திருவண்ணாமலை
ஸ்மரணாத் அருணாசலம்’ என்ற வாக்குக்கிணங்க நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. ஒரு முறை இங்கு சென்றால், மீண்டும் செல்ல வாய்ப்புக் கிடைப்பதால், இதை ‘காந்தமலை’ என்கிறார்கள்.
அண்ணுதல்- நெருங்குதல்; அண்ணா- நெருங்க முடியாதது என்று பொருள். திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத மலை என்பதால் அண்ணாமலை. ‘ திரு’ எனும் மரியாதை சேர்த்து திருஅண்ணாமலை என்பதே சரி.
அருணன் = சூரியன்; சிவப்பு நெருப்பைக் குறிக்கும். அசலம்= மலை. சிவந்த நிறத்தையுடைய மலை. எனவே, இதற்கு அருணாசலம் என்றும் பெயர். தவிர இந்தத் தலத்துக்கு முக்திபுரி, அருணகிரி, திருவருணை, அருணை, சுத்த நகரம், சோணா சலம், அனற்கிரி, தென் கயிலாயம், ஞான நகரம், அண்ணா நாடு, சிவலோகம், அண்ணாத்தூர், கௌரி நகரம், தேசு நகரம், முக்தி நகரம், ஞான நகரம், சோணாத்ரி, அருணாத்ரி தலேச்சுரம், சோணகிரி ஆகிய பெயர்களும் இதற்கு உண்டு.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,668 அடி உயரம் உள்ளது அண்ணாமலை. கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், கலி யுகத்தில் ஞானிகளின் பார்வைக்கு மரகத மேருவாகவும், பாமர மக்களுக்கு கல் மலையாகவும் காட்சி தருகிறது.
அருணாசலபுர கதையை குத்சர், உரோமசர், குமுதர், குமுதாட்சர், சகடாயர், அகத்தியர், வத்சர், வைசம்பாயனர், கணாசி, வியாக்ரபாதர், வாமதேவர், சனகர், சனத்குமாரர், வியாசர், மதங்கர், பதஞ்சலி ஆகியோருக்கு நந்தி தேவரும், மார்க்கண்டேயரும் கூறியுள்ளனர்.
ஒரு முறை விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ‘தங்களில் யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. சிவபெருமான், ‘இருவரில் யார் முதலில் என் அடி அல்லது முடியைக் கண்டு வருகிறீர்களோ அவரே பெரியவர்!’ என்று கூறி ஜோதி ஸ்வரூபமாகக் காட்சி தந்தார்.
மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து திருவடியைக் காண பூமிக்குள் சென்றார். பிரம்மன், திருமுடியைக் காண அன்னப் பறவையாக விண்ணில் பறந்தார். இருவரது நோக்கமும் நிறைவேறவில்லை. மகாவிஷ்ணு தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆனால் பிரம்மா, முடியைக் கண்டதாக பொய் கூறி, தாழம்பூவையும் பொய் சாட்சி சொல்ல வைத்தார். இதனால், கோபம் கொண்ட சிவபெருமான், ‘‘பொய் சொன்ன உனக்கு பூலோகத்தில் கோயிலோ பூஜையோ கிடையாது!’’ என்று பிரம்மனையும் .தாழம்பூ, தன்னைத் தீண்டக்கூடாது என்றும் சபித்தார். இதனால் சிவபூஜைக்கு தாழம்பூ பயன்படுவதில்லை.
இப்படி பிரம்மா- திருமால் இருவருக்கும் லிங்கோத்பவராக - ஜோதிப் பிழம்பாக சிவபெருமான் காட்சி தந்த தலம் இது. இந்த ஜோதி ஸ்வரூபத்தின் வெம்மை தாளாமல் தேவர்கள் வருந்தி அலற கருணையால் சிவபெருமான் மலையாகி நின்றதாகப் புராணங்கள் சொல்கின்றன.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் இது.
‘கடலில் மறைந்து போனதாகக் கருதப்படும், லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை’ என்று ஸ்ரீரமண மகரிஷியிடம் ஆசிபெற்ற மேனாட்டு ஆராய்ச்சியாளர் பால் பிரண்டன், Message From Arunachala என்ற நூலில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டிருக்கிறார்.எரிமலைக் குழம்புதான் இறுகிப் போய் மலையாகியுள்ளது என்று நவீன விஞ்ஞான ஆராய்ச்சியும் நிரூபிக்கிறது.
1949-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்திய அறிவியல் கழகக் கூட்டம் நடந்தபோது, ‘இமய மலையைவிட திருவண்ணாமலை பழைமையானது’ என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தார் டாக்டர் பீர்பால் சகானி என்ற புவியியல் அறிஞர்.
இங்குள்ள சாசனங்கள் தமிழ், வடமொழி, கன்னடம் ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. அருணாசலத்தைப் பற்றி சுமார் 52 புராதன நூல்கள் உள்ளன.
திருவண்ணாமலை ஆலய கட்டுமானப் பணி வளர்ச்சி என்பது கி.பி.871 முதல் கி.பி.1505 வரை அடைந்துள்ளது. அதாவது சோழர் காலம் முதல் நாயக்கர் காலம் வரை.
