Sunday, August 24, 2014

உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!

உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
உலகில் பிறந்த அனைவருமே வாழ்க்கையில் உயரவேண்டும், முன்னேற வேண்டும், வளர வேண்டும் என்று விரும்புகின்றனர்.
நீங்கள் முன்னேற, உயர, வளர விரும்பினால் உயர்ந்த குறிக்கோள் ஒன்றை வரையறுத்துக் கொண்டு, உழைக்கத் தயாராகி விடவேண்டும்.
ஆசை காரணமாக உயர்ந்த குறிக்கோளை வரையறுப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால், குறிக்கோளை நோக்கி உழைக்கத் துவங்கும் போது மலைப்பாகத் தோன்றும்.
மலைத்துப்போய் ஒதுக்கிவிடுவீர்களாயின் வாழ்க்கை முழுதும் ஆசைப்படுபராகவும், கனவு காண்பவராகவுமே கழிக்க வேண்டி நேரும்.
உங்கள் குறிக்கோளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் முடியாது என்னும் எண்ணம் உடனே வந்து உங்களிடம் ஒட்டிக்கொள்ளும்.
முடியாது என்னும் எண்ணத்தைத் தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளை, பகுதி பகுதியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். பிரித்து எண்ணிப் பார்த்தால் மலைப்போ, திகைப்போ தோன்றாது.
உங்களால் ஆயிரம் கி.மீ. நடக்க முடியுமா? என்று கேட்டால் முடியாது என்னும் பதிலை உடனே கூறி விடுவீர்கள். உங்களால் ஆயிரம் கி.மீ. தூரம் ஆயிரம் நாட்களில் நடக்க முடியுமா? என்று கேட்டால் ஏன் முடியாது? என்று உற்சாகமாக்க் கேட்பீர்கள்.
குறிக்கோளை அடைய முடியுமா? என்று ஒட்டுமொத்தமாக ஏன் சிந்திக்கிறீர்கள்? உயர்ந்த குறிக்கோள்களை பத்து ஆண்டுகளில் அடைந்தாலே மாபெரும் வெற்றிதான்.
பத்து ஆண்டுகளில் 120 மாதங்கள் உள்ளன. 3650 நாட்கள் உள்ளன. உங்கள் செயல்திட்டத்தை உருவாக்கும் போது குறிக்கோளை 10 ஆண்டுப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆண்டுப் பகுதியையும் 12 மாதப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதப் பகுதிகயையும் 30 நாட்பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.
இப்போது எளிதாகத் தோன்றுகிறதா இல்லையா? ரோம் நகரம் ஒரே நாளில் கட்டி முடிக்கப்படவில்லை, என்னும் பழமொழியைப் புரிந்து கொள்ளுங்கள்.
உலகம் பார்த்து வியக்கும் தாஜ்மகாலோ செங்கோட்டையோ பல ஆண்டுகள், பல மாதங்கள், பல்லாயிரம் நாட்கள் தொடர் உழைப்பில் உருவானவை தாமே!
பத்தடுக்கு மாளிகையேயாயினும் ஒவ்வொரு செங்கல்லாகவே அடிக்கப்படுகிறது. ஒவ்வொரு அடுக்காகவே உயர்ந்து மாளிகை ஆகிறது. ஆகவே, நீங்கள் எடுத்துக்கொண்ட குறிக்கோள் அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும். தொடர் முயற்சியும், விடா முயற்சியும் வெற்றி என்னும் பெருமையைத் தரும்.
இதை நீங்கள் புரிந்து கொண்டால் உழைப்பின் மேன்மையை உணர்ந்து செயல்படுவீர்கள். உழைப்பின் வாரா நன்மைகள் உள்ளனவா?
உழைப்பதற்கு அஞ்சுபவர்களைப் பாருங்கள் அவர்கள் இரண்டு வகையினர், ஒருவகையினர் வறுமையிலும், பற்றாக் குறையிலும் பரிதவித்துக் கொண்டிருப்பர். இன்னொரு வகையினர் குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குள்ளநரிகளாக இருப்பர்.
முதல்வகையினர் சோம்பேறிகள், இரண்டாவது வகையினர் மோசடிப் பேர்வழிகள்.
சோம்பேறிகள் தங்கள் ஆசைகளை, கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள அதிர்ஷ்டத்தை நம்பி இருப்பார்கள். லாட்டரிச்சீட்டு, குதிரைப் பந்தயம், சீட்டாட்டம் போன்றவைகளில் ஈடுபட்டு, மேலும் கடன்பாட்டு மனிதப் பிறவியை மாசுபடுத்திக் கொள்வார்கள்.
குறுக்குவழியினர் திருட்டு, ஏமாற்று, வாட்டி வதைத்து வட்டி வாங்குதல், கலப்படம், கள்ளச்சந்தை, கொள்ளை, கொலை, கொள்கையில்லா அரசியல், இலஞ்சம், ஊழல் போன்ற கொடுஞ்செயல்களால் பணம் சேர்க்க முயல்பவர்கள். இவர்கள் சேர்க்கும் செல்வம் களவினால் ஆகிய ஆக்கம். அது அளவிறந்து ஆவது போலக் கெடும்.
இந்த இருவகையிலும் சேராதவரா நீங்கள்? நல்லது. இயற்கை தரும் தண்டைனைக்குத் தப்பி விட்டீர்கள்.
நீங்கள் செல்வம் சேர்க்க உழைப்பது நல்லது தான். ஆனால், இயற்கையுடன் முரண்பட்ட வழிகளில் முயன்றால், தற்காலிகமாக உயர்வது பொன்று தோற்றமளிப்பினும் முடிவு பரிதாபமாக இருக்கும்.
சட்டத்தின் பார்வையிலிருந்து ஒருவன் தப்பி விடலாம. இயற்கையின் பார்வையிலிருந்து எவரும் தப்ப முடியாது.
இயற்கை ஒழுங்கின்மையையோ, ஒழுங்கீனத்தையோ ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை. சரியான நேரத்தில், சரியான முறையில் இயற்கை தன் நியாயத்தீர்ப்பை நேர்த்தியாய் வழங்கிவிடும்.
நீங்கள் இயற்கையுடன் ஒன்றுபட்ட முறையில் உழைப்பீர்களானால் அதுவே உயர்வைத் தரும். ஊக்கமின்றிச் சோம்பி இருப்பீர்களானால் அதுவே தாழ்வே உருவெடுக்கும்.
