சிங்கத்துடன் நடப்பது எப்படி?
அலுவலகத்தில் வெற்றி பெற்ற வர்கள் பலருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. அவர்கள் தங்கள் மேலதிகாரியைச் சமாளிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். இதை ஹார்வர்டிலோ, அகமதாபாத் திலோ அல்லது பெரிய மேலாண்மைக் கல்லூரி களிலோ பாடமாக நடத்துவதாகத் தெரியவில்லை!
பீட்டர் டிரக்கரோ, ரக்னேக்கரோ சொல் லாததை நமது ஐயன் வள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பே சொல்லி விட்டார்! பொருட்பாலில் வள்ளுவர் 70வது அதிகாரத்தில் அரசரிடம் அமைச்சர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று கூறுகிறார். அதில் மன்னரைச் சேர்ந்தொழுகல் எப்படி என்று விரிவாக விளக்குகிறார்.
1.ரொம்ப நெருங்காதே; அளவுடன் பழகு!
வள்ளுவர் சொல்லும் முதல் யுக்தி - பாஸ் (Boss) உடன் பழகும் பொழுது, நாம் குளிர்காயும் நெருப்பிலிருந்து அதிகம் நெருங்காமலும் அதிகம் விலகிச் செல்லாமலும்; இருப்பது போல இருக்க வேண்டும் என்பது தான்!
உண்மைதானே - நெருங்கினால் நெருப்பு சுட்டுவிடும். பாஸும் அப்படித்தான்! அதிக நெருக்கம் அதிகத் தொந்தரவையே தரும். தள்ளிப்போனாலோ நெருப்பில் குளிர்காய முடியாது!! அதைப்போலவே விலகிப்போனால் பாஸ் உங்களை மறந்தே விடுவார்!
நிஜ வாழ்க்கையில் பலரும் செய்யும் தவறு பாஸின் நல்லெண்ணத்தைச் சம்பாதிக்க அவர் மேல் விழுந்து பழகுவது தான். உடனே அவர் அதை மலிவாக எடுத்துக் கொண்டு சுரண்ட ஆரம்பித்து விடுவார்.
ஏர்போர்ட்டில் இறங்கிய பாஸோடு ஹோட்டல் வரை காரில் நீங்களும் போனால் உங்களை முக்கியமானவன் என மற்றவர் நினைப்பார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் உங்களை பெட்டி தூக்கவும், கார் கதவைத் திறக்கவும் பாஸ் எதிர்பார்ப்பார் இல்லையா!
வேறு சிலரோ பாஸை எதிரி போல பாவித்து அவரைக் கண்டுகொள்வதே இல்லை. ரொம்ப விலகிப்போய் விடுவார்கள். அவரும் அந்த மாதிரி ஆட்களை தவிர்த்து விடுவார். அதனால் வள்ளுவர் கூற்றுப்படி அமைச்சர் அரசரிடம் எப்படி நடந்து கொள்வாரோ அது போல பாஸை நீங்களும் சரியான தூரத்தில் வையுங்கள்.
சொற்சுவையும் பொருட்சுவையும் மிக்க அந்தக் குறளைப் பார்ப்போமா
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தரைச் சேர்ந்து ஒழுகுவார்
இதில் பாஸைப் பற்றிச் சொல்லி இருக்கும் கருத்துக்கள்; அவரைக் காக்காய் பிடிப்பதற்காக அல்ல. ஒரு நல்ல பணியாளராக இருந்து நல்ல பெயர் வாங்கி முன்னேறுவதற்காகத் தான். சிங்கத்துடன் நடைபயில்வது கடினம்தான். ஆனால் தேவையிருந்தால் அதையும் பழகிக்கொள்ளத்தானே வேண்டும்.
No comments:
Post a Comment