கருவறை பல்லவர் காலத்தில் எழுப்பப்பட்டது. மதில்களில்- முதலாம் ராஜேந்திரன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜ கோப்பெருஞ்சிங்கன் ஆகியோரது சாசனங்கள் காணப்படுவதால் இந்தப் பிராகாரச் சுவர்கள், கி.பி.10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
நங்கை அழவீசவரி என்ற பல்லவ அரசி கி.பி.1269-ல் அண்ணாமலைநாதர் கோயிலுக்கும், உண்ணாமுலை அம்மன் சந்நிதிக்கும் நடுவில் ‘நங்கை அழவீச்வரம்’ என்ற ஒரு சிறிய தளியைக் கட்டினாள். இதற்காக அவள் 10,000 பொற்காசுகளும் பதின்மூன்றரைக் குழி நிலமும் அளித்ததாக கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.
இந்தக் கோயில் கருவறையின் கூரைக்கு பாணர் தலைவன் ஒருவன் பொன் முலாம் பூசினானாம்.
நாட்டுக்கோட்டை நகரத்தார் சுமார் 35 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி புரிந்து, 12.6.1903-இல் குட முழுக்கு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை கோயிலில் உள்ள 5 பிராகாரங் களுடன், மாட வீதி 6-வது பிராகாரமாகவும், கிரிவலப் பாதை 7-வது பிராகாரமாகவும் கொள்ளப்படுகிறது. இந்தத் திருக்கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ஒன்பது கோபுரங்களுடன் அமைந்துள்ளது. அவை: பெரிய கோபுரம், கிட்டி கோபுரம், அம்மணி அம்மாள் கோபுரம் (அம்மணி அம்மாள் கட்டியது), வடக்கு கட்டை கோபுரம், மேலக் கோபுரம் (பேய்க் கோபுரம்), மேற்குக் கட்டை கோபுரம், திருமஞ்ஞன கோபுரம் (தெற்கு கோபுரம்), வல்லாள கோபுரம் (போசள மன்னன் மூன்றாம் வீர வல்லாளனால் கி.பி.1340-ல் கட்டப்பட்டது. இதற்கு வீர வல்லாளன் திருவாசல் என்று பெயர்.), கிழக்குக் கோபுரம் (11 நிலைகள், 216 அடி உயரம்.).
இங்குள்ள மண்டபங்கள்: ஞானப்பால் மண்டபம், தீர்த்தவாரி மண்டபம், திருவருள் விலாச மண்டபம், மாதப்பிறப்பு மண்டபம், உத்ராட்ச மண்டபம், அமாவாசை மண்டபம், பன்னீர் மண்டபம், காட்சி மண்டபம், திருக்கல்யாண மண்டபம்.
திருக்கல்யாண மண்டபத்தின் மர விதானத்தின் மீது செப்பு ஓடு வேயப்பட்டுள்ளது. இது அழகிய தூண்களும் ஓவிய வேலைப்பாடுகளும் கொண்டது.
இங்குள்ள பிராகார மதில்கள்- வீரக்காரன் திருமதில், வசந்தராயன் திருமதில், திருவேகம்பமுடையன் திருமதில் என்று வழங்கப்படுகின்றன. இந்த மதில்கள் சுமார் 30 அடி உயரம், 1,500 அடி நீளம், 900 அடி அகலத்துடன் திகழ்கின்றன.
மூலவர் திருச் சுற்றின் மேற்குப் புற மதில்- ஆதித்திய சோழனாலும், அவன் மைந்தன் பராந்தகனாலும், கிழக்குச் சுவர்- உத்தமச் சோழனாலும் கட்டப்பட்டவை. கருவறையுள் நுழையும் வாயிலுக்கு உத்தம சோழன் வாசல் (கருவறையில் உத்தம சோழனின் சிற்பம் உள்ளது.) என்றும் பெயர்.
கிழக்கு வாயில் வழி நுழைந்தால் வலப் பக்கம் காணப்படுவது ஆயிரங்கால் மண்டபம். இதில் சரியாக 1,000 தூண்கள் உள்ளன.
வல்லாள கோபுரத்தில் ஒரு கோட்டத்தில் வல்லாளனின் சுமார் இரண்டரை அடி உயர சிலை உள்ளது.
இரண்டாம் பிராகாரத்தில் நடராஜ பெருமானின் செப்பு விக்கிரகத்தையட்டி அண்ணாமலையானின் அணிகலன்கள் மற்றும் ஆடைகளைப் பாதுகாக்கும் அறைகள் உள்ளன. நுழைவாயிலின் வடபுறம் பொக்கிஷ அறையும், தென்புறம் ஆடைகள் வைக்கும் அறையும் அமைந்துள்ளன. இவற்றின் அருகே சுரங்கப்பாதை ஒன்று, மலையை ஊடுருவிச் செல்கிறது என்கிறார்கள். சுரங்கப் பாதையின் துவக்கத்தைக் குறிக்கக் கல்லால் ஆன சங்கிலி கொண்ட கல்தூண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பிராகாரத்தில் கிளிகோபுர படிக்கட்டின் தெற்கில், ‘திறை கொண்ட விநாயகர்’ சந்நிதி உள்ளது.