இயற்கையுடன் ஒன்றுபடும் போது உங்கள் செயல் திட்டங்களில் உண்மையும், நேர்மையும் ஒளிரும். அப்போது இயற்கை அன்னை உங்கள் கரம் பிடித்து வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வான்.
இயற்கையின் உதவியோடு குறிக்கோளை அடைய செயல்திட்டத்தை வகுத்துவிட்டீர்கள். இனி தயக்கமோ, தாமதமோ இல்லாமல் முதல் அடியை எடுத்து வைத்து விடுங்கள். ஆயிரம் கிலே மீட்டர் பயணம் ஆயினும் அது ஓரடியில்தான் தொடங்குகிறது என்பது அற்புதமான மொழி.
வெற்றி கிடைக்குமா? என்று சந்தேகத்துடன் சிந்திக்க வேண்டாம். நான் நம்புவது நடந்தே தீரும் என்னும் எண்ணத்துடன் அடுத்த அடையை எடுத்து வையுங்கள்.
உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய சில உளவியல் சார்ந்த, அறிவியல் ரீதியான ஒரு செய்தியை அறிந்து கொள்ளுங்கள்.
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும், உயர வேண்டும், வளர வேண்டும், விரும்புவதை ( வெற்றி ) அடையவேண்டும் என்றே இயற்கை விரும்புகிறது. அதற்கேற்பவே மனிதனின் உடல் இயக்க விதிகளை இயற்றி வைத்திருக்கிறது.
ஒரு குழந்தையின் பரிணாம வளர்ச்சியை உற்று நோக்கினால் இந்த உண்மை தெளிவாகும்.
தாய் ஒரு குழந்தையைப் பெறுகிறாள். பிறந்தபின் அதைக் கையில் எடுத்துச் சீராட்டாமல் உயிர் வாழ்வத்ற்குரிய உணவை ( பாலை ) மட்டுமை புகட்டிவந்தால் போதும், குழந்தை அழுது, அலறி, பசியாறி, உறங்கி மீண்டும் அழுது… உயிர் வாழும்.
மூன்று மாதங்கள் இப்படியே தொடர்ந்தாலும் குழந்தை ஒருநாளில் குப்புற விழும். மீண்டும் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவை மட்டும் புகட்டிக்கொண்டே வந்தா அது தானே எழுந்து அமரும். தொடர்ந்து உணவூட்டி வந்தால் ஒரு நாள் தானே எழுந்து நிற்கும், விழும், அழும், ஆனாலும் அடங்கி இராமல் மீண்டும் எழுந்து நின்று தன் முதலடியை முன்னோக்கி எடுத்து வைக்கும்.
அதுமட்டுமின்றி உடல் மேல் நோக்கி வளரும். தன் சூழ்நிலையிலிருந்து அடைய முயற்சித்து வெற்றி பெறும்.
குழந்தையால் எப்படி முடிகிறது. இயற்கை, தான் இயற்றி வைத்துள்ள சட்டங்களின்படி அதனோடு ஒத்துழைக்கிறது.
ஆகவே, நீங்கள் வாழ்வில் உயரவேண்டும் என்பதும், முன்னேற வேண்டும் என்பதும், வளர வேண்டும் என்பதும், விரும்புவதை
( வெற்றி ) அடையவேண்டும் என்பதும் இயற்கைச் சட்டம். இயற்கையுடன் கரம் கோர்த்துக் கொண்டால். நீங்கள் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம். இயற்கையுடன் கரம் கோர்த்துக் கொள்ளவதா? எப்படி?
உங்கள் குறிக்கோள் என்ன? அதை நிறை வேற்றுவதற்கு நீங்கள் வரையறுத்துள்ள ஆண்டு எது? அதை அடைவதற்கு நீங்கள் தேர்வு செய்துள்ள தொழில், வணிகம் அல்லது விற்பனை எது?
அந்தத் தொழில், வணிகம் அல்லது விற்பனை தொடர்பான முதல் நடவடிக்கையை இன்றே, இப்பொழுதே தொடங்குங்கள். ஒத்தி வைக்காதீர்கள். தள்ளிப்போடாதீர்கள் அடுத்த நாளில் இன்னொரு நடவடிக்கை, மறுநாள் அது தொடர்பான மேலும் ஒரு நடவடிக்கை.
ஒரு வாரத்தில் பொருத்தமான ஏழு செயல்கள், முன்னேற்றத்தை நோக்கி, மாதத்தில் முப்பது செயல்கள், ஒரு ஆண்டில் முந்நூற்று அறுபத்தைந்து செயல்கள், ஒரு ஆண்டில் முற்நூற்று அறுபத்தைந்து செயல்கள்.
ஒரு ஆண்டு முழுவதும் நீங்கள் தொடர்ந்து செய்த செயல்கள் தொழிலாக, வணிகமாக, விற்பனை வாய்ப்பாக உருவாகி இருக்கும் முந்நூறு அறுபத்தைந்து செங்கற்கள் சேர்த்த ஒரு சுவராவது போன்று.
இப்படியாக வளர்ச்சியை நோக்கி நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும், பல சுவர்களாக மாறி ஒன்றுக்கொன்று இணைந்து வெற்றி என்னும் மாளிகையாக மாறிவிடும்.
முயற்சியை நிறுத்தாமல் விடாமுயற்சி யாகவும் தொடர்முயற்சியாகவும் கைக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியமனா இயற்கைச் சட்டம். தினமும் ஒரு சாதகமான நடவடிக்கை எடுக்கும் போது சட்டப்படி உங்களுக்கு வெற்றி உத்திரவாதம் ஆகிறது.
அதைவிடுத்து நேரம் கிடைக்கும் போதும், விருப்பம் ஏற்படும் போதும் மட்டும் உழைப்பது மற்ற நேரங்களில் சோம்பி இருப்பது, விட்டு விட்டு முயல்வது, ஏவராவது விரட்டினால் மட்டுமே உழைப்பது என்று நினைப்பவருக்கு வெற்றி எட்டாக் கனியாகும்.
வெற்றி செடி வேர்பிடித்து விட்டதா என்று பிடுங்கிப் பார்த்து நடவேண்டாம் உழைப்பு என்னும் நீரையும், நம்பிக்கை என்னும் உரத்தையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள்.
நாள்தோறும் ஒரு நடவடிக்கை என்னும் ஆலோசனையைத் தவறாமல் கடைப்பிடியுங்கள். கடைப்பிடிக்கும் போது இயற்கையின் கரத்தோடு உங்கள் கரம் இணைந்து விடுகிறது.
இணையும்போது இயற்கையின் கரத்திலுள்ள வெற்றி மாலை உங்கள் கழுத்திற்கு வந்துவிடுகிறது.
ஆகவே… அறிந்து கொள்ளுங்கள்.
`
வெற்றியின் ஒன்பதாவது இரகசியம்…
உழைப்பே உயர்வு,
உறக்கம் தாழ்வே!
சக்சஸ் ஜெயச்சந்திரன்

