Tuesday, June 21, 2016

பிண்ணாக்கீசர் எனும் தன்னாசியப்பர் ஜீவசமாதி -கோவை--பெரியநாயக்கன் பாளையம் :

பிண்ணாக்கீசர் எனும் தன்னாசியப்பர் ஜீவசமாதி -கோவை--பெரியநாயக்கன் பாளையம் : 

                
            >> ஆதி- பதினெட்டு  சித்தர்களின் ஒருவரான பிண்ணாக்கீசர் காங்கேயம் அருகே பிரசித்தி பெற்ற தெய்வீகத் திருத் தலமான சென்னிமலையில்  ஜீவசமாதி கொண்டுள்ளார் . இவர்க்கு தன்னாசியப்பர் என்ற நாமமும் உள்ளது . பிண்ணாக்கீசர் --பிளவு பட்ட நாக்கினால் யோக சித்தி பெற்றவர் . 

       சர்ப்ப யோகமான இலம்பிகா யோகம்  :: 
                      >>  இந்த யோகியால் பின்பற்ற பட்டது.சிலருக்கு இயற்கையாக நாக்கு பிளவு பட்டதாக இருக்கும் ..சிலர் நாக்கின் அடி பக்கத்தை அறுத்து விட்டுகொள்வர். பிண்ணாகீசர்க்கு இயற்கையாக நாக்கு பிளவு பட்டதாக இருந்தது பிளவு பட்ட நாக்கில் ஒன்றை தொண்டையின் மேல் பகுதியில் நுழைத்து தலை உச்சி பகுதியில் கொண்டு வந்து வைத்து கொள்வர் ..இதனால் பசி தாகம் இல்லாத சித்து நிலை வரும் ..இது சித்தர்களின் உன்னதமான நிலை ஆகும்.. இவ்வகை யோகிகள் ஒரு நாக்கால் மற்றொரு நாக்கை இழுத்து விட்டு கொண்டு சகச நிலைக்கு திரும்புவார்கள் . நாக்கை நடு நாடியில் செலுத்த கபாலதேன் எனும் அமுது சுரக்கப்படும் ..அதனால் மெய்ஞானம் பிறக்கும்.

   

          >> சென்னிமலையில்  ஜீவசமாதி பெற்ற பிண்ணாக்கீசர் எனும் தன்னாசியப்பர் கோவை--பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த செல்வபுரத்திலும் ஜீவ ஐக்கியம் பெற்று உள்ளார் .கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆளரவமே இல்லாத இந்த மலைக்கு அருகே  உள்ள சிறிய குகையில் தன்னாசி அப்பர் எனும்  சித்தர் ஒருவர் வசித்து வந்தார். இவர் தினமும் மலையடிவாரத்தில் இருந்த ஆலமரத்திற்கு கீழ் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். அப்பகுதியில் கால்நடை மேய்ப்போர் இவரிடம் பழகி வந்தனர். யாரிடமும் அதிகம் பேசாமல் அடிக்கடி நிஷ்டையில் இருந்த இவரின் முகத்தில் இருந்த தேஜஸக் கண்டு பின்னாளில் வணங்க ஆரம்பித்தனர். அத்துடன் தமக்கு வந்த கஷ்டங்களை சொல்லி அதனை போக்கவும் வேண்டினர். அவர் அருளாசி வழங்கியதால் நோய்கள் பறந்தோடின. இதனால் சித்தரின் புகழ் மற்ற கிராமங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.

            >>   இந்நிலையில் ஒருநாள் குகைக்குள் சென்றவர் மீண்டும் வெளியில் வரவேயில்லை. இதனால் அதிர்ச்சியுற்ற மக்கள் அவரின் வரவிற்காகக் காத்திருந்தனர். குகைக்குள் செல்லவும் பயம். ஆனால் இறுதிவரை அவர் வெளியில் வரவே இல்லை. பெரும்பாலும் வெகு அமைதியாக வனவிலங்குகள் சுற்றித் திரிந்த அந்த பகுதியில் அவரை வணங்கக் காத்திருந்தவர்கள் அவர் வராமல் போகவே வருத்தமடைந்தனர். அவர் தவம் செய்த ஆலமரத்திற்கு கீழ் சிலை வைத்து அவரை வணங்க ஆரம்பித்தனர். பிற்காலத்தில் பலர் தங்கள் நோய் தீர அங்கேயே தங்கி வணங்கினர். வனவிலங்குகள் அதிகமிருந்ததால் ஆண்டிற்கொரு முறை மட்டும் அங்கு விழா நடத்திக் கொண்டாடினர். தற்போது பல்வேறு பக்தர்களின் பணியினால் இன்று மிகப் பெரிய ஆலயமாகத் திகழும் இக்கோயிலில் இரு வேளை பூஜை நடக்கிறது.

          >>  பக்தர்களின் அருட்கொடையால் தற்போது கருவறை,விமானம், முன்மண்டபம் கட்டப்பட்டு சிறப்புறக் காட்சியளிக்கிறது. கருவறையில் தன்னாசி ஈசர் மிகப் பெரிய மீசையுடன் அருள்பாலிக்கிறார். கோயிலின் தெற்குப் பகுதியில் விநாயகர் கோயில் உள்ளது. வடக்குப் பகுதியில் பெருமாள் கோயிலும், அதற்குப் பின்னால் ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளன. மேற்குப் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது.
பதினெட்டு சித்தர்களுக்கும் கோவில் அமைத்து உள்ளனர் 

       >> மருத்துவ சிகிச்சைகளால் தீர்க்க முடியாத  புத்திசுவாதீனம் இல்லாதவர்கள்,பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலில் தங்கி மூலிகை சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தற்போது உள்ள அர்ச்சகர் இதனைச் செய்கிறார். இந்நோய்களால் பாதிக்கப்பட்ட பலர் இங்கே தங்கி தன்னாசி ஈசரின் அருளால் குணமாகிச் செல்வது காலங்காலமாக நிகழ்ந்து வரும் அற்புதம்.

அமைவிடம்: கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் 20 கி.மீ. தொலைவில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வீரபாண்டி பிரிவில் இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே திருமலைநாயக்கன்பாளையம் வழியாக 5 கி.மீ. தொலைவில் உள்ள செல்வபுரம் கிராமத்திற்கு வரவேண்டும். இதுவரை பேருந்து வசதி உள்ளது. இதற்கு பின் மீண்டும் மேற்கே 2 கி.மீ. தொலைவு தோட்டங்களினூடே செல்லும் பாதையில் நடந்து சென்றால் கோயிலை அடையலாம். தங்குவதற்கு வசதியுண்டு.
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரை.மாலை 4 மணிமுதல் 7 மணிவரை.

No comments:

Post a Comment