கொடுங்கோல் அரசன் ஒருவன் இந்தப் பகுதியை ஆண்டபோது அவனது கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், விநாயகரை வேண்டினர். விநாயகர் அந்த அரசனது கனவில் யானையாகத் தோன்றி மிரட்டினார்.அரசன், தனது தவறுணர்ந்து யானைகள் பலவற்றை இந்த விநாயகருக்கு திறை செலுத்தி வழிபட்டான். அதனால் இவருக்கு இந்தப் பெயர்.
கிளி கோபுரத்தைக் கடந்ததும் எதிர்ப்படுவது கி.பி.1202-ல் மங்கையர்க்கரசி என்ற அம்மையாரால் கட்டப்பட்ட மண்டபம். கார்த்திகை விழாக் காலத்தில் மலை மீது தீப தரிசனத்தைக் காணும் வகையில் உற்சவ மூர்த்திகளை இங்கு எழுந்தருளச் செய்கின்றனர்.
கிளி கோபுரத்துக்கு எதிரேயுள்ள நந்தி மண்டபத்தில் ஆறடி நீளத்தில் பெரிய நந்தி உள்ளது. இதுவும் வல்லாள மகாராஜாவால் கட்டப்பட்டது.
மூன்றாம் பிராகாரத்தில் உள்ள சிறிய மண்டபத்தில் அண்ணாமலையார் அருண யோகியாக நெற்றியில் திருநீறும், இடையில் கோவணமும் அணிந்து சூட்சும வடிவில் உறைகிறார். எனவே, இங்கு அமர்ந்து தியானம் செய்தால் ஆழ்ந்த அமைதி பெறலாம்.
சிவகங்கை குளத்துக்கு இறங்கும் வாயிலின் அருகே உள்ளது கம்பத்து இளையனார் சந்நிதி. இங்கு வில்லேந்திய அற்புதமான கோலத்தில் முருகப் பெருமான் அருள் புரிவதை தரிசிக்கலாம். அருட்கவி அருணகிரிநாதரது வேண்டுதல்படி பிரௌடதேவ ராயனுக்கு முருகன் காட்சியளித்த இடம் இது.
இந்தத் தலத்தில் உள்ள உச்சிப் பிள்ளையார் சந்நிதி, வன்னி மர விநாயகர் சந்நிதி மற்றும் கோபுரத்து இளையனார் சந்நிதி ஆகியவை, கி.பி.1421-இல் இரண்டாம் தேவராயன் என்ற விஜய நகர மன்னனால் கட்டப்பட்டவை.
கால பைரவர் சந்நிதிக்கு முன் உள்ளது பிரம்ம தீர்த்தம். இது காடவ மன்னன் வேணு உடையானால் நிறுவப்பட்டது.
இந்தத் தலத்தில் எமதேவனின் கணக்கர் சித்ர குப்தருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. அவருடன் விசித்திர குப்தரும் காட்சி தருகிறார்.
சர்வஸித்தி விநாயகர் சந்நிதியின் வடக்குப் பக்கம் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் தென்மேற்குப் பகுதியில் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு ஸ்ரீரமண மகரிஷி பல காலம் தங்கி, தவம் இருந்தார் என்று வரலாறு சொல்லும். இந்தச் சந்நிதியை ‘பரோசா தலையார்காண்’ என்ற வெளிநாட்டுப் பெண்மணி தலைமையில் சென்னை ஜே.எச். தாராபூர் அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப் பெற்று 14.5.1949-ல் கவர்ஜெனரலாக இருந்த ஸ்ரீமான் ராஜாஜியால் திறந்து வைக்கப்பட்டது.
மொத்தம் 106 கல்வெட்டுகள் உள்ளன. பரத சாஸ்திரத்தில் உள்ள தாண்டவ லட்சணம் எனும் நாட்டிய நிலைகள் 108-யும் விளக்கும் சிற்பங்கள் இங்கு உள்ளன.
இங்கு சிவப்பு நிறத்தில் சம்பந்த விநாயகர் என்ற பெயரில் விநாயகர் ஒருவர் காணப்படுகிறார். அசுரனைக் கொன்று அவனது குருதியைத் தன் உடலில் இவர் பூசிக் கொண்டதாக ஐதீகம்.
கோயில்களில் பொது வாக தெய்வத் திருமேனி களை அஷ்டபந்தனம் முறையில் பிரதிஷ்டை செய்வர். ஆனால், இங்கு சுவர்ணபந்தன முறை கையாளப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோயில் வளாகத்தில் அண்ணாமலையாரின் பாதம் அமைந்துள்ளது. இதற்கு தினமும் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறுகின்றன.
அருணகிரிநாதரின் தாய் முத்தம்மை வழிபட்ட விநாயகர், ‘முத்தம்மை விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார்.