urs Happily 

www.v4all.org 

Saturday, August 23, 2014

தேடவேண்டிய இடத்தில் தேடு - எந்த வாடிக்கையாளர் என்னென்ன பொருட்களை வாங்குவார்,

தேடவேண்டிய இடத்தில் தேடு


இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே! அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே! . . . என்ற பாட்டை நீங்கள் கேட்டிருப்பீர்கள். தனி மனிதனை மனதில் வைத்து பாடப்பட்ட பாடல் அது. வியாபார நிறுவனங்களும் சில ஆண்டுகளுக்கு முன் வரை பை(கை)யில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்துகொண்டிருந்தார்கள் என்றே சொல்லலாம்.


எந்த வாடிக்கையாளர் என்னென்ன பொருட்களை வாங்குவார், எந்தெந்த பிராண்டுகளை ஒரு சேர உபயோகிப்பார், நம்முடைய தயாரிப்பில் எந்த வசதிகள் கட்டாயம் தேவை, எது தேவையேயில்லை என்பதெல்லாம் குறித்து ஆய்வு செய்ய நிறுவனங்கள் தங்களுடைய கணினிகளில் புதைந்திருக்கும் டேட்டா குவியல்களை பிரித்து மேய்ந்தாலே பல உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்ற உண்மையை உறைக்க வைத்ததுதான் பிசினஸ் அனலிட்டிக்ஸ். அட அதையெல்லாம் விடுங்கள்.


இணையதள வியாபாரத்தில் யார் விலையை கேட்டுவிட்டு நைசாக நழுவிவிடுவார், யார் விலை கேட்டுவிட்டு உடனடியாக வாங்குவார் என்ற கணக்குகளையெல்லாம் கூட போட்டுவிடமுடியும், பிசினஸ் அனலிடிக்ஸை வைத்துக்கொண்டு. உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மருந்துக்கடையில் உங்கள் தாத்தாவிற்கு மாதாமாதம் முதல் வாரத்தில் அந்த மாதம் முழுவதற்கும் தேவையான மருந்து வாங்குகின்றீர்கள்.


தாத்தாவோ நீங்கள் ஆபீஸிற்கு அவசரமாக கிளம்பிக்கொண்டிருக்கும் போது பேராண்டி இதுதான் கடைசி மாத்திரை என உங்களிடம் காண்பித்து உங்கள் ஞாபக மறதியை குத்திக்காட்டி மாத்திரையை வாயில் போடும் குணம் கொண்டவர். அட! என்னவொரு மறதி என்று நினைத்து உடனே அருகில் உள்ள வாடிக்கையான கடைக்கு ஓடினால் கைவசம் இல்லை சார். நாளைக்கு நிச்சயம் வந்துவிடும் என்கின்றார்.


ரத்த அழுத்தமோ, சர்க்கரையோ தாத்தாவுக்கு நாளைக்குள் ஏறிவிடுமே என்று பயப்பட்டுப்போய் நீங்கள் வேறுகடை தேடிப்போகின்றீர்கள். மருந்துக்கடைக்காரருக்கு ஒரு வாடிக்கையாளர் இழப்பு. புதிய கடையில் நீங்கள் முப்பது நாட்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை வாங்குகின்றீர்கள். இருபத்தி ஏழாவது நாள் உங்களுக்கு குறுஞ்செய்தி வருகின்றது. உங்களிடம் இன்னும் மூன்று நாட்களுக்கான மருந்துதான் இருக்கும் இந்த எண்ணுக்கு


`ஆம்’ என்று பதில் அனுப்பினால் உங்கள் வீட்டில் மருந்தை கொடுத்து காசு வாங்கிச்செல்வோம் என்கின்றது புதுக்கடை. `ஆம்' என்று பதில் அனுப்பாமல் பழைய பாசத்தில் நீங்கள் பழைய கடைக்குப் போனால் `மன்னிக்கவும் சார், நேற்றைக்கே சப்ளை வரணும். இன்றைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கின்றோம்' என்கின்றார் கடைக்காரர். `ஆம்' என்று புதுக்கடைக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றீர்கள். மாலைக்குள் மருந்து மாத்திரை வீடு வந்து சேருகின்றது. அதெப்படி, இந்தக் கடையில் கேட்டாலும் இல்லை; அந்தக்கடையில் கேட்காமலேயே நினைவு படுத்துகின்றார்கள்? அந்தக்கடைக்கு மருந்து சப்ளை செய்யும் நிறுவனம் நீங்கள் சென்ற மாதம் இந்த மருந்து இந்த அளவு விற்றிருக்கின்றீர்கள் என நினைவூட்டி மருந்தை அனுப்பி வைக்கவா என்று கேட்க கடைக்காரர் உங்களுக்கு நினைவூட்டுகின்றார்.


``டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் சோ மச்” என்று சுலபத்தில் சொல்லாதீர்கள். போன மாதம் இன்னார் இந்த மருந்து வாங்கினார் என்ற டேட்டா அவர்களிடத்தில் இருக்கின்றது. மருந்தின் பெயரை வைத்தே இது தொடர்ந்து சாப்பிடவேண்டிய மருந்து என்று தெரியும். விற்பனை ரசீது போடும்போது தாத்தாவின் பெயரையும் உங்களுடைய மொபைல் எண்ணையும் பதிந்துகொண்டால் பின்னால் அந்த டேட்டாவை நிதானமாய் பிராய்ந்து பார்த்து குறுஞ்செய்தி அனுப்பலாம் இல்லையா?


நாம் கால் பதிக்கும் பூமிக்கு அடியில் நூற்றி ஐம்பது கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும் வைரம் போல் இந்த டேட்டாக்களும் மதிப்பு மிக்கவை. எப்படி பூமிக்கு அடியில் அழுத்தம் மற்றும் அதீத வெப்பத்தால் வைரங்கள் உருவாகி ஒரு எரிமலை வெடிக்கும் போது மனிதனால் தோண்டி எடுக்கக்கூடிய ஆழத்திற்கு வந்து சேர்கின்றனவோ அதே போல்தான் வியாபார டேட்டாக்களும்.


ஒரு ப்ளேட் இட்லி, ஒரு செட் பூரி, காபி என்ற காம்பினேஷனும், ஒரு ப்ளேட் இட்லி, ஒரு ரோஸ்ட், மசாலா பால் என்ற காம்பினேஷனும் எத்தனை பேருக்கு விற்கப்பட்டது, மசாலா பாலுக்கும் ரோஸ்ட்டுக்கும் ஏதாவது பந்தம் இருக்கின்றதா என்று பார்த்து சர்வர்களிடம் தம்பி ரோஸ்ட் சாப்பிட்டவரிடம் மசாலா பால் சுலபத்தில் விற்கலாம் என்று ஹோட்டல்காரர் சொல்லிவைத்தால் அதிக லாபம் தரும் மசாலா பால் இரவு எட்டுமணிக்குள் கடையில் தீர்ந்துபோய்விடுமா இல்லையா? டேட்டாக்களின் இடையே இருக்கும் மதிப்புமிக்க வைரத்தை மனிதனின் கண்ணுக்கு தெரியப்படுத்தும் எரிமலை வெடிப்புதான் பிசினஸ் அனலிடிக்ஸ். இதுபோன்ற விலை மதிப்புள்ள முத்துக்களை எடுக்கவேண்டுமென்றால் (டேட்டா) கடலுக்குள் நிறுவனங்கள் குதித்துத்தான் ஆகவேண்டும்.


உலகில் உள்ள நிறுவனங்கள் தொழில் ரீதியாக காலம் காலமாக பல டெராபைட் (1 டெராபைட் என்பது 1 லட்சம் கோடி பைட்டுகள்) விற்பனை மற்றும் சேவை தகவல்களை பெற்று சேமிக்கின்றன. அந்தத் தகவல்கள் எல்லாம் எங்கோ ஒரு கணினிக்குள் புதைந்து போகின்றன. ஆழத்தில் டிஜிட்டலாக புதைந்து கிடக்கும் குப்பைகள் மதிப்பு மிக்க வைரங்களாக மாறி, நிறுவனங்களுக்கு மிகச் சிறந்த எதிர்காலத்தை கொடுக்க காத்துக்கொண்டு இருக்கின்றன. அதைத் தோண்டி எடுத்து மதிப்புக்கூட்டும் ஒரு வித்தைதான் பிசினெஸ் அனலிடிக்ஸ் எனப்படும் ஒரு புதிய யுக்தி.


