந்தபடியே வேத மந்திரங்கள் முனிவர் வாயிலாக வெளி வருகின்றன.
அளவற்று ஒன்றாக இருந்த வேதத்தை வியாச மஹரிஷி உலக நன்மைக்காக மந்திரங்களைத் தொகுத்து நால்வகையாக வகுத்தார்.
“ ரிக், யஜுர், சாம, அதர்வண “ என்று வேதம் நான்காக வகுக்கப் பெற்றதைப் புருஷ ஸூக்தம் தெரிவிக்கிறது.
இந்த நான்கு வேதங்களும் ஒன்றுடன் மற்றொன்று தொடர்பு கொண்டவை.
ரிக் வேதம் தேவர்களைப் பற்றிய துதிகளின் தொகுப்பு;
யஜுர் வேதம் வேள்வி முறைகளை வர்ணித்து உரைப்பது;
ஸாம வேதம் வேத மந்திரங்களை இசைத்துப் பாடுவது;
அதர்வண வேதம் மாந்தர் இந்த உலகில் நோயின்றி நீண்ட வாழ்வு வாழ உதவும் மூலிகைகளைப் பற்றியும், மருத்துவம் பற்றியும், ஆயுளை நீட்க்கும் மந்திரங்கள் பற்றியும் விரிவாக கூறுவது. ஜோதிடம், மாந்திரீகம், தாந்திரீகம் எல்லாம் இதில் அடக்கம்.
இந்த வேதங்களுக்கும் அவற்றின் அங்கங்களுக்கும் உரை இயற்றிய வேத பாஷ்யகாரர்கள் எழுபது பேர் விளங்குகிறார்கள்.
வேதப் பகுதிகளில் ஐயத்துக்கு இடமான பொருள்களை நன்கு விளக்குவது – பிராம்மணம் என்ற நூல்.
மூல நூலான ஒவ்வொரு வேத சமிதைக்கும் அதைச் சார்ந்த பிராம்மணம் உண்டு.
வேதவ்யாக்யா நரூபத்வாத் ப்ராஹ்மணஸ்ய – வேதத்துக்கு உரையாக விங்குவது ப்ராஹ்மணம் என்று ஸாயனர் கூருகிறார்.
பிராம்மணத்துடன் இணைந்தது ஆரண்யகம் என்ற பகுதி.
ஆற்றங்கரையில் தவ வனங்களில் ரிஷிகள் ஆராய்ந்து மிக்க அமைதியுடன் கண்ட உண்மைகளை ஆரண்யகம் அறிவிக்கிறது.
ஆரண்யகத்தின் கடைசியில் வருவது உபநிஷத் – முடிந்த முடிவான ஆராய்ச்சி உண்மைகளைக் கூறுவது இதனால்தான் உபநிஷத்துக்கு “ வேதாந்தம் “ என்று பெயர். இந்த விதிக்கு விலக்காக, சுக்ல யஜுர் வேதத்து வாஜஸ்னேய ஸமிதையின் விளங்குவது – ஈசாவாஸ்ய உபநிஷதம்.
சதபதப் பிராம்மணத்தின் கடைசியில் ஆரண்யகமும் உபநிஷதமுமாக விளங்குவது பிருகதாரண்யகோபநிஷத்.
வேத மந்திரங்களுக்குப் பொருள் விளங்கவில்லை என்றால் அது மந்திரங்களின் குற்றமல்ல. குருடனுக்கு எதிரே இருக்கும் கம்பம் தெரியா விட்டால் அது கம்பத்தின் குற்றமல்ல குருடன் இயற்றிய குற்றமாகும். என்று யாஸ்கர் உரைக்கிறார்.
வேத மந்திரங்களுக்கு முதன் முதலாக உரை வகுத்தவர் யாஸ்கர்; அவர் பழமையான ஸம்ஸ்கிருத மொழி இலக்கணத்தில் மிகவும் வல்லவர்.
ரிக் வேத ஸூக்தங்கள் ஒரே பரம்பொருள் தெய்வீக நெறியில் கடமைகளை ஆற்றுவதற்காக அக்கினி, இந்திரன், சோமன், வருணன், விஷ்ணு முதலிய பல வடிவங்களில் தோன்றுவதை வர்ணிக்கின்றன.
