இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற காந்தியவாதி. அவர் புதுக்கோட்டையில் 1866-ம் ஆண்டு ஜூலை 30 அன்று பிறந்தார். அவருடைய அப்பா நாராயணசுவாமி ஐயர். புதுக்கோட்டையிலிருந்த மகாராஜா கல்லூரியின் முதல்வராக இருந்தார். அவர் கண்டிப்பும் ஒழுக்கமும் கொண்டவர். முத்துலட்சுமியின் அம்மா சந்திராம்மாள் இசை வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர்.
முத்துலட்சுமி சிறு பிராயத்தில் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டார். பள்ளியில் புத்திக்கூர்மை கொண்ட முத்துலட்சுமி ஆசிரியர்களுக்குப் பிடித்த மாணவியாக இருந்தார். அந்தக் காலத்தில் பெண்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்படுவது இல்லை. ஆனால் முத்துலட்சுமி ஆசிரியர்கள் உதவியுடன் ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டார். முத்துலட்சுமி முதலாம் பாரம் முடித்த பின்னர்தான் அவர் ஆங்கிலம் கற்ற விஷயம் அவருடைய அப்பாவுக்குத் தெரியவந்துள்ளது.
கல்லூரிப் படிப்புக்காக மகாராஜா கல்லூரில் சேர விரும்பிய அவருக்கு அங்கே படிக்க முதலில் இடம் கிடைக்கவில்லை. அவர் பெண் என்பதும், அவருடைய தாய் பிராமணரல்லாதவர் என்பதும் அதற்குக் காரணங்கள். ஆனால் மகாராஜாவின் உதவியுடன் முத்துலட்சுமி கல்லூரியில் சேர்ந்துகொண்டார். கல்வி உதவித் தொகையும் அவருக்குக் கிடைத்துள்ளது.
சிறுவயது முதலே அவர் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரர் ஆனார். ஆண்கள் மட்டுமே படித்து வந்த சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்தபோது அவர் மட்டுமே ஒரே பெண் மாணவர். அவர்தான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினர். சென்னை சட்டமன்றத்தின் முதல் துணைத் தலைவர். இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர். (சென்னை) மெட்ராஸ் மாநகராட்சியின் முதல் துணை மேயர். 1912-ல் மருத்துவப் படிப்பை முடித்த அவர் 1914-ல் டாக்டர் சந்தார ரெட்டியை மணமுடித்துக்கொண்டார்.
பெண்கள்மீது ஆழ்ந்த அக்கறை கொண்ட முத்துலட்சுமி ரெட்டி அவர்களுடைய துயரங்களைப் போக்கப் பெரிதும் பாடுபட்டார். தன் உறவுப் பெண் ஒருவர் புற்றுநோயால் மரணமடைந்ததால் புற்றுநோய் மருத்துவத்தைக் கற்க விரும்பியுள்ளார். இதனால் இங்கிலாந்துக்குச் சென்று ராயல் கேன்சர் மருத்துவமனையில் இது தொடர்பான கல்வியைக் கற்றுள்ளார்.
பெண்களுக்கான சமூக நீதி கிடைப்பதற்காக முனைப்புடன் செயல்பட்ட அவர் பெண்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கவும் போராடியுள்ளார். பள்ளியில் படித்த பெண்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். ஏழைப் பெண்களுக்குக் கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தார்.
இந்தியாவில் வழக்கத்தில் இருந்த குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் ஒழிப்பதில் முக்கியப் பங்காற்றினார். தேவதாசி வழக்கப்படி பூப்பெய்தாத இளம்பெண்களைக் கோவிலுக்கு நேர்ந்துவிடும் கொடுமைக்கு எதிராக 1930-ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்தார். இந்த மசோதா 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டமானது. இந்தச் சட்டம் நிறைவேற ஈ.வே.ரா. பெரியாரும் மூவலூர் ராமாமிருதமும் உறுதுணையாக இருந்துள்ளனர்.
சென்னையிலுள்ள அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, ஆதரவற்ற கைம்பெண்களுக்கு இருப்பிடம் தரும் அவ்வை இல்லம் ஆகியவை தோன்றக் காரணமானவர். சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனை உருவாகக் காரணமும் அவரே. 1952-ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டிய அடையாறு புற்று நோய் மருத்துவமனை 1954 ஜூன் 18-ல் செயல்படத் தொடங்கியது. இந்திய அரசு 1956-ல் முத்துலட்சுமி ரெட்டிக்கு பத்மபூஷன் விருதை அளித்து கவுரவித்தது. 1968 ஜூலை 22 அன்று அவர் காலமானார்.
urs
www.v4all.org
urs
www.v4all.org
No comments:
Post a Comment