நாளைக்கு நடப்பதைத் தெரிந்துகொள்ள நேற்றைக்கு நடந்தவற்றில் இருக்கும் ஒருமைப்பாடுகளை இன்றைக்கு தேடும் உத்தி இது. நீங்கள் செல்போன் கனெக்ஷன் வைத்திருக்கும் நிறுவனத்தின் கஸ்டமர் கேர் லைனுக்கு அடிக்கடி போன் செய்து புதிய ஆஃபர்கள் பற்றி கேட்டுக்கொண்டேயிருக்கின்றீர்கள்.


ஒரு ஆஃபரும் சரியாக இல்லை என்று நினைத்து கடுப்பாகி நீங்கள் போர்ட்டபிலிட்டி கேட்டு மெசேஜ் அனுப்ப நினைக்கும்போது உங்கள் கஸ்டமர் கேர் கால்களை பிசினஸ் அனலிடிக்ஸில் கண்டறிந்து உங்கள் எண்ணத்தை புரிந்து கொண்டு, உங்கள் பில்லை ஆராய்ந்து பிரச்சினை என்ன என்பதையும் அறிந்துகொண்டு, 'சார், உங்களுக்கு ஒரு புதிய ஆஃபர் ஒன்று கொடுக்க விரும்புகிறோம்' என்று உங்கள் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு புதிய திட்டத்தை கொடுத்தால் உங்களுக்கு எவ்வளவு ஆச்சரியமாகவும், சந்தோசமாகவும் இருக்கும்? போர்ட்டபிலிட்டிக்கு அதற்குப் பின்னால் முயற்சிப்பீர்களா?


நீங்கள் பிளிப்காட்டில் அன்று அறிமுகப்படுத்தப்பட்ட புது மொபைலின் விலை என்னவென்று பார்த்துவிட்டு ‘ஹிந்து தமிழ்’ இதழை இணையத்தில் படிக்கும்போது நீங்கள் பார்த்த போனை உங்கள் கண் முன்னேயே தொடர்ந்து கொண்டுவந்து நிறுத்துவதும் பிசினஸ் அனலிடிக்ஸின் ஒரு பகுதிதான். பார்த்ததை உங்கள் கண்கள் மறந்தாலும் கணினிகள் மறப்பதில்லை. உங்கள் கண் முன்னே கொண்டுவந்து நினைவூட்டி ஆசை காட்டிக்கொண்டேயிருக்கும்.

குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு இந்து மதம் கூறும் வழிமுறைகள்

குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு இந்து மதம் கூறும் வழிமுறைகள்

        "மனிதனின் மகத்தான சொத்து ஆன்மீகம். இறை நினைப்புடன் வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் எதிலும் வெற்றி பெறுவர். உலகப் புகழ் பெறுவர்."

       1.    ஒவ்வொரு பெற்றோரின் இன்றியமையாத கடமை குழந்தைகள் காலையில் எழுந்தவுடன் இறை மந்திரம் கூறி, இறை வழிபாட்டை செய்யச் செய்வது.

       2.    மாலையில் ஆன்மீக கருத்துக்கள், நீதிக்கதைகள் கூறி பகவானை வணங்க வேண்டும் என்ற கடமையை உணர வைப்பது.

       3.    ஞாயிறு தோறும் கண்டிப்பாக மந்திரம் கூறும் வகுப்புகள் நடத்துவது. இதில் ஒவ்வொரு மாணவரையும் ஐந்து நிமிடமாவது மந்திரம் கூற வைப்பது. ஒரு மாணவர் மந்திரம் கூற மற்ற மாணவர்கள் பின் தொடர்ந்து கூற வேண்டும்.

       4.    மாணவர்களுக்கிடையே மாதம் தோறும் ஆன்மீக பேச்சுப்போட்டி, தடையில்லாது மந்திரம் கூறும் போட்டி வைத்து வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு அளிப்பது.

       5.    ஆன்மீக வகுப்புகள் நடத்தும் ஏற்பாட்டை அந்தந்த ஊர்களில் வாழும் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து செயல்படுத்த வேண்டும்.

       6.    வீதிகள் தோறும் இடவசதி உள்ள வீடுகளில் எல்லா குழந்தைகளையும் ஒன்று சேர்த்து மந்திர வகுப்பு நடத்துவதால் குழந்தைகளின் வாழ்க்கை கண்டிப்பாக சிறப்படையும். அதை எற்று நடத்துபவர்களுக்கும், இடவசதி அளிப்பவர்களுக்கும் புண்ணியம் சேரும்.

       7.    ஆன்மீக அறிவும், பிறருக்குப் போதிக்கும் ஆற்றலும், பிறர் உயர்வுக்குப் பாடுபடும் நல்ல எண்ணமும் கொண்ட ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஆன்மீக வகுப்பு நடத்தும் ஆசிரியராக்க வேண்டும். இது சம்பந்தமான இலவச ஆலோசனைக்கு அனுகவும்.

           "பிறர் உயர்வுக்கு இறை நினைப்போடு பாடுபடு
            உன் உயர்வுக்கு பகவான் கை கொடுப்பார்"

            பொதுவாக இளமையிலேயே வித்யா கல்வி என்ற பள்ளி படிப்பையும், ஞானக் கல்வி என்ற இறைமார்க்க கல்வியையும் படித்து உணர வேண்டும். இது ஒவ்வொரு இந்துக்களுக்கும் உள்ள கடமையாகும். இதை சுருக்கமாக ஒளவையார் 'இளமையில் கல்' என்று கூறியிருக்கிறார். இளமையில் கற்க வேண்டியது ஆன்மீக கல்வியும், பள்ளியில் படிக்கும் வித்யா கல்வியும் ஆகும்.

            தற்பொழுது மாணவர்கள் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் நோக்கத்தில் இருப்பதால் நமது ஆத்மாவுக்கும், வாழ்க்கைக்கும் வளம் சேர்க்கும் ஆன்மீக கல்வியை மறந்து விடுகின்றனர். இந்த இரண்டு கல்வியையும் முறையாகக் கற்றவர்கள் வரிசையில் வீரசிவாஜி, விவேகானந்தர், பாரதியார், மகாத்மா காந்தி என்பதை நாம் அறிவோம்.

            தாயின் ஆன்மீகப் போதனையால் வளர்ந்தவர்கள் வீரசிவாஜியும், மகாத்மா காந்தியும் ஆவார்கள். தனது குருவின் ஆன்மீகப் போதனையால் உயர்ந்தவர்கள் விவேகானந்தரும், பாரதியாரும் ஆவார்கள். இவர்கள் இன்னும் நம்முடன் வாழ்ந்து வருகின்றனர்.

