பிரெய்லி எழுத்துக்கள் இல்லை என்றால் பார்வையற்றவர்கள் நிலை என்ன என்று நினைத்துப் பாருங்கள். அவர்களது விரல்களைக் கண்களாக மாற்றியமைத்த ஒரு மொழியை லூயி பிரெய்ல் உருவாக்கினார். அதுவே லட்சக்கணக்கானோருக்கு ஞானப்பார்வை அளித்துக்கொண்டு இருக்கிறது.
லூயி பிரெய்ல் பிரான்ஸ் நாட்டில் குப்ரே என்ற சிறிய கிராமத்தில் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் 1809-ல் ஜனவரி 4-ம் தேதி பிறந்தார். இவருடைய அப்பா சைமன் ரேலே பிரெய்ல் குதிரை லாடம் மற்றும் சேணம் தயாரிக்கும் பட்டறை வைத்திருந்தார். மூன்று வயதே ஆன லூயி தன் அப்பாவின் பட்டறையில் கருவிகள், தோல், மரச்சட்டங்கள், கயிறு, இரும்புத் துண்டு, கத்தி, ஊசி ஆகியவற்றில் விளையாடிக்கொண்டிருப்பான்.
ஒரு நாள், கத்தியால் மரத்துண்டை வெட்டி விளையாடிக் கொண்டிருக்கும்போது, கத்தி அந்தப் பையனின் கண்களில் குத்திவிட்டது. கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியது. உள்ளூர் மருத்துவரைக் கொண்டு வைத்தியம் பார்க்கப்பட்டது. குழந்தைதானே சீக்கிரமே தானாகவே குணமாகிவிடும் என்று நினைத்து வீட்டில் அலட்சியமாக விட்டுவிட்டனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல முறையான சிகிச்சை அளிக்காமல் விட்டதால், சிறுவனது இன்னொரு கண்ணும் பாதிக்கப்பட்டுவிட்டது. சிறுவன் எட்டு வயது ஆவதற்குள் முழுமையாகப் பார்வையை இழந்துவிட்டான். வண்ணமயமான அவனது உலகமே இருண்டு போய்விட்டது.
ஆனால், இந்தச் சிறுவன் சாதாரணமானவன் அல்ல. அவனது மனதில் உலகத்தோடு போராடி ஜெயிக்க வேண்டும் என்ற தீவிர எண்ணம் இருந்தது. பிரான்சின் பிரபல பாதிரியாரான வேலன்டைய்ன் இவனுக்குப் பல உதவிகள் புரிந்தார். அவரது முயற்சிகளின் பலனாக தனது 10-வது வயதில் லூயி ‘ராயல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ப்ளைன்ட்ஸ்” என்ற பார்வையற்றோருக்கான கல்வி நிறுவனத்தில் சேர்ந்தான்.
ராணுவ மொழி
பிரெஞ்ச் ராணுவ கேப்டன் சார்லஸ் பார்பர் ராணுவத்தினருக்காக ஒரு சங்கேத மொழியை இருட்டிலும் தடவிப் பார்த்துப் படித்துத் தெரிந்துகொள்ளும்வகையில் மேம்படுத்தியதை இவன் கேள்விப்பட்டான். இந்த சங்கேத குறியீட்டு மொழியைப் பார்வையற்றவர்களுக்காக ஏன் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று இந்தச் சிறுவனின் மனம் ஆராய்ந்தது. கேப்டன் சார்லஸ் பார்பரைச் சந்திக்க சிறுவன் முயன்றான். பாதிரியார் வேலன்டைய்ன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.
கேப்டனை சந்தித்தபோது பல திருத்தங்களையும், மேம்பாடுகளையும் இவன் கூறினான். அதைக் கேட்ட கேப்டன் பிரமித்துவிட்டார். மாற்றங்களை அவர் ஏற்றுக்கொண்டார். லூயி பிரெய்ல் எட்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்து, இந்த எழுத்துகளில் நிறைய ஆய்வுகளை மேற்கொண்டு பல மாற்றங்களைச் செய்தார். இறுதியில் 1829-ம் ஆண்டில் ஆறு புள்ளிகளின் அடிப்படையில் பிரெய்லி எழுத்துகளை உருவாக்குவதில் வெற்றி கண்டார்.
