அதிகரிக்கும் விலையேற்றம்: செலவுகளைச் சமாளிக்கும் சூட்சுமங்கள்!
மூலப்பொருட்களின் விலை ஏற்றம், தொழிலாளர் களுக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம், மின் கட்டண உயர்வு ஆகியவை அதிகரிக்க உள்ளதால், குறைந்த முதலீட்டில் லாபம் பார்க்கும் எஸ்எம்இகள் இன்னல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இந்த விலையேற்றத் தால் பாதிக்கப்படாமல் எதிர்காலத்தில் விலை இன்னமும் ஏறினாலும் எஸ்எம்இகள் தொழிலில் சிறப்பாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும், இந்தச் செலவுகளைச் சமாளிக்க என்னென்ன உத்திகளைக் கையாள வேண்டும் என்பது பற்றி டான்சியாவின் துணைத் தலைவர் சி.கே.மோகனிடம் கேட்டோம்.
‘‘எஸ்எம்இகளுக்கு விலைவாசி உயர்வு என்பது எப்போதுமே உள்ள பிரச்னைதான். இது மூலப்பொருட்கள் துவங்கி அவர்கள் பயன்படுத்தும் மின்சாரம் வரை அனைத்து துறை களிலுமே செலவுகளை அதிகரிக்கும் விஷயமாக உள்ளது. முக்கியமான ஐந்து வழிகளைப் பின்பற்றினால் பெரும்பாலான செலவுகளைச் சமாளிக்க முடியும்.
முதலாவதாக எஸ்எம்இகள் கவனிக்க வேண்டியது, உற்பத்தி தொடர்பான விஷயங்களை. மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், அது எங்கு சரியான தரத்தில் கிடைக்கிறது, மற்ற இடங்களைவிட எங்கு குறைவான விலையில் கிடைக்கிறது என்பதை ஆராய்ந்து அங்கு போய் வாங்குவதால், செலவு கணிசமாகக் குறையும். தொலை தூரத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் பொருளைவிட அதே தரம் கொண்ட பொருள் உங்களுக்கு அருகிலேயே கிடைத்தால், அதையே வாங்குவது உத்தமம். காரணம், தொலை தூரத்தில் இருந்து அந்தப் பொருளை எடுத்துவர போக்குவரத்துக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். தவிர, பொருளைக் கொண்டுவர காலதாமதமும் ஆகும்.
இரண்டாவதாக, தயாரிப்புகளில் வீணாகும் பொருட்களைக் கட்டுப்படுத்துவது. வீணாகாமல் பொருட்களை எப்படி தயாரிக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். தயாரிப்பில் வீணாவதைத் தடுக்கிற வகையில் உலக அளவில் பல புதிய கருத்தாக்கங்களை உருவாக்கி இருக்கிறார்கள். உதாரணமாக, ‘லீன்’ (Lean) தயாரிப்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினால் பொருட்களை வீணாக்காமல் தயாரிக்க முடியும். பொருட்களைத் தயாரிக்கும்போது வீணாவதை மட்டும் வெற்றிகரமாக தடுத்து விட்டால், நம் லாபம் அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.
மூன்றாவதாக, சந்தைப்படுத் துதல். பெரும்பாலான எஸ்எம்இகள் இதுதொடர்பாக ஆழமான புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், எஸ்எம்இகளுக்கு சந்தைப் படுத்துதல் என்பது அதிகமாகவே தேவை. குறிப்பிட்ட பொருளை ஒரு எஸ்எம்இ தயாரிக்கிறார் எனில், அது உள்ளூரில் மட்டுமே தெரிந்தால், அதனால் சிறப்பான லாபத்தை ஈட்ட முடியாது. இன்று உள்ள வசதிகளைப் பயன்படுத்தி, அதிகத் தொலைவில் உள்ளவர் களுக்கும் கொண்டுபோய் சேர்த்தால் மட்டுமே லாபத்தை அதிகரிக்க முடியும். இன்று இலவச இணையதளங்களும், சமூக வலைதளங்களும் இருக்கும்போது, சந்தைப்படுத் துதல் என்பது மிகவும் சுலபம். இதற்காகும் செலவும் குறைவு என்பதால், எஸ்எம்இகளுக்கு இது பயனளிக்கும்.
நான்காவதாக, மின்சார பயன்பாடு. தற்போது மின்சார கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்கிற நிலை இருப்ப தால், மின்சாரத்தைக் கட்டுப் படுத்த இரண்டு வழிகளைப் பின்பற்றுவது அவசியம். கம்பி வழி மின்சாரம் அல்லாத வேறு மின்சார வழிகளைக் கண்டறிந்து அதனை பயன்படுத்தலாம். மற்றொரு வழி, பழைய இயந்திரங்களைப் பயன்படுத்தி வருபவர்கள், புதிய இயந்திரத்துக்கு மாறலாம். பழைய இயந்திரங்கள் அதிக மின் திறனை பயன்படுத்தி, குறைந்த வேலையைச் செய்பவையாக இருக்கும். அதேசமயம், புதிய இயந்திரங்களுக்கு மாறிவிட்டால், குறைந்த மின் திறனில் அதிக வேலைகளைச் செய்ய முடியும். இதனால் செலவு குறைந்து, லாபம் அதிகரிக்கும்.
கடைசியாக, தொழில்நுட்பம். இன்று மாறிவரும் காலத்துக்கேற்ப தொழில்நுட்ப மாறுதல்களைக் கொண்டுவர வேண்டும். அப்படி கொண்டு வரும்போது பல மனிதர்கள் செய்யும் வேலையை ஓர் இயந்திரம் செய்து முடித்துவிடும். இதன் மூலம் எளிதில் போட்டியைச் சமாளிக்க முடியும்’’ என்று சொன்னார்.
இவர் கூறியதைப் பின்பற்றி விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு செலவுகளைக் குறைக்கலாமே!
விலை ஏற்றம் எந்த அளவுக்கு மக்களைப் பாதிக்கிறதோ, அதே அளவுக்கு தொழில் துறையையும் பாதிக்கும் விஷயமாக இருக்கிறது. அதிலும், எஸ்எம்இகளின் நிலையைப் பற்றி சொல்லவே வேண்டாம். எஸ்எம்இகள் தொழிலில் சந்திக்கும் பிரச்னையைத் தாண்டி, விலையேற்றம் என்பது அவர்களைப் பாதிக்கும் விஷயமாக உள்ளது.