பார்வையைப் பறிக்கும் குறைந்த விலை கண்ணாடி

வெப்பமண்டல நாடான நமது நாட்டில், அடிக்கடி வெளியில் செல்பவர்கள் அவதிப்படுவது கண் எரிச்சலால். ஆண்டின் பெரும்பாலான நேரம் வெயில் தகிக்க, கண் எரிச்சலை எப்படிச் சமாளிப்பது என்ற கேள்வி எழும். இதற்குக் கைகொடுப்பவை சன் கிளாஸ் அல்லது கூலிங் கிளாஸ் என்று அறியப்படும் குளிர் கண்ணாடிகள்.
பலருக்கும் கண்ணாடி தவிர்க்க முடியாததாகிவிட்டது. பார்வைக் குறைபாடு இல்லாதவர்கள்கூட ஸ்டைலுக்காகவும் குளிர்ச்சிக்காகவும் கண்ணாடியைப் பயன்படுத்துகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளில் பெரும்பாலோர் கண்ணாடியைப் பயன்படுத்துகின்றனர்



பறிபோகும்
வெயிலில் இருந்து மட்டுமில்லாமல், தூசியிலிருந்து கண்களைப் பாதுகாப்பதும் பெரிய சவால்தான். இதற்காகத் தரமில்லாத கண்ணாடிகளைப் பயன்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையைப் பறிகொடுத்துக் கொண்டிருப்பதைப் பலரும் உணர்வதில்லை.
பாலிதீன் பைகளில் சுற்றி, அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வண்ண வண்ணக் கண்ணாடி விற்கும் கடையை, ஒவ்வொரு முக்கியச் சாலையோரத்திலும் ஒன்றையாவது பார்க்க முடியும். அங்கே குறைந்த விலைக்குப் பலரும் கண்ணாடிகளை வாங்கி விடுகிறோம். அதன் ஆயுள் சில மாதங்கள்தான் என்றாலும், விதவிதமான கண்ணாடிகளை அணிந்துகொள்வதில் பலருக்கும் ஆர்வம்.
இந்தக் கண்ணாடிகளில் ஏதோ ஒரு தயாரிப்புக் குறைபாடு இருக்கும். பெரும்பாலான நேரம் அது கண்ணாடியாகவே இருக்காது, பிளாஸ்டிக் அல்லது ஒரு வகை ஃபைபராக இருக்கும். ஆனால், அதை யாரும் பொருட்படுத்துவதேயில்லை. பிரபல கண்ணாடி நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்யும் கடைகளைத் தவிர, பெரும்பாலான கடைகளில் இந்தக் குறைந்த விலை கண்ணாடிகள்தான் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.
"தரமற்ற கண்ணாடிகளை வாங்கி அணிவது கண்ணாடி அணிவதன் நோக்கத்தையே சிதைத்துவிடுகிறது. தொடர்ந்து தரமற்ற கண்ணாடிகளைப் பயன்படுத்தினால் பார்வைக் குறைபாடு நிச்சயம் ஏற்படலாம். தரமான கண்ணாடிகளிலும் கீறல், சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டால் உடனடியாகக் கண்ணாடியை மாற்றிவிட வேண்டும். இல்லையென்றால், கூர்ந்து பார்த்துக் கண்ணுக்கு அழுத்தம் தந்து பார்வைக் குறைபாடு ஏற்பட நேரிடலாம்.
பார்வைக் குறைபாட்டுக்காகக் கண்ணாடி அணிந்தவர்களுக்குப் பாதிப்பு அதிகமாகும். இதைத் தவிர்க்கக் கண்ணாடியை உறையில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்" என்கிறார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கண் சிகிச்சைப் பிரிவுத் தலைவர் பி. தியாகராஜன்.
அதேபோல, மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளாமல் யாரும் கண்ணாடி அணியக் கூடாது. பெரும்பாலோர் பாதிப்பு மோசமான பிறகே, கண் மருத்துவரிடம் செல்கின்றனர். கண் பாதுகாப்பைக் குழந்தைப் பருவத்திலேயே தொடங்க வேண்டும்.
எழுத்துகளைக் குழந்தை நன்கு வாசிக்க ஆரம்பிக்கும்போது, கண் பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பிறகு, குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் அனைவரும் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நல்ல நிலையில் குழந்தை பிறந்தாலும் கண் பரிசோதனை அவசியம். அதேபோல, தினமும் கண்ணுக்கு 8 மணி நேர ஓய்வு கொடுப்பதும் மிக அவசியம்.
ஏன் வேண்டாம்?
சூரிய வெளிச்சத்தில் இருந்தும், கண் எரிச்சலில் இருந்தும் பாதுகாக்கத்தான் குளிர் கண்ணாடிகளை அணிவதாக நினைக்கிறோம். ஆனால், தரமான குளிர் கண்ணாடிகள் செய்யும் வேலையே வேறு. அவை, புறஊதா எனப்படும் யு.வி. கதிர்களில் இருந்து பாதுகாக்கின்றன. கடுமையான வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்கின்றன. கண்ணைக் கூசும் வெளிச்சத்தைத் தடுக்கின்றன.
பார்வையைப் பாதிக்கும் சில ஒளி அலைவரிசைகளைக் கட்டுப்படுத்துகின்றன. இந்தப் பணிகள் எதையும் குறைந்த விலையில் வாங்கும் கண்ணாடிகள் செய்வதில்லை. மேலும், பாதிப்புகளை மோசமாக்கவே செய்யும்.

'ஐஸ் பக்கெட் சவால்' : தலையில் ஐஸ் தண்ணீரை ஊற்றுவது ஏன்..?

'ஐஸ் பக்கெட் சவால்' : தலையில் ஐஸ் தண்ணீரை ஊற்றுவது ஏன்..



ஐஸ் பக்கெட் சவால் என்பது அமெரிக்காவை தவிர்த்து தற்போது இந்தியாவிலும் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இந்த சவாலை பல பிரபலங்களும் ஏற்று கொண்டுள்ளனர். ஐஸ் பக்கெட் சவால் என்று குரல் எழுப்பிக் கொண்டு பிரபலங்கள் தங்களது தலை மேல் ஒரு பக்கெட் ஐஸ் நீரை ஊற்றிக் கொண்டு ஐஸ் பக்கெட் சவாலை பிரபலமாக்கி வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஏன் அவர்கள் அப்படி செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு சம்பந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்காக நிதி திரட்டவும் தான் பிரபலங்கள் ஒரு பக்கெட் ஐஸ் நீரை தங்கள் தலையில் ஊற்றிக் கொள்கிறார்கள். அமியோட்ராபிக் லேட்டரல் ஸ்க்லீரோசிஸ் என்று அழைக்கப்படும் இந்த நோய் நரம்புகளை பாதிக்கும். இந்த நோய் பாதித்தவர்களால் பேச, உணவை விழுங்க ஏன் மூச்சு விடக் கூட சிரமமாக இருக்கும். அவர்களின் கட்டுப்பாட்டில் எந்த செயல்களும் இருக்காது. ஏ.எல்.எஸ். நோய் ஏற்பட்டால் அதிகபட்சம் 39 மாதங்கள் தான் உயிருடன் இருக்க முடியும். இந்த வகை நோயாளிகளில் 4 சதவீதம் பேரே 10 ஆண்டுகளை தாண்டி வாழ்வார்கள். உலக மக்கள் தொகையில் லட்சத்தில் இருவருக்கு ஏ.எல்.எஸ். நோய் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது.  

