கடவுளை மறுக்கும் அனைவரும் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி, “கடவுளை உங்களால் காட்ட முடியுமா?” என்பதுதான். ஆனால் கடவுளை நம் கண்களால் காண முடியாது. ஆனால் அவர் இருப்பதை மனக் கண்களால் அறிய முடியும் என்கிறது விவிலியம்.
விவிலியத்தின் பொது மொழிபெயர்ப்பில், “ நம் கண்ணுக்குப் புலப்படாத கடவுளுடைய பண்புகள்-அதாவது, என்றும் நிலைத்திருக்கும் அவரது வல்லமையும் அவரது தெய்வத் தன்மையும், நம் மனக் கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன” (உரோமையர்- 1:20) என, கடவுள் உலகைப் படைத்தது முதல் இயற்கை மற்றும் உயிர்களின் மீதான ஆட்சிவரை அத்தனையிலும் அவரது நிர்வாகமும் ஏற்பாடும் நிறைந்திருப்பதை மனிதர்களாகிய நாம் உணரமுடியும்.
படைக்க முடியாது
கடவுளுக்கு இணையாக நம்மால் எதையும் படைக்கமுடியாது. அவரது படைப்பாற்றலை நம்மால் காப்பியடிக்கவும் முடியாது. அதனால்தான் கடவுளுடைய படைப்புகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. “அவை ஒவ்வொன்றும் அவருடைய அறிவைப் பறைசாற்றுகின்றன.
இதை உங்களால் உணர முடிகிறதா? படைப்பின் அதிசயங்களை உங்கள் மனக் கண்களால் காண முடிகிறதா? மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி இருப்பதை அவை மௌனமாய்ச் சொல்வது உங்கள் காதில் விழுகிறதா?” என்று கேட்கிறார் எபேசியர். அப்படிப்பட்ட அவரது படைப்பில் சில அதிசயங்களே இங்கே சாட்சியாவதைக் காணுங்கள்.
படைப்பிலிருந்து பாடம்
ஒவ்வொரு மாதமும் ஒருநாள் நிலவு விடுமுறை எடுத்துக்கொள்கிறது. நிலவு இல்லாத இரவின் காரிருளை விரட்ட பிரகாசமாய் மின்னிடும் நட்சத்திரங்களின் கூட்டத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அவை படைத்தவரின் பெருமையை நமக்கு வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.
கடவுளின் படைப்புத்திறனில் மனம் நெகிழ்ந்த பண்டைய கவிஞர் ஒருவர், கடவுளைப் போற்றும் விதமாக “வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் நட்சத்திரங்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில்கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?”(சங்கீதம்8:3,4). என்று புகழ்ந்து பாடுகிறார்.
பிறப்பின் அதிசயம்
இவ்வாறு மனிதன் இயற்கையிடம் மண்டியிட்டு அதிசயிக்கிறான். ஆனால் தன் படைப்புக்கெல்லாம் உச்சமாக மனிதனைப் படைத்தார் கடவுள். தந்தையின் உயிரணுவும், தாயின் கருமுட்டையும் இணைந்ததும், கருவுக்கு எத்தகைய உரு கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய புதிய செல்லின் டி.என்.ஏ விரைவாகச் செயல்பட்டு கட்டங்களைப் போட்டு, திட்டங்களைத் தீட்டுகிறது.
ஒரு உயிரின் டி.என்.ஏவை எழுத்தில் வடித்தால் 600 பக்கங்கள் உடைய ஆயிரம் புத்தகங்கள் தேவை என்கிறார்கள். இத்தனை வியப்புக்குரிய கருவுற்ற செல், ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி எனப் பெருகிக்கொண்டே செல்கிறது. தாய் கருவுற்ற 270 நாட்களுக்குள், 200 வகை செல்கள், கோடிக்கணக்கில் பெருகி, இந்த செல் உடலில் இந்த உறுப்பாக உருவாகும் செயல்திட்டம் நிறைவடைந்து குழந்தை முழு வடிவம் பெற்று, தாயின் வயிற்றிலிருந்து வெளியே வருகிறது.
கருவை உருவாக்கிய கடவுளை இவ்வாறு உருகிப் பாடினார் ஒரு பாடகர்: “என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உருத் தந்தவர் நீரே! வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால் நான் உமக்கு நன்றி நவில்கிறேன்” (சங்கீதம் 139: 13-16). இனியும் கடவுளைக் காணமுடியுமா என்று நீங்கள் கேட்பீர்களா?
No comments:
Post a Comment