Saturday, August 23, 2014

தேடவேண்டிய இடத்தில் தேடு - எந்த வாடிக்கையாளர் என்னென்ன பொருட்களை வாங்குவார்,

தேடவேண்டிய இடத்தில் தேடு


இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே! அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே! . . . என்ற பாட்டை நீங்கள் கேட்டிருப்பீர்கள். தனி மனிதனை மனதில் வைத்து பாடப்பட்ட பாடல் அது. வியாபார நிறுவனங்களும் சில ஆண்டுகளுக்கு முன் வரை பை(கை)யில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்துகொண்டிருந்தார்கள் என்றே சொல்லலாம்.


எந்த வாடிக்கையாளர் என்னென்ன பொருட்களை வாங்குவார், எந்தெந்த பிராண்டுகளை ஒரு சேர உபயோகிப்பார், நம்முடைய தயாரிப்பில் எந்த வசதிகள் கட்டாயம் தேவை, எது தேவையேயில்லை என்பதெல்லாம் குறித்து ஆய்வு செய்ய நிறுவனங்கள் தங்களுடைய கணினிகளில் புதைந்திருக்கும் டேட்டா குவியல்களை பிரித்து மேய்ந்தாலே பல உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்ற உண்மையை உறைக்க வைத்ததுதான் பிசினஸ் அனலிட்டிக்ஸ். அட அதையெல்லாம் விடுங்கள்.


இணையதள வியாபாரத்தில் யார் விலையை கேட்டுவிட்டு நைசாக நழுவிவிடுவார், யார் விலை கேட்டுவிட்டு உடனடியாக வாங்குவார் என்ற கணக்குகளையெல்லாம் கூட போட்டுவிடமுடியும், பிசினஸ் அனலிடிக்ஸை வைத்துக்கொண்டு. உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மருந்துக்கடையில் உங்கள் தாத்தாவிற்கு மாதாமாதம் முதல் வாரத்தில் அந்த மாதம் முழுவதற்கும் தேவையான மருந்து வாங்குகின்றீர்கள்.


தாத்தாவோ நீங்கள் ஆபீஸிற்கு அவசரமாக கிளம்பிக்கொண்டிருக்கும் போது பேராண்டி இதுதான் கடைசி மாத்திரை என உங்களிடம் காண்பித்து உங்கள் ஞாபக மறதியை குத்திக்காட்டி மாத்திரையை வாயில் போடும் குணம் கொண்டவர். அட! என்னவொரு மறதி என்று நினைத்து உடனே அருகில் உள்ள வாடிக்கையான கடைக்கு ஓடினால் கைவசம் இல்லை சார். நாளைக்கு நிச்சயம் வந்துவிடும் என்கின்றார்.


ரத்த அழுத்தமோ, சர்க்கரையோ தாத்தாவுக்கு நாளைக்குள் ஏறிவிடுமே என்று பயப்பட்டுப்போய் நீங்கள் வேறுகடை தேடிப்போகின்றீர்கள். மருந்துக்கடைக்காரருக்கு ஒரு வாடிக்கையாளர் இழப்பு. புதிய கடையில் நீங்கள் முப்பது நாட்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை வாங்குகின்றீர்கள். இருபத்தி ஏழாவது நாள் உங்களுக்கு குறுஞ்செய்தி வருகின்றது. உங்களிடம் இன்னும் மூன்று நாட்களுக்கான மருந்துதான் இருக்கும் இந்த எண்ணுக்கு


`ஆம்’ என்று பதில் அனுப்பினால் உங்கள் வீட்டில் மருந்தை கொடுத்து காசு வாங்கிச்செல்வோம் என்கின்றது புதுக்கடை. `ஆம்' என்று பதில் அனுப்பாமல் பழைய பாசத்தில் நீங்கள் பழைய கடைக்குப் போனால் `மன்னிக்கவும் சார், நேற்றைக்கே சப்ளை வரணும். இன்றைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கின்றோம்' என்கின்றார் கடைக்காரர். `ஆம்' என்று புதுக்கடைக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றீர்கள். மாலைக்குள் மருந்து மாத்திரை வீடு வந்து சேருகின்றது. அதெப்படி, இந்தக் கடையில் கேட்டாலும் இல்லை; அந்தக்கடையில் கேட்காமலேயே நினைவு படுத்துகின்றார்கள்? அந்தக்கடைக்கு மருந்து சப்ளை செய்யும் நிறுவனம் நீங்கள் சென்ற மாதம் இந்த மருந்து இந்த அளவு விற்றிருக்கின்றீர்கள் என நினைவூட்டி மருந்தை அனுப்பி வைக்கவா என்று கேட்க கடைக்காரர் உங்களுக்கு நினைவூட்டுகின்றார்.


``டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் சோ மச்” என்று சுலபத்தில் சொல்லாதீர்கள். போன மாதம் இன்னார் இந்த மருந்து வாங்கினார் என்ற டேட்டா அவர்களிடத்தில் இருக்கின்றது. மருந்தின் பெயரை வைத்தே இது தொடர்ந்து சாப்பிடவேண்டிய மருந்து என்று தெரியும். விற்பனை ரசீது போடும்போது தாத்தாவின் பெயரையும் உங்களுடைய மொபைல் எண்ணையும் பதிந்துகொண்டால் பின்னால் அந்த டேட்டாவை நிதானமாய் பிராய்ந்து பார்த்து குறுஞ்செய்தி அனுப்பலாம் இல்லையா?


