உலகத்திலேயே மனிதன் அதிகமாக
நேசிக்கக் கூடியது அமைதியும்,
நிம்மதியுமே.
பணம் வரலாம்; போகலாம். பல
தாரங்களை மணந்து
கொள்ளலாம்; வீடு
வாங்கலாம்; விற்கலாம்; நிலம்
வாங்கலாம்; சொத்தைப்
பெருக்கலாம்; எல்லாம்
இருந்தும் கூட நிம்மதி இல்லை
என்றால் அவன் வாழ்ந்து என்ன
பயன்?
சேர்க்கின்ற சொத்து
நிம்மதிக்காக.
கட்டுகிற மனைவி நிம்மதிக்காகவே.
தேடுகின்ற வீடும், நிலமும்
நிம்மதிக்காக.
எப்போது அவன் நிம்மதியை
நாடுகிறானோ, அப்போது அவனுக்கு
அவஸ்தை வந்து சேருகிறது.
ஆரம்பத்தில் மனிதன் விரும்பியோ
விரும்பாமலோ பல சிக்கல்களைத்
தானே உண்டாக்கிக்
கொள்கிறான்.
தானே கிணறு வெட்டுகிறான்;
அதில் தானே விழுகிறான்.
தானே தொழில்
தொடங்குகிறான்;
தவியாய்த் தவிக்கிறான்.
தானே காதலிக்கிறான்;
அதற்காக உருகுகிறான்.
தானே ஒரு பெண்ணை விரும்பிக்
கல்யாணம் செய்து
கொள்கிறான்; பிறகு இது
பெண்ணா?, பேயா? என்று
துடியாய்த் துடிக்கிறான்.
எந்தக் கோணத்தில் நின்று
பார்த்தாலும் மனித வாழ்க்கை
துன்பகரமாகவே காட்சியளிக்கிறது.
ஆகவேதான், மனிதன் ஏதாவது
ஒரு புகலிடத்தை நாடுகிறான்.
தனக்கு அடைக்கலம்
கொடுக்கக் கூடியவர்கள்
யாராவது இருக்கிறார்களா?
என்று தேடுகிறான்.
மனிதர்களோ அவதூறு பேசுகிறார்கள்;
கேலி செய்கிறார்கள்.
ஆகவே, அவன் தெய்வத்தைச்
சரணடைகிறான்.
அந்தத் தெய்வம் அவன்
குறையைக் கேட் கிறதோ இல்லையோ,
காட்சியிலேயே நிம்மதியைத் தருகிறது.
இந்தத் தெய்வ பக்தியில் மிக
முக்கியமானது அணுகும் முறை.
எல்லோரையும் போல கோவிலுக்குப் போனோம்;
ஒரு தேங்காய் உடைத்தோம்; இரண்டு
பழங்களை வாங்கிச் சென்றோம்
என்பதில் லாபமில்லை.
கோவிலில் பாடப்படும் `கோரஸ்’
அல்லது கோஷ்டி கானத்தில்
பெரும் பயனடைவதில்லை.
ஏழை ஒருவன் வள்ளல் வீட்டுப்
படிக்கட்டுகளில் நம்பிக்கையோடு ஏறுவது
போல், இறைவனை அணுக வேண்டும்.
இறைவனை ஒரு உன்னதமான
இடத்தில் வைத்து, அடிமையைப் போல்
இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவனைத் தோழனாகவே
பாவிக்கலாம்.
No comments:
Post a Comment