ஆலயத்துக்குள் கல்யாண மண்டபத்துக்கு எதிரே தல விருட்சமான மகிழ மரம் உள்ளது. இதன் அருகிலிருந்து கோயிலின் ஒன்பது கோபுரங்களையும் தரிசிக்கலாம்.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சந்நிதி முன் உள்ள நந்தியெம்பெருமான் ஈஸ்வரனைப் பார்க்காமல் மலையைப் பார்த்த வண்ணம் உள்ளார். இதே போல் மலையைச் சுற்றி உள்ள அஷ்டலிங்கங்களின் முன் உள்ள நந்திகளும் ஈஸ்வரனைப் பார்க்காமல் மலையைப் பார்த்த வண்ணமே உள்ளன.
அண்ணாமலையாரின் வேறு பெயர்கள்:லிங்கோத்பவ மூர்த்தி, இமய லிங்கம், பிரம்ம லிங்கம், விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர், கல்யாணசுந்தரர், அருணாசலேஸ்வரர், ஈசான லிங்கம், சிதம்பரேஸ்வரர், அக்னி லிங்கம், சம்புகேஸ்வரர், சனாதனேஸ்வரர், நாரதேஸ்வரர், சனந்தேஸ்வரர், வால்மீகிஸ்வரர், சனத்குமாரர், சனகேஸ்வரர், வியாச லிங்கம், வசிஷ்ட லிங்கம், குபேர லிங்கம், வாமரிஷீஸ்வரர், சகஸ்ர லிங்கம், கௌசிகேஸ்வரர், குத்சரிஷீஸ்வரர், வைசம்பாதனேஸ்வரர், வருண லிங்கம், தும்புரேஸ்வரர், காசி லிங்கம், சத லிங்கம், விக்ரபாண்டீஸ்வரர், வாயு லிங்கம்.
கல்வெட்டுகளில் திரு வண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகாதேவர், திருவண்ணாமலை ஆழ்வார், அண்ணாநாட்டு உடையார் என்று இவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
அக்னிக்குரிய நாள் செவ்வாய். திருவண்ணாமலை, அக்னிமலை. எனவே, இங்கு சிவபெருமானுக்கு செவ்வாய்க் கிழமை அன்று விசேஷ வழிபாடு நடைபெறுகிறது.
அருணாசலேசுவரருக்குக் காதணிகள், ரத்தின முடி, பிரபாவளி, கல்ப விருட்சம், முத்து விதானம், ரத்தினக் கட்டில் ஆகிவற்றையும் உண்ணாமுலை அம்மனுக்கு கற்கள் பதித்த அங்கியும், முருகனின் மயிலுக்குத் தங்கக் கவசமும் செய்து வைத்தான் கோப்பெருஞ்சிங்கன்.
ஸ்ரீ அண்ணாமலையார், ராஜ கோபுரம் வழியாக வெளி வருவதில்லை. அதற்கு அடுத்த வாசல் வழியாகவே உற்சவத்துக்காக வந்து செல்வார்.
குழந்தைச் செல்வத்துக்காக அண்ணாமலையாரை வேண்டியவர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் கரும்புக் கட்டுகள் மற்றும் புடவையால் தொட்டில் கட்டி, குழந்தையைப் படுக்க வைத்து, மாட வீதியை வலம் வந்து பிரார்த்திப்பது இங்கு சிறப்பு.
‘திருவண்ணாமலையில் அடிக்கு ஆயிரம் லிங்கங்கள்’ என்பது ஐதீகம். எனவே, இங்கு வசிக்கும் பெரும்பாலோர் செருப்பு அணிவதில்லை.
2,668 அடி உயரம் உள்ள திருவண்ணாமலை சுமார் எட்டு மைல் சுற்றளவுள்ளது. அரிய மூலிகைகளும் குகைகளும் இங்கு உள்ளன. இந்த மலை ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் எனும் சிவபெருமானின் ஐந்து திருமுகங்களை நினைவூட்டும் ‘பஞ்சகிரி’யாகக் காட்சி தருகிறது.
மலையைச் சுற்றி அஷ்டலிங்கங்களும், குளங்களும் உள்ளன. அஷ்டதிக் பாலகர்கள் தங்களது பாவங்களிலிருந்து விடுபட்டதும் இங்குதான்.
இங்கு மலையே லிங்கம் என்பதால் மலையில் இருந்து எவரும் கல்லை வெட்டி எடுக்க மாட்டார்கள். மலையின் அமைப்பு கீழ் திசையிலிருந்து பார்த்தால், ஒன்றாகத் தெரியும். மலையைச் சுற்றும் வழியில் இரண்டாகத் தெரியும். மலையின் பின்னால் மேற்குத் திசையிலிருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும், மலையைச் சுற்றி முடிக்கும் தறுவாயில் மலை ஐந்து முகங்களுடன் காணப்படும்.
கௌதம ஆசிரமத்துக்கு எதிரில் மலை மூன்று பிரிவாகக் காட்சி தரும். இதற்கு திரிமூர்த்தி தரிசனம் என்று பெயர். இது மலை சுற்றுவோர் விழுந்து வணங்க வேண்டிய இடம்.
