கால்கள் துணையில்லாமல் ஒரு ஆனந்த தாண்டவம்!
பிறப்பில் இருந்தே மூளை முடக்குவாத (Cerebral Palsy) நிலையால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் 1991 ஆம் ஆண்டு சொன்னது “He will be like a vegetable”. பிறந்து பத்து மாதத்தில் அப்படி ஒரு சதைப் பிண்டமாக இருப்பான் என்று கணிக்கப்பட்ட அக்குழந்தை இன்று தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்ச் மொழிகளைச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்த இளைஞனாகத் திகழ்கிறார். திருக்குறளிலும், தமிழ் பக்தி இலக்கியங்களிலும் நல்ல ஈடுபாடு உண்டு. பலவற்றை மனப்பாடமாகச் சொல்லவும், மற்றவர்கள் சொல்வதில் பிழை திருத்தவும் முடியும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ’கலந்தாய்வு/ ஆற்றுப்படுத்துதல்’ உளவியலில் (Counseling Psychology) முதுகலைப்பட்டம் பெற்று, தற்போது கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உளவியலில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஒரு தாவர நிலையிலிருந்து வெற்றிகரமான ஒரு சாதனை இளைஞன் நிலைக்கு வந்திருக்கும் திரு K. குமரனின் வெற்றிப் பயணத்திற்கு ஆரம்ப காரணம் குமரனின் குடும்பம். விதி தந்ததை யாரும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை அல்லவா? அவர்களும் தங்களுக்குத் தரப்பட்டதை எந்த விதங்களில் எல்லாம் மேம்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் மேம்படுத்தினார்கள். குழந்தையின் மூடிய விரல்களைத் திறக்க ஆரம்பித்தது முதல் ஏராளமான உடல் இயக்கப் பயிற்சிகளைப் பல ஆண்டுகள் தொடர்ந்து செய்ய குமரனுக்கு உதவி ஊக்கப்படுத்தினார்கள். ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக் கல்வி, அதன் பின் வீட்டில் இருந்தே கல்வி என கல்வி கற்ற குமரனுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் குடும்பத்தினரும் அன்பான ஆதரவு கிடைத்தது. மருத்துவ ரீதியாக என்னென்ன செய்ய முடியுமோ அதை அவர்கள் குமரனுக்கு செய்து கொடுத்தார்கள்.
மற்றவர்கள் என்ன தான் உதவினாலும் உள்ளே ஒரு தீப்பொறி இல்லா விட்டால் எந்த நல்ல நிலையையும் யாரும் எட்டி விட முடியாது அல்லவா? குமரனின் வெற்றிக்கும் உள்ளே இருந்த தீப்பொறியும், கனவுகளும், அதற்கான அயராத உழைப்புமே மிக முக்கியமாக இருந்தன என்பதை சமீபத்தில் சென்னையில் குமரனைச் சந்தித்த போது என்னால் உணர முடிந்தது. தன் வாழ்க்கை அனுபவங்களையும் எண்ணங்களையும் “ஆனந்த தாண்டவம்” என்ற சிறு நூலில் குமரன் எழுதி இருக்கிறார். தனக்கு உதவியாக இருந்த குடும்பத்தினர், மருத்துவர்கள், நண்பர்கள் பற்றியும், கிரிக்கெட் முதல் கடவுள் வரை தன் கருத்துகளையும், மாற்றுத் திறனாளியாக தான் சந்தித்த சவால்களையும் அந்த நூலில் எழுதி இருக்கிறார். அன்பான குடும்பமும், உயர்ந்தே ஆக வேண்டும் என்ற மனஉறுதியும் இருந்தால் சாத்தியமாகாதது தான் என்ன?
கால்கள் வலுவிழந்து போய் தனியாக நிற்கக் கூட முடியாத நிலையிலும் தன் வாழ்க்கையை ஆனந்த தாண்டவமாக குமரன் சொல்வதைக் கேட்கையில் ஹெலன் கெல்லர் தன் வாழ்க்கையை “ஆனந்தமயமான சொர்க்கம்” என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
உறுப்புகள் எல்லாம் சரியாக இருந்தும் முடங்கிப் போகும் மனிதர்கள் எத்தனை எத்தனை! வாழ்க்கையே எதிர்நீச்சலாக இருந்தாலும் சளைக்காமல் நீந்திக் கரை ஏறும் குமரன் போன்றவர்கள் அவர்களுக்கு பாடமே அல்லவா?
வாழ்க்கை எல்லா நேரங்களிலும் சுலபமாக இருப்பதில்லை. சுலபமாக இருக்கும் வாழ்க்கையில் சாதனைகள் பிறப்பதில்லை. சின்னச் சின்ன அசௌகரியங்களைக் காரணம் காட்டி, சாதிக்கும் துடிப்பிழந்து போகும் மனிதர்கள், குமரனைப் போன்ற மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையையும் சாதனையையும் எண்ணிப் பார்த்தால் போதும் புத்துணர்ச்சியும் உத்வேகமும் தானாகப் பிறக்கும்.
தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தன் நூலில் அவர் கூறும் அறிவுரை இது தான். “வாழ்க்கைப் பயணத்தில் அம்மாவும் நானும் எதிர் கொண்ட வலிமிகுந்த அனுபவங்கள் ஏராளம். அதிலும் எனக்கான உடல் இயக்கப் பயிற்சிகள் நடக்கும் சமயங்களில் சிறுவனான நான் வலி தாங்காமல் அலறிய தருணங்களை அவர் கடந்து வந்த விதத்தை இப்போது நினைத்துப் பார்த்தாலும் என் கன்னங்களுக்குக் குடை தேவைப்படும் அளவுக்குக் கண்ணீர் வருகிறது. எந்தக் காரணத்திற்காகவும் பயிற்சிகளைத் தவிர்க்க என்னை அனுமதிக்காத அம்மாவின் கண்டிப்பு மிகுந்த அன்பு தான் என்னை இந்த நூலை எழுத வைத்திருக்கிறது. ஒரு வேளை வலிக்குப் பயந்து என் தாய் பயிற்சிகள் வேண்டாம் என்று சொல்லி இருந்தால் முதலில் என் தசைகள் இறுக்கம் அடைந்திருக்கும். அதனால் ஒட்டுமொத்த செயல் திறனும் பாதிக்கப்பட்டிருக்கும். இதை இப்போது நான் காணும் என்னைப் போன்றோருக்கு முடிந்த வரையில் எடுத்துக்கூறி வருகிறேன். அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் அவரவர் குறைகளின் தன்மைக்கேற்ற பயிற்சிகளைக் கண்டிப்பாகத் தொடர வேண்டும் என அன்புடன் பரிந்துரைக்கின்றேன்”.
மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் சாதனைகளுக்கான சூத்திரம் இதுவே அல்லவா? தங்களுக்கு இருக்கும் குறைபாடுகளை நீக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதை தொடர்ந்து செய்து கொண்டே வந்தால், தடையாக நிற்கும் விதியும் விலகி வழி விட்டுத் தானே ஆக வேண்டும்!
- என்.கணேசன்
No comments:
Post a Comment