பிரபல எழுத்தாளரான இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங் ஏ.எல்.எஸ். நோயால் பாதிக்கப்பட்டபோதிலும் 50 ஆண்டுகளுக்கும் மேல் தாக்குப்பிடித்துள்ளார். இது மிகவும் அரிது என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். இந்த ஏ.எல்.எஸ். நோய் குறித்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிகிச்சைக்கு நிதி திரட்டவும் தான் இந்த ஐஸ் பக்கெட் சவால் விடுக்கப்படுகிறது. இந்த சவால் தற்போது மகிவும் பிரபலமாகி வருவதுடன் நிதியும் குவிகிறது. ஐஸ் பக்கெட் சவாலை எதிர்கொள்பவர்கள் தங்கள் மீது குளிர்ந்த நீரை ஊற்றிக் கொண்ட பிறகு 3 பேருக்கு ஐஸ் பக்கெட் சவால் விடுக்க வேண்டும். அவர்கள் சவாலை ஏற்காவிட்டால் 100 அமெரிக்க டாலரை ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும். 


அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்பால் வீரரும், ஏ.எல்.எஸ். நோயாளியுமான பீட் ஃபிராட்ஸ் ஐஸ் பக்கெட் சவாலை அறிமுகப்படுத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அவருக்கு இந்த ஐடியாவை அவரது நண்பர் ஒருவர் கொடுத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக் கொண்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐஸ் பக்கெட் சவாலை அடுத்து ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு இதுவரை சுமார் ரூ. 139 கோடி நிதி கிடைத்துள்ளது. இணையதளத்தில் தற்போது இந்த ஐஸ் பக்கெட் சவால் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. பலரும் இந்த சவாலை ஏற்று வருகின்றனர்.

Friday, August 22, 2014

"பிசி சிட்டி.. பிசியஸ்ட் சிட்டிசன்ஸ்": இன்று சென்னைக்கு 375வது பிறந்தநாள் ... ஹேப்பி பர்த்டே டூ யூ !சென்னை

"பிசி சிட்டி.. பிசியஸ்ட் சிட்டிசன்ஸ்": இன்று சென்னைக்கு 375வது பிறந்தநாள் ... ஹேப்பி பர்த்டே டூ யூ !

: வந்தாரை வாழ வைக்கும் நகரம் எனப் புகழப்படும் சென்னை இன்று தனது 375வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் ஒன்று என்ற பெருமையுடன் இன்று உலா வரும் நமது சென்னை ஒரு காலத்தில் கிராமமாக இருந்தது என்று கூறினால் உங்களால் நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கும். ஆனால், அது தான் உண்மை. பல்வேறு நிலைகளில் படிப்படியாக வளர்ச்சியடைந்து, பல ஊர்களுக்கு சிம்மச் சொப்பனாக விளங்கும் சென்னைக்கு இன்று 375வது பிறந்தநாள். இதோ, சென்னை பிறந்து, தவழ்ந்து, நடந்து வளர்ந்த கதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம்....

சென்னைப்பட்டணம்... கிராமமாக இருந்த சென்னைப் பட்டிணம் ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னால் மதராசப்பட்டிணம் ஆனது.
சென்னையின் பிறந்தநாள்... 1639ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை நகரை கிழக்கு இந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே என்பவர் விலைக்கு வாங்கிப் பதிவு செய்துள்ளார். அப்போதுதான் முதல் முறையாக சென்னை என்ற பெயர் அந்தப் பத்திரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தினத்தையே மக்கள் சென்னையின் பிறந்த தினமாக கொண்டாடி வருகிறார்கள்.

புனித ஜார்ஜ் கோட்டை... 1640ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டைக் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை முக்கிய வணிக மற்றும் கலாச்சார நகரமாக உருமாறத் தொடங்கியது.

ஓல்ட் இஸ் கோல்ட்.... நாகரீகமான நகரமாக உருமாறியதில் இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களான கொல்கத்தாவை விட 50 ஆண்டுகளும், மும்பையை விட 35 ஆண்டுகளும் பழமையானது சென்னை.
தந்திரத்திற்குப் பின்னர் தமிழகத்தின் தலைநகரானது மதராஸ். பின்னர், மதராஸ் கடந்த 1996ம் ஆண்டு முதல் சென்னை என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று தனது 375வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது சென்னை. வேலை, கல்வி என பல்வேறு இடங்களில் இருந்து வந்துள்ளோருக்கு அடைக்கலம் தந்து வாழ்வாதாரமாக விளங்குகிறது சென்னை.




Thursday, August 21, 2014

பணத்தைப் பெருக்கும் எளிய வழி!

பணத்தைப் பெருக்கும் எளிய வழி!