இந்தத் திரிமூர்த்தி தரிசனம் காணும் சாலையோரம் சேஷாத்ரி சுவாமிகள் மண் கொண்டு தன்னை மூடி தவமிருந்த இடம் உள்ளது. இங்கு மட்டும் மண் கறுப்பு- சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
கீழ்ப் பக்கத்தில் இருக்கும் அர்க்க மலையில் தேவேந்திரனும், தென் பக்கத்தில் இருக்கும் தெய்வ மலையில் எமனும், மேற்குப் பக்கத்தில் தண்ட மலையில் குபேரனும், மற்ற நான்கு திக்குகளிலும் உள்ள மலைகளில் தேவர்களும் இருந்து சுவாமியை வணங்குவதாக ஐதீகம்.
கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் விக்கிரம பாண்டியன் என்ற மன்னன், பக்தர்கள் கோயிலைச் சுற்றி வர ஒரு வீதியை அமைத்துக் கொடுத்தார். இன்றும் அந்தப் பகுதி ‘விக்கிரமப் பாண்டியன் திருவீதி’ என்றே அழைக்கப்படுகிறது.
‘திருவண்ணாமலையில் ஆலய தரிசனம் செய்த பின் கிரிவலம் வந்தால்தான் வழிபாடு நிறைவு பெறுகிறது. ஒருமுறை கிரிவலம் செய்து பார்; அதன் பலனை அறிவாய்!’’ என்கிறார் ரமணர்.
கிரிவலத்தில் முதல் அடியில் உலகை வலம் வந்த பலனும், இரண்டாவது அடியில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனும், மூன்றாவது அடியில் அஸ்வமேத யாகம் செய்த பலனும், நான்காவது அடியில் அஷ்டாங்க யோகம் செய்த பலனும் கிடைக்கும்.
கிரிவல நியதிகள் மற்றும் பலன்கள் குறித்து ஜனக மகரிஷிக்கு பிரம்மதேவன் உபதேசித்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
சூட்சும சரீரத்துடன் சித்தர்களும், முனிவர் களும், சிவநேசச் செல்வர்களும் வலம் வரும் திருவண்ணாமலையில் சிவச் சிந்தையோடு காலில் செருப்பின்றி, சட்டை இன்றி, குடை பிடிக்காமல் கிரிவலம் வர வேண்டும். அப்போது அடிமேல் அடி வைத்து நடக்க வேண்டும்.
கிரிவலம் செல்வோர் கைகளை வீசியபடி நடக்கக் கூடாது. இடது புறமாகச் செல்ல வேண்டும். வலது புறம் தேவர்கள், சித்தர்கள் முதலியோர், பசு, கோழி, பூனை, நாய் உருவில் வலம் வருவார்கள். விரட்டவோ, அவற்றுக்கு இடைஞ்சல் செய்யவோ கூடாது. கிரிப் பிரதட்சணம் செய்யும்போது வாகனத்தில் வராமலும், போர்வை போர்த்துக் கொள்ளாமலும், குடை பிடிக்காமலும், பாதரட்சை அணியாம லும், தாம்பூலம் தரியாமலும் வலம் வரலாம். அருணாசலேஸ்வரர் நாமத்தைத் தவிர வேறெந்த சிந்தனை யும் இல்லாமல் பயபக்தியுடன் கிரிவலம் வந்தால், வாழ்வு வளம் பெறும். கிரி வலத்தை எந்த இடத்தில் தொடங்கினோமோ அதே இடத்தில் முடிக்க வேண்டும்.
பௌர்ணமி நிலாவின் கதிர்கள், மலை மீது வளர்ந்துள்ள மூலிகைகள்- பாறைகள்- மரங்கள் ஆகியவற்றின் மீது பட்டுப் பிரதிபலிக்கும்போது, அதிலிருந்து கிளம்பும் அரிய சக்தி, பக்தர்களின் உடல் மற்றும் நோய்களைப் போக்கும் தன்மையுடையதால் அன்றும், ஐப்பசி - கார்த்திகை - மார்கழி மாதங்களிலும் கிரிவலம் வருவது சிறப்பு.
மலையைச் சுற்றி சுமார் 360 தீர்த்தங்களும், மலை சுற்றும் வழியில் விநாயகருக்கு 16 தனிக் கோயில்களும், ஆறுமுகனுக்கு 7 சந்நிதிகளும் உள்ளன.
கிரிவலப் பாதையில் உள்ள ‘இடுக்குப் பிள்ளையார் கோயிலுக்கு மூன்று வாசல்கள். பின் வாசல் வழியாக நுழைந்து 2-வது வாசலைக் கடந்து, முதல் வாசல் வழியாகக் குனிந்தபடி, ஒருக்களித்தவாறு வெளியே வர முடியும். இவ்வாறு வருபவர்களின் தலைவலி, பில்லி சூனியம், உடல் வலி, நோய்கள் ஆகியவை நீங்கும். இதனால் பெண்கள், குழந்தை பாக்கியம் பெறுவதாகவும் நம்புகிறார்கள்.
கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலை கோயில் தொடங்கி, காளியம்மன், துர்கை, அருட்பெருஞ்சோதி, மாரியம்மன், ஆஞ்சநேயர், பூதநாராயணர், இரட்டைப் பிள்ளையார், இடுக்குப் பிள்ளையார், வீரபத்திரர் கோயில், தட்சிணாமூர்த்தி கோயில்கள் இரண்டு, துர்கையம்மன் கோயில், வட வீதி சுப்பிரமணியர் கோயில், முனீஸ்வரர் கோயில், நவக்கிரக கோயில் என்று ஏராளமான கோயில்கள் உள்ளன. கிரிவலத்தின்போது இந்தக் கோயில்களையும் தரிசித்து வலம் வர வேண்டும்.
குகை நமச்சிவாயர், பச்சையம்மன், அர்த்தநாரீஸ்வரர் (பவளக்குன்று) பாண்டவர், கன்னிமார், பெரிய பாண்டவர், கண்ணப்பர், வேடியப்பன், தண்டபாணி, அரவான் ஆகியோரையும் கிரிவலப் பாதையில் தரிசிக்கலாம்.
மலைக்கு மேற்கில் திருமால் ஸ்தாபித்த லிங்கத்தின் பெயர் அடி அண்ணாமலையார். கார்த்திகை தீபத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் நாள் விழாவின் போது அருணாசலேசுவரர் இங்கு வருகிறார்.
வண்ணாத்தி குகை, பவழக் குன்று குகை, அருட்பால் குகை, மாமரத்து குகை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குகைகளும், முலைப்பால் தீர்த்தம், பீம தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், பாத தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும், மயிலாடும் பாறை, ஆமை பாறை போன்ற பாறைகளும் அல்லி சுனை, குமார சுனை, இடுக்குச் சுனை, புகுந்து குடிச்சான் சுனை போன்ற சுனைகளும், அழகுக் குட்டை, ஊமைச்சி குட்டை, கசபக் குட்டை, பண்டாரக் குட்டை, இலுப்பக் குட்டை ஆகிய குட்டைகளும் கிரிவலப் பாதையில் உண்டு.
இடுக்குச் சுனையில் நுழைய முடியாது. இந்த சுனையில் வலக் கையால் பாறை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, இடக் கையால் மட்டுமே நீர் அருந்த முடியும். எனவே, இதற்கு ஒறட்டுக்கை (இடக் கை) சுனை எனப் பெயர்.
கிரிவலத்தின்போது சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம், ரமணாசிரமம், அண்ணாமலை சுவாமிகள் ஆசிரமம், காட்டு சிவா ஆசிரமம், ஆலமரத்து ஆசிரமம், ஜடைசாமி ஆசிரமம். கயிறுசாமி என்ற பட்டினத்து சாமி சமாதி, பஞ்சமுகம் அருகில் இசக்கி சாமி, பிரும்மானந்தசாமி சமாதிகள் ஆகியவற்றையும் தரிசிக்கலாம்.
கௌதம ரிஷி ஆசிரமத்தி லிருந்து, சிவன்- பிரும்மா- விஷ்ணு என்ற திருமூர்த்தி சிகரங்களை தரிசிக்கலாம்.
நிருதி லிங்கத்தை அடையும் இடத்தில்- தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் இருந்து மலையைப் பார்த்தால், மலைச்சரிவின் விளிம்பில் ரிஷபத்தின் தலை மட்டும் தெரியும்.
கிரிவலப் பாதையில் ரூபாய் 10 லட்சம் செலவில் நடிகர் ரஜினிகாந்த் விளக்குகள் அமைத்துள்ளார்.
காஞ்சிப் பெரியவர் திருவண்ணாமலை ஆலயத்துக்கு 1929-ஆம் ஆண்டு விஜயம் செய்து, கார்த்திகை தீபம் தரிசித்து, சுமார் ஒரு மாத காலம் இங்கு தங்கியிருந்தார்.
கார்த்திகை திருவிழா நடைபெறும் நாட்களில் 12-ஆம் நாள்- அதாவது கார்த்திகை தீபத்தின் மூன்றாவது நாளும், தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறும் திருவூடல் உற்சவத்தின் போதும் இறைவனும்- இறைவியும் கிரிவலம் வருவர். இதனால் ‘மலையைச் சுற்றும் மகாதேவன்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடி வாரத்தில் பரணி தீபமும், மாலையில் மலையுச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகின்றன.
கணவனும், மனைவியும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி சிவபெருமான், பார்வதிதேவிக்கு தன் உடலில் பாதி பாகத்தை வழங்க உருவாக்கிய புனித நாள்தான் திருக்கார்த்திகை தினம். அன்றுதான் அர்த்தநாரீஸ்வரர் உருவம் திருவண்ணாமலையில் உதயமானது. முதன் முதலில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றி வழிபட்ட பெருமை பார்வதியைச் சாரும் என்கிறது புராணம்.