நாம் கால் பதிக்கும் பூமிக்கு அடியில் நூற்றி ஐம்பது கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும் வைரம் போல் இந்த டேட்டாக்களும் மதிப்பு மிக்கவை. எப்படி பூமிக்கு அடியில் அழுத்தம் மற்றும் அதீத வெப்பத்தால் வைரங்கள் உருவாகி ஒரு எரிமலை வெடிக்கும் போது மனிதனால் தோண்டி எடுக்கக்கூடிய ஆழத்திற்கு வந்து சேர்கின்றனவோ அதே போல்தான் வியாபார டேட்டாக்களும்.


ஒரு ப்ளேட் இட்லி, ஒரு செட் பூரி, காபி என்ற காம்பினேஷனும், ஒரு ப்ளேட் இட்லி, ஒரு ரோஸ்ட், மசாலா பால் என்ற காம்பினேஷனும் எத்தனை பேருக்கு விற்கப்பட்டது, மசாலா பாலுக்கும் ரோஸ்ட்டுக்கும் ஏதாவது பந்தம் இருக்கின்றதா என்று பார்த்து சர்வர்களிடம் தம்பி ரோஸ்ட் சாப்பிட்டவரிடம் மசாலா பால் சுலபத்தில் விற்கலாம் என்று ஹோட்டல்காரர் சொல்லிவைத்தால் அதிக லாபம் தரும் மசாலா பால் இரவு எட்டுமணிக்குள் கடையில் தீர்ந்துபோய்விடுமா இல்லையா? டேட்டாக்களின் இடையே இருக்கும் மதிப்புமிக்க வைரத்தை மனிதனின் கண்ணுக்கு தெரியப்படுத்தும் எரிமலை வெடிப்புதான் பிசினஸ் அனலிடிக்ஸ். இதுபோன்ற விலை மதிப்புள்ள முத்துக்களை எடுக்கவேண்டுமென்றால் (டேட்டா) கடலுக்குள் நிறுவனங்கள் குதித்துத்தான் ஆகவேண்டும்.


உலகில் உள்ள நிறுவனங்கள் தொழில் ரீதியாக காலம் காலமாக பல டெராபைட் (1 டெராபைட் என்பது 1 லட்சம் கோடி பைட்டுகள்) விற்பனை மற்றும் சேவை தகவல்களை பெற்று சேமிக்கின்றன. அந்தத் தகவல்கள் எல்லாம் எங்கோ ஒரு கணினிக்குள் புதைந்து போகின்றன. ஆழத்தில் டிஜிட்டலாக புதைந்து கிடக்கும் குப்பைகள் மதிப்பு மிக்க வைரங்களாக மாறி, நிறுவனங்களுக்கு மிகச் சிறந்த எதிர்காலத்தை கொடுக்க காத்துக்கொண்டு இருக்கின்றன. அதைத் தோண்டி எடுத்து மதிப்புக்கூட்டும் ஒரு வித்தைதான் பிசினெஸ் அனலிடிக்ஸ் எனப்படும் ஒரு புதிய யுக்தி.


நாளைக்கு நடப்பதைத் தெரிந்துகொள்ள நேற்றைக்கு நடந்தவற்றில் இருக்கும் ஒருமைப்பாடுகளை இன்றைக்கு தேடும் உத்தி இது. நீங்கள் செல்போன் கனெக்ஷன் வைத்திருக்கும் நிறுவனத்தின் கஸ்டமர் கேர் லைனுக்கு அடிக்கடி போன் செய்து புதிய ஆஃபர்கள் பற்றி கேட்டுக்கொண்டேயிருக்கின்றீர்கள்.


ஒரு ஆஃபரும் சரியாக இல்லை என்று நினைத்து கடுப்பாகி நீங்கள் போர்ட்டபிலிட்டி கேட்டு மெசேஜ் அனுப்ப நினைக்கும்போது உங்கள் கஸ்டமர் கேர் கால்களை பிசினஸ் அனலிடிக்ஸில் கண்டறிந்து உங்கள் எண்ணத்தை புரிந்து கொண்டு, உங்கள் பில்லை ஆராய்ந்து பிரச்சினை என்ன என்பதையும் அறிந்துகொண்டு, 'சார், உங்களுக்கு ஒரு புதிய ஆஃபர் ஒன்று கொடுக்க விரும்புகிறோம்' என்று உங்கள் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு புதிய திட்டத்தை கொடுத்தால் உங்களுக்கு எவ்வளவு ஆச்சரியமாகவும், சந்தோசமாகவும் இருக்கும்? போர்ட்டபிலிட்டிக்கு அதற்குப் பின்னால் முயற்சிப்பீர்களா?


நீங்கள் பிளிப்காட்டில் அன்று அறிமுகப்படுத்தப்பட்ட புது மொபைலின் விலை என்னவென்று பார்த்துவிட்டு ‘ஹிந்து தமிழ்’ இதழை இணையத்தில் படிக்கும்போது நீங்கள் பார்த்த போனை உங்கள் கண் முன்னேயே தொடர்ந்து கொண்டுவந்து நிறுத்துவதும் பிசினஸ் அனலிடிக்ஸின் ஒரு பகுதிதான். பார்த்ததை உங்கள் கண்கள் மறந்தாலும் கணினிகள் மறப்பதில்லை. உங்கள் கண் முன்னே கொண்டுவந்து நினைவூட்டி ஆசை காட்டிக்கொண்டேயிருக்கும்.

No comments:

Post a Comment