நீங்கள் பாடுபட்டுச் சேமித்த பணத்தை ஒரு வங்கியின் வைப்பு நிதியில் குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் சேமிக்கக் கருதிப் பணத்தை அவ்வங்கியில் செலுத்துகிறீர்கள் எனக் கருதிக்கொள்வோம். உங்கள் மனதில் திடீரென ஒரு எண்ணம் உதயமாகிறது. நீங்கள் சேமிக்க விரும்பும் பணம் இரு மடங்காக உங்களுக்குக் கிடைக்க விரும்புகிறீர்கள். அப்படிக் கிடைக்க எத்தனை ஆண்டுகள் அப்பணத்தை வங்கியின் வைப்பு நிதியில் வைத்திருக்க வேண்டும், எனத் தெரிந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதை அறியக் கணிதம் உங்களுக்குத் துணை புரியும். கணிதத்தின் வாயிலாக இதை எவ்வாறு கண்டறிவது?
r % என்கிற வட்டி விகிதத்தில் நீங்கள் செலுத்திய பணம் இரு மடங்காக மீண்டும் உங்கள் கையில் கிடைக்க நீங்கள் “Rule of 72” என்னும் கணித விதியைப் பயன்படுத்தலாம். குறிப்பாக வட்டி விகிதம் ஆறு முதல் பத்து சதவீதம் வரை இருக்கும்போது இந்த விதி சிறப்பான முடிவை அளிக்கிறது. இந்த விதி என்ன கூறுகிறது?
“நீங்கள் செலுத்தும் பணம் இரு மடங்காக உயர்ந்து மீண்டும் உங்களிடம் கிடைக்க நீங்கள் 72/r என்ற கால அளவு வரை காத்திருக்க வேண்டும்”. இதுவே “Rule of 72” என்ற கணித விதியாகும். உதாரணமாக நீங்கள் பணம் செலுத்தும் வங்கி உங்களுக்கு ஆறு சதவீதம் வட்டி வழங்கினால் நீங்கள் செலுத்திய பணம் இரட்டிப்பாக 72/6 = 12 வருடங்கள் காத்திருக்க வேண்டும். பன்னிரெண்டு வருடங்களுக்குப் பின் இரட்டிப்பான உங்கள் தொகையை நீங்கள் வங்கியின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். எவ்வளவு எளிமையான கணக்கீட்டின் மூலம் நாம் இரட்டிப்புக் காலத்தைக் கண்டறிய முடிகிறது பாருங்கள்? இது தான் கணிதத்தின் ஆற்றல். வட்டி சதவீதம் அதிகளவில் (பத்திற்கு மேல்) அமைந்தால் 70/r என்ற சூத்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் துல்லியமான கால அளவு கிடைக்கும்.
உதாரணமாக ஒரு வங்கி ஒன்பது சதவீதம் வட்டி விகிதம் வழங்கினால் உங்கள் பணம் இரட்டிப்பாக நீங்கள் 72/9 = 8 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதேபோல் உங்களுக்குப் பதினான்கு சதவீதம் வட்டி வழங்கினால் உங்கள் பணம் இரட்டிப்பாக நீங்கள் 70/14 = 5 வருடங்கள் காத்திருந்தாலே போதுமானதாக இருக்கும். இங்கு எழுபதால் வகுத்தாலே சரியான கால அளவு கிடைக்கும். எனவே வங்கி ஒன்பது சதவீதத்திற்குப் பதிலாக ஐந்து சதவீதம் கூடுதலாக வட்டி சதவீதம் வழங்கினால் உங்கள் பணம் இரட்டிப்பாக நீங்கள் எட்டு வருடங்கள் காத்திராமல் ஐந்து வருடங்கள் காத்திருந்தாலே போதுமானதாக அமையும்.
வங்கி அனுதினமும் தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை மாற்றிக் கொண்டிருந்தால் 69.31/r என்ற கணித விதியைப் பயன்படுத்தலாம். இந்தச் சூத்திரம் மிகத் துல்லியமான கால அளவை வழங்கும்.
ஆனால் ஏன் 69.31 என்ற எண்ணை மேற்கண்ட சூத்திரத்தின் தொகுதியில் தேர்ந்தெடுத்தோம்? இதற்குக் காரணம் ln (2) = 0.6931 என்பதால்தான். நாம் இப்போது பொதுவான இரட்டிப்புக் கால அளவு சூத்திரத்தைக் காண்போம்.
r % என்பது வட்டி சதவீத மதிப்பெனில் நீங்கள் செலுத்திய பணம் இரட்டிப்பாகத் தேவையான கால அளவு ln (2)/ln(l+r) ஆகும். ஆனால் 72 என்ற எண்ணைப் பொதுவாக நாம் ஏன் பயன்படுத்துகிறோம்? இதற்கு இரு முக்கியக் காரணங்களைக் கூறலாம். ஒன்று 69.31 என்ற எண்ணிற்கு இது அருகில் அமைந்துள்ளது. இரண்டு 72 என்ற எண்ணிற்கு 1, 2, 3, 4, 6, 8, 9, 12, 18, 24 ஆகிய எண்கள் அனைத்தும் வகுப்பான்களாக அமைகின்றன. இதனால் வட்டி சதவீதம் இவ்வெண்களைக் குறித்தால் கிடைக்கும் இரட்டிப்புக் கால அளவு முழு எண்களாக அமைகின்றன. இதனாலேயே நாம் பொதுவாக 72/r என்ற விதியைப் பயன்படுத்துகிறோம்.
இதேபோல் தற்போது நிலவும் பண வீக்கத்திற்குத் தகுந்தவாறு இன்றைய பணத்தின் அளவு பாதியாகும் கால அளவைக் கண்டறியவும் மேற்கண்ட விதியைப் பயன்படுத்தலாம். உதாரணமாக ஏழு சதவீதம் பணவீக்கம் இருந்தால் 70/7 = 10 வருடங்களுக்கு பின் இன்றைய பணத்தின் மதிப்பு பாதியாக விளங்கும்.
உங்கள் பணம் மூன்று மடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ அல்லது k மடங்கு அதிகரிக்க நீங்கள் எவ்வளவு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என அறிந்து கொள்ள ln(k)/ ln(l+r) = 0.6931/ ln(l+r) என்ற கணித சூத்திரத்தைப் பயன்படுத்தலாம். உதாரணமாக உங்கள் பணம் மூன்று மடங்காக அதிகரிக்க மேற்கண்ட சூத்திரத்தின் படி தோராயமாக 114/r ஆண்டு களும் நான்கு மடங்காக அதிகரிக்க தோராயமாக 144/r ஆண்டுகளும் நீங்கள் காத்திருக்க வேண்டும்.
இதுபோன்ற எண்ணற்ற வணிகவியல் சார்ந்த செய்திகளை இந்த எளிய சூத்திரத்தைப் பயன்படுத்தித் தேவையான கால அளவைக் கண்டறியலாம். எளிமையான கணித சிந்தனை நம் வாழ்வில் தேவையான செய்திகளுக்கு எவ்வளவு துணை புரிகிறது என்பதற்கு இந்தச் சூத்திரம் ஒரு சிறந்த உதாரணமாக அமைவதைக் காணலாம்.

உங்களை விட உயர்ந்தவர் யார்....

உங்களை விட உயர்ந்தவர் யார்....
----------------------------------------------------
உங்கள் பாத்திரத்தில் உணவிருந்தால்..
உடுத்த உடையிருந்தால்.. 
தலை மேல் கூரையிருந்தால்..
உறக்கம் கொள்ள இடமிருந்தால்..
உலகின் 75 சதவிகித மக்களை விட நீங்கள் மேலானவரே!

உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்..
உங்கள் பர்சில் சிறிது சில்லறை இருந்தால்..
உலகின் முதல் 8 சதவிகித பணக்காரர்களில் நீங்களும் ஒருவரே!
நோய், நொடியின்றி, புத்துணர்ச்சியோடு உங்கள் பொழுது புணர்ந்தால்..
அதே நாளில் இறக்கப் போகும் கோடி மக்களை விட நீங்கள் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவரே!
நீங்கள் போரின் அனுபவம் பெறாதிருந்தால்..
எந்த வித சித்திரவதைக்கும் உள்ளாகாதிருந்தால்..
தினம் தினம் செத்துப் பிழைக்கும், கோடானு கோடி மக்களை விட நீங்கள் அதிர்ஷ்டசாலிகளே!
மேற்கூறியவைகளை தங்களால் படித்துப் பார்க்க முடிந்தால்..
பார்வையற்றுக் கிடக்கும் 3 கோடி சக மனிதர்களை விடவும் நீங்கள் அதிகம் கொடுத்து வைத்தவர்களே!!!