கார்த்திகைத் திருநாளில் நெல்பொரியுடன் வெல்லப்பாகும், தேங்காய்த் துருவலும் சேர்த்து, பொரி உருண்டை பிடித்து ஸ்வாமிக்கும், தீபங்களுக் கும் நிவேதனம் செய்கிறார்கள். வெள்ளை நிறப் பொரி- திருநீறு பூசிய சிவனையும், தேங்காய்த் துருவல்- கொடைத் தன்மை கொண்ட மாவலியை யும், வெல்லம்- பக்தர்களின் பக்தியையும் தெரி விக்கின்றன. பக்தர்களின் ஆத்மார்த்தமான பக்தி யால் மகிழ்ந்து, சிவன் நெற்பொரிக்குள்ளும் தோன்றுவார் எனும் தத்துவத்தால் இங்கு பெரிய நெற்பொரி உருண்டைகளும் அப்பமும் நிவேதனம் செய்யப்படுகின்றன.
தீபத்துக்கு 200 கிலோ நெய், 1 டன் திரி ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
இங்கு ஏற்றப்படும் மகாதீபம் என்கிற வெண்கலக் கொப்பரை, கி.பி.1745-ஆம் ஆண்டு, மைசூர் சமஸ்தான அமைச்சரான வெங்கடபதி ராயனால் வழங்கப்பட்டது.
இங்கு மலையே லிங்கமாக இருப்பதால் மலை மீது எவரும் செல்ல பயப்படுவார்கள்.
மலைமேல் தீபம் ஏற்ற உரிமை பெற்றவர்கள் ‘பர்வத ராஜகுலம்’ எனப்படும் மீனவ குலத்தவர். கொடியேற்றவும், தீபம் ஏற்ற திரியாகத் துணியும் நெசவாளர் (தேவாங்கர்) இனத்தவரே இன்றும் அளித்து வருதல் மரபு.
தீபத் திருவிழா நாட்களில் தேரோட்டம் நடைபெறும். முதலில் விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலை, ஐந்தாவதாக சண்டிகேஸ்வரர் ஆகியோரது தேர்கள் வீதிகளில் உலா வருகின்றன. உண்ணாமுலை அம்மன் தேரை மட்டும் பெண்கள் இழுத்துச் செல்வர்.
மார்கழியில் அதிகாலையில் ஓதப்பெறும் திருவெம்பாவை மாணிக்கவாசகரால், திருவண்ணா மலை கோயிலில் அருளப் பெற்றதாகும்.
அண்ணாமலையான் கோயிலுக்குத் திருப்பணி செய்த நாட்டுக் கோட்டை நகரத்து செட்டியார்கள் பாண்டு பத்திரம் எழுதும்போது, ‘அண்ணாமலையார் துணை’ என்றே போடுவார்கள். மகன்களுக்கு ‘அண்ணாமலை’ என்றும், மகள்களுக்கு ‘உண்ணாமுலை’ என்றும் பெயரிடும் பழக்கம் இன்றும் உண்டு.
திருவண்ணாமலையில் 50-க்கு மேற்பட்ட இடங்களில் பிரதோஷ அபிஷேகம் நடைபெற்றாலும், அண்ணாமலையார் ஆலய மகா நந்தி பிரதோஷ அபிஷேகம் பிரசித்தி பெற்றது. மகாநந்தி சந்நிதியில் பிரமாண்ட அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். உலக நன்மைக்காக இசையோடு வேதங்கள், திருமுறைகள் ஓத, பல ஆயிரம் மக்கள் கூடி வழிபாடு செய்யும் கண்கொள்ளாக் காட்சி இது.
சிவன் கோயிலில் மன்மத தகனம் நடைபெறுவது இங்கு மட்டுமே.
தினமும் 3 முறை இந்த மலையை வலம் வந்தவர் இசக்கி சாமியார். இன்று வெளிநாட்டினர் பலர் எப்போதும் மலை வலம் வருவதைப் பார்க்கலாம்.
பகவான் ஸ்ரீரமணர், பாதாள லிங்க சந்நிதியில் வசித்து வந்ததை வெளி உலகுக்கு அடையாளம் காட்டியவர் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள்.
அருணகிரிநாதரின் பெயரும், புகழும் கண்டு சம்பந்தாண்டான் என்பவன் பொறாமை கொண்டான். அவன், அரசனைத் தூண்டி, அரசனுக்கு விருப்பமான பாரிஜாதமலரைக் கொண்டுவருமாறு அருணகிரிநாதருக்குக் கட்டளையிடச் செய்தான். அதற்காகத் தன் உடலிலிருந்து கூடுவிட்டு கூடு பாய்ந்து செத்த கிளியின் உடலில் புகுந்து, ‘பாரிஜாத மலரைக் கொண்டு வந்தார் அருணகிரிநாதர். அப்போது பிரேதமாகக் கிடந்த அருணகிரிநாதரின் உடலை எரிக்கச் செய்தான் சம்பந்தாண்டான். அருணகிரி இறந்துவிட்டார் என ஆஸ்தான புலவன் சம்பந்தாண்டான் மன்னனை நம்பச் செய்தான்.
