Friday, June 17, 2016

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்

🌼மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்🌼

🌼 - பார்வை🌼

🌼அவன் மீன் விற்பதற்காக முதன் முதலாக கடைவீதிக்கு வந்தான்!

🌼ஒரு கூடை நிறைய மீன்களுடன் சந்தடி உள்ள ஓர் இடமாகப் பார்த்துக் கூடையை வைத்து விட்டு. அதற்கு மேலே உள்ள சுவரில் ஒரு பலகையை மாட்டி, "இங்கே புது மீன் விற்பனை செய்யப்படும் !" என்று எழுதி வைத்தான். வாசகம் சரியாக இருக்கிறதா என்று அவனுக்குச் சந்தேகம்.

🌼தான் எழுதியதைத் தானே ஒரு முறை படித்துப் பார்த்தான். "யாராவது பழைய மீனை விற்பார்களா என்ன ?" என்று அவனுக்குள்ளே கேள்வி எழ.. புது என்ற வார்த்தை தேவையில்லை என்று அவனுக்குப் பட்டது. அந்த வார்த்தையை அழித்து விட்டு. எஞ்சி உள்ள வார்த்தைகளைப் படித்துப் பார்த்தான்.

🌼"இங்கே மீன் விற்பனை செய்யப்படும்" என்றிருந்தது ! "சரிதான்.. மீனைத் தானம் செய்வதற்காக கடை வீதிக்குக் கொண்டு வருவார்கள்" என்று தோன்றியது. "விற்பனை செய்யப்படும்" என்ற வார்த்தைகளும் தேவையில்லை என்றே அவனுக்குப் பட்டது. அதையும் அழித்து விட்டு இப்போது படித்துப் பார்த்தான்.

🌼"இங்கே மீன்" என்று இருந்தது. அவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. பார்த்த மாத்திரத்திலேயே மீன் இங்கே இருக்கிறது என்றுதான் தெரிகிறதே அப்புறம் எதற்கு வீணாக இங்கே என்ற வார்த்தை "இங்கே" யையும் அவன் அழித்தான். இப்போது "மீன்" என்ற வார்த்தை மட்டும் இருந்தது. மீனை சுவைத்துத் தின்னத் தெரிந்தவர்களுக்கு பார்த்ததுமே தெரிந்து விடாதா ? அது "மீன்" என்று, என்ற எண்ணம் உருவாக.. அந்த ஒரு வார்த்தையையும் அவன் அழித்து விட்டான் ! இப்போது பலகையில் எந்த வார்த்தையும் இல்லை !

🌼மீன் விற்பனை செய்தவன் பலகையில் எழுதி வைத்த வாக்கியத்தைப் போலத்தான் நமது பல பிரச்னைகளும் !

🌼பிரச்னைகளை நாம் சரியாக  பார்க்கக் கற்றுக் கொண்டால், பலகையில் எழுதி வைத்த எழுத்துக்களைப் போலப் பிரச்னைகளும் படிப்படியாக மறைந்து விடும் ! ஆனால், இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால் நம்மில் பலருக்குப் பார்க்கவே தெரிவதில்லை !

🌼Philosophy என்ற ஆங்கில வார்த்தையைத் தமிழில் "தத்துவம்" என்று சொல்லலாம். சமஸ்கிருத மொழியில் இதற்கு "தரிசனம்" என்று பெயர். ஆம் - "பார்ப்பது" என்று பொருள், பார்ப்பதற்கு என்னவெல்லாம் தேவை ? 

🌼கண்கள் மட்டும் இருந்தால் போதுமா ? 
விழிகள் இருந்தால் போதாது.. "விழிப்பு உணர்வு தேவை" என்கிறார் பகவான் கிருஷ்ணர் ! இந்த விழிப்பு உணர்வு இருந்தால்தான். பொருட்கள், மனிதர்கள், நாம் - இந்த மூன்றையும் எப்படி வித்தியாசப்படுத்திப் பார்ப்பது என்பது நமக்குப் புலப்படும்.

🌼"எத்தனை வீடு வைத்திருக்கிறாய் ? அது எவ்வளவு மதிப்பு ?""என்ன கார் வைத்திருக்கிறாய் ? எத்தனையாவது ஆண்டு மாடல் ?" என்றுதான் பொருட்களைப் பற்றிப் பேசும்போது குறிப்பிடுவோம். மேலும், பொருட்கள் எல்லாமே கருவிகள். அதனால், பொருட்களைக் கணித ரிதியாக பார்க்க வேண்டும். பொருட்களைக் கருவியைப் போலத்தான் பார்க்க வேண்டும் ! பயன்படுத்த வேண்டும் !