அக்கினி வானத்தில் சூரியனாகவும், இடைவெளியில் வாயுவாகவும் பூவுலகில் நெருப்பாகவும் விளங்குகிறான். அவனே வீட்டைக் காக்கும் தெய்வம்.
வருணன் கடல்வாழ் தெய்வம்; மாந்தரின் பாவ புண்ணியங்களை அவன் காண்கிறான்; வருணபாசம் பாவிகளைக் கட்டுப்படுத்துகிறது.
மூவடியினால் மூவுலகங்களிலும் வியாபித்த விஷ்ணு கடுமையான இடங்களிலும் மலைக் குகைகளிலும் திரிகிறான்; இவனுடைய ஈரடிகளை மாந்தர் இவ்வுலகில் காண இயலும்; மூன்றாவது திருவடி, மிகவும் உயர்ந்த விண்ணுலகில் விளங்குகிறது; வெள்ளத்தைப் பருகிப் பேரானந்தம் எய்துகின்றனர்.
வாயுதேவன் காதைச் செவிபடுத்தும் இடியோசையை உண்டாக்கி மின்னலுடன் மழையைப் பொழியத் தூண்டுகிறான். புயற்காற்றினால் பெரிய பெரிய மரங்கள் ஆடி வேரற்று விழும் போது இவனுடைய கடும் வடிவத்தை நாம் காண்கிறோம்.
இந்திரன் தெய்வ உலகுக்கு அரசனாக விளங்கி மாந்தரின் நலனுக்காக மழையைப் பொழிகிறான். தனக்கு இடையூறு இழைக்கும் பாவ வடிவினனான விருத்திரனை அழித்து அவன் வெற்றிவாகை சூடுகிறான்.
நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு மருத்துவமும் ஆயுதச் சிகிச்சையும் செய்து உதவுகிற தெய்வீக மருத்துவ இரட்டையர் – அஸ்வினி தேவர் ஆவர்.
இவ்வாறு தேவர்கள் பல வடிவங்களில் உலகுக்குக் காப்பாக இருந்து துணைபுரிகின்றனர்.
கிடைக்கும் பொருளைக் கொண்டு போதுமென்று மனதுடன் அமைதியாக வாழ்வாயாக – வித்தே ரமஸ்வ பஹுமந்யமாந: என்று வேதம் கூறுகிறது.
சூதாட்டம் வேண்டாம்; வேளான்மை செய்து தொழில் செய்து பிழைப்பாயாக – அக்ஷைர் பா திவ்ய:, க்ருஷிமித் க்ருஷஸ்வ என்கிறது வேதம்.
“ தன்னிடம் மிகுதியாக உள்ளதை மாந்தர் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். பட்டினி இருந்து சாவதற்காகத் தேவர்கள் பசியை படைக்கவில்லை. ஈயாப் பித்தனும் ஒரு நாள் இறந்தே போவான். பிறருக்குக் கொடுப்பவனது செல்வம் என்றும் குறைவதில்லை. பிறருக்குச் சோறு இடாதவனுக்கு ஆபத்தில் உதவ ஈ காக்கையும் வராது எனவே கொடை என்பது சிறந்த பண்பு; அனைவருக்கும் இந்த பண்பு இராது. இரண்டு கைகள் ஒரே ஆற்றலுடன் வேலை செய்வதில்லை; இரட்டையராக இருப்பினும் ஒருவருக்கு உள்ள ஆற்றல் மற்றொருவருக்கு இருப்பது இல்லை; அண்ணன் தம்பியராயினும் ஒருவரைப் போல் மற்றவர் கொடுப்பதில்லை” என்று ரிக் வேதம் { 10-1-17} கூறுகிறது.
வேதம் நமது என்றும் அழியாத பெருஞ்செல்வம். அதைக் காத்துப் போற்றி மகிழ்வது நமது இன்றிமையாத கடமை; பேரின்பம் நல்கும் கடமையும் கூட.
No comments:
Post a Comment