urs Happily

Dr.Star Anand Ram
www.v4all.org 

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற காந்தியவாதி. அவர் புதுக்கோட்டையில் 1866-ம் ஆண்டு ஜூலை 30 அன்று பிறந்தார். அவருடைய அப்பா நாராயணசுவாமி ஐயர். புதுக்கோட்டையிலிருந்த மகாராஜா கல்லூரியின் முதல்வராக இருந்தார். அவர் கண்டிப்பும் ஒழுக்கமும் கொண்டவர். முத்துலட்சுமியின் அம்மா சந்திராம்மாள் இசை வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர்.
முத்துலட்சுமி சிறு பிராயத்தில் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டார். பள்ளியில் புத்திக்கூர்மை கொண்ட முத்துலட்சுமி ஆசிரியர்களுக்குப் பிடித்த மாணவியாக இருந்தார். அந்தக் காலத்தில் பெண்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்படுவது இல்லை. ஆனால் முத்துலட்சுமி ஆசிரியர்கள் உதவியுடன் ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டார். முத்துலட்சுமி முதலாம் பாரம் முடித்த பின்னர்தான் அவர் ஆங்கிலம் கற்ற விஷயம் அவருடைய அப்பாவுக்குத் தெரியவந்துள்ளது.
கல்லூரிப் படிப்புக்காக மகாராஜா கல்லூரில் சேர விரும்பிய அவருக்கு அங்கே படிக்க முதலில் இடம் கிடைக்கவில்லை. அவர் பெண் என்பதும், அவருடைய தாய் பிராமணரல்லாதவர் என்பதும் அதற்குக் காரணங்கள். ஆனால் மகாராஜாவின் உதவியுடன் முத்துலட்சுமி கல்லூரியில் சேர்ந்துகொண்டார். கல்வி உதவித் தொகையும் அவருக்குக் கிடைத்துள்ளது.
சிறுவயது முதலே அவர் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரர் ஆனார். ஆண்கள் மட்டுமே படித்து வந்த சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்தபோது அவர் மட்டுமே ஒரே பெண் மாணவர். அவர்தான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினர். சென்னை சட்டமன்றத்தின் முதல் துணைத் தலைவர். இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர். (சென்னை) மெட்ராஸ் மாநகராட்சியின் முதல் துணை மேயர். 1912-ல் மருத்துவப் படிப்பை முடித்த அவர் 1914-ல் டாக்டர் சந்தார ரெட்டியை மணமுடித்துக்கொண்டார்.
பெண்கள்மீது ஆழ்ந்த அக்கறை கொண்ட முத்துலட்சுமி ரெட்டி அவர்களுடைய துயரங்களைப் போக்கப் பெரிதும் பாடுபட்டார். தன் உறவுப் பெண் ஒருவர் புற்றுநோயால் மரணமடைந்ததால் புற்றுநோய் மருத்துவத்தைக் கற்க விரும்பியுள்ளார். இதனால் இங்கிலாந்துக்குச் சென்று ராயல் கேன்சர் மருத்துவமனையில் இது தொடர்பான கல்வியைக் கற்றுள்ளார்.
பெண்களுக்கான சமூக நீதி கிடைப்பதற்காக முனைப்புடன் செயல்பட்ட அவர் பெண்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கவும் போராடியுள்ளார். பள்ளியில் படித்த பெண்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். ஏழைப் பெண்களுக்குக் கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தார்.
இந்தியாவில் வழக்கத்தில் இருந்த குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் ஒழிப்பதில் முக்கியப் பங்காற்றினார். தேவதாசி வழக்கப்படி பூப்பெய்தாத இளம்பெண்களைக் கோவிலுக்கு நேர்ந்துவிடும் கொடுமைக்கு எதிராக 1930-ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்தார். இந்த மசோதா 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டமானது. இந்தச் சட்டம் நிறைவேற ஈ.வே.ரா. பெரியாரும் மூவலூர் ராமாமிருதமும் உறுதுணையாக இருந்துள்ளனர்.
சென்னையிலுள்ள அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, ஆதரவற்ற கைம்பெண்களுக்கு இருப்பிடம் தரும் அவ்வை இல்லம் ஆகியவை தோன்றக் காரணமானவர். சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனை உருவாகக் காரணமும் அவரே. 1952-ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டிய அடையாறு புற்று நோய் மருத்துவமனை 1954 ஜூன் 18-ல் செயல்படத் தொடங்கியது. இந்திய அரசு 1956-ல் முத்துலட்சுமி ரெட்டிக்கு பத்மபூஷன் விருதை அளித்து கவுரவித்தது. 1968 ஜூலை 22 அன்று அவர் காலமானார்.


urs
www.v4all.org

Wednesday, August 20, 2014

இந்தியாவில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது 3 மடங்காக அதிகரித்துள்ளது

இந்தியாவில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது 3 மடங்காக அதிகரித்துள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இது குறித்து அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை கழகத்தின் பொது சுகாதார பிரிவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்திய வமசாவளியை சேர்ந்த அரவிந்த் என்பவரது தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்பு குறித்து அவர் கூறுகையில், கடந்த 1956-1960ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் 19.5 சதவீதமாக இருந்தனர். இந்த விகிதாச்சாரம் 1981-85ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் பிறந்த இளைஞர்களிடையே 74.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 3 மடங்கு அதிகமாகும். அவர்களில் நகர்ப்புறங்கள் மற்றும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருபவர்கள் மிக இளம் வயதிலேயே இந்த பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Beer
மனநல பாதிப்பு இந்த ஆய்விற்காக வடக்கு கோவாவை சேர்ந்த 20-49 வயது உடைய 2 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்கள் அடங்குவர். அவர்களிடம், மதுபானத்தை எந்த வயதில் குடிக்க ஆரம்பித்தீர்கள்?, எவ்வளவு மதுபானம் எடுத்து கொண்டீர்கள்? மற்றும் குடிப்பதால் காயம் எதுவும் ஏற்பட்டதா? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்களின் மனநல பாதிப்பு குறித்தும் தகுதி வாய்ந்த நபரால் ஆய்வின்போது கணிக்கப்பட்டன. இளம் வயதில் குடிக்க தொடங்காதவர்களை காட்டிலும், மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டு மற்றும் மதுபானத்திற்கு அடிமையாவது என்பது இளைஞர்களிடையே இரு மடங்காக உள்ளது. அவர்கள் குடிப்பதன் காரணமாக 3 மடங்கு காயம் அடைந்து உள்ளனர்.
இளம் வயதில் குடிக்க தொடங்குவதால் வாழ்நாளில் அது தொடர்பான காயங்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக அதிக வருவாய் கொண்ட நாடுகளில் இருந்து வரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த முடிவுகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட இந்தியா போன்ற நாடுகளிலும் இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை என்று ஆய்வு குறித்து அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு முடிவின்படி, இளம் வயதில் மதுபானம் குடிக்க தொடங்குவதால் வாழ்நாள் முழுவதும் அதனை சார்ந்து இருக்கும் சூழல் அதிகமாக உருவாகிறது. குடிப்பதால் ஏற்படும் துன்பம், மதுபானம் தொடர்பால் ஏற்படும் காயங்கள் மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகள் வயதான காலத்தில் அதிகரிக்கின்றன என்பதும் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மதுபான நுகர்வு ம்ற்றும் அதனால் ஏற்படும் தீங்கு தரும் விளைவுகள் ஆகியவை இந்தியாவில் மிக பெரும் பொது சுகாதார பிரச்சனையாக விளங்குவதுடன் இந்த கலாசாரம் ஆபத்தை உணர்த்துவதாகவும் உள்ளது என ஆய்வின் தலைவர் தெரிவித்துள்ளார்.இந்த ஆய்வு முடிவுகள், இளம் வயதில் மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதன் அவசியத்தை மேற்கோள் காட்டுகிறது. மேலும், இளம் வயதில் மதுபானம் குடிப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை உருவாக்கவும் வலியுறுத்துகிறது.