ஆனால், இதை ராணுவத்தினர் பயன்படுத்திவந்தார்கள் என்பதால், இது வெறும் சங்கேத மொழியாகவே கருதப்பட்டுவந்தது. இதைக் கல்வியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இவருக்கு உரிய மரியாதையும் கிடைக்கவில்லை.
ஆனாலும் சற்றும் மனம் தளராமல் தன்னைப் போன்ற பார்வையற்றவர்கள் மத்தியில் இந்த எழுத்தைப் பற்றித் தொடர்ந்து பிரச்சாரம் செய்தவாறே இருந்தார் லூயி. பார்வையற்றவர்களுக்கான மொழியாக இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசிடம் கோரினார். அப்போதைய கல்வியாளர்கள் இதை ஒரு மொழியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அவருடைய முயற்சிகள் வெற்றிபெறவில்லை. தனது முயற்சிகளுக்கு சமுதாய மற்றும் சட்டபூர்வமான அங்கீகாரம் பெற தொடர்ந்து போராடிய லூயி பிரெய்ல் தனது 43-வது வயதில் காலமானார்.
மரணத்திற்குப் பிறகு கிடைத்த மரியாதை
இவர் மரணத்திற்குப் பிறகு இவர் கண்டுபிடித்த ஆறு புள்ளிகளை ஆதாரமாகக் கொண்ட எழுத்து, படிப்படியாகத் தொடர்ந்து பிரபல மடைந்தது. லூயி பிரெய்ல் இறந்த பிறகுதான் கல்வியாளர்களால், இந்த மொழியின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. பார்வையற்றவர்கள் மத்தியில் இது தொடர்ந்து அங்கீகாரம் பெற்றுவந்தது. எனவே, அரசும் அதன் பிறகு விழித்துக்கொண்டது.
இவர் இறந்த 100 வருடங்களுக்குப் பிறகு பிரான்சில் 1952-ம் ஆண்டு ஜுன் மாதம் 20-ம் தேதி இவருக்கு மரியாதை செலுத்த வேண்டிய நாளாகத் தீர்மானிக்கப்பட்டது. இவருடைய கிராமத்தில் நூறு வருடங் களுக்கு முன் புதைக்கப்பட்ட இவரது உடலின் மிச்சம் அரச மரியாதையுடன் வெளியே எடுக்கப்பட்டது. அன்று இவர் புனர்ஜென்மம் எடுத்தாற்போல இருந்தது. அவர் வாழ்ந்துவந்த காலத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும் கேலி செய்யப்பட்டும் வந்த மக்கள்
அவரிடம் மன்னிப்புக் கேட்க இவரது சமாதியின் நான்கு பக்கமும் சூழ்ந்துகொண்டனர். படை வீரர்கள் சோக கீதம் வாசித்தனர், இவருக்கு வாழும் காலத்தில் அங்கீகாரம் அளிக்காமல் இருந்த வரலாற்றுப் பிழைக்காக அவரது எஞ்சியிருந்த பூத உடலுக்கு முன் தேசமே மன்னிப்புக் கேட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு உரிய முறைப்படி அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் மீண்டும் அவர் மரியாதையுடன் புதைக்கப்பட்டார்.
இந்திய அரசும் இவரைக் கவுரவித்தது. 2009-ம் ஆண்டில் இவரது உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலையை வெளியிட்டது. லூயி பிரெய்ல் கண்டறிந்த இந்த மொழி அவர் பிறந்த நாட்டிற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகிலும் இருக்கும் பார்வையற்ற அனைவருக்கும் வரமாக அமைந்துவிட்டது.