🌼சரி , அடுத்து மனிதர்களை எப்படி பார்ப்பது ? பொருட்களைப் பார்க்கப் பயன்படுத்தும் அதே அளவுகோலை வைத்து மனிதர்களைப் பார்க்கக் கூடாது. அன்புடன் அப்பா, பாசமுள்ள அம்மா, நேசம் மிகுந்த சகோதரர், நன்றி மிக்க நண்பன் என்று மனிதர்களைப் பார்க்கும் போது உறவு முறை அன்பு தான் இங்கே அளவுகோல் !

🌼ஆனால், நடைமுறையில் நாம் என்ன செய்கிறோம் ?

🌼கருவியாகப் பயன்படுத்த வேண்டிய வீடு, கார், டி.வி, போன்ற பொருட்கள் மீது உறவுமுறை வைக்காத குறையாக, உணர்வு ரிதியாகப் பற்றுதல் வைக்கிறோம். அன்பு வைக்கவேண்டிய அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள், சகோதரன், நண்பர்கள் போன்ற மனிதர்களை, நமக்கு வேண்டியவற்றை நிறைவேற்றித் தரும் கருவிகளாகப் பயன்படுத்துகிறோம் !

🌼பொருட்களைக் கணித ரிதியாகப் பார்க்க வேண்டும், மனிதர்களை அன்போடு பார்க்க வேண்டும், சரி, நம்மை நாமே உள்நோக்கிப் பார்ப்பது எப்படி? நம்மை எப்படிப் பார்ப்பது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், "நாம்" என்று நாம் குறிப்பிடும் உடம்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

🌼நமது உடம்பில் மூன்று உடம்புகள் உண்டு.

🌼முதலாவது, ஸ்தூல சரீரம் ! சதையாலும் எலும்புகளாலும் ஆன உடம்பு !
இரண்டாவது சூட்சும சாரீரம், அதாவது நமது அறிவு, சிந்தனை, எண்ணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நாம் !
கடைசியாக எஞ்சி நிற்பது காரண சாரீரம். சமஸ்கிருதத்தில் இதற்கு சாக்ஷி என்று பெயர். தமிழில் விழிப்பு உணர்வு (Awareness) என்று சொல்லலாம்.

🌼பார்த்தீர்களா ? இப்போது நாம் ஆரம்பித்த இடத்துக்கே வந்து விட்டோம். பிரச்னையை எதிர்கொள்ள நமக்குத் தேவை "பார்வை" பார்ப்பதற்கு தேவை "விழிப்பு உணர்வு !"

🌼பிரச்னைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது தவறு ! ஏனெனில், பிரச்னைகள் இல்லாத ஒரே இடம் சுடுகாடு மட்டும்தான். அதாவது மரணத்துக்குப் பிறகு, பிணங்களுக்கு மட்டும்தான் பிரச்னைகள் எதுவும் இருக்காது ! வாழுகிற மனிதர்கள் அனைவருக்கும் பிரச்னைகள் நிச்சயம் இருக்கும். பிரச்னைகள் இல்லை என்றால், வாழ்க்கையிலும் சுவை இருக்காது !

🌼குப்புற வீழ்வது..! அடி படுவது. வலியில் துடிப்பது ! வலியோடு வெற்றியைத் துரத்திக் கொண்டு ஓடுவது ! வெற்றிகிட்டப் போகும் தருணத்தில், எதிரி அதைத் தட்டி விடுவது ! இதெல்லாம் வாழ்க்கையில் மட்டுமல்ல.. கால் பந்தாட்டத்திலும் நடக்கிறது ! ஆனால், கால்பந்தாட்ட வீரனுக்கு அவன் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னையும்தான் சவால், சுவாரஸ்யம் !

🌼கால்பந்தாட்ட வீரன் ஒருவன் கால்பந்தை உருட்டிக் கொண்டு "கோல்" போட ஓடும்போது.. கோல் கீப்பர் உட்பட, எதிர் டீமில் இருக்கும் யாருமே அவன் பந்தைத் தடுக்காமல் ஒதுங்கி நின்றால், அந்த விளையாட்டு களை கட்டுமா..? அவனுக்கும்தான் தொடர்ந்து விளையாட உற்சாகம் பிறக்குமா..? அல்லது அப்படி ஒரு அசுவாரஸ்யமான ஆட்டத்தை யாராகிலும் ஏறெடுத்துத்தான் பார்ப்பார்களா?

🌼யோசியுங்கள்..!

 

🌼மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்..

No comments:

Post a Comment