இனிய காலை வணக்கம்
தமிழரின் வானியல் சிந்தனைக்கு சில எடுத்துக்காட்டு
சங்க காலத் தமிழர் விண்ணின் கோள்களையும் காற்று மண்டலத்தையும் அவற்றின் இயக்கங்களையும், கால அளவுகளையும் அளவிட்டறியும் வானியல் அறிவியலை அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு நம் தமிழ் இலக்கியங்களே சான்றாகும். விண்ணைக் கடந்து, அண்டங்கள் நுழைந்து, அறிவாராய்ச்சி வரலாற்றை (Epistemology) ஆவணப்படுத்தி வைத்தனர்.
உலகம் உருண்டை என்பதை மேற்குலகம் கண்டறிந்து கூறியதே 16-ஆம் நூற்றாண்டில்தான். ஆனால், இதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர், தங்கள் முன்னோர் வழியாக "உலகம் உருண்டை' என்னும் உண்மையைப் பரவலாகத் தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்குத் திருவாசகமே (திருவண்டப்பகுதி) சான்றாகத் திகழ்கிறது.
""அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன''
இவ்வண்டப் பகுதியில் உள்ள வரிகள் வானியல் என்னும் அடிப்படை அறிவியல் குறித்த மூன்று முக்கியச் செய்திகளைக் கூறுகிறது. ஒன்று, "உலகம் அல்லது இந்தப் பூமி உருண்டை வடிவமானது; இரண்டாவது, நூற்றொருக்கோடி வான்பொருள்கள், இதுபோல் உருண்டை வடிவமாக இப்பேரண்டத்தில் உள்ளன என்பது; மூன்றாவது, இவை இருக்கும் வெளி விரிந்துகொண்டே போகிறது என்னும் செய்திகள். வான்வெளியில் நிகழும் அற்புதங்கள் குறித்து மாணிக்கவாசகர் மட்டுமே மிக விரிவாகப் பாடியுள்ளார்.
இயற்கையின் அடிப்படையாக இருப்பவை எவை என்பதை மேற்குலகம் அறிவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அது பற்றிய அறிவியல் அறிவும் ஐம்பூதங்கள் பற்றிய அறிவியல் அறிவும் தமிழருக்கு இருந்தது. வடமொழி வாணர்களான ஆரியர் கூட சதுர்பூதம் என்னும் நான்கு கூறுகளை மட்டுமே அறிந்திருந்தனர். காற்று வேறு, அது இயங்கும் வெளி வேறு என்றும்; அந்த வெளியின் பெயர் "விசும்பு' என்ற தெளிவும் தமிழரிடம் இருந்தது.
""மண் திணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புவதை வருவளியும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை''
என்று புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. புற இயற்கைக்கு மட்டுமன்றி மனித உடலுக்கும் இந்த ஐம்பூதங்களே அடிப்படை என்பதை "அண்டமே பிண்டம்' என்னும் சொற்களால் தமிழர் வரையறுத்தனர். இது அடிப்படை அறிவியல் அறிவாகும் டாப்ளர் விளைவை (Doppler Effect)
வைத்து 20-ஆம் நூற்றாண்டில்தான் இந்த விசும்பு அண்ட வெளி விரிவடைந்து வருகிறது என்னும் உண்மையை மேற்குலக அறிவியல் அறிந்தது.
இதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகலிருவிசும்பு என்று தொல்காப்பியம் கூறுகிறது. "வளிதிரி தரு மண்டலம்' என்னும் காற்றே இல்லாத வெட்டவெளி (விசும்பு) இருக்கிறது என்னும் உண்மையையும், விமானியால் செலுத்தப்படாத வானூர்தியைப் பழந்தமிழர் விண்ணில் செலுத்தி இருக்கலாம் எனவும் உணர்த்துகிறது.
இதனை, ""வறிது நிலை இய காயமும்'' (புறம்:30) என்றும், ""வலவன் ஏவா வானூர்தி'' (புறம் 27) என்றும் புறநானூற்றுப் பாடல் வரிகள் உணர்த்துகின்றன.
20-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்புச் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது என்னும் தகவல், விஞ்ஞானிகளால்
ஏவுகணை, செயற்கைக்கோள் தொழில்நுட்ப வசதிகளைக்கொண்டு உறுதி செய்யப்பட்டது.
ஆனால், காலங்கணிக்க முடியாத காலத்தே சிவந்தது என்னும் பொருள்படும்படியாகச் செவ்வாய் என்னும் பெயரைத் தமிழர் வைத்திருப்பது வியப்பிற்கு உரியதாகும்!
இவை மட்டுமல்ல, தமிழர்களின் வானியல் சிந்தனைகள் குறித்து பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறிக்கொண்டே செல்லலாம்.
No comments:
Post a Comment