கிளி ரூபத்தில் அங்கு வந்த அருணகிரியாரை முருகபிரான் கிளி வடிவிலேயே ஆட்கொண்டான். கிளி வடிவில், கிளி கோபுரத்தில் அமர்ந்து அருண கிரியார் கந்தர் அனுபூதி பாடினார்.
‘கணம்புல்’ என்ற புல்லை விற்று அண்ணா மலையாருக்கு தீபம் ஏற்றி வந்த கணம் புல்லர் நாயனார், ஒரு நாள் புல்லை விற்க முடியாததால், தன் முடியையே திரியாக்கி எரிக்க, உமையுடன் சிவன் காட்சி தந்தார் அவருக்கு.
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினத்தின் முதல் ஆதின கர்த்தரான ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி தேசிகரின் ஜீவசமாதி உள்ள தலம் இது. இடைக்காட்டு சித்தர் இந்த ஊருக்கு உரியவர்.
திருவண்ணாமலையில்தான் மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடினார்.
குழந்தைச் செல்வம் இல்லாத வல்லாள மகாராஜா, இறைவனை வேண்டினார். அண்ணாமலையார் ஒரு நாள் சிவனடியார் வடிவில் அரண்மனைக்கு வந்தார். ‘‘இன்றிரவு என்னுடன் தங்குவதற்கு பெண் ஒருத்தி வேண்டும்!’’ என்றார். தேவதாசியர் இல்லாததால் தன் இளைய மனைவி சல்லாமாதேவியை அவருக்கு அர்ப்பணிக்க முனைந்தான். உடனே அந்த அடியவர் பச்சிளங் குழந்தையானார். அதைக் கண்டு மன்னனும் அவன் மனைவியும் வியப்பு அடைந்தனர். தம்பதியரை ஆசிர்வதித்த அண்ணாமலையார் ரிஷபாரூடராக அவர்களுக்குக் காட்சி தந்தார்.
இதனால், வல்லாளனின் இறுதிக் காலத்தில் அவன் பிள்ளை செய்ய வேண்டிய ஈமக் கடன்களையும் அண்ணாமலையாரே செய்ததாக புராணம் கூறும். இதற்காக, இப்போதும் வல்லாள மகாராஜனுக்கு ஈமக் கடன் செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் அண்ணாமலையார் மாசி மக நட்சத்திரத்தில் ‘கொண்டப்பட்டு’ என்னும் கிராமத்தில் எழுந்தருளி, உத்தரகிரியை நடத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
ஒருமுறை குகை நமசிவாயரின் சீடர் குருநமசிவாயர், குருவின் ஆலோசனைப்படி திருவண்ணாமலையிலிருந்து சிதம்பரம் புறப்பட்டார். மாலை நேரத்தில் மரத்தடி ஒன்றில் அமர்ந்து தவம் செய்த குருநமசிவாயருக்கு, தவம் கலைந்ததும் பசி ஏற்பட்டது. ‘அண்ணாமலையார் அகத்துக்கு இனியாளே, உண்ணாமுலையே உமையாளே, உண்ண சோறு கொண்டு வா’ எனப் பாடினார்.
அப்போதுதான் அண்ணாமலை கோயிலில் தங்கத் தாம்பாளத்தில் சர்க்கரைப் பொங்கலை எடுத்து நிவேதனம் செய்திருந்தனர் அர்ச்சகர்கள். உண்ணாமுலையம்மை, தன் பக்தனின் வேண்டுகோளையட்டி, தங்கத் தாம்பாளத்தோடு அந்தச் சர்க்கரைப் பொங்கலை குருநமசிவாயரிடம் கொடுத்துவிட்டு மறைந்தார்.
மறுநாள் கோயிலுக்கு வந்த அர்ச்சகர்கள், தங்கத் தாம்பாளம் காணாமல் போனதால் கலங்கினர். எந்த பூஜையும் நடக்கவில்லை. அப்போது ஒரு குழந்தை மீது அம்பிகை ஆவேசமாகி, ‘என் பக்தன் குருநமசிவாயருக்கு நான்தான் தங்கத் தாம்பாளத்துடன் சர்க்கரைப் பொங்கலைக் கொண்டு போய்க் கொடுத்தேன். அங்கே ஒரு மரத்தடியில் கிடக்கும் தாம்பாளத்தை எடுத்து வாருங்கள்!’ என்றாள். பின்னர் அதன்படி தங்கத் தாம்பாளம் எடுத்து வரப்பட்டது.
அடுத்த இதழில்... கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயில் இடம்பெறுகிறது. இது குறித்த ஆதாரபூர்வ தகவல்களை வரும் 06.06.07 புதன் கிழமைக்குள் வந்து சேருமாறு அனுப்பவும். சுவையான தகவல்கள் இதழில் வெளியாகும். அனுப்ப வேண்டிய முகவரி: ஆலயம் தரும் அபூர்வ சேதிகள் (கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயில்) சக்தி விகடன், 34, கிரீம்ஸ் ரோடு, சென்னை - 600 006.
|
|
